புளொட் சிக்கிய கதை: சிவராம் கொலை- மினி தொடர் 10

பீஷ்மர்

சிவராம் கொலை பற்றிய இந்த தொடரில், புளொட் மோகன் பற்றிய சில தகவல்களையும் கடந்த இரண்டு பாகங்களில் அவ்வப்போது தந்தோம். சிவராம் விவகாரத்துடன் புளொட் மோகனிற்கு எந்த தொடர்பும் இல்லை- காரணம், சிவராமிற்கு முன்னரே மோகன் உயிரிழந்து விட்டார்- என்ற போதும், இரண்டு விவகாரத்திற்குமிடையில் பின்னணியாக சில இழைகள் இணைந்திருந்தன என்ற அடிப்படையில் அவவ்ப்போது புளொட் மோகன் பற்றியும் குறிப்பிட்டு வந்தோம்.

இந்திய அமைதிப்படைகள் இலங்கையை விட்டு வெளியேறிய சமயத்திலேயே, புளொட்டுடான தொடர்புகளை, மோகன் அறுத்து விட்டார். அதற்கு காரணம், காலித்துடனான தொடர்புகள்.

1988 காலப்பகுதியில் தமிழ் தேசிய இராணுவம் என்ற இராணுவ அமைப்பை இந்திய இராணுவம் உருவாக்கியது. ஈ.என்.டி.எல்.எவ், ரெலோ, ஈ.பி.ஆர்.எல்.எவ் என்பன அந்த இராணுத்தில் இருந்தன. ஈ.என்.டி.எல்.எவ் அமைப்பிலிருந்த காலித் என்பவரே, தமிழ் தேசிய இராணுவத்தின் தளபதியாக இருந்தார்.

இந்தியப்படைகள் வெளியேறும்போது, மட்டக்களப்பில் காலித் கொல்லப்பட்டார். அவரை விடுதலைப்புலிகள் சுற்றிவளைத்து தாக்கினார்கள், அந்த மோதலில் கொல்லப்பட்டார் என்றுதான் இன்றும் பெரும்பாலானவர்கள் சொல்கிறார்கள், எழுதுகிறார்கள்.

ஆனால் உண்மை அதுவல்ல. அதைப்பற்றி அடுத்த பாகத்தில் குறிப்பிடுகிறோம்.

காலித் உடனான தொடர்பு, காலித் மரணம் என்பனதான், மோகனை புளொட்டை விட்டு வெளியில் வர வைத்தது. அதை அடுத்த பாகத்தில் குறிப்பிடுகிறோம்.

இப்போது மோகனின் மரணத்தை பற்றிய சில தகவல்களை தருகிறோம்.

அத்துருகிரிய மிலேனியம் சிற்றி அம்பலமானதை தொடர்ந்து, இராணுவத்தின் அழ ஊடுருவும் படையணி பற்றிய தகவல் வெளியில் கசிந்தது. இராணுவத்தின் இரகசிய நடவடிக்கைக்கான இப்படியொரு அணிய, அதுவரை இலங்கை இராணுவம் உருவாக்கியிருக்கவில்லை.

புலனாய்வு பிரிவுகள் செய்யும் இரகசிய- உரிமைகோராத தாக்குதல்களை போன்றவற்றைத்தான், ஆழ ஊடுருவும் படையணியும் செய்தது. அவற்றின் நடவடிக்கை இராணுவத்தின் உத்தியோகபூர்வ விபரங்களில் உள்ளடங்கியிருக்காது.

மிலேனியம் சிற்றி பற்றிய தகவல்கள் கசிந்ததையடுத்து, அப்போதைய ஐ.தே.க அரசின்மீது கடுமையான விமர்சனங்கள் எழுந்தன. அப்போது சந்திரிகா ஜனாதிபதி. விடுதலைப்புலிகளுடனான சமரசத்திற்கு ரணில் தயாராகிக் கொண்டிருந்தார். சமரத்தை விரும்பாத இராணுவத்தரப்பு, இந்த இரகசிய பிரிவின் மூலம் ஏதாவது தாக்குதல் நடத்தி குழப்பத்தை ஏற்படுத்தவும் வாய்ப்புள்ளதென கருதியதாலேயே, மிலேனியம் சிற்றியை ஐ.தே.க அரசாங்கம் அடையாளப்படுத்தியது என்ற விமர்சனங்களும் அப்போது வந்தது.

மிலேனியம் சிற்றி  தகவல்கள் வெளியானதால், ஆழ ஊடுருவும் அணியை சேர்ந்த பலரது தகவல்கள் வெளியில் வந்தது.

மிலேனியம் சிற்றி அணியுடன் மோகன் தங்கியிருக்காவிட்டாலும், அந்த ஆழ ஊடுருவும் அணியின் செயற்பாட்டில் மோகனின் பங்கிருந்ததை புலிகள் தெரிந்து கொண்டு, அவரை தீர்த்துக் கட்ட திட்டமிட்டனர்.

இதற்குள் இன்னொரு சுவாரஸ்ய தகவல்- புளொட் மோகனின் மனைவி விடுதலைப்புலிகள் அமைப்பின் முன்னாள் போராளி. மோகனை திருமணம் செய்தபோது, அவருக்கு ஒரு பிள்ளையிருந்தது. அவரது கணவரும் புலிகள் அமைப்பில் இருந்தவர். அமைப்பிலிருந் இறந்து விட்டார். பிள்ளையுடன் கொழும்பு வந்தவர், மோகனுடன் அறிமுகம் ஏற்பட்டு, அவரை திருமணம் செய்தார்.

மோகனிற்கு புலிகள் வைத்த பொறி, ஒரு மதுபான கடை உரிமையாளர் வடிவில். மட்டக்களப்பு நகரத்திலுள்ள மதுபானக்கடை உரிமையாளர் அவர்.

அந்த சமயத்தில் மோகனிற்கு ஏதோ காரியமாக திடீர் பணத்தேவை ஏற்பட்டது.  தனக்கு நெருக்கமானவர்களிடமும் கேட்டார். இரண்டு, மூன்று நாளில் திருப்பி தரலாமென்றுதான் கேட்டார். கிடைக்கவில்லை. பின்னர்தான், மட்டக்களப்பு லிங் இன் மூலம் பணத்தை கேட்டார்.அதுதான் சரியான சமயம் என, பணத்தை கொடுப்பதை போல காரியத்தை முடித்தனர் புலிகள்.

சரி, இப்பொழுது சிவராம் விடயத்திற்கு வருவோம்.

இந்த தொடரின் முந்தைய பாகத்தை படிக்க : புளொட் சிக்கிய கதை: சிவராம் கொலை- மினி தொடர் 9

சிவராம் கொலை விசாரணை அறிக்கையில், பீற்றரிடம் சிம்மை கொடுத்தவர்கள் என இரண்டு பெயர்கள் இருந்ததாக குறிப்பிட்டிருந்தோம். ஒன்று மண்டைப்பீஸ் சுரேஷ். ஆள் உயிரோடு இல்லை. புலிகள் “தட்டி“ விட்டனர்.

அடுத்தவர், பாலச்சந்திரன். ஆள் இப்போதும் உயிரோடு இருப்பதாக எழுதியிருந்தோம்.

எங்கேயிருக்கிறார்?

(தொடரும்)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here