ஒரு பிடி அவித்த நெல்லை உணவாக தந்த இந்திய இராணுவம்: ஜி.ரி.லிங்கநாதனின் அனுபவங்கள்!

கல்வி அறிவு குறைந்தவர்களே ஆயுத போராட்டத்தில் இணைந்தனர் என்று இப்போதைய சில அரசியல்வாதிகள் கூறுகின்றனர். அது பிழை என்பதற்கு உதாரணம் நான். கந்தர் தாமோதரம்பிள்ளை லிங்கநாதன் எனது பெயர். வவுனியா மாவட்டம் நெடுங்கேணியை பூர்விகமாக கொண்ட வேளாண்மைக் குடும்பம் பிறந்தவன். எனது ஆரம்ப கல்வி நெடுங்கேணி மகா வித்தியாலயம், வவுனியா தமிழ் மகா வித்தியாலயம், யாழ் மத்திய கல்லூரி ஆகியவற்றில் கற்றேன். இலங்கை விவசாயக்கல்லூரியில் டிப்ளோமா பட்டம் பெற்றேன். அதன் பின்னர் வவுனியா விவசாயத் திணைக்களத்தில் கடமையாற்றினேன்.

இவ்வாறு வேலை செய்த காலத்தில் எனது அலுவலகத்திற்கு இலங்கை அரசின் வான்படையினர் வருவது வழமையாக இருந்தது. ஒரு நாள் வேலையில் மும்முரமாக இருந்த போது வழமை போன்றே வான் படையினர் எமது அலுவலகத்திற்கு வந்தனர். ஆனால் வழமைக்கு மாறாக அவர்களின் நடத்தையில் பாரியளவு மாற்றம் இருந்தததை அவதானிக்க முடிந்தது. வந்தவர்கள் நேரே என்னிடம் வந்து உனக்கு கீழ் வேலை செய்பவன் இயக்கம் ஒன்றுடன் தொடர்பு வைத்துள்ளான் என கூறினான். அத்துடன் அதற்காக என்னை கைது செய்வதாக கூறி முன்னேறிய போது எனது சக ஊழியர்களால் தடுத்து நிறுத்தப்பட்டது. அதன் பின்னர் அவர்கள் சென்றாலும் மீண்டும் அதே நிகழ்வு நடைபெற்றாலும் முதல் போன்றே எனது சக ஊழியர்கள் உதவினார்கள். இனியும் இங்கே இருந்தால் பாதுகாப்பில்லை என்று உணர்ந்தேன்.

இதனால் அங்கிருந்து விலகினேன். அக்காலத்தில் உமாவின் தலைமையிலான இயக்கம் மற்றும் பிரபா தலைமையிலான இயக்கங்கள் பிரபலமாக இருந்தன. நான் அவ்வியக்கத்தில் ஒன்றில் இணைய முடிவெடுத்தேன். அதன்படி 1983 ஆம் ஆண்டில் தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தில் (புளொட்) விசு என்ற பெயரில் சேர்ந்து ஆயுதப் போராட்டத்தில் இணைந்து கொண்டேன். புதிதாக இணைந்தவர்களுக்கு இந்தியாவில் ஆயுத பயிற்சி வழங்க அனுப்புவது வழமை. ஆனால் எனது உடல்நிலை காரணமாக இலங்கையில் ஆயுத பயிற்சி தரப்பட்டு அரசியல் வேலைத்திட்டங்களுக்கு பொறுப்பாக நியமித்தனர்.

அதன் பின் அரசியல் வேலைத்திட்டம் தவிர்ந்து சில சண்டைகளிற்கும் சென்று வருவதுண்டு. அது போன்ற சன்டை குஞ்சுக்குளம் பகுதியில் நிகழ்ந்தது. இலங்கை இராணுவத்திற்கும் எதிராக மூண்று அணியாக பிரிந்து போராடினோம். அதில் நான் 21 பேர் கொண்ட ஒரு அணியில் இருந்து போரிட்டேன். ஒரு கட்டத்தில் போர் உக்கிரமடைந்து பின் வாங்கி தப்பிச்செல்ல வேன்டிய கட்டாயம் ஏற்பட்டது. இதனால் நாங்கள் அங்கிருந்து பின்வாங்கினோம். பின்வாங்கும் போது சில இடங்களில் காணப்பட்ட நீர் நிலைகளில் நீந்தியும் முற்காடுகளிற்குள்ளாலும் தப்பித்து அடர்ந்த காட்டிற்குள் சென்று மறைந்து கொண்டோம்.

அக்காட்டினுள் உணவிற்கே வழியில்லாமல் பாலப்பழங்களை உண்டு வாழ்ந்தோம். இவ்வாறு மூன்று நாட்கள் கடந்த பின் எமது ஆதரவாளர் ஒருவர் பருப்பும், மாவும் கொண்டு வந்து தந்தார். அதன்பின் தான் நாங்கள் ரொட்டி சுட்டு சாப்பிட்டோம். அதன் பின் 1988ம் ஆண்டு எமக்கும் ஈபிஆர்எல்எவ்க்கும் எமக்கும் இடையிலே சிறு முரண்பாடு ஏற்பட்டது. இதனை தீர்ப்பதற்கு இந்திய இராணுவம் எங்களையும் ஈபிஆர்எல்எவ்ஐயும் பேச்சுவார்த்தைக்கு அழைத்தது. இப்பேச்சுவார்த்தைக்கு பொறுப்பாக நான் இருந்தேன். இவ்வாறு இந்திய இராணுவம் இரு இயக்கங்களையும் கூப்பிட்டு தடுத்து வைத்திருந்தனர்.

இதற்கு அடிப்படை காரணமாக விடுதலைப்புலிகளால் இலங்கை இந்திய ஒப்பந்தம், மாகாணசபை தேர்தலும் நிராகரிக்கப்பட்டது. அதன் பின்னர் பலமாக இருந்த எங்களிடம் இந்திய இராணுவம் இதனை நீங்கள் ஏற்க வேண்டும் என தெரிவித்தது. இதற்கு எமது தலைவர், விடுதலைப்புலிகள் கலந்து கொள்ளாத அல்லது ஏனைய கட்சிகள் கலந்து கொள்ளாத எந்தவொரு விடயத்திலும் நாங்கள் ஈடுபடமாட்டோம் என தெரிவித்திருந்தார். இதற்கு பழிவாங்கும் செயற்பாடாக இதனை அவர்கள் செய்தனர்.

சிறிது காலத்தின் பின்னர் ஈபிஆர்எல்எவ்ஐ சேர்ந்தவர்களை விடுவித்தாலும் எங்களை தொடர்ச்சியாக தடுத்து வைத்திருந்தனர்.

எந்த தவறும் செய்யாமல் எங்களை தடுத்து வைத்ததனால் நாங்கள் சிறையினை உடைத்து தப்பிப்பதற்கான திட்டங்களை தீட்டினோம். ஆனால் நாங்கள் செய்வதற்கு முன்னர் விடுதலைபுலிகள் அதனை செய்து தப்பிவிட்டனர். அதன் பின்னர்தான் எங்களிற்கு தொடங்கியது சித்திரவதை. இந்திய இராணுவ வீரர்கள் வந்து என்னையும் எங்களின் ஏனைய உறுப்பினர்களையும் இழுத்துச்சென்று கை, கால்களை கட்டி சில சித்திரவதைகளையும் செய்தனர். அத்துடன் உணவு என்று ஒரு பிடி அவித்த நெல் மற்றும் சாம்பார் தந்தனர். அந்த நெற்சோறை சுத்தம் செய்து உண்ணுவது என்றால் பல மணிநேரம் பிடிக்கும். இவ்வாறு பல சித்திரவரதகளின் பின்னர் இந்திய இராணுவம் இலங்கையை விட்டு செல்வதற்கு சில மாதங்களிற்கு முன்னர் எங்களை விடுதலை செய்தனர்.

இதன் பின்னராக பல போராட்ட அமைப்புகள் சனநாயக அரசியலுக்குத் திரும்பிய வேளையில் நாங்களும் அரசியலுக்குள் காலடி வைத்தோம். அதன் படி 1994 ஆம் ஆண்டில் வவுனியா நகரசபை தேர்தலில் போட்டியிட்டு நகரசபை தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டேன். அதன் பின் இரண்டாவது தடவையாகவும் நகரசபை உறுப்பினராகத் தேர்தெடுக்கப்பட்டேன். பின்னர் சிறிது காலம் அரசியலில் இருந்து ஒதுங்கியிருந்தேன்.

2013 வட மாகாண சபைத் தேர்தலில் தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தினால் பரிந்துரைக்கப்பட்டு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வேட்பாளராக வவுனியா மாவட்டத்தில் போட்டியிட்டு வட மாகாண சபை உறுப்பினரானேன். 2013 அக்டோபர் 14 ஆம் நாள் மாகாண சபை உறுப்பினராக புளொட் அமைப்பின் செயலாளர் முன்னிலையில் வவுனியாவில் பதவியேற்றுக் கொண்டேன்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here