2020- ஆங்கிலப் புத்தாண்டு பலன்கள் (தனுசு, மகரம், கும்பம், மீனம்)

2020-ம் ஆண்டுக்கான ஆங்கியல புத்தாண்டு (தனுசு, மகரம், கும்பம், மீனம்) ஆகிய நான்கு ராசிக்கான குருப்பெயர்ச்சி பலன்களை ஜோதிடர் கே.சி.எஸ்.ஐயர் கணித்து வழங்கியுள்ளார்.

தனுசு (மூலம், பூராடம், உத்திராடம் முதல் பாதம் முடிய)

01.01.2020 முதல் 30.06.2020 வரை உள்ள காலகட்டத்தில் செய்தொழிலில் சிறு மாற்றங்கள் நடக்கும். புதிய பாதையில் பயணிக்கத் தொடங்குவீர்கள். சமுதாயத்தில் உயர்ந்தோரின் நட்பு கிடைக்கும். இவர்களின் மூலம் புதிய வாய்ப்புகள் கிடைக்கப் பெறுவீர்கள். புதிய நண்பர்களும் கிடைப்பார்கள். செயல்கள் சரியான இலக்குகளை நோக்கி நகரும். மனதில் புதிய திட்டங்களும் உதயமாகும். அவைகளை ரகசியமாக நிறைவேற்றி அவைகளின் முழுப்பலனை அடைவீர்கள். செய்தொழிலில் எதிர்பார்த்த வருமானம் கிடைக்கும். வம்பு வழக்குகளில் சாதகமான தீர்ப்பு கிடைக்கும். தெய்வ பலத்தை அதிகரித்துக் கொள்ள ஆலயங்களுக்குச் சென்று வருவீர்கள். வருமானத்தில் ஒரு பகுதியை தர்மகாரியங்களுக்கும் செலவு செய்வீர்கள். எதிரிகள் மறைந்து போவர். செய்தொழிலை மேம்படுத்த தொலைதூரப் பயணங்களையும் செய்வீர்கள். விடா முயற்சியால் கடினமான வேலைகளையும் சுலபமாகச் செய்து முடித்துவிடுவீர்கள். முகத்தில் பொலிவும் நடையில் மிடுக்கும் கூடும் காலகட்டமிது என்றால் மிகையாகாது.

01.07.2020 முதல் 31.12.2020 வரை உள்ள காலகட்டத்தில் இல்லத்தில் நிம்மதியைக் காண்பீர்கள். செய்தொழிலில் இருந்த பிரச்னைகள் விலகிவிடும். உங்கள் பேச்சினால் அனைவரையும் கவருவீர்கள். மனதிலிருந்த குழப்பங்கள் விலகி தெளிவு ஏற்படும். பொருளாதாரத்தில் அபிவிருத்தியைக் காண்பீர்கள். பழைய கடன்களைத் திருப்பி அடைத்து விடுவீர்கள். மதிப்பு மரியாதைக்கு குறைவில்லை. புதிய முயற்சிகளைச் சிந்தித்துச் செயல்படுத்தி வெற்றி காண்பீர்கள். தன்னம்பிக்கை கூடும். இல்லத்திற்குத் தேவையான நவீன உபகரணங்களை வாங்குவீர்கள். அசையும் அசையாச் சொத்துகளை குறைந்த விலைக்கு வாங்குவீர்கள். தக்க சமயத்தில் உங்கள் அனுபவ அறிவு கைகொடுக்கும். கடமை தவறாது உழைப்பீர்கள். மறைமுகப் போட்டிகள் எதுவும் ஏற்படாது. உற்றார் உறவினர்கள், நண்பர்கள் உடன்பிறந்தவர்களுக்குத் தேவையான உதவிகளைச் செய்து அவர்களுடன் இணக்கமான உறவை வைத்துக் கொள்வீர்கள். கொடுத்தவாக்கை எப்பாடுபட்டேனும் காப்பாற்றுவீர்கள்.

உத்தியோகஸ்தர்கள் இந்த புத்தாண்டில் அலைச்சல் இல்லாமல் வேலைகளைச் சரியாக செய்து முடிப்பீர்கள். முன்னேற்றப் பாதையில் பயணிப்பீர்கள். சக ஊழியர்களுடன் சகஜ நிலையை கடைப்பிடிக்கவும். வீண் பேச்சுகளால் குழப்பங்கள் வரலாம். சிலருக்கு விரும்பிய இடமாற்றம் கிடைக்கும். மேலதிகாரிகளின் வார்த்தைக்கேற்ப செயல்படவும். வியாபாரிகள் முயற்சிகளுக்குத் தகுந்த லாபம் கிடைக்கும். கூட்டாளிகளுடன் விட்டுக்கொடுத்து நடந்து கொண்டு நிலைமையை கட்டுக்குள் வைத்துக் கொள்வீர்கள். கொடுக்கல் வாங்கல்களில் இருந்த சிரமங்கள் குறையும். வாடிக்கையாளர்களைக் கவர புதிய திட்டங்களைத் தீட்டுவீர்கள். புதிய முதலீடுகளைச் செய்யலாம். வீட்டிற்குச் செலவு செய்து விட்டு புதிய கடன்கள் ஏற்படாமல் பார்த்துக் கொள்ளவும். விவசாயிகள் அரசாங்க உதவிகளைப் பெறுவீர்கள். விளைச்சல் நன்றாக இருக்கும். கொள்முதலில் லாபம் கிடைக்கும். புதிய குத்தகைகளை எடுப்பீர்கள். சக விவசாயிகளை அதிகம் நம்ப வேண்டாம். குடும்பத்தில் வசதி வாய்ப்புகள் தேடி வரும்.

அரசியல்வாதிகளின் பொதுச்சேவையை அனைவரும் பாராட்டுவார்கள். தொண்டர்களுக்குத் தேவையான உதவிகளைச் செய்வீர்கள். உங்களின் அணுகுமுறையில் புதிய மாற்றங்களைக் காண்பீர்கள். திட்டமிட்ட வேலைகளில் சிறு தடைகள் ஏற்பட்டாலும் அனைத்தும் வெற்றிகரமாக முடியும். கலைத்துறையினர் செய்தொழிலில் நன்றாகச் செயல்பட்டு கொடுத்த வாக்கைக் காப்பாற்றுவீர்கள். பணவரவும் திருப்திகரமாக இருக்கும். கை நழுவிப்போன ஒப்பந்தங்கள் திரும்பக் கிடைக்கும். திறமைகள் பளிச்சிடும். முயற்சிகள் எதிர்காலத்தில் நல்ல பயனைத் தரும். பெண்மணிகளுக்கு பணவரவு அதிகரிக்கும். புதிய ஆடை அணிகலன்களை வாங்கி மகிழ்வீர்கள். ஆன்மிகச் சுற்றுலா சென்று வருவதற்கு வாய்ப்புகள் கிடைக்கும். தந்தை வழி உறவினர்களால் நன்மை அடைவீர்கள். மாணவமணிகள் இந்த புத்தாண்டில் நல்ல நண்பர்களைத் தேர்ந்தெடுங்கள். படிப்பில் முழுகவனத்தையும் செலுத்தினால்தான் சராசரிக்கும் அதிகமான மதிப்பெண்களைப் பெறமுடியும்.

பரிகாரம்: விநாயகப் பெருமானை வழிபட்டு வரவும்.

மகரம் (உத்திராடம் 2-ம் பாதம் முதல் திருவோணம், அவிட்டம் 2-ம் பாதம் முடிய)

01.01.2020 முதல் 30.06.2020 வரை உள்ள காலகட்டத்தில் பாதிப்படைந்திருந்த உடல் ஆரோக்கியம் சீரடையும். முடக்கிக் கிடந்த காரியங்கள் விறுவிறுப்பாக நடக்கத் தொடங்கும். செய்தொழிலையும் படிப்படியாக வளரச் செய்வீர்கள். உங்கள் முன்னேற்றத்திற்குப் பலரும் உதவி செய்வார்கள். தேவைக்கேற்ற வருமானமும் வரத் தொடங்கும். சிலருக்கு திடீர் அதிர்ஷ்ட வாய்ப்புகளும் தேடி வரும். அவைகளைச் சரியாகப் பயன்படுத்திக் கொண்டு வாழ்க்கையில் முன்னேறுவீர்கள். குடும்பத்தில் இருந்த சண்டைச் சச்சரவுகள் மறையும். அனைவரிடமும் இணக்கமாகப் பழகத் தொடங்குவீர்கள். சொந்த முயற்சியை திடமாக நம்பி செயல்படுத்துவீர்கள். நேராக சிந்தித்து நல்ல எண்ணங்களை வளர்த்துக் கொள்வீர்கள். பெரியவர்களை மதித்து அவர்களின் ஆசிகளையும் பெறுவீர்கள். போட்டியாளர்களைப் பகைத்துக் கொள்ளாமல் விட்டுக் கொடுத்து நடந்து கொள்வீர்கள். முக்கிய விஷயங்களில் நேரடிக் கவனம் செலுத்துவீர்கள்.

01.07.2020 முதல் 31.12.2020 வரை உள்ள காலகட்டத்தில் உங்கள் அனுபவ அறிவால் கடினமான பிரச்னைகளையும் தீர்த்து விடுவீர்கள். வருமானம் படிப்படியாக உயரத் தொடங்கும். பழைய கடன்கள் வசூலாகும். கேள்விக்குறியாக இருந்த பிள்ளைகளின் வாழ்க்கையில் அதிர்ஷ்டகரமான திருப்பங்கள் உண்டாகும். உடலாரோக்கியம், மனவளம் மேம்பட யோகா, தியானம் ஆகியவைகளைச் செய்யத் தொடங்குவீர்கள். முதலீடு செய்யாமல் புதிய முயற்சிகளில் ஈடுபட்டு நல்ல லாபத்தைப் பெறுவீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சி நிறையும். பெற்றோரையும் அனுசரித்து நடந்துகொள்வீர்கள். பெற்றோர்களின் ஆதரவும் நிரம்ப கிடைக்கும். பூர்வீகச் சொத்து விஷயங்களில் தனித்து முடிவெடுக்காமல் அனைவரையும் கலந்து பேசி முடிவெடுக்கவும். இறைவழிபாட்டில் நம்பிக்கையுடன் ஈடுபடுவீர்கள். உங்கள் மீதிருந்த வழக்குகளிலிருந்தும் விடுதலை பெறுவீர்கள். எந்தச் சட்டசிக்கலிலும் சிக்கிக்கொள்ளாமல் எச்சிரிக்கையுடன் நடந்துகொள்ளவும். ஆவணங்களில் கையெழுத்திடும் முன் அனைத்து ஷரத்துகளையும் புரிந்துகொண்டு கையொப்பமிடவும். சமுதாயத்தில் உங்கள் அந்தஸ்து கௌரவத்திற்கு எந்தக் குறையும் வராது.

உத்தியோகஸ்தர்கள் இந்த புத்தாண்டில் மேலதிகாரிகளிடம் சுமுகமான உறவு நிலை உண்டாகும். பணவரவு சீராக இருக்கும். அலுவலகத்தில் கடன் பெற்று வீடு, வாகனம் ஆகியவற்றை வாங்குவீர்கள். விரும்பிய இடமாற்றங்களைப் பெறுவீர்கள். உங்கள் வேலைகள் அனைத்தும் திட்டமிட்டபடியே குறித்த காலத்திற்குள் முடிவடையும். கொடுக்கல் வாங்கல்கள் இந்த காலகட்டத்தில் சிறப்பாகவே இருக்கும். சுக சௌகரியங்களை எதிர்பார்க்காமல் உழைப்பீர்கள். முக்கியமான விஷயங்களை மட்டுமே உடனே செய்யவும். போட்டியாளர்களின் முட்டுக்கட்டைகளைச் சந்திப்பீர்கள். விவசாயிகளுக்கு விளைச்சல் அதிகரிக்கும். புதிய கடன்களை வாங்கி விவசாயத்தை விரிவுபடுத்துவீர்கள். அரசு மானியம் கிடைக்கும். கால்நடைகளால் லாபம் அதிகரிக்கும். நெருங்கியவர்களுக்கு உதவிகளைச் செய்து அவர்களின் பாராட்டுகளைப் பெறுவீர்கள்.

அரசியல்வாதிகளின் செயல்படும் திறன் கண்டு எதிரிகள் அதிசயிப்பார்கள். கட்சியில் வளர்ச்சியடைவீர்கள். தொண்டர்கள் அலட்சியமாக நடந்துகொள்வார்கள். கோபப்படாமல் விவேகத்துடன் விட்டுக்கொடுத்து நடந்துகொண்டு அவர்களின் தேவைகளை உடனுக்குடன் பூர்த்தி செய்யவும். சமுதாயத்திற்குப் பயன்படும் உண்மையான தொண்டுகளில் மட்டுமே ஈடுபடுவீர்கள். கலைத்துறையினருக்கு புகழும் பாராட்டும் கிடைப்பதில் தாமதமேற்படும். வேலைகளில் பொறுப்புடன் நடந்து கொள்வீர்கள். பெண்மணிகள் கணவரிடம் ஒற்றுமையாக பழகுவீர்கள். குடும்பத்தில் நற்பெயரை பெறுவீர்கள். தொலைதூரத்திலிருந்து நல்ல செய்திகளைக் கேட்பீர்கள். குடும்ப விசேஷங்களுக்காக ஆடை, ஆபரணங்களை வாங்குவீர்கள். குழந்தைகள் வழியில் சிறு சிறு தொல்லைகள் வந்தாலும் அவைகளைச் சமாளித்து விடுவீர்கள். மாணவமணிகள் மற்றவர்களை அதிகம் சார்ந்திருக்காமல் கல்வி சம்பந்தமான வேலைகளை நீங்களே செய்து முடிக்க முயலுங்கள். சிறப்பாக நடந்து பெற்றோர் மற்றும் ஆசிரியர்களின் பாராட்டுகளைப் பெறவும். வெளிவிளையாட்டுகளில் ஈடுபட்டு வெற்றிக் கொடி நாட்டுவீர்கள்.

பரிகாரம்: மகாலட்சுமியை வழிபட்டு வரவும்.

கும்பம் (அவிட்டம் 3-ம் பாதம் முதல் சதயம், பூரட்டாதி 3-ம் பாதம் முடிய)

01.01.2020 முதல் 30.06.2020 வரை உள்ள காலகட்டத்தில் உற்றார் உறவினர்கள் நண்பர்களால் ஏற்பட்ட இன்னல்களும் இடையூறுகளும் விலகும். உங்களுக்கு விருப்பமான துறையில் ஈடுபட்டு சாதனைகளைச் செய்வீர்கள். குடும்பத்தில் நிம்மதி நிலவும். நல்லவர்களின் நட்பு தேடி வரும். அனைவரிடமும் நற்பெயர் எடுப்பீர்கள். கடினமாக உழைத்து பொருளாதார வளத்தை மேம்படுத்திக் கொள்வீர்கள். முகத்தில் பொலிவும், நடையில் சந்தோஷமுமாக வலம் வருவீர்கள். சமுதாயத்தில் உங்கள் புகழ், அந்தஸ்து உயரும். ஆன்மிகத்தில் நம்பிக்கையுடன் திறம்படச் செயல்படுவீர்கள். இல்லத்தில் திருமணம் போன்ற சுபகாரியங்கள் நடக்கும். குழந்தை இல்லாதவர்களுக்கு மழலை பாக்கியம் கிடைக்கும். மனதில் இருந்த குழப்பங்கள் அகன்று தெளிவுகள் உண்டாகும். குடும்பத்தை விட்டு விலகி இருந்த உறவினர்கள் மறுபடியும் குடும்பத்துடன் இணைவார்கள். திறமையான பேச்சினால் மற்றவர்களைக் கவருவீர்கள். எதிரிகளின் ரகசிய நடவடிக்கைகளை முன்கூட்டியே புரிந்துகொண்டு அதற்கேற்ப செயல்திட்டங்களை மாற்றிக் கொண்டு விடும் காலகட்டமிது.

01.07.2020 முதல் 31.12.2020 வரை உள்ள காலகட்டத்தில் பணவரவு நன்றாக இருக்கும். திறமைகள் பளிச்சிடும். தன்னம்பிக்கையும் கூடும். புதிய பொறுப்புகளைப் பெறுவீர்கள். உங்கள் கனவுகள் நனவாகும். அறிமுகமில்லாதோரின் ஆதரவு உங்களுக்கு நற்பலன்களைத் தேடித் தரும். வீட்டிலும் வெளியிலும் செல்வாக்கு உயரும். சிலருக்கு கடல்கடந்து வெளிநாட்டிற்குச் செல்லும் யோகமும் உண்டாகும். வெளியூர் வெளிநாட்டிலிருந்து நல்ல செய்திகள் வந்தடையும். வழக்குகளிலும் அனுகூலமான திருப்பங்கள் உண்டாகும். எவரிடமும் அநாவசியப் பேச்சு வேண்டாம். “கொக்குக்கு ஒன்றே மதி’ என்கிற ரீதியில் செயல்களைச் செய்யுங்கள். உங்கள் பெயரில் பணம் வாங்கிக் கொடுப்பதோ முன்ஜாமீன் போடுவதோ கூடாது. குடும்பத்தில் சுப காரியங்கள் நடக்கும். சமயோசித புத்தியால் தக்க தருணத்தில் சரியான முடிவெடுப்பீர்கள்.

உத்தியோகஸ்தர்களுக்கு இந்த புத்தாண்டில் விரும்பிய பணி உயர்வு மற்றும் ஊதிய உயர்வு இரண்டும் கிடைக்கும். மேலதிகாரிகள் புதிய பொறுப்புகளை ஒப்படைப்பார்கள். அலுவலகத்தில் மிடுக்குடன் வலம் வரப் போகின்றீர்கள். சக ஊழியர்கள் மனம் திறந்து நட்பு பாராட்டுவார்கள். புதிய பொறுப்புகளில் கடின உழைப்பை மேற்கொள்ள வேண்டி வரும். வியாபாரிகள் வாடிக்கையாளர்களைக் கவர புதிய திட்டங்கள் தீட்டுவீர்கள். கூட்டாளிகளின் ஆதரவு கிடைக்கும். புதிய முயற்சிகளை மேற்கொண்டு பலனடைவீர்கள். கொடுக்கல் வாங்கல்கள் சாதகமாகவே முடியும். அரசுக்குச் சமர்ப்பிக்கும் கணக்கு வழக்குகளைச் சரியாக வைத்துக் கொள்வீர்கள். விவசாயிகளுக்கு குடும்பத்தில் சுபச் செலவுகள் உண்டாகும். செலவு குறைந்த மாற்றுப் பயிர்களை உற்பத்தி செய்து பலன் பெறுவீர்கள். கொள்முதலிலும் எதிர்பார்த்த வருமானத்தைக் காண்பீர்கள். பூச்சிக்கொல்லி மருந்துகளுக்கு செலவு செய்ய நேரிடும். உங்களுக்குக்கீழ் வேலை செய்பவர்களிடம் அனுசரணையாக நடந்துகொண்டால் மேலும் நன்மை அடைவீர்கள்.

அரசியல்வாதிகளுக்கு சுமுதாயத்தில் உங்கள் கௌரவமும் புகழும் அதிகரிக்கும். சமூகத்தில் மதிப்பு, மரியாதை உயரும். கடந்த காலத்தில் ஒதுக்கி வைத்திருந்த திட்டங்களை செயல்படுத்த முனைவீர்கள், கட்சிப் பணிகளில் ஆர்வத்துடன் ஈடுபடுவீர்கள். கட்சியில் மாற்றங்களைக் கொண்டு வர வேண்டாம். தொண்டர்களின் ஆதரவு இருக்கும். கலைத்துறையினர் மனம் சோர்வடையாமல் கடமைகளைத் திறம் படச் செய்து முடிப்பீர்கள். புகழைத் தக்க வைத்துக் கொள்வதற்கான சீரிய முயற்சிகளைச் செய்வீர்கள். புதிய ஒப்பந்தங்களைப் பெறத் தீவிரமாக முயற்சிகளை மேற்கொள்வீர்கள். எதிர்காலத்திற்கு அடித்தளமாக திறமைகளை வளர்த்துக்கொள்ள பயிற்சிகள் செய்வீர்கள்.

பெண்மணிகள் அலைபாயும் மனதைக் கட்டுப்படுத்தவும். வீண்வாக்குவாதங்களில் ஈடுபடுவதைத் தவிர்க்கவும். பெரியோர்களின் ஆசியும் கணவரின் ஆதரவும் இந்த காலகட்டம் முழுவதும் கிடைக்கும். மாணவமணிகளின் கடின உழைப்பினால்தான் நல்ல மதிப்பெண்களைப் பெற முடியும். பெற்றோரால் எதிர்பார்த்த நன்மைகளை அடைவீர்கள். மகிழ்ச்சி நீடிக்கும். விளையாட்டில் கவனத்துடன் ஈடுபடவும்.

பரிகாரம்: சனீஸ்வரபகவானை வழிபட்டு வரவும்.

மீனம் (பூரட்டாதி 4-ம் பாதம் முதல் உத்திரட்டாதி, ரேவதி முடிய)

01.01.2020 முதல் 30.06.2020 வரை உள்ள காலகட்டத்தில் எதிலும் சிந்தித்து நல்ல முடிவெடுப்பீர்கள். முயற்சிகளில் வெற்றி பெறுவீர்கள். அனைத்து விஷயங்களையும் புரிந்து கொண்டு நடப்பதால் கஷ்டங்கள் எதையும் சந்திக்க மாட்டீர்கள். உங்களுக்குக்கீழ் வேலை செய்பவர்கள் உங்களின் உதவிகளைப் பெற்று பலனடைவார்கள். செய்தொழிலை சீராக நடத்துவீர்கள். புதிய வாய்ப்புகளைப் பெற்று செய்தொழிலை விரிவுபடுத்துவீர்கள். பொருளாதாரம் உயரத்தொடங்கும். பங்குவர்த்தகம் போன்ற ஸ்பெகுலேஷன் துறைகளின் மூலமும் லாபம் கிடைக்கும். அதிர்ஷ்ட தேவதை உங்கள் வாசல்கதவைத் தட்டும் காலமிது. இல்லத்தில் திருமணம் போன்ற சுப நிகழ்ச்சிகள் நடக்கும். இதனால் சுபச்செலவுகள் உண்டாகும். குலதெய்வப் பிரார்த்தனைகளை நிறைவேற்றுவீர்கள். உங்களின் அதிகார வார்த்தைகளால் மற்றவர்கள் அடங்கி விடுவார்கள். அரசு அதிகாரிகளும் உங்கள் செயல்களுக்கு உறுதுணையாக இருப்பார்கள். வழக்குகளிலும் சாதகமான திருப்பங்கள் உண்டாகும். மனோ பயம் நீங்கும். யோகா, பிராணாயாமம் செய்வீர்கள்.

01.07.2020 முதல் 31.12.2020 வரை உள்ள காலகட்டத்தில் தன்னம்பிக்கை உயரும். செல்வம், செல்வாக்கு உயரும். தைரியத்துடன் துணிந்து புதிய முயற்சிகளைச் செயல்படுத்தி வெற்றி பெறுவீர்கள். நேர்முக, மறைமுக எதிர்ப்புகள் என்று எதுவும் ஏற்படாது. சிலர் அசையும் அசையாச் சொத்துகளை வாங்குவார்கள். நெடுநாளாக வாட்டி வந்த தோல்நோய் மறையும். தனித்து தொழில் செய்தவர்கள் புதிய நண்பர்களுடன் இணைந்து செய்தொழிலை விரிவுபடுத்துவார்கள். சமுதாயத்தில் புதிய பொறுப்புகள் கிடைக்கும். குடும்பத்தில் சுமுகமான பாகப்பிரிவினை உண்டாகும். குடும்பத்தினரிடம் இருந்த மனக்கசப்புகள் நீங்கி மகிழ்ச்சி நிறையும். உங்கள் கருத்துகளுக்கு குடும்பத்திலும் சமுதாயத்திலும் உயர்ந்த வரவேற்பு கிடைக்கும். முக்கிய விஷயங்களில் பிடிவாதங்களைக் குறைத்து விட்டுக்கொடுத்து நடந்து கொள்வீர்கள். போலி கௌரவத்திற்காக வீண் செலவுகளைக் செய்ய மாட்டீர்கள். புதிய நுணுக்கங்களைக் கற்று திறமைகளை வளர்த்துக் கொள்வீர்கள். வெற்றி வரும் வரை முயற்சியை கைவிட மாட்டீர்கள்.

உத்தியோகஸ்தர்கள் இந்த புத்தாண்டில் அதிகம் உழைக்க வேண்டியிருக்கும். மேலதிகாரிகளின் ஆதரவு குறைவாக இருப்பதால் அவர்களை அனுசரித்து நடந்து கொள்வீர்கள். உங்களின் திறமைக்கு குறைவு ஏற்படாது. பணவரவு சிறப்பாக இருப்பதால் நீங்களுண்டு உங்கள் வேலையுண்டு என்று இருப்பீர்கள். வியாபாரிகளுக்கு மதிப்பு, மரியாதை அதிகரிக்கும். புதிய சந்தைகளைத் தேடிப்பிடித்து வியாபாரத்தை விரிவு படுத்துவீர்கள். செலவு செய்யும்போது விழிப்புடன் இருப்பீர்கள். கொடுக்கல் வாங்கல் விஷயங்கள் சாதகமாக இருக்கும். செயல்களில் கூடுதல் அக்கறை செலுத்த வேண்டி வரும். விவசாயிகள் தன்னம்பிக்கையுடன் புதிய குத்தகை முயற்சிகளில் இறங்குவீர்கள். செயல்கள் அனைத்தும் படிப்படியாக பலன்களைக் கொடுக்கும். ஆற்றல் அதிகரிக்கும். கால்நடைகளை நன்கு பராமரிப்பீர்கள். விவசாயத் தொழிலாளர்களை அரவணைத்துச் செல்லவும்.

அரசியல்வாதிகள் கட்சி மேலிடத்தின் கவனத்தை ஈர்ப்பீர்கள். தொண்டர்களின் ஆதரவினால் சாதனைகளைச் செய்வீர்கள். புதிய பொறுப்புகளை கவனத்துடன் கையாளவும். திட்டமிட்ட காரியங்கள் அனைத்தும் எளிதில் வெற்றியடையும். விருந்து, கேளிக்கைகளில் கலந்து கொண்டு மகிழ்ச்சியடைவீர்கள். கலைத்துறையினர் கடமைகளை உணர்ந்து செயல்படுவீர்கள். சக கலைஞர்களிடம் தேவையான உதவிகளைக் கேட்டுப் பெறுவீர்கள். கிடைக்கும் சில ஒப்பந்தங்கள் நிறைவு தருவதாக இருக்காது. ரசிகர்களின் ஆதரவினால் சில கலை நிகழ்ச்சிகளை நடந்தி வருமானத்தைப் பெருக்குவீர்கள். பெண்மணிகள் குடும்பத்தில் சந்தோஷத்தைக் காண்பார்கள். கணவரைப் புரிந்துகொண்டு நடந்து கொள்வீர்கள். உற்றார் உறவினர்களின் நன்மதிப்புக்கும் பாத்திரமாவீர்கள். புனிதத் தலங்களுக்கும் சென்று வருவீர்கள். மாணவமணிகள் பயிற்சியும் முயற்சியும் வெற்றியை நோக்கி அழைத்துச் செல்லும். இந்த புத்தாண்டில் கடினமாக உழைத்து கணிசமான மதிப்பெண்களைப் பெறுவீர்கள். பயத்தையும் பதற்றத்தையும் தவிர்க்க யோகா, பிராணாயாமம் செய்யுங்கள்.

பரிகாரம்: சிவபெருமானை வழிபட்டு வரவும்.

2020- ஆங்கிலப் புத்தாண்டு பலன்கள் (சிம்மம், கன்னி, துலாம், விருச்சிகம்)- படிப்பதற்கு அழுத்துங்கள்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here