இதனைத் தொடர்ந்து 1981, 82, 83 காலப்பகுதியில் கணக்கியற் துறையில் எனது ஈடுபாடு காரணமாக நான் பொருளாதாரரீதியில் நல்ல நிலையில் இருந்தேன். அப்போது டக்ளஸ் தேவானந்தா அரசியல் வன்முறை செயற்பாடுகளினால் தடுப்புக்காவலில் இருந்தார். தேவானந்தாவின் தந்தையாரும், சகோதரர்களும் என்னுடன்தான் தங்கியிருந்தனர்.
இந்திய இலங்கை ஒப்பந்தத்தின் பின்னர் ஒருநாள் இந்தியாவிலிருந்து டக்ளஸ் தேவானந்தா தொலைபேசியில் பேசினார். புதிய கட்சியைப் பதிவுசெய்ய இந்தியாவிலிருந்து இரண்டுபேர் வருவதாகவும், அவர்களிற்கு உதவி செய்யுமாறும் கேட்டிருந்தார். அதன்படி சந்திரகுமாரும் இன்னொருவரும் வந்திருந்தார்கள்.
சந்திரகுமார், தேவானந்தாவின் தந்தையார், அவரின் தம்பி மற்றும் நான், ஈ பி டி பி யினைப் பதிவு செய்தோம்.
பின்னர் டக்ளஸ் தேவானந்தா இலங்கைக்கு வந்தபின் சந்திக்க கூப்பிட்டார். அப்பொழுது பொருளாதார நெருக்கடியில் நான் இருந்தேன். கட்சியின் முழுநேர செயற்பாட்டாளராகுமாறு என்னைக் கேட்டுக் கொண்டார். அன்று தொடங்கிய பயணம். இன்றுவரை தொடர்கிறது.
ஈ.பி.டி.பியினால் எனக்கு சில சந்தர்ப்பங்கள் கிடைத்தன. அவற்றினை நான் சரியாகப் பயன்படுத்தியுள்ளேன். அதனால் கட்சிக்கும் நன்மையானது, என்னையும் அரசியல் ரீதியாக வளப்படுத்திக் கொண்டேன். ஒருமுறை வடக்கு முதலமைச்சர் சொன்னார்- “தவராசா.. அரசியலமைப்பு விவகாரங்களை நுணுக்கமாக படிக்க உங்களிற்கு நேரம் கிடைத்திருக்கிறது. நமக்குத்தான் கிடைக்கவில்லை“ என்றார். இந்த நிலைமைக்கு என்னைக் கொண்டு வந்தது ஈ.பி.டி.பியில் எனக்குக் கிடைத்த வாய்ப்பும் அதனை நான் சரியாக பயன்படுத்தியமையும் ஆகும்.
சந்திரிகா அம்மையாரின் தீர்வுத்திட்டம் தொடர்பான நகல் வரைவில் எனக்குக் கட்சி சார்பில் தொடர்ச்சியாகப் பங்குகொள்ள வாய்ப்புக்கிட்டியது. அதேபோல் பேராசிரியர் திஸ்ஸவிதாரணவின் தலைமையிலான சர்வகட்சி பிரதிநிதித்துவக் குழுவில் எனது கட்சி சார்பில் பங்குகொள்ள எனக்கு வாய்ப்புக் கிடைத்தது. தமிழ் மக்களின் பிரச்சனைகள் தொடர்பாகத் தொடர்ச்சியாக அக்குழு முன் மூன்று, நான்கு நாட்கள் விளக்கமளித்து விவாதித்திருநந்தேன். 33 பக்கமுள்ள ஆவணம் அது. இதற்கு முன் பாராளுமன்றத்தில் ஜி.ஜி.பொன்னம்பலம் மட்டுமே ஐம்பதிற்கு ஐம்பது கேட்டு இவ்வளவு நீண்ட உரையாற்றியுள்ளார். கடந்த வருடம் அரசியலமைப்பு மாற்றத்திற்கான பொதுமக்கள் கருத்தறியும் குழுவிலும் நான் ஓர் உறுப்பினராகக் கட்சியினால் நியமிக்கப்பட்டிருந்தேன். இந்த வாய்ப்பினையும் நான் சரிவர முழுமையாகப் பாவித்துள்ளேன்.
வடமாகாணசபை தேர்தலில் நான்தான் கட்சியின் முதலமைச்சர் வேட்பாளராகப் போட்டியிட்டிருந்தேன். முப்பதாயிரம் வாக்குகளைக் கட்சி பெற்றிருந்தது. முதலமைச்சர் வேட்பாளரென்றால் விருப்பு வாக்கில் ஒன்று எனக்கு வந்திருக்க வேண்டும். இந்த விடயத்தில் இதயசுத்தியுடன் கட்சியின் ஏனைய வேட்பாளர்கள் செயற்படவில்லை. அதனால் எமது கட்சியில் இன்னொருவரே என்னைவிட அதிக வாக்குகளைப் பெற்றார்.
பின்னர் வடமாகாண சபையின் எதிர்க்கட்சித் தலைவர் பதவியில் இருந்தேன். ஜனநாயக மரபில் எதிர்க்கட்சி தலைவர் என்ன செய்ய வேண்டுமோ அதனை செய்தேன். வட மாகாணசபையின் செயற்பாடுகள் வினைத்திறனற்றவையென்பது பலராலும் ஏற்றுக் கொள்ளப்பட்டிருந்தது. இதனை வெளிக்கொணர்வதில் முக்கிய பங்கு வகித்திருக்கின்றேன். நான் ஆதாரங்களுடன் வினைத்திறனற்ற செயற்பாடுகளைப் பகிரங்கப்படுத்தியதனாலேயே அது நிகழ்ந்தது.
எனினும், எனது கட்சியை சேர்ந்த சிலர் என்னில் குறை கண்டுபிடித்தனர். நான் எல்லாவற்றையும் எதிர்க்கவில்லை, கட்சியை முதன்மைப்படுத்தி செயற்படவில்லையென தொடர்ச்சியாக குற்றம் கூறியதோ என்னவோ, என்னை எதிர்க்கட்சித் தலைவர் பதவியிலிருந்து நீக்குவதற்கான முயற்சி நடைபெற்றது. அது சாத்தியப்படவில்லை. பதவியை சுழற்சிமுறையில் பகிர தேர்தலின் முன் இணக்கப்பாடு இருந்ததாக கட்சியினால் காரணம் கூறப்பட்டது, ஆனால் அப்படியொரு இணக்கப்பாடு கட்சிக்குள் இருக்கவில்லை.
கட்சிக்குள் முரண்பாடுகள் இருப்பது வழக்கம். எனது பங்களிப்பு கட்சிக்கு இருந்து கொண்டிருக்கிறது.