சீனாவின் கடன் வலையால் இலங்கையின் மனமாற்றம்

இலங்கையின் அம்பாந்தோட்டை துறைமுகத்தை சீனாவுக்கு 99 ஆண்டுகால குத்தகைக்கு கொடுத்திருக்கும் ஒப்பந்தம் குறித்து மீண்டும் பேச்சுவார்த்தை நடத்த வேண்டுமென, இலங்கையின் புதிய ஜனாதிபதி கோத்தபய ராஜபக்ச தெரிவித்த கருத்து, உலகளாவிய விவாதப் பொருளாகியிருக்கிறது.

சீன ஆதரவு ராஜபட்ச சகோதரர்கள், சீனாவுக்குப் பிடிக்காத செயல்களில் ஈடுபடவே மாட்டார்கள் என்ற எதிர்பார்ப்பு இருந்த நிலையில், அதிபர் கோத்தபய இந்திய ஊடகத்துக்கு அளித்த பேட்டியின்போது தெரிவித்த இந்தக் கருத்து, சீனாவின் புதிய பட்டுப்பாதை திட்டத்துக்கு எழுந்துள்ள மற்றோர் இடையூறாகப் பார்க்கப்படுகிறது.

இலங்கையின் புதிய அதிபராகப் பதவியேற்றதும் கோத்தபய அளித்த பேட்டியில், இந்தியாவின் நலன்களுக்கு எதிரான எந்த நடவடிக்கையிலும் இலங்கை ஒருபோதும் ஈடுபடாது என்று அளித்த உறுதியைத் தொடர்ந்து, அம்பாந்தோட்டை துறைமுக ஒப்பந்த விஷயத்தைப் பற்றிய தனது நிலைப்பாட்டை அவர் தெளிவுபடுத்தியுள்ளார்.

அம்பாந்தோட்டை துறைமுகம் 

இலங்கையின் பிரதான துறைமுகமான கொழும்பு துறைமுகம் சரக்கு கப்பல்களின் கன்டெய்னர்களை கையாளும் திறன்களை மட்டுமே கொண்டிருக்கும் நிலையில், கப்பல் கட்டுமானம், கப்பல்களுக்கான எரிபொருள் நிரப்புதல், தளவாடக் கொள்முதல் உள்ளிட்ட வசதிகளுடன் புதிய துறைமுகம் ஒன்றை கட்டமைக்க வேண்டும் என இலங்கை முடிவு செய்து தேர்ந்தெடுத்ததுதான் அம்பாந்தோட்டை துறைமுகம். ஆசியா-ஐரோப்பாவை இணைக்கும் முக்கியமான கடல்வழிப் பாதையில் அமைந்துள்ளது அம்பாந்தோட்டை.

ஆண்டுக்கு 30 ஆயிரம் கப்பல்கள் இந்தக் கடல்வழிப் பாதையைப் பயன்படுத்தி வருகின்றன. சீன அரசின் நிதியுதவியுடன் அம்பாந்தோட்டை துறைமுக கட்டுமானப் பணிகளை 2008-இல் இலங்கை அரசு தொடங்கியது. கட்டுமானப் பணியிலும் முற்றிலும் சீன நிறுவனங்களே ஈடுபட்டன. முதல்கட்ட பணிக்கு 360 மில்லியன் டொலர் திட்ட மதிப்பீடு செய்யப்பட்டது.

இதில் 85 சதவீதத்தை சீனாவும், 15 சதவீதத்தை இலங்கையும் வழங்கின. 2010, நவம்பர் 18-ஆம் திகதி அப்போதைய ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச, தனது பெயரில் அமைந்த இத்துறைமுகத்தை திறந்து வைத்தார்.

சீனாவுடன் ஒப்பந்தம்

2016-ஆம் ஆண்டு 11.81 மில்லியன் டொலர் வருவாயை இத்துறைமுகம் ஈட்டியது. ஆனால், நிர்வாகச் செலவு 10 மில்லியன் டொலர் என்பதால், 1.81 மில்லியன் டொலர் லாபமாக இலங்கை துறைமுக பொறுப்புக் கழகத்துக்கு கிடைத்தது. ஆனால், தொடர்ந்து எதிர்பார்த்தபடி இத்துறைமுகம் லாபத்தை ஈட்ட இயலாததால், சீனாவிடம் வாங்கியிருந்த கடனை கட்ட முடியாத அளவுக்கு இலங்கை துறைமுகப் பொறுப்புக் கழகத்துக்கு சுமை அதிகரித்தது.

இதைத் தொடர்ந்து, 2017-ஆம் ஆண்டு அப்போதைய பிரதமர் ரணில் விக்ரமசிங்க சீனாவுக்குச் சென்றபோது, கடனுக்கு ஈடாக அம்பாந்தோட்டை துறைமுகத்தை சீனாவுக்கு குத்தகைக்கு வழங்கும் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார். இந்த ஒப்பந்தப்படி 1.4 பில்லியன் டொலரை இலங்கைக்கு சீனா வழங்கியது.

இந்தத் தொகையிலிருந்து சீனாவுக்கு வழங்க வேண்டிய கடனை திரும்பச் செலுத்த வேண்டும். 99 ஆண்டு கால ஒப்பந்தத்தில் துறைமுகத்தின் 80 சதவீத பங்கு சீன அரசுக்குச் சொந்தமான சீனா மெர்ச்சன்ட்ஸ் நிறுவனத்துக்கும், மீதி இலங்கை துறைமுகப் பொறுப்புக் கழகத்துக்கும் வழங்கப்பட்டது.

எதிர்ப்பும் மாற்றமும்

சீனாவிலிருந்து ஐரோப்பா வரையிலான சாலைகள், துறைமுகங்களை இணைக்கும் வகையிலான புதிய பட்டுப் பாதை திட்டத்தைச் செயல்படுத்திவரும் சீனாவுக்கு அம்பாந்தோட்டை துறைமுகம் கிடைத்தது பெரும் மகிழ்ச்சியைத் தந்தது. ஆனால், இந்திய பெருங்கடலை நோக்கியபடி உள்ள இத்துறைமுகத்தை கடற்படைத் தளமாக சீனா பயன்படுத்தக் கூடும் என இந்தியா, அமெரிக்கா, ஜப்பான் ஆகிய நாடுகள் கவலை தெரிவித்தன. ஆனால், அதற்கு அனுமதி அளிக்க மாட்டோம் என இலங்கையும், முற்றிலும் வணிக நோக்கத்துக்காகத்தான் இந்த ஒப்பந்தம் என சீனாவும் உறுதியளித்தாலும் அதை சந்தேகக் கண்கொண்டுதான் பார்க்க வேண்டியிருக்கிறது.

“ஏழை நாடுகளை கடன்வலையில் சிக்க வைக்கும் ராஜதந்திரம்’ என சீனாவின் நடவடிக்கையை உலக நாடுகள் விமர்சிக்கத் தொடங்கின. இந்த ஒப்பந்தத்துக்கு மகிந்த ராஜபக்சவின் கட்சியும் கடும் எதிர்ப்புத் தெரிவித்தது. உள்ளூர் மக்களும் பெரும் போராட்டத்தில் இறங்கவே, ஒப்பந்தத்தில் பங்கு விகிதமானது 70-30 என மாற்றி அமைக்கப்பட்டது. ஆனாலும், துறைமுகத்தின் முழுமையான கட்டுப்பாடு சீன நிறுவனங்களின் கையில் சென்றுவிட்டது.

கோத்தபய நிலைப்பாடு

தற்போது கோத்தபய ராஜபக்ச ஜனாதிபதியாக வெற்றி பெற்றுள்ளார். தேர்தல் அறிக்கையிலேயே இந்த ஒப்பந்தம் மாற்றியமைக்கப்பட வேண்டும் என அவரது கட்சி வலியுறுத்தியிருந்தது. ஆனால், அது வெறும் தேர்தல் வாக்குறுதியாகத்தான் இருக்கும் என அரசியல் நோக்கர்கள் கருத்து தெரிவித்திருந்த நிலையில், அதை உண்மையிலேயே செயல்படுத்துவதற்கான நடவடிக்கையை கோத்தபய தொடங்கியிருக்கிறார். “இலங்கையின் மூல உபாய, பொருளாதார முக்கியத்துவம் வாய்ந்த துறைமுகத்தை சீனாவின் கட்டுப்பாட்டில் விட்டிருப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது. எனது சகோதரர் மகிந்த ராஜபக்ச காலத்தில் சீனாவின் உதவியுடன் முழுக்க வணிக நோக்கத்துக்காகத்தான் இத்துறைமுகம் கட்டப்பட்டது. ஆனால், துறைமுகத்தின் கட்டுப்பாட்டை சீனாவிடம் வழங்கியிருக்கக் கூடாது. இலங்கையின் எதிர்கால முன்னேற்றத்துக்கு சீனாவின் உதவி தேவை என்றாலும்கூட, இதைச் சொல்வதில் எனக்கு எந்தத் தயக்கமும் இல்லை. இலங்கை மக்களுக்கு இந்த ஒப்பந்தத்தில் விருப்பம் இல்லை. இது இலங்கையின் சொத்து. சீனாவின் கடனை குறிப்பிட்ட காலத்தில் திரும்பச் செலுத்துவோம்’ என தனது நிலைப்பாட்டை தெளிவுபடக் கூறியுள்ளார் கோத்தபய.

சீனா ஏற்குமா?

ஏற்கெனவே இருமுறை பேச்சுவார்த்தை நடத்தி கையெழுத்தான இந்த ஒப்பந்தத்தின் காலத்தைக் குறைப்பது அல்லது ரத்து செய்வது தொடர்பாக மீண்டும் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்கிற இலங்கையின் கோரிக்கையை சீன ஜனாதிபதி ஷி ஜின்பிங் ஏற்பாரா என்ற கேள்வி எழுந்துள்ளது. ஆனால், புதிய பட்டுப் பாதைத் திட்டத்தின் மூலம் தன்னலமற்ற உலக மேம்பாட்டாளராக தன்னைக் காட்டிக்கொள்ள முனையும் சீனாவின் முயற்சிக்கு அம்பாந்தோட்டை துறைமுக ஒப்பந்த விவகாரம் ஒரு தடைக்கல்லாக அமைந்துள்ளது. இலங்கையின் கோரிக்கையை ஏற்று ஒப்பந்தத்தில் மாற்றம் செய்துகொண்டால், தன் மீதான மரியாதையை உலக நாடுகள் மத்தியில் உயர்த்திக்கொள்ளலாம் என்பதால் ஒப்பந்த மாற்றத்துக்கு சீனா சம்மதிக்கும் என்றே தெரிகிறது.

இந்தியாவும் சீனாவும்

அம்பாந்தோட்டை துறைமுக ஒப்பந்த விவகாரத்தை ஜனாதிபதி கோத்தபய எழுப்பக்கூடும் என சீனா முன்னரே எதிர்பார்த்திருந்தது. அதனால்தான், கோத்தபய ஜனாதிபதியாக தேர்வு பெற்றதும் அவருக்கு வாழ்த்துச் சொல்ல இலங்கைக்கான சீன தூதர் அவசரப்படவில்லை. 2018-இல் மகிந்த ராஜபக்ச பிரதமராக தன்னைத் தானே அறிவித்துக்கொண்டபோது முதல் நாடாக அவருக்கு வாழ்த்துச் சொல்லியது சீனாதான். அப்போது மகிந்தவின் “பிரதமர்’ அறிவிப்பை ஜனநாயகத்துக்கு முரணானது என இந்தியா ஏற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

ஆனால், இப்போது கோத்தபய ராஜபக்ச ஜனாதிபதியானதும் அவருக்கு முதலில் வாழ்த்து தெரிவித்தவர் பிரதமர் நரேந்திர மோடி. அதுமட்டுமல்லாமல், ஜனாதிபதி தேர்தல் முடிவுகள் வெளியானதும் கோத்தபயவை நேரில் சந்தித்துப் பேச வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கரை உடனடியாக  இலங்கைக்கு அனுப்பி வைத்தார் மோடி. ஜனாதிபதியானதும் மோடியின் அழைப்பை ஏற்று, கோத்தபய முதலில் அரசுமுறைப் பயணமாக வருகை தந்ததும் இந்தியாவுக்குதான். இதன்மூலம் இலங்கையுடனான நட்புறவில் இந்தியாவின் ராஜதந்திரம் சீனாவை பின்னுக்குத் தள்ளியிருப்பதாகக் கருத முடியும்.

மலேசியா, மியான்மர், பாகிஸ்தான் வரிசையில்…

சீனாவின் புதிய பட்டுப் பாதைத் திட்டத்தில் மலேசியா இணைந்துள்ளது. இத்திட்டத்தின் ஒப்பந்தப்படி சீன நிறுவனம் பணிகளைச் செய்யாத நிலையிலும், அந்நிறுவனத்துக்கு முந்தைய மலேசியா அரசால் பணம் வழங்கப்பட்டிருந்தது. மலேசியாவின் புதிய ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட மகாதிர் முகமது தலைமையிலான அரசு இதைக் கண்டறிந்து, சீனாவுடன் ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்த இரு திட்டங்களை ரத்து செய்து, அதற்கு ஈடாக சீன நிறுவனத்தின் வங்கிக் கணக்கிலிருந்து 240 மில்லியன் டொலரை பறிமுதல் செய்தது.

பாகிஸ்தானில் கராச்சியிலிருந்து பெஷாவர் வரையிலான ரயில் பாதையை மேம்படுத்த அந்நாட்டுக்கு 8 பில்லியன் டொலர் கடன் கொடுக்க நவாஸ் ஆட்சியின்போது சீனா முன்வந்தது. ஆனால், நீண்டகாலமாக வெளிநாட்டுக் கடன்களைத் திரும்பச் செலுத்த போராடி வரும் நிலையில், இம்ரான் கான் தலைமையிலான புதிய அரசு, ரயில் பாதை மேம்பாட்டுச் செலவை பாதியாகக் குறைக்க வேண்டும் என சீனாவுக்கு கோரிக்கை வைத்துள்ளது.

புதிய பட்டுப் பாதைத் திட்டத்தின் கீழ் மியான்மரில் துறைமுகம் ஒன்றை கட்டமைக்க சீனாவுடன் 7.5 பில்லியன் டொலர் மதிப்பீட்டில் ஓர் ஒப்பந்தத்தில் முந்தைய ராணுவ ஆட்சியாளர்கள் கையெழுத்திட்டிருந்தனர். இப்போது அங்கு மக்களாட்சி மலர்ந்துள்ள நிலையில், சீனாவுடன் மீண்டும் பேச்சுவார்த்தை நடத்தி அத்தொகையை 1.3 பில்லியன் டொலராக மியான்மர் அரசு குறைத்துள்ளது.

புதிய பட்டுப் பாதைத் திட்டத்தின் கீழ் ஏற்கெனவே போடப்பட்டுள்ள ஒப்பந்தங்களை மாற்றி அமைத்துள்ள, மாற்றியமைக்கக் கோரும் நாடுகள் வரிசையில் இப்போது இலங்கையும் சேர்ந்திருக்கிறது.

-நன்றி தினமணி-

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here