புளொட் சிக்கிய கதை: சிவராம் மினி தொடர் 11

சிவராமை கொன்றது யார்?… எப்படி அந்த கொலை நடந்தது?- என்பதை பற்றிய தகவல்களிற்காக தொடங்கிய இந்த தொடரில், கடந்த பாகங்களில் இடையீமாக சில விடயங்களை சொல்லி வந்தோம். இந்த சம்பவத்துடன் தொடர்புடையவர்கள், சில பின்னணி தகவல்கள், தொடர்புடைய சம்பவங்கள் என்ற அடிப்படையில், தேவையானவற்றை மட்டும் குறிப்பிட்டிருந்தோம்.

இதனால்தான் புளொட் மோகனை பற்றியும் குறிப்பிட்டோம்.

இராணுவ புலனாய்வு செயற்பாடுகள் கொழும்பில் எப்படியிருந்தன, எப்படியானவர்களை பயன்படுத்தினார்கள், புலிகளின் புலனாய்வாளர்களிற்கு எப்படியெல்லாம் நெருக்கடி கொடுத்தார்கள். புலிகளின் புலனாய்வார்கள் அதை எப்படி எதிர்கொண்டார்கள் என்ற தகவல்களை குறிப்பிட்டபோது, தவிர்க்க முடியாமல் புளொட் மோகன் பற்றிய தகவல்களை சந்தோம்.

புலிகளிற்கு எதிரான இராணுவ புலனாய்வு செயற்பாட்டில் புளொட் மோகன் ஒரு அரிய சொத்து. அவர் மட்டுமல்ல, இயக்கங்களில் இருந்து விலகி சென்று, இராணுவத் தரப்புடன் இணைந்தவர்கள் எல்லோரமே ஏதோ ஒரு விதத்தில், அரச தரப்பிற்கு தேவையாக இருந்தனர்.

1988இல் இந்திய இராணுவத்தின் முழுமையான அனுசரணையுடன், தமிழ் தேசிய இராணுவம் அமைக்கப்பட்டது. அதற்கு காளித் என்பவர் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டிருந்தார். இந்திய படைகள் வெளியேறிய பின்னர், காளித் கொல்லப்பட்டார். காளித்தை, புலிகளே கொன்றார்கள் என்றுதான் பெரும்பாலானவர்கள் நினைக்கிறார்கள். அதைப்பற்றிய நிறைய கதைகளும் உலாவுகின்றன.

ஆனால், உண்மை அதுவல்ல!

1990இல் இந்திய படைகள் வெளியேறின. அந்த சமயத்தில் காளித் கொல்லப்பட்டிருந்தார். 1990இல் காளித் கொல்லப்பட்டார் என ஒரு தகவல் பரவலாக நம்பப்பட்டு வருகிறது. காலித் அணி வரும்போது, விடுதலைப்புலிகள் சுற்றிவளைத்து தாக்கி, அவர்களை கொன்றார்கள் என்பதுதான் அந்த கதை.

ஆனால், உண்மையில் அப்படியெதுவுமே நடக்கவில்லை.

கிட்டத்தட்ட 30 வருடங்களாக நம்பப்பட்டு வரும் கதையை, “அப்படியெதுவுமே நடக்கவில்லை“ என திடீரென நாம் சொன்னால், உங்களிற்கு குழப்பமாகத்தான் இருக்கும். முழுமையாக படியுங்கள், குழப்பம் தீரும் என்பதை இப்போதைக்கு சொல்லி வைக்கிறோம்.

காளித் கொல்லப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடையவர்கள், அந்த சம்பவத்தை நேரடியாக அறிந்தவர்கள் என இப்பொழுது உயிருடன் இருப்பவர்கள் மிகச்சிலர்தான். அதை எண்ண, ஒரு கையின் விரல்கள் போதும். அவர்கள் பகிரங்கமாக பேச தயங்கிக் கொண்டிருந்த விடயத்தை, தமிழ்பக்கம் இப்பொழுது பகிரங்கமாக பேசுகிறது. அவ்வளவுதான்.

காளித்தை கொன்றது புளொட் மோகன்!

எப்படி? ஏன்?

புளொட் மோகன் என்றதும், பலர் நினைப்பார்கள்- மோகன் கடைசிவரை புளொட்டில் இருந்தார், அதனால்தான் இந்த பெயர் அவரில் ஒட்டியது என்று. ஆனால், உண்மை அதுவல்ல. 1989களிலேயே புளொட்டுடன் முரண்பட்டு விட்டார் மோகன். அதை ஏற்கனவே குறிப்பிட்டிருக்கிறோம்.

மன்னார் முள்ளிக்குளத்தில் இருந்த புளொட் முகாமை 1989 மேயில் புலிகள் தாக்கினார்கள். இந்த தாக்குதல் புளொட் அமைப்பினரின் மனஉறுதியை ஓரளவு உலுக்கியது. பலரும் அச்சமடைந்திருந்தனர். அப்போது வவுனியாவில் தங்கியிருந்த புளொட் மோகன், ஒரு பிரச்சனையை கிளப்பினார். கிழக்கை சேர்ந்த தாம், இங்கே எதற்கு நிற்க வேண்டும்? மட்டக்களப்பிற்கே செல்லப் போவதாக பிரச்சனையை உண்டு பண்ணினார். அதாவது, வவுனியாவிலிருந்து வெளியேறுவதே அவரது திட்டம்.

கிழக்கை சேர்ந்த கொஞ்ச புளொட் போராளிகளையும் அழைத்துக் கொண்டு மட்டக்களப்பு சென்றுவிட்டார்.

அப்பொழுதே- 1989இலேயே, புளொட்டில் இருந்து ஓரளவு பிரிவை பேணினார் மோகன். மட்டக்களப்பில் காடுகளில் தங்கியிருந்தது மோகன் அணி. அப்பொழுது அவருக்கு இரண்டு தொடர்புகள் ஏற்பட்டன. ஒன்று, இலங்கை இராணுவ அதிகாரிகளுடனான தொடர்பு. மற்றையது, இந்திய இராணுவம் உருவாக்கிய தமிழ் தேசிய இராணுவத்தின் பொறுப்பாளரான காளித் உடைய தொடர்பு.

இந்த தொடரின் முந்தைய பாகத்தை படிக்க : புளொட் சிக்கிய கதை: சிவராம் மினி தொடர் 11

இந்த சமயத்தில் இன்னொரு சுவாரஸ்ய சம்பவமும் நடந்தது. மோகன் மட்டக்களப்பிற்கு வருவதற்கு முன்னரேயே, மட்டக்களப்பு நகரில் புளொட்டின் அரசியல் அலுவலகம் இயங்கியது. அங்கு சிலர் தங்கியிருந்தனர். மோகனிற்கு புளொட்டின் தலைமை மீது கோபம் ஏற்பட்டதோ என்னவோ, புளொட் அமைப்பினருக்கு தொல்லை கொடுக்க ஆரம்பித்திருந்தார். இதனால், அவரை தனது கொலைப்பட்டியலில் இணைத்திருந்தார், புளொட்டின் இராணுவ தளபதி மாணிக்கதாசன்!

மட்டக்களப்பில் இருந்தபோதே, இலங்கை இராணுவம், இந்தியாவுடன் இணைந்திருந்த தமிழ் தேசிய இராணுவம் என்ற இரண்டு முனையிலும் நெருக்கமான தொடர்பை ஏற்படுத்தி விட்டார் மோகன்.

இந்த தொடர்பு ஏற்பட்ட சில மாதங்களிலேயே, இலங்கையை விட்டு இந்திய இராணுவம் வெளியேறும் சூழ்நிலையேற்பட்டது. தாங்கள் உருவாக்கிய அமைப்பின் பிரமுகர்கள்- அப்போதைய வடக்கு, கிழக்கு முதலமைச்சர் வரதராஜ பெருமாள் போன்றவர்களை- சிலரை இந்தியா படைகள் தம்முடன் அழைத்து சென்றன.

ஆனால், இங்கே தமது செல்லப்பிள்ளைகளான தமிழ் தேசிய இராணுவம் தொடர்ந்து செயற்பட வேண்டுமென இந்தியா விரும்பியது. ஆகவே, அதன் தலைவரான காளித்திடம் பெருமளவு பணம், ஆயுதங்களை கொடுத்து, தொடர்ந்து செயற்படுமாறு இந்தியா கேட்டது.

இந்திய அமைதிப்படை வெளியேறும் தறுவாயிலேயே, தமிழ் தேசிய இராணுவத்தை பெரும்பாலும் புலிகள் சிதைத்து விட்டனர். படையணி சிதைந்து விட்டது. தளபதி காளித் போன்ற சிலர், புலிகளிற்கு எதிரான போரை முன்னெடுக்க வேண்டுமென விரும்பினார்கள். இந்திய படைகள் வெளியேற தொடங்க, காளித் சில நம்பிக்கையான உதவியாளர்களுடன் காட்டுக்குள் நகர்ந்து விட்டார்.

இந்த தொடரின் முந்தைய பாகத்தை படிக்க : புளொட் சிக்கிய கதை: சிவராம் மினி தொடர் 10

புதிய அமைப்பாக கட்டியெழுப்பி, எப்படி தொடர்ந்து போரிடுவது என்பதை, நம்பிக்கையானவர்களுடன் பேச விரும்பினார். அப்போதைய நிலையில், அவருக்கு மிக நெருக்கமாக இருந்தது மோகன்தான்.

காட்டுக்குள் தான் தங்கியிருந்த பகுதிக்கு வரும்படி, மோகனிற்கு அழைப்பு விடுத்தார்.

(தொடரும்)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here