இலங்கை ஜனாதிபதி தேர்தல் 2019 – வாக்களிப்பு முறைமைகள்: எவ்வாறு வாக்களிப்பது?

1- தனது ஆளடையாளத்தை நிரூபிப்பதற்காக தேசிய அடையாள அட்டை அல்லது தேர்தல்கள் ஆணையாளர் அனுமதித்த ஆளடையாள ஆவணங்களான செல்லுபடியான வெளிநாட்டு கடவூச்சீட்டு செல்லுபடியான சாரதி அனுமதிப்பத்திரம், முதியோர் அடையாள அட்டை, ஓய்வூதிய அடையாள அட்டை, மதகுருமாருக்கான அடையாள அட்டை அல்லது தேர்தல்கள் திணைக்களத்தினால் கிராம அலுவலர் ஊடாக விநியோகிக்கப்படுகின்ற தற்காலிக அடையாள அட்டை என்பவற்றில் ஏதேனுமோர் ஆவணத்தை கட்டாயம் எடுத்துச் செல்லுதல் வேண்டும்.

2- அஞ்சல் மூலம் கிடைக்கப்பெறுகின்ற உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டையை எடுத்துச் செல்ல வேண்டும்.

3- வாக்களிப்பு நிலையங்களில் கடமையாற்றும் ஊழியர்கள் நால்வர் பின்வருமாறு செயற்படுவார்கள். முதலில் உள்ள அலுவலர் வாக்காளர் வசமுள்ள ஆளடையாள ஆவணத்தை பரிசீலித்துப் பார்த்து அதிலுள்ள நிழற்படமும், நபரின் முகத்தோற்றமும் ஒத்திசையுமாயின் வாக்காளரை இரண்டாவதாகக் காணப்படுகின்ற அலுவலரிடம் ஆற்றுப்படுத்துவார். இரண்டாம் அலுவலர் வாக்காளர் வசமுள்ள உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டைய கேட்டு வாங்கி அவரின் பெயரை வாக்காளர் பட்டியலில் தேடிப்பிடித்து அவரிடம் அவரின் பெயரை விசாரித்து வாக்காளரின் பெயரையும் தொடர் இலக்கத்தையும் உரத்து மொழிவார். அதன் பின்னர் ஆட்சேபனை எதுவுமில்லையெனில் வாக்காளரை அடுத்து அமர்ந்துள்ள அலுவலரிடம் ஆற்றுப்படுத்துவார். மூன்றாம் அலுவலர் வாக்காளரின் இடதுகை சிறுவிரலை பரிசீலித்து மைபூசு கருவியொன்றின் மூலம் அவ்விரலை சுற்றி மை பூசுவார். (விரலில் மையைப் பூசுவதற்கு இணங்காவிடத்து அத்தகைய வாக்காளர் ஒருவருக்கு வாக்கினை பிரயோகிக்க முடியாமற் போகக் கூடும்.)

விரலை அடையாளமிட்டதன் பின்னர் அடுத்து அமர்ந்துள்ள அலுவலர் வாக்குச்சீட்டொன்றைத் தருவார். அதை எடுத்துக்கொண்டு வாக்கினை அடையாளமிடுவதற்காக மறைக்கப்பட்டுள்ள கூட்டிற்குள் சென்று வாக்குச்சீட்டில் தாம் விரும்பிய கட்சிக்கு அல்லது குழுவுக்கு வாக்கினை அடையாளமிட்டு, விரும்பின் வாக்குச்சீட்டின் கீழ்ப்பகுதியில் உள்ள வேட்பாளர்களின் இலக்கங்களின் ஊடாக சுட்டிக்காட்டப்படுகின்ற வேட்பாளர்களுக்கு அல்லது அதனிலும் குறைந்த தொகையினருக்கு விருப்பினை அடையாமிட்டு, வாக்குச்சீட்டை நன்றாக இரண்டாக மடித்து தேவைப்படின் நான்காக மடித்து வாக்குச்சீட்டை வாக்குப் பெட்டிக்குள் இட வேண்டும். வாக்கு சீட்டின் முதலாவது நிரலில் போட்டியிடுகின்ற 35 வேட்பாளர்களினதும் பெயர்கள் இருக்கும். அதனை தொடர்ந்து ஒவ்வொரு வேட்பாளர்களின் பெயர்களுக்கு எதிரே அவர்களது சின்னம் இருக்கும். அதற்கு அடுத்த நிரலில் வெற்று கூடு இருக்கும். இந்த வெற்று கூட்டில் வாக்கினையோ அல்லது விருப்பினையோ அளிக்க முடியும். இலங்கையின் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியை தெரிவு செய்வதற்கு இரண்டு முறைகளின் கீழ் வாக்களிக்க முடியும்.

ஒன்று – தமக்கு பிடித்த வாக்காளர் ஒருவருக்கு சின்னத்திற்கு அருகில் உள்ள கூண்டுக்குள் புள்ளடியிடுவது. இரண்டு – விருப்பிய ஒருவருக்கு 1 என அடையாளமிட்டு வாக்கினையும் விருப்பு வாக்குகளை 2, 3 இனை விருப்பியவர்களின் சின்னதருகே இலக்கமிடுவது.

இங்கு 1 க்கு பதிலாக புள்ளடியிடலாம். ஆனால் 1 என்ற இலக்கத்தையும் புள்ளடியையும் சேர்த்து இட்டால் செல்லுபடியற்றதாகிவிடும். அதேபோன்று 1 க்கு மேற்பட்ட புள்ளடியிட்டிருப்பினும் செல்லுபடியற்றதாகிவிடும். இங்கு விருப்பு வாக்கு கட்டாயம் அல்ல என்பதும் கருத்தில் கொள்ள வேண்டும். மக்களின் இறைமை மக்களுக்குரியது. அந்த இறைமையை உதாசீனப்படுத்தாது மக்கள் வாக்களிப்பது அவர்களின் உரிமை. மற்றும் அரசியலமைப்பின் பிரகாரம் இறைமையை அனுபவிப்பதற்கான ஒரு அணுகுமுறை வாக்களிப்பு கருதப்படுகின்றது

—————————————————————–

தபால் மூல வாக்களிப்புக்கள் முதல் கட்டமாக கடந்த 31 ஆம் திகதி இடம்பெற்றது. அதனை தொடர்ந்து 4, 5 ஆம் திகதிகளிலும் 7 ஆம் திகதியும் நடைபெற்று நிறைவடைந்துள்ளது. புலம்பெயர் இலங்கை பிரஜைகள் வாக்களிக்க விரும்பினால் வாக்கு சீட்டு கிடைக்கப் பெற்றதை உறுதி செய்து அதன் பின்னர் இலங்கைக்கு விஜயம் செய்து தங்களுடைய வாக்களிப்பு நிலையங்களில் வாக்களிக்க முடியும்.

———————————————————————

உங்கள் வாக்கு துஸ்பிரயோகம் செய்யப்பட்டிருப்பின் என்ன செய்யலாம்?

வாக்காளர் ஒருவர் தனது வாக்கை பிறிதொருவர் அளித்திருந்தால் பாதிக்கப்பட்ட வாக்காளர் குறித்த வாக்களிப்பு நிலையத்தில் உள்ள சிரேஸ்ட தலைமை தாங்கு அலுவலரிடம் தனக்கு வாக்கு சீட்டு வேண்டும் எனக் கோரி ‘கேட்டு பெறும் வாக்கு சீட்டு” என்ற வாக்குசீட்டை பெற்று வாக்களிக்க முடியும். அதேநேரம் பாதிக்கப்பட்ட நபர் தன்னுடைய வாக்கினை துஸ்பிரயோக படுத்திய நபருக்கு எதிராக நீதிமன்ற நடவடிக்கையை முன்னெடுக்க முடியும்.


நீங்கள் வாக்காளராக இருக்க எத்தகைய தகுதி தேவை?

அரசியலமைப்பு உறுப்புரை 89 இன் கீழ்:

1- இலங்கை பிரஜையாக இருத்தல் வேண்டும்.

2- 18 வயதினை கடந்திருந்தல் வேண்டும்

3- சித்தசுவாதீனமற்றவராக இருத்தல் வேண்டும்.

4-இலங்கை பிரஜை ஒருவர் கடந்த 7 ஆண்டுகளுக்குள் இரண்டாண்டு கால சிறைத்தண்டணை அனுபவித்திருக்காத அல்லது அனுபவித்து கொண்டிருக்காத அல்லது குற்றவாளியென தீர்ப்பளிக்கப்பட்டிராதவாராக இருத்தல் வேண்டும்.

5-பிரஜை ஒருவர் ஏதாவது குற்றத்தில் அதாவது துஸ்பிரயோகம் இலஞ்ச ஊழல் போன்ற குற்றச்சாட்டுக்களின் பிரகாரம் குற்றவாளியாக தீர்ப்பளிக்கப்பட்டிருந்தால் உள்ளூரதிகார சபை தேர்தல்கள் கட்டளை சட்டத்தின் கீழ் உள்ள பிரிவுகளின் ஏற்பாடுகளின் பிரகாரம் குற்றத் தீர்ப்பளிக்கப்பட்ட திகதியிலிருந்து 5 ஆண்டுகாலத்திற்கு வாக்காளராக இருக்க தகுதியற்றவர்.

6- அதேபோன்று சட்டத்தின் கீழ் சட்டவிரோத பழக்கங்கங்களில் ஈடுபட்ட நபரொருவர் குற்றவாளியாக காணப்பட்ட காலத்திலிருந்து 3 ஆண்டு காலத்திற்கு கழியாதிருந்தால் அவர் வாக்களிக்க தகுதியற்றவர்

7- அரசியலமைப்பின் பிரகாரம் விசேட ஜனாபதி ஆணைக்குழுவின் விசாரணைகளின் அடிப்படையில் குடியியல் தகுதியீனம் விதிக்கப்பட்டிருந்தாலும் வாக்களிக்க முடியாது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here