UPDATE: விக்கி- சைக்கிள் சந்திப்பு இரத்து; இன்று ‘அர்ச்சனை’யை ஆரம்பிக்கிறது முன்னணி!


வடக்கு முன்னாள் முதலமைச்சர் க.வி.விக்னேஸ்வரன் மீது காரசாரமான குற்றச்சாட்டுக்களை சுமத்தி, இன்று தமிழ் தேசிய மக்கள் முன்னணி பத்திரிகையாளர் சந்திப்பை நடத்தவுள்ளது.

தமிழ் மக்கள் கூட்டணிக்கும், தமிழ் தேசிய மக்கள் முன்னணிக்குமிடையிலான கூட்டணி பேச்சுக்களிற்கான முயற்சிகளில் கலாநிதி முருகர் குணசிங்கம் ஈடுபட்டிருந்தார். சுரேஷ் பிரேமச்சந்திரனை தவிர்த்து விட்டு, விக்னேஸ்வரன் மாத்திரம் தமது தரப்புடன் இணைய வேண்டுமென தமிழ் தேசிய மக்கள் முன்னணி நிபந்தனை விதித்து வந்தது.

இந்தநிலையில் பேச்சுவார்த்தைக்கு மத்தியஸ்தம் வகித்த தரப்பினர், சுரேஷ் பிரேமச்சந்திரனை தவிர்த்து விட்டு விக்னேஸ்வரன் வர தயாராக இருக்கிறார், தற்போது சுரேஷ் தரப்புடன் அவருக்கு கருத்து வேறுபாடுள்ளது என கூறியதாக தெரிகிறது. இதையடுத்து இன்று இரண்டு தரப்பும் கூட்டணி பேச்சில் ஈடுபட திட்டமிடப்பட்டிருந்தது.

நல்லூரிலுள்ள விக்னேஸ்வரனின் வாசஸ்தலத்தில் சந்திப்பு நடக்கவிருந்தது. க.வி.விக்னேஸ்வரன், க.அருந்தவபாலன், பேராசிரியர் வி.சிவநாதன் ஆகியோர் தமிழ் மக்கள் கூட்டணி சார்பில் கலந்துகொள்ளவிருந்தனர். கஜேந்திரகுமார் பொன்னம்பலம், கஜேந்திரன், சட்டத்தரணிகள் சுகாஷ், காண்டீபன், மணிவண்ணன் ஆகியோர் முன்னணி தரப்பிலும் கலந்துகொள்ளவிருந்தனர்.

இந்த நிலையில், சுரேஷ் தரப்பை தவிர்த்து கூட்டணியமைக்க தயாரில்லையென்ற நிலைப்பாட்டை மத்தியஸ்தர்களிடம் விக்னேஸ்வரன் நேற்று மாலை தெரிவித்தார். சில்லறை காரணங்களை கூறி ஒவ்வொருவரை தவிர்த்தால் கடைசியில் தமிழ் மக்கள் அணிகளாகவே பிரிந்து நிற்க வேண்டி வருமென்றும் முன்னணிக்கு விளங்கப்படுத்தும்படி மத்தியஸ்தர்களிற்கு தெரியப்படுத்தியிருந்தார். எனினும், சுரேஷ் தரப்பையும் இணைத்தால் கூட்டணிக்கு தயாரில்லையென முன்னணி விடாப்பிடியாக இருந்தது.

இதையடுத்து, விடாக்கொண்டன் மனநிலையுடன் உள்ள முன்னணியுடன் பேசி பலனில்லையென கருதிய விக்னேஸ்வரன் சந்திப்பில் பலனிருக்காதென்பதால், அதை தவிர்க்கலாமென மத்தியஸ்தர்களிடம் தெரிவித்தார். நேற்றிரவு 7 மணியளவில் இந்த தகவல் முன்னணிக்கு, மத்தியஸ்தர்களால் தெரியப்படுத்தப்பட்டது.

விக்னேஸ்வரன் தம்முடன் பேச்சுக்கூட நடத்தாமல் சந்திப்பை தவிர்த்து விட்டார் என முன்னணி வட்டாரங்கள் கொதித்து போயுள்ளதாக தெரிகிறது. சம்பிரதாயத்திற்கு அழைத்து பேசி, கூட்டணி சரிவராது என்பதை பேசி பிரிந்திருக்கலாமென முன்னணி வட்டாரங்கள் தெரிவித்தன.

முன்னணியின் நிலைப்பாடு தெரிந்தும்,  வீணான நேரத்தை ஏன் செலவிட வேண்டுமென தமிழ் மக்கள் கூட்டணியின் பிரமுகர் ஒருவர் தமிழ்பக்கத்திடம் தெரிவித்தார்.

இதேவேளை, இன்று யாழில் முன்னணி சார்பில் பத்திரிகையாளர் சந்திப்பு நடக்கலாமென தெரிகிறது. கஜேந்திரகுமார், கஜேந்திரன் தரப்பு இன்று காரசாரமாக விக்னேஸ்வரனை குற்றம்சாட்ட திட்டமிடுவதாக தெரிகிறது.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here