பெ.சந்திரசேகரன் 10வது ஆண்டு நினைவு தினம் இன்று!

மலையக சமூகம் என்ற கருத்தாக்கத்தின் ஆரம்ப கர்த்தாக்களில் ஒருவரானவரும் மலையகத்தில் 1960ல் எழுச்சி நாயகனாக திகழ்ந்த அமரர் இரா.சிவலிங்கத்தின் வழிநின்று மலையக தேசியவாதத்தை மற்றொரு வரலாற்று கட்டத்துக்கு 1980ல் எடுத்துச் சென்ற மலையக மக்கள் முன்னணியின் ஸ்தாபத் தலைவரும், முன்னாள் அமைச்சருமான அமரர் பெ.சந்திரசேகரன் அவர்களின் 10வது ஆண்டு நினைவஞ்சலி இன்று (1)  அனுஷ்டிக்கப்படுகிறது.

அவரது நண்பர்கள் ஏற்பாடு செய்துள்ள மோட்ச அர்ச்சனையும், சிறப்பு பூஜை வழிபாடுகளும் ராமேஸ்வரத்தில் என்.தேவதாஸ் தலைமையில் நடைபெறுகிறது. திருமதி.சாந்தினி சந்திரசேகரன் அவர்களினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள சிறப்பு பூஜை வழிபாடுகள் இராஜகிரிய இல்லத்தில் நடைபெறுகிறது.

மலையக மக்கள் முன்னணியை ஒரு அரசியற் கட்சியாக 1989ல் நிறுவிய அமரர் பெ.சந்திரசேகரன் சுமார் ஒரு தசாப்த காலம் தொண்டமானின் அரசியல் பாசறையில் வளர்ந்தவர். 1977ம் ஆண்டு பொதுதேர்தலில் தொண்டமான் நுவரெலிய தொகுதியில் வெற்றிபெற பக்கபலமாக இருந்தவர். அவர் மலையக மக்கள் முன்னணியை தொடங்கியபோது புதிய சீர்த்திருத்தங்களைக் கோரிய தொழிலாளர்கள், ஆசிரியர்கள், படித்த இளைஞர்கள், வர்த்தக பிரமுகர்கள், சமூக ஆர்வலர்கள் அவருக்கு பெரும் ஆதரவை வழங்கினார்கள்.

இதன் காரணமாக மலையக பெருந்தோட்டத்துறையில் நான்கு தசாப்தகால வரலாற்றை கொண்டிருந்த தொண்டமான் சாம்ராஜ்ஜியத்திற்கு எதிராகவும் இலங்கை தொழிலாளர் காங்கிரசுக்கு எதிராகவும் மாற்று தலைமை முதன் முதலாக 1989ல் உருவாகியது.

மலையகத்துக்கு புதிய அரசியல் தலைமையை வழங்கியபோது பெ.சந்திரசேகரன், மலையக மக்கள் மட்டுமல்லாது வடகிழக்கு மாகாணங்களில் வாழ் தமிழ் மக்களின் பிரச்சனைகளை நன்கு புரிந்த தலைவராக பரிணமித்தார். மலையக சமூகத்தின் தனித்துவத்தை வலியுறுத்தியும், ஏனைய சிறுபான்மைச் சமூகங்களோடு இணைந்தும், தேசிய அரசியலின் நிர்ணய சக்தியாகத் திகழ்ந்தவர். இந்திய உறவில் அழுத்தமான தடங்களைப் பதித்தும், புலம் பெயர்ந்த தமிழர் சமூகத்தின் நம்பிக்கை மிகுந்த அரசியல்வாதியாக விளங்கிய தலைவர் பெ.சந்திரசேகரன் நான்கு தடவைகள் மலையக மக்கள் முன்னனி மற்றும் ஐக்கிய தேசிய கட்சிகளின் கீழ் தேர்தலில் பெரும் வெற்றிபெற்று பிரதியமைச்சராக, அமைச்சராக, அமைச்சரவை அமைச்சராக பதவியேற்று மலையக மக்களுக்கு பெரும்பணியாற்றியவர்.

மலையக மக்கள் சமூக ரீதியாக எதிர்நோக்கிய பிரச்சினைகளின்போதும், அடக்கு முறைகளுக்கு எதிரான போராட்டங்களில் மலையக மக்களை ஒன்றிணைக்கும் சக்தியாகவும் முன்னணி போராளியாகவும் அவர் விளங்கினார். அவர் முன்னின்று நடத்திய போராட்டங்கள் காரணமாக அவரது அரசியல் எதிரிகள் அவரை சிறைக்கு அனுப்பி சித்திரவதை செய்தார்கள்.

சுமார் மூன்று ஆண்டுகள் சிறைவாசம் அனுபவித்த செம்மலான சந்திரசேகரன், சிறையிலிருந்தவாறே 1993ம் ஆண்டு மத்திய மாகாண சபை தேர்தலில் மண்வெட்டி சின்னத்தில் வெற்றிபெற்று தனது எதிரிகளை துவண்டுபோகச் செய்தவர். அமைச்சராக இருந்த காலகட்டங்களின் மலையக மக்களின் மேம்பாட்டுக்காக பல சமூகநலத் திட்டங்களை மேற்கொண்டார்.

தற்போது பேசப்படும் மலையக பல்கலைக்கழகம் என்ற கோரிக்கை அவரால் முன்வைக்கப்பட்டது. அக்காலத்தில் அவர் முன்நின்று மலையக பேராசிரியர்களைக் கொண்ட சிந்தனை குழாம் ஒன்றை அமைத்து பல்வேறு வேலைத்திட்டங்களை தயாரித்தவர். உதாரணமாக மேலதிக பிரதேச சபைகள், புதிய கிராம சேவகர் பிரிவுகளை ஏற்படுத்துதல், வறுமை கோட்டின் கீழ் வாழுபவர்களுக்கான சமுர்த்தி நிகழ்ச்சித்திட்டம், பட்டதாரி மாணவர்களுக்கான கல்வி நிதியம் போன்ற வேலைத்திட்டங்கள் அன்னாரின் சிந்தனைகளில் வழிவகுத்தவை இன்று மிகப்பெரிய அளவில் பிரசித்திப் பெற்றுள்ள ஏழு பேர் காணிகளுடனான தனிவீட்டுத்திட்டம் போன்ற கோரிக்கைகளுக்கு காரணமாக இருந்த பெ.சந்திரசேகரன் அவர்கள் வளங்கள் பற்றாக்குறைக்கு மத்தியில் தோட்ட வீடமைப்பு பொதுவசதிகள் பிரதி அமைச்சராக இருந்த 1995 – 1999 காலத்தில் ஏறத்தாழ 12000 வீடுகளை நிர்மாணித்ததோடு அதற்கான காணிகளையும் ஏற்பாடு செய்தவராவார்.

தமது காலத்தில் லயன் என்ற வார்த்தையை முற்றாக ஒழித்துக் கட்டுவதை நோக்காக கொண்டு அவர் செயற்பட்டார். மிக பிரதானமாக இன்று மலையக அரசியலில் எழுச்சி பெற்றுவரும் முன்னாள் அமைச்சரான பழனி திகாம்பரம் அவர்களை 2004ம் ஆண்டு தன்னுடன் இணைத்து மத்திய மாகாண சபைக்கு போட்டியிட நியமனம் வழங்கி 12,775 வாக்குகளைப் பெறச் செய்து மத்திய மாகாண சபைக்கு அனுப்பினார்.

அக்காலத்தில் இ.தொ.கவிலிருந்து வெளியேற்றப்பட்ட நிர்க்கதியாகியிருந்த அமரர் எம்.அருள்சாமிக்கும் அடைக்கலம் கொடுத்து அவரையும் இணைத்து மத்திய மாகாண சபைத் தேர்தலில் வெற்றிபெறச் செய்தார்.

பின்னர் கொழும்பு மாவட்ட மக்கள் மத்தியில் மலையக மக்கள் முன்னணி நடவடிக்கைகளை கட்டியெழுப்ப வேண்டும் என்ற நோக்கில் பெருமாள் பிள்ளை இராதாகிருஷ்ணனுக்கு இரண்டு தடவைகள் தேசிய பட்டியல் ஊடாக பாராளும்ன்ற பிரதிநிதித்துவத்தை வழங்கினார். பின்னர் அவர் தொழில் பயிற்சி பிரதியமைச்சரானார்.

அக்டோபர் 2000 பொதுத் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க மற்றும் அமரர் பெ.சந்திரசேகரன் அவர்களுக்கிடையில் செய்து கொள்ளப்பட்ட தேர்தல் கூட்டு உடன்படிக்கையின் அடிப்படையில் ஐக்கிய தேசியக் கட்சி வழங்கிய மூன்று வேட்பாளர்கள் நியமன வாய்ப்பில், பதுளையில் போட்டியிட ஏ.அரவிந்த்குமாரை அனுப்பினார். அவர் நுவரெலியாவில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். மனோகணேசனை அரசியல் ரீதியாக வளர்த்தெடுக்க வேண்டும் என்ற தொலைநோக்கு சிந்தனையில் கொழும்பு மாவட்டத்தில் அவர் போட்டியிட மலையக மக்கள் முன்னணிக்கு கிடைத்த நியமனத்தை வழங்கினார். இவ்வாறு மனோகணேசனையும் பழனி திகாம்பரத்தையும் தேசிய அரசியலில் பிரகாசிக்க செய்து அவர்கள் அமைச்சரவை அந்தஸ்து பெற்ற அமைச்சர்களாக சேவையாற்ற அமரர் பெ.சந்திரசேகரன் அவர்களே வித்திட்டார் என்பது வரலாறு.

மாகாணசபை முன்னாள் உறுப்பினர்களான கே.டி.குருசாமி, எஸ்.குகவரதன், கே.கனகராஜ் ஆகியோர் சந்திரசேகரனின் அரசியல் பாசறையில் பயிற்சிபெற்றவர்கள்.

இவ்வாறு அரசியிலில் ஓர் ஏணியாக பலரை ஏற்றிவிட்ட சந்திரசேகரனை உதறிதள்ளிவிட்டு, அவரால் ஏற்றிவிடப்பட்டவர்கள் பிற்காலத்தில் எங்கெங்கோ சென்றனர் என்பது வரலாறு. அப்படி அவரை உதறிவிட்டுச் சென்ற எம்.அருள்சாமியை அவரது கடைசி காலத்தில் நானும் அஜித் குமாரும் நேரில் சந்தித்தபோது¸ தான் தலைவர் சந்திரசேகரனுக்கு பெரும் துரோகம் செய்துவிட்டதாக கண்ணீர் மல்க கதறினார்.

அவர் மலையக மக்களின் மேம்பாட்டில் இந்தியா எப்போதும் உதவக்கூடும் என்ற அடிப்படையில் இந்திய அரசுடன் தொடர்புகளை வலுப்படுத்திக் கொண்டார். அக்காலத்தில் வெளிநாட்டு வாழ் இந்தியர்களின் நலன்துறை அமைச்சர் ஸ்ரீ வயலார் ரவியுடன் நெருக்கமான உறவுகளைக் கொண்டு செயல்பட்டவர்.

2000 முதல் 2009 வரை இந்தியாவிலும் வெளி நாடுகளிலும் நடைபெற்ற வெளிநாடு வாழ் இந்தியர்களின் மாநாடுகளில் (பிரவாசி பாரதிய திவாஸ்) கலந்துகொண்டவர். பல வெளிநாட்டு வாழ் இந்தியத் தலைவர்களை நேரில் சந்தித்து மலையக மக்களின் பிரச்சினைகளை விரிவாக எடுத்துக் கூறியவர்.

இந்திய வீடமைப்புத் திட்டம் மலையக மக்கள் நோக்கியும் விஸ்தரிக்கப்பட வேண்டும் என்ற முனைப்புடன் இந்திய முன்னாள் பிரதமர் டாக்டர் மன்மோகன் சிங் அவர்களை சந்தித்து அதற்கான வேண்டுகோளையும் முன்வைத்தவர்.

உலக தமிழர்களை ஒன்றிணைக்கும் மாநாடுகளில் கலந்துகொண்டு உரை நிகழ்த்தியவர். அமரர் சந்திரசேகரனால் உருவாக்கப்பட்ட மலையக மக்கள் முன்னனி இன்று தமிழ் முற்போக்கு கூட்டணியில் முக்கிய உறுப்பினராக உள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

நுவரெலியா மாவட்டத்தில் பிரதேச சபைகளின் எண்ணிக்கையும் பிரதேச செயலகங்களின் எண்ணிக்கையும் அதிகரிக்கப்பட வேண்டும் என்று முன்னாள் ஜனாதிபதி மஹிந்தவிடம் பல தடவைகளில் அமரர் சந்திரசேகரன் கோரிக்கைகளை வைத்த அதேவேளை, இதற்காக இந்திய அரசாங்கம் அழுத்தம் கொடுக்க வேண்டும் என்று கடிதங்களையும் இந்திய அரசுக்கு அனுப்பி வைத்துள்ளார்.

இன்று தமிழர் முற்போக்கு கூட்டணியினூடாக அந்த சிந்தனை செயல் வடிவம் பெற்றுள்ளது.
பதுளை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினராக இதய சுத்தியுடன் மக்கள் பணியாற்றிவரும் அ.அரவிந்தகுமார் அமரரின் சிந்தனைகளையும் பிரதானமாக முன்னெடுத்துச் செல்பவராகத் திகழ்கின்றார். தனிவீட்டுத் திட்டத்தை தொடங்கிய காலப்பகுதியில் அமைச்சரோடு தோள்நின்று ஆலோசனைகளையும் ஆதரவுகளையும் வழங்கியதோடு அத்திட்டம் வெற்றிபெற உறுதுணையாக இருந்தவர்.

அமரர் சந்திரசேகரன் அவர்கள் தமிழ் முஸ்லீம் மக்களின் பிரச்சனைகளில் மாத்திரமல்லாது பெரும்பான்மை மக்களின் பிரச்சனை தொடர்பாகவும் தேசிய ரீதியான போராட்டங்களிலும் பங்குபெற்றிருந்தார். மலையக மக்கள் குறிப்பாக வடகிழக்கு தமிழ் மக்கள் முஸ்லீம் மக்கள் தொடர்பில் அவர் கடைபிடித்த கொள்கைகள் காலத்தால் அழியாதவை.

மலையக சமூகத்தின் பொருளாதாரம் பிரச்சனைகள் பற்றிய ஆழ்ந்த புரிந்துணர்வு அவரிடம் இருந்தது. நாட்டில் வாழும் அனைத்து இன மக்களும் சமத்துவமான அரசியல் சமூக பொருளாதார உரிமைகளை பெற்றுவாழ வேண்டும் என்ற சிந்தனையுடன் செயற்பட்டவர்.

மத்திய மாகாண சபை உறுப்பினராக அவர் மக்கள் பணியாற்றி அன்னாரின் அரசியல் பயணத்தில் 1994ம் ஆண்டு மலையக மக்கள் முன்னணியின் மண்வெட்டி சின்த்தில் போட்டியிட்டு 23¸453 வாக்குகளை பெற்று பாராளுமன்றத்துக்கு அவர் தெரிவாகியபோது அன்றைய அரசாங்கத்தை அமைப்பதில் ஒரு தீர்மான சக்தியாக அவர் விளங்கினார். அதன் பிரதிபலனாக அந்த அரசாங்கத்தில் வர்த்தக வாணிபத்துறை பிரதியமைச்சர் பதவி வழங்கப்பட்டது. இதனால் மலையக மக்களுக்கு சேவையாற்ற முடியாது என்று தோட்ட வீடமைப்பு பொதுவசதிகள் அமைச்சர் கேட்டுப் பெற்றுக்கொண்டார்.
இவ்வாறாக நான்கு தடவைகள் பாராளுமன்றத்துக்கு தெரிவாகிய சந்திரசேகரன் அவர்கள் பல அமைச்சுப் பொறுப்புகளை வகித்ததுடன் தனது பதவி காலத்தில் இன, மத, மொழி, பிரதேச பேதங்களின்றி நாட்டின் பல பிரதேசங்களில் தனது சேவையை விஸ்தரித்திருந்தார். நுவரெலிய மாவட்டம் மாத்திரமின்றி மத்திய¸ ஊவா சப்ரகமுக, மற்றும் தென்மாகாணம் அனைத்தும் தன் தனிவீட்டுத் திட்டத்தை விஸ்தரித்தார். கிளிநொச்சி, உடப்பு ஆகிய இடங்களில் கலாச்சார மண்டபங்களை நிறுவினார்.

“அவர் தோட்ட வீடமைப்பு பொதுவசதிகள் பிரதி அமைச்சராகப் பணியாற்றிய காலத்தில் மலையக சமூகத்திற்கான தனிவீட்டுத் திட்டத்தினை வெற்றிகரமாக நிறைவேற்றினார். அந்த வேலைத்திட்டம் அவரால் அரசியலுக்கு அறிமுகப்படுத்தப்பட்டவரும் இன்று எனது அமைச்சரவையின் சகாக்களுள் ஒருவராக விளங்குபவருமான திரு.பழனி திகாம்பரமும் தொடர்ந்து அமைச்சர் ஆறுமுகன் தொண்டமானும் முன்னெடுக்கப்பட்டு வருவது மகிழ்ச்சிக்குரியது. வெற்றிகரமாகவும், இலட்சிய தாகத்துடனும், ஆக்கப்பூர்வமாகவும் இத்திட்டம் இன்று நடைமுறைப்படுத்தப்பட்டு வருவதால் மலையக சமூகம் மிகுந்த நன்மைகளை அடையும் என்பதில் ஐயமில்லை” என்று முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க 6.4.2017 அன்று வெளிவந்த மலையகத்தின் எழுச்சி தலைவர் சந்திரசேகரன் என்ற நூலில் குறிப்பிட்டுள்ளார்.

“நான்கு தடவைகள் பாராளுமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட சந்திரசேகரன் தோட்ட உட்கட்டமைப்பு அமைச்சர், சமுதாய அபிவிருத்தி அமைச்சர் மற்றும் நீர்வள முகாமைத்துவ பிரதி அமைச்சர், சமுதாய அபிவிருத்தி, சமூக அநீதி ஒழிப்பு அமைச்சர் எனப்பல அமைச்சுப் பொறுப்புக்களை வகித்திருந்தார். தனது பதவிக் காலத்தில் இன, மத, மொழி, பிரதேச பேதங்களின்றி தனது அமைச்சுக்களின் மூலம் நாட்டின் பலபாகங்களுக்கும் தனது சேவையை விஸ்தரித்திருந்தார்.

அரசாங்கத்தில் அமைச்சுப் பதவியை வகித்து வந்த போதும் தமிழ் மக்களுக்குப் பாதகமான வகையில் செயற்படுத்தப்படலாம் என்ற காரணத்தினால் அன்றைய அவசரகாலச் சட்டத்துக்கு ஆதரவளிப்பதிலிருந்து விலகி தனது மனச்சாட்சிக்கு இணங்கிச் செயற்பட்டார். வடக்குக் கிழக்குத் தமிழ் இளைஞர்களின் விடுதலைப் போராட்டத்தைத் துணிவோடு ஆதரித்து தனது இறுதி மூச்சுவரை அந்த உணர்வோடு செயல்பட்டவர் அவர். அதன் காரணமாக வடக்கு கிழக்கு தமிழ் மக்களும் சந்திரசேகரன் மீது மிக்க அன்பும்¸ மரியாதையும் கொண்டிருந்தனர் என்பதையும் நான் குறிப்பிட வேண்டும்” என்று எதிர்கட்சி தலைவர் இரா.சம்பந்தன் தனது அனுதாப செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

பல தடவைகள் அவரைச் சந்திக்கும் வாய்ப்பை நாம் பெற்றிருந்தோம். இந்திய ஆய்வு தளம் தொடர்பிலான விடயங்கள் மற்றும் விருப்பங்கள் குறித்து நாங்கள் பேசியிருக்கிறோம். ‘பிரவாசி பாரதிய திவாஸ்’ என்ற எமது மிக முக்கியமான நிகழ்வில் ஒவ்வொரு ஆண்டும் அவர் உற்சாகத்துடன் கலந்து கொண்டிருந்தார். அது போலவே¸ 2010 ஜனவரி மாதம் ஏழாம் திகதி முதல் ஒன்பதாம் திகதி வரை புதுடில்லியில் நடைபெறவிருந்த ‘பிரவாசி பாரதிய திவாஸ்’ நிகழ்வில் கலந்து கொள்வதற்கும் சந்திரசேகரன் தன் முனைப்பை வெளிப்படுத்தியிருந்தார். எனினும்¸ எல்லா ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டு இந்த நிகழ்ச்சி ஆரம்பமாவதற்கு ஆறு நாட்களே இருந்த நிலையில் 2010 ஜனவரி 1-ம் திகதியன்று அவரது திடீர் மரணச் செய்தியை நாங்கள் கேட்க நேர்ந்தபோது அது எமக்கு மட்டுமன்றி முழு இந்திய சமூகத்துக்கே பேரதிர்ச்சியாக அமைந்திருந்தது என்று வெளிநாட்டு வாழ் இந்திய நலத்துறை அமைச்சர் ஸ்ரீ வயலார் ரவி 4.1.2010 அன்று வழங்கிய அனுதாப செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

எனது தந்தையாரின் அரசியல் பயணம் செங்கம்பள நடைப்பயணமாக இருக்கவில்லை. அவரது பயணம் ரோஜாப் பூக்கள் மீதான நடைப்பயணமாக அமையவில்லை. அவரது பயணம் கல்லும், முள்ளும் செறிந்த காட்டுவழிப் பாதையாக இருந்தது. கடுமையான சவால்கள் நிறைந்ததாக இருந்தது. எப்போதும் எதிர்ப்புகள் நிறைந்ததாகவே இருந்தது. அதிகாரபலத்திற்கு எதிரான போர்க்களமாக அவரது பாதை அமைந்திருந்தது. கைதுகள், சிறைச்சாலைகள், சித்திர வதைகள் உட்பட நீண்டநாள் தடுப்புக்காவலாக அது அமைந்தது. இவற்றை சவாலாக ஏற்று துவண்டுவிடாது எதிர்த்து நின்றோரையும் மன்னித்து ஏற்று அரவணைத்து செல்லும் மிக உன்னதமான பரந்த மனம் அவரிடம் குடி கொண்டிருந்தது என்று அவரது புதல்வி சட்டத்தரணி அனுஷா சந்திரசேகரன் நான் தொகுத்து பதுப்பித்த மலையகத்தின் எழுச்சி தலைவர் பெ.சந்திரசேகரன் என்ற நூலில் குறிப்பிட்டுள்ளார்.

மலையக மக்கள் முன்னணியின் தலைவராகச் செயற்பட்ட இருபது ஆண்டு காலப்பகுதியில் அவரது இலட்சியப் பாதையில் இணைந்து பற்றுறுதி கொண்டு பயணித்தவர்கள் மிகப் பலராவர். பிரத்தியட்ச யதார்த்த நடைமுறைக்கு ஒவ்வாத விமர்சனங்களை வீசியவர்கள் சமுதாயத்திலிருந்து ஒதுங்கிப் போனார்கள். இந்தக் காலப் பகுதிகளில் அவர் சந்தித்த சவால்கள் பல. எதிர்கொண்ட சோதனைகள் இழப்புகள் அனேகம். அவற்றையெல்லாம் ஒரு தலைவனின் துணிவோடும், தீர்க்கதரிசனத்தோடும் அவர் வெற்றிகரமாகக் கையாண்டார். அந்த உயர்ந்த மாமனிதனின் மறைவு மலையக சமுதாயத்திற்கு மட்டுமல்ல முழு இலங்கைக்கும் பேரிழப்பாகும்.

-பா.திருஞானம்-

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here