‘அலன் தம்பதி கடத்தப்பட்ட பின்னரே என்னை கதிரையில் உட்கார வைத்தனர்’: சுகு எழுதும் அனுபவங்கள்!

இந்தவாரம் அனுபவங்களை பேசுகிறார் மூத்த போராளி சுகு. தமிழ்ச் சமூக ஜனநாயகக்கட்சி (முன்னைய ஈ.பி.ஆர்.எல்.எவ் பத்மநாபா அணி) செயலாளர். 1970களின் இறுதியிலிருந்து போராட்ட வாழ்வை ஏற்றவர். இடதுசாரி பார்வையுடன் தொடர்ந்தும் இயங்கி வருபவர். இனவிடுதலை போராட்டம், நீண்ட சிறைவாசம், நெருக்கடியான காலகட்டத்தில் ஈ.பி.ஆர்.எல்.எவ் அமைப்பின் ஒரு பிரிவை கட்டிக்காத்தது, மாற்றுக்குரலாக தொடர்ந்து இயங்கி வருவதென தமிழ் சமூகம் அதிகம் புரட்டாத இன்னொரு அத்தியாயத்தின் அறியப்படாத பக்கங்கள் சுகுவிடையது. அவரது மனைவியும் 1980களின் ஆரம்ப போராளி.


1970களின் தொடக்க காலகட்டம். இலங்கை இனப்பிரச்சனை புதியதொரு வடிவத்தை எடுத்த காலகட்டம். அகிம்சைவழி அரசியல் தலைமைகளிடமிருந்து தமிழ் அரசியல் தலைமை கைமாறும் காலத்திற்கு பிள்ளையார்சுழி போட்ட காலகட்டமது. அப்போது மாணவச் செயற்பாட்டாளராக அந்த அலைக்குள் பயணித்த ஒருவனாக, அந்த நாட்களை இன்று நினைவில் மீட்கிறேன்.

திருநாவுக்கரசு சிறீதரன் என்பது எனது இயற்பெயர். ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியில் இணைந்த பின்னரே சுகு/ சுகுமார் என்று அழைக்கப்பட்டேன்.

1958 இல் யாழ்ப்பாணம் மூளாயில் பிறந்தேன். சிறுவயதிலிருந்தே புத்தகங்கள் வாசிப்பதில் அலாதி பிரியம். இப்பொழுதும் நினைவில் உள்ளது, எனது பதினொரு வயதில் இருந்தே வாசிப்பு பழக்கம் ஆரம்பித்து விட்டது. இப்பொழுதும் நன்றாக நினைவில் உள்ளது, ஆம்ஸ்ட்ரோங் நிலவிற்கு சென்ற செய்தியை அந்த நாட்களில் படித்ததை. இந்த வாசிப்பு பழக்கம் பின்னாளில் விரிவடைந்து இயக்கங்கள் அச்சிட்ட பிரசுரங்களை படிக்க தொடங்கியிருந்தேன். வாசிப்பு, அரசியல் ஆர்வம் காரணமாக எழுபதுகளின் பிற்பகுதியில் யாழ்ப்பாணத்தில் நடந்த இரகசிய கலந்துரையாடல்களிலும் கலந்து கொள்ள ஆரம்பித்தேன்.

இப்படியான கலந்துரையாடல்களில் நிறையப் பேர் அறிமுகமானார்கள். பாலநடராஜா ஐயர், கி.பி.அரவிந்தன், சுரேஷ் பிரேமச்சந்திரன் போன்றவர்கள் அவர்களில் சிலர். இந்த நட்பு என்னையும் செயற்பாட்டு அரசியலிற்கு அழைத்து சென்றது. இப்பொழுது ஈரோஸ் அமைப்பிலிருந்து கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்தவர்கள் ஈழ மாணவர் பொதுவமைப்பு என்ற அமைப்பை உருவாக்கியிருந்தனர். நானும் அதில் இணைந்து கொண்டேன்.

அந்த அமைப்பின் மூலம் நிறைய வேலைத்திட்டங்கள் செய்தோம். கிராமப்புற பாடசாலை மாணவர்களிற்கு பாடங்கள் சொல்லிக் கொடுத்தோம், கருத்தரங்குகள் வைத்தோம், சமூகப்பிரச்சனைகளை தீர்த்தல் என ஏராளம் பணிகள்.

வடக்கு, கிழக்கில் பரவலாக கலந்துரையாடல்களை நடத்தினோம். இந்த கலந்துரையாடல்களிற்காக வடக்கு, கிழக்கின் அனேக இடங்கள், மலையகம் எல்லாம் சென்றேன்.  இதன் பின்னர் 1980 இல் இந்தியாவில் ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி (EPRLF) அமைப்பின் 17 பேர் கொண்ட அமைப்பாளர் மாநாட்டுக்கு சென்றேன்.

அந்த சமயத்தில் இராணுவ கெடுபிடிகள் அதிகரித்துவிட்டது. படகில் இந்தியா செல்வது சாதாரண காரியமல்ல. இராணுவத்தை சுழித்து செல்ல வேண்டும். கீரிமலையிலிருந்து எமது பயணம் ஆரம்பிக்க திட்டமிடப்பட்டது.

நாங்கள் கீரிமலை கடலில் குளித்துக் கொண்டிருக்கும் போது, மீன்பிடிப்பதை போல படகொன்றை கொண்டு வந்து எம்மை ஏற்றிசெல்ல திட்டமிடப்பட்டது. அதன்படி புறப்பட்டு தமிழகத்தின் வேதாரணியம் சென்றோம். அங்குள்ள சவுக்கம் தோட்டத்தில் அன்று தங்கினோம். மறுநாள் சென்னையிலுள்ள சூளமேட்டிற்கு சென்றோம்.

ஈழவிடுதலை என்ற இலட்சியத்துடன் புறப்பட்ட பல இயக்கங்களின் பழைய தலைமுறையினரை அங்கு கண்டேன். உன்னத இலட்சியத்திற்காக புறப்பட்டவர்கள் எந்த அடிப்படை வசதியுமில்லாமல் பெரும் மனித அவலத்தை சந்தித்து கொண்டிருந்தார்கள். அது ஒரு கோரமான நிலை.

அந்த மாநாட்டில் என்னை ஈழமாணவர் பொதுவமைப்பின் அமைப்பாளராக தேர்வு செய்யப்பட்டேன். பின்னர் புதுப்பேட்டையில் இருந்து பயணத்தை ஆரம்பித்து காலைநகர் கசூரினா கடற்கரையை வந்தடைந்தோம். யாழ்ப்பாணம் வந்ததும், இயக்கத்திற்கான ஆட்சேர்ப்பு வகுப்புக்களை ஆரம்பித்தேன்.

ஒருநாள் மயிலிட்டியிலுள்ள ஒரு தோழரின் வீட்டிலிருந்து கதைத்து கொண்டிருந்தேன். திடீரென வந்த இராணுவம் அந்த வீட்டை சுற்றிவளைத்தது. என்னையும், ஐயா தோழரையும் பிடித்து அடித்து வாகனத்தில் ஏற்றினார்கள். பலாலிக்கு கொண்டு சென்று அறையொன்றில் கைவிலங்கிட்டு அடைத்தார்கள்.

இரவு 10.30 இருக்கும். இராணுவ மேஜர் ஒருவர் வந்தார். ஈ.பி.ஆர்.எல்.எவ் என்றால் என்னவென கேட்டு, அடித்தார். பின்னர் ஆனையிறவிற்கு கொண்டு சென்றனர். அப்பொழுது ஆனையிறவு முகாம் பெரிய தடுப்புமுகாம்.

பின்னர் தலைகீழாக கட்டி தொங்கவிட்டனர். மதியம் 12 மணி தொடக்கம் இரவு 12 வரை தொங்கவிட்டு, மிளகாய்தூளை கண்ணிலும், உடலிலும் தூவி சித்திரவதை செய்தனர். அந்த சித்திரவதையை வார்த்தையில் சொல்ல முடியாது.

ஒருநாள் இரவு ஒருவரை கூட்டி வந்தனர். அவர் மயிலிட்டியிலிருந்து பயிற்சிக்காக இந்தியா சென்றவர். பயிற்சியின் இடையில் முகாமிலிருந்து தப்பியோடி விட்டார். அதன்பின்னர் அவர் பற்றிய தகவல்கள் கிடைக்கவில்லை. இப்பொழுது என் முன்னால் கொண்டு வரப்பட்டார். அவரை பார்த்த பின்னர்தான், நான் எப்படி பிடிபட்டேன் என்பது புரிந்தது.

சாவகச்சேரியில் ரஞ்சனை (றொபேட் தோழர்) தெரியுமா என விசாரித்தார்கள். எந்த விபரமும் தெரியாதென்றேன். பின்னர் என்னையும், என்னுடன் பிடிபட்ட வேதநாயகம் ஐயாவையும் நுணாவிலிற்கு கொண்டு சென்றனர். அப்போது, தப்பி செல்வோமா என ஐயா கேட்டார். இராணுவம் அடித்ததில் என் கை,கால்கள் வீங்கி நடக்கவே முடியாத நிலையிலிருந்தது. தப்பிப்பதை  பற்றி நினைக்கவே முடியாது.

அடுத்ததாக வவுனியாவிற்கு அழைத்து சென்றனர். வவுனியா போவதற்கு முன்னர் கிளிநொச்சி, மாங்குளம் என வழியிலிருந்த இராணுவ முகாம்களில் வாகனத்தை நிறுத்தி, அங்குள்ள சிப்பாய்களிற்கு என்னை அடிக்க கொடுத்தனர்.

வவுனியா ஜோசெப் முகாமில் ஒரு மாதம் தடுத்து வைத்தனர். இந்த ஒரு மாதமும் ஒரேயொரு உள்ளாடையுடன் மாத்திரமே இருந்தேன். அங்குள்ள இராணுவத்திற்கும் பொழுதுபோகாவிட்டால் என்னை அடிப்பார்கள். இந்த சித்திரவதைகளால் எனக்கு சிறுநீர் இரத்தமாக போகத்தொடங்கியது.

பின்னர் வாகனத்தில் ஏற்றி வவுனியா நகர மையத்திலிருந்த இராணுவ முகாமிற்கு கொண்டு சென்றனர். 20 நாட்கள் ஜன்னலில் விலங்கிட்டு  தடுத்து வைக்கப்பட்டிருந்தேன். அதன்பிறகு மீண்டும் ஆனையிறவுக்கு கொண்டு வந்தனர். பிடிபட்டதில் இருந்து தொடர் சித்திரவதையால் என் கால் அழுக தொடங்கியது. அதுவும் இராணுவத்திற்கு விளையாட்டாகியது. கக்குலா மாற சிறீ என என்னை கூப்பிட்டனர்.

கால் அழுகிய வேதனை தாங்க முடியாததாக இருந்தது. இதற்குள் சாப்பிட இரண்டு நிமிடம்தான் தருவார்கள். கைகழுவ ஒரு நிமிடம். இதை கண்காணிக்க வயருடன் சிப்பாய் நிற்பான். கொஞ்சம் பிந்தினாலும் தோல் உரியும். இந்த கொடூரங்கள் தொடர எனது கால் அதிகம் பாதிக்கப்பட்டது. கொழும்பு இராணுவ வைத்தியசாலைக்கு என்னை கொண்டு சென்றனர்.

அங்கு சிகிச்சை முடிய புகையிரதம் மூலம் திருப்பி அழைத்து வந்தனர். புகையிரதத்தில் இராணுவத்திற்கு ஒதுக்கப்பட்ட பகுதியில் இருக்கைகளில் அவர்கள் இருப்பார்கள். கைதிகளான எங்களை கீழே படுக்க வைத்துத்தான் கொண்டு வருவார்கள். அப்போது சிப்பாயொருவன் சன் பத்திரிகை படித்துக் கொண்டிருந்தான். கீழே படுத்திருந்து பார்த்துக் கொண்டிருந்தேன். அமெரிக்க ஜோடியொன்று கடத்தப்பட்ட செய்தி அதிலிருந்தது.

ஆனையிறவில் இறக்கி, உலங்குவானூர்தியில் பலாலி கொண்டு சென்றனர். அங்கு மேஜர் ஒருவர் இருந்தார். “ஒரு விடயம். கதிரையில் இருங்கள் சிறீ“ என்றார். இராணுவத்திடம் பிடிபட்ட பின்னர் முதன்முறையாக என்னை கதிரையில் இருக்குமாறு சொன்னவர் அவர். “அமெரிக்க ஜோடியொன்றை உங்கள் இயக்கம் கடத்தியுள்ளது. உங்கள் இயக்க கொள்கைப்படி இது சரியா“ என்றார்.

“அவர்கள் சிஐஏ என்றால் என்ன செய்வது“ என கேட்டேன். அவர்கள் நீர்ப்பாசன பொறியியலாளர்கள் என்றார் அவர். அப்படியானால் இந்த கடத்தல் தவறு என்றேன். இதை பக்கத்திலிருந்து கேட்டுக்கொண்டிருந்த பிரிகேடியர் ஒருவர், “இதை நீ வானொலிக்கு சொல்வாயா“ என்றார். நான் சம்மதித்தேன்.


மக்கள் பிரதிநிதிகள், பொதுவாழ்வில் உள்ளவர்களின் அறியப்படாத பக்கங்களை புரட்டும் பகுதி இது. வாழ்வில் நடந்த, அடிக்கடி நினைக்கும், மெய்சிலிர்க்கும் நிகழ்வுகளை இந்த பகுதியில் ஒவ்வொரு வாரமும் உங்களுடன் பகிர்ந்து கொள்ளவுள்ளார்கள் அவர்கள். மனதின் மூலைக்குள் மறைத்து வைத்திருந்த சம்பவங்களை முதன்முறையாக அவர்கள் பேசவுள்ளனர். நீங்கள் இதுவரை கேட்காத கதைகள் இவை.


மறுநாள் வானொலியில் இருந்து புஸ்பரட்ணம் தொடர்பு கொண்டார். “தோழர்களே சிஐஏ என்றால் வேறு கண்ணோட்டத்தில் அணுக வேண்டும்“ என்றேன். இதை கேட்டுக் கொண்டிருந்த பிரிகேடியர், என்னை திட்டி, மிச்சத்தையும் சொல்ல சொன்னார். அதன்பின் சாதாரண பிரஜைகளை கடத்துவது முறையல்ல என்பதை சொன்னேன். வானொலியில் இரண்டு பகுதிகளையும் இணைத்து ஒலிபரப்பினார்கள்.

பின்னர் குருநகர் முகாமில் அடைத்தனர். அங்கும் சித்திரவதைதான். சிலகாலத்தில் வெலிக்கடைக்கு மாற்றினார்கள். அங்கு எனக்கெதிராக இரண்டு குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டன. மார்க்சிய லெனினிச வகுப்புகளின் மூலம் ஆட்களை திரட்டியது, இதை தெரிந்தும் காட்டிக்கொடுக்காமை, இனங்களிற்கிடையில் மோதனை ஏற்படுத்தியதாக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.  அப்பொழுது என் சார்பாக குமார் பொன்னம்பலம், சேவியர் ஆகிய வழக்கறிஞர்கள் ஆஜரானார்கள்.

அப்போது மார்க்சிய லெனினிச இயக்கங்களிற்கு இலங்கையில் தடையில்லை. ஒரு குற்றத்தை ஒப்புக்கொண்டால் மற்றைய குற்றத்திலிருந்து விடுவிக்கப்படுவது அன்றைய நடைமுறை. தெரிந்தும் காட்டிக்கொடுக்காத குற்றத்தை ஏற்றுக்கொண்டேன். இதற்கு 4 மாத தண்டனை மட்டும்தான். இனங்களிற்கிடையில் மோதலை ஏற்படுத்திய குற்றத்திற்கு 5 வருட தண்டனை கொடுப்பார்கள். 4 மாத தண்டனையுடன் வீடு திரும்பினேன்.

1984 இல் பிடிபட்டேன். 1986 இல் விடுதலையானேன். நான் விடுதலையாகி வந்தபோது கண்டது சாதாரண காட்சியல்ல. 1986 டிசம்பர் 12 இல் ஈ.பி.ஆர்.எல்.எவ் புலிகளால் தடை செய்யப்பட்டது. 19 ஆம் திகதி நான் விடுதலையானேன். சிறைக்குள் ஒருவித நெருக்கடி என்றால், விடுதலையான பின் இன்னொரு விதமான நெருக்கடி. யாழ்ப்பாணம் வர முடியவில்லை. அப்படியே இந்தியா சென்றேன். எமது அமைப்புக்குள்ளும் நெருக்கடிகள், பிளவுகள் என அழுத்தம் இருந்து கொண்டேயிருந்தது. அதுதவிர, அரசசிறைக்குள் நான் அனுபவித்த கொடுமைகளை, எமது சிறைக்குள்ளேயே நம்மவர்கள் அனுபவித்ததெல்லாம் பெரும் அழுத்தத்தை தந்தன.

ஒரு ஆரம்பகால போராளி, நிறையப் பேர் போராளிகளான துணையாயிருந்தேன் என்ற அடிப்படையில், எனக்கிருந்த பொறுப்புணர்வின் அடிப்படையிலேயே அன்றிலிருந்து இன்றுவரை செயற்பட்டு வருகிறேன். கடந்தகாலத்தின் பங்காளிகளில் நானுமொருவன். இந்த பொறுப்புணர்வினடிப்படையில்தான் இயங்கிக் கொண்டிருக்கிறேன். எமது அமைப்பின் மீதான சுயவிமர்சனங்களையும் செய்து கொண்டிருக்கிறோம். எல்லா விமர்சனங்களையும் செவிமடுத்து, அதிலிருந்து முன்னகரத்தான் விரும்புகிறோம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here