கொக்குவிலை அண்டிய பகுதிகளே ஹெரோயின், கஞ்சா விற்பனையின் தலைநகரம்: பொலிசார் தெரிவிப்பு!

யாழ்ப்பாணத்தின் கொக்குவில் புகையிரத நிலையத்திற்கு அண்மையான பகுதிகளே ஹெரோயின், கஞ்சா, சட்டவிரோத மதுபான விற்பனை கொடிகட்டிப் பறக்கும் இடமாக உள்ளதாக கோப்பாய் பொலிசார் தெரிவித்துள்ளனர்.

ஹெரோயின் விற்பனையில் ஈடுபட்டார் என்ற குற்றச்சாட்டில் கைதாகி, விளக்கமறியலில் உள்ள வாலிபர் ஒருவர் பொலிசாரால் நேற்று (22) யாழ். நீதிவான் நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட்டார். இதன்போதே பொலிசார் மேற்படி தகவலை தெரிவித்தனர்.

கொக்குவில் புகையிரத நிலையம் தொடக்கம் யாழ் பல்கலைகழகத்தின் பின்புறம் வரையான பகுதிகளே இந்த சட்டவிரோத நடவடிக்கைகளின் தலைநகரமாக உள்ளது. யாழ், கோப்பாய் பொலிஸ் நிலையங்களிற்கு உட்பட்ட பகுதிகள் இவை. ஹெரோயின், கஞ்சா, சட்டவிரோத மதுபான விற்பனை அங்கு தாராளமாக நடக்கிறது என பொலிசார் குறிப்பிட்டனர்.

அந்த பகுதியில் ஹெரோயின் விற்பனையில் ஈடுபட்ட ஒருவரிடம், வாடிக்கையாளரை போல பொலிஸ் ஒற்றர் சென்றுள்ளார். அருகிலுள்ள கல்லொன்றின் கீழ் ஹெரோயினை வைத்து விட்டு, பணத்திற்காக அவர் காத்திருந்துள்ளார். அவரை கைது செய்ய பொலிசார் முற்பட்டபோது, அவர் தப்பியோடினார் என்றும் பொலிசார் தெரிவித்தனர்.

நேற்று அவரை மன்றில் முற்படுத்தியபோது, சந்தேகநபர் சார்பில் முன்னிலையான பெண் சட்டத்தரணி, சந்தேகநபரை பொலிசார் கடுமையான சித்திரவதை செய்து தாக்கியதாக தெரிவித்தார். சந்தேகநபரின் உடலில் காயம் தென்பட்டது.

எனினும், பொலிசார் கைது செய்ய முற்பட்டபோது, சந்தேகநபர் தப்பியோடி விறகு கட்டையில் தடக்க விழுந்து ஏற்பட்ட காயம் என பொலிசார் தெரிவித்தனர்.

பொலிசாரின் விளக்கத்தை நிராகரித்த நீதிவான், காயத்துடன் சந்தேபநபரை மன்றில் முற்படுத்தும்போது, சட்டவைத்திய அதிகாரியின் அறிக்கை பெற்று சமர்ப்பிக்க வேண்டியதை நினைவூட்டினார். பொலிசார் அப்படி செய்யாதது சந்தேகத்தை ஏற்படுத்துவதாக தெரிவித்தார். அத்துடன், உடனடியாக சட்டவைத்திய அதிகாரியின் அறிக்கையை பெற்று மன்றில் சமர்ப்பிக்கும்படியும் உத்தரவிட்டார்.

அத்துடன் சந்தேகநபரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here