காதலர் தினம்: காதல் மற்றும் காமம்!

‘மனிதர் உணர்ந்து கொள்ள இது மனித காதல் அல்ல, அதையும் தாண்டி புனிதமானது’ – 90களின் துவக்கத்தில் வெளிவந்த இந்த தமிழ்த்திரைப்பட பாடல்வரியும், அந்த குரலில் வழிந்தோடும் உணர்வும் இன்றளவும் காதல்வயப்படுவர்களை சிலாகிக்க வைத்து கொண்டே இருக்கிறது.

‘எனது காதலும் புனிதமானதுதானே! அதையும் தாண்டி புனிதமான காதல் என்றால் அது எப்படி?” உவமைக்காக கற்பனையாக எழுதப்பட்ட சினிமா பாடல்வரி என்பதை தாண்டி அது குறித்து நண்பர்கள் பலமுறை விவாதித்துள்ளனர்.

”அவ்வளவு வலி, அதை தாண்டி வர எவ்வளவு கஷ்டப்பட்டேன், இப்ப நினைச்சாலும்….’ சொல்லும்போதே கண்ணீல் நீர் கோர்த்துவிடும் மணமான தோழி ஒருவருக்கு.

”எப்படி சொல்லனு தெரியலை…அப்படியே பறக்கிற மாதிரி, மிதக்குற மாதிரி இருந்தது. நிலையில்லாம இருந்த நாட்கள்தான்…ஆனால், என் வாழ்க்கையோட பொன்னான நாட்கள்னா அதுதான். நீயும் அப்படி ஒரு வலையில விழணும்டா …” வாழ்க்கையின் வெறுமையை கடந்துவிட நண்பனின் சகோதரர் அளித்த அறிவுரை இது.

”யார் கல்யாணம்னு கூப்பிட்டாலும் போக பிடிக்கலை , அதுவும் லவ் மேரேஜ்ன்னு யாராவது சொல்லிட்டா கேட்கும்போது இனம் தெரியாத ஒரு பொறாமை, கோபம் உடனே தலைகாட்டுது” இது எந்த நண்பனும் சொல்லியதில்லை. அண்மையில் நானே என் நண்பனிடம் வெளிப்படையாக பகிர்ந்து கொண்டது.

எல்லோரையும், எக்கணத்திலும் சிலிர்க்கவைக்கும் உணர்வு ஒன்று உள்ளது என்றால் அது காதல்தான். வாழும் அனைத்து உயிர்களையும் சிலிர்க்க வைக்கும் ஒற்றை சொல்லாக திகழ்கிறது காதல்.

அநேகமாக பெரும்பாலானவர்கள் தங்கள் வாழ்க்கையில் ஏதோ ஒரு கட்டத்தில் காதல்வயப்பட்டு இருக்கிறார்கள்; காதலுடன் வாழ்கின்றார்கள்’ காதலை கடந்துள்ளார்கள்; ஆனால், வாழ்வின் அனைத்து அம்சங்களிலும் ஏராளமான மாற்றங்கள் வந்துவிட்ட நிலையில், காதலும் மாறிவிட்டதா?

காதல் என்பதை மோகத்தின் ஒருமுகம்தான் என்றும், காமத்தை அணுக காதல் ஒரு நுழைவுசீட்டாக அமைகிறது என்றும் விமர்சனங்கள் உண்டுதான். ஆனாலும், திரைப்படங்களும், புதினங்களும் போட்டி போட்டுகொண்டு அமரத்துவ காதலை வர்ணிக்கின்றன.

‘சினிமால காட்டுறதெல்லாம் ரொம்ப செயற்கையானது. அப்படி ஒன்றும் காதல் புனிதமானதோ அல்லது அமரத்துவமானதோ இல்லை’ எப்போதும் திரைப்படங்களை பரிகசிக்கும் ஒர் அலுவலக தோழர், தான் காதல்வயப்பட்ட சமயத்தில் புகழ்பெற்ற ஒரு திரைப்படத்தின் காட்சி ஒன்றைதான் உதாரணமாக கூறினார். ஆண்டுகள் சில கழிந்தபிறகு, ஒரு மது விருந்தில், மற்றொரு திரைப்படத்தையே தனது காதல் தோல்விக்கு எடுத்துக்காட்டாக அவர் குறிப்பிட்டார்.

காலப்போக்கில் காதல் மாறிவிட்டதா?

இந்த கேள்விக்கு விடைதேடும்முன், காதல் வளர்த்த அம்சங்கள், வளர்ந்த விதங்கள் காலப்போக்கில் மாறிவிட்டன என்பதை நாம் கண்கூடாக காண்கிறோம்.

ஆரம்ப காலங்களில் காதலை வளர்த்த திரைப்படங்களும், நாவல்களும் தற்போது அந்த பணியை சமூக ஊடகங்கள் மற்றும் நவீன மொபைல் செயலிகளுடன் பங்குபோட்டுள்ளன.

முன்பு நகரங்களில் ‘பார்க், பீச், சினிமா’ ஆகிய மூன்றும் காதல் வளர்க்கும் இடங்களாகவும், கோயில், குளக்கரை போன்றவை கிராமிய காதலை வளர்த்தன. கடந்த ஒரு தசாப்தமாக, காபிஃ ஷாப், ஷாப்பிங் மால்கள், நவீன அலுவலகங்கள் ஆகியவை இந்த போட்டியில் குதித்துள்ளன.

அதேபோல் முன்பு காதலை வெளிப்படுத்த கடிதங்களே பிரதானமாக இருந்தது. கடிதத்தை எப்படி தருவது, நேராக தருவதா, யார் மூலம் தருவது என பல கேள்விகள் இருந்தன. தற்போது வாட்ஸப் அத்தனை சைமத்தை ஏற்படுத்தவில்லை.

காதலை வெளிப்படுத்துவது எளிதாகி விட்டது; அதேபோல் காதலை பெறுவதும் எளிதாகி விட்டதா?

இந்த கேள்விகள் தொடர்பாக மனநல மருத்துவர் டி. வி. அசோகன் பேசினார்.

”ஆரம்ப காலங்களில் ஓர் ஆணும், பெண்ணும் நன்கு பேசி பழகினால் அது காதலாக மாறி திருமணத்தில் தான் பெரும்பாலும் முடிந்துள்ளது. ஆனால், தற்போது அப்படியெல்லாம் இல்லை. இதற்கு காரணம் தற்போது காதலை எளிதாக பெற முடிகிறது. அதனாலேயே காதல் தோல்வியையும் தற்போதைய தலைமுறையினரால் எளிதாக கடக்க முடிகிறது” என்று அசோகன் தெரிவித்தார்.

”தனக்கு பிடித்த பெண்ணின் கவனத்தை ஈர்க்க பஸ் ஸ்டாப்பில் இளைஞர்கள் காத்திருந்த காலம் மாறிவிட்டது. தற்போது டேட்டிங் செய்ய ஏராளமான வலைத்தளங்கள் வந்துவிட்டன. சமூக அமைப்பு மாற தொடங்கியதும், காதலும், அது குறித்து சொல்லப்பட்ட பல இலக்கணங்கள் மற்றும் கோட்பாடுகளும் உடைய தொடங்கிவிட்டன” என்று அசோகன் மேலும் கூறினார்.

நவீன கண்டுபிடிப்புகள் நம் வாழ்க்கைமுறையை மாற்றிவிட்டது. உலகில் நடக்கும் பல விஷயங்களை அடுத்த வினாடியில் நம் கையில் உள்ள மொபைல் மூலம் அறிய முடிகிறது அற்புதமான விஷயம்தான். அதேவேளையில் இவற்றின் மீதான மோகம் நம் மனதையும் சுருங்கிவிட்டது என்றே கூறலாம் என்று தெரிவித்த அசோகன், இதன் தாக்கம் குடும்ப அமைப்பு மற்றும் காதல் போன்றவற்றிலும் எதிரொலிக்கிறது என்றார்.

காதல் மற்றும் காமம் – என்ன தொடர்பு?

காதல் மிக புனிதமானது , காதல் போயின் சாதல் சாதல், முதல் காதலை போல எதுவும் வராது – சிறு வயதில் இருந்து நாம் கேட்டு வளரும் இவையெல்லாம் கட்டுக்கதைகளா அல்லது மிகைப்படுத்தப்பட்ட விஷயங்களா?

”ஒரு முறைதான் காதல் வரும், முதல் காதல்தான் புனிதமானது அல்லது உண்மையானது என்பவை எல்லாம் மிகையானவை. ஒருவருக்கு காதல் எத்தனை முறை வேண்டுமானாலும் வரலாம், எந்த வயதிலும் வரலாம்” என்று மருத்துவர் அசோகன் குறிப்பிட்டார்.

காதல் தோல்வியை ஒருவரால் கடக்க முடியுமா என்று கேட்டதற்கு, ”ஆரம்பகால காதல் (முதல் காதல்) நாளடைவில் சாதாரணமாக தோன்றும். ஒரு காலத்தில் அதுதான் பிரதானமாக இருந்தது. மீண்டும் காதலில் விழ மாட்டேன் என்று உறுதியாக இருந்தவர்கள், அடுத்த காதலில் முதல் காதலை மெல்லமெல்ல மறக்க தொடங்குவர்” என்று அசோகன் கூறினார்.

”தற்கால காதல் குறித்து சில குறைகள் கூறினாலும், காதல் தோல்வி என்றால் உடனே தற்கொலை என்ற முடிவுக்கு தற்போது பெரும்பாலானோர் செல்வதில்லை என்பது ஓர் ஆரோக்யமான விஷயம்”

”காதல் இல்லாத காமம் இல்லை; அதேபோல் காமம் இல்லாமல் காதலும் இல்லை. இது குறித்தும் சிலர் தவறாக புரிந்து கொள்வதுண்டு. காதலும், காமமும் ஒன்றையொன்று நிழல் போல துரத்தும். அதில் தவறும் இல்லை” என்று அவர் மேலும் கூறினார்.

”ஆனால் எல்லா காலங்களிலும் உண்மையான அன்பும், காதலும் இருந்து கொண்டேதான் இருக்கும். ரசனை உள்ளவரை காதல் இவ்வுலகில் இருக்கும். ரசனை உள்ளவர்கள் காதலை தொடர்ந்து தழைக்க செய்வர்” என்றார்.

காதல் வயது சார்ந்தது என்று என் மூளையில் ஆழமாக பதித்திருந்த எண்ணத்தை சாலையை கடக்க முயன்ற ஒரு தாத்தா, பாட்டியின் அன்புதான் மாற்றியது. சாலையை கடக்க சிரமப்பட்ட அவர்கள் இருவரும் ஒருவரையொருவர் பற்றியவாறு நடந்ததும், அருகாமை தேநீர் கடைக்கு வந்த அவர்கள் ஒருவரின் உடல் வியர்வையை மற்றவரின் ஆடையால் ஒற்றி எடுத்ததும் – அடடா! இது தானே உண்மையான காதல் என்று எண்ண வைத்தது.

‘அவள் சாப்பிடாம எனக்காக காத்திருப்பா, நான் வீட்டுக்கு போகணும்’ என்று அவசரம் காட்டும் நண்பனும், ‘ஏன் எனக்கு கால் பண்ணலை, எவ்வளவு நேரம் காத்திருந்தேன் தெரியுமா உனக்காக’ என மெட்ரோ ரயிலில் தனது காதலனுடன் சிணுங்கிய யுவதியும், உண்மையான காதல் என்பது எப்போதும் இருக்கும் என்பதை அழுத்தமாக பதிவு செய்கின்றனர்.

காதல் குறித்து பேசிக் கொண்டே இருக்கலாம், எழுதிக் கொண்டே போகலாம். கடல் அலைகள் போல காதலும் ஓய்வதில்லைதான். ஆனால், மீண்டும், மீண்டும் புதிதாய் பிறக்கும் அலைகள் காதலும் மீண்டும் பிறக்கும். தோல்வி என்று எதுவுமில்லை. இழப்புகளை பற்றி மட்டுமே எண்ணி காலத்தை விரயமாக்காமல் துளிர்க்கும் புதிய இலைகளின் வரவை மகிழ்வோடு வரவேற்க வேண்டும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here