மகிந்தவுடன் வேலை செய்ய ஒரு கோடி ரூபா டீல் பேசினார்கள்!

வடமாகாணசபை உறுப்பினர் விந்தன் கனகரட்னத்தின் அனுபவங்கள்- 2

இந்திய- இலங்கை உடன்படிக்கையின் பின் ஆயுத ஒப்படைப்பு காலத்தில் இந்தியா தரப்பிலிருந்து எமக்கு வாக்குறுதியொன்று தரப்பட்டது. ஆயுதங்களை ஒப்படைத்துவிட்டு அரசியல் கட்சியாக பதிவு செய்யுங்கள், இனி ஆயுதம் தூக்கி போராட தேவையில்லை, இந்தியா உங்களிற்கான தீர்வை பெற்றுத்தரும் என்றார்கள். அப்போது றோவின் ஆசிய பொறுப்பாளராக இருந்த சந்திரன், இந்திய தூதர் ஜே.என்.டிக்சிற், ரெமேஷ் பண்டாரி, ஜெய்சங்கர் போன்றவர்களே இந்த வாக்குறுதியை தந்தார்கள்.

ரெலோ அரசியல் கட்சியாக பதிவு செய்து, அரசியல் செயற்பாட்டில்தான் ஈடுபட்டு வருகிறது.  இந்தக்காலத்தில் நானும் அரசியல் செயற்பாட்டில் ஈடுபட்டு வருகிறேன். ஆரம்பத்தில் கொழும்பிலிருந்த எமது அலுவலகத்தில் இருந்து செயற்பட்டு வந்தேன்.

1990 காலப்பகுதியில் வெளிநாட்டுக்கு ஆட்களை அனுப்பும் ஏஜென்ஸிகாரர்கள் கொழும்பில் கொடி கட்டி பறந்தார்கள். இவர்களில் பலர் இளைஞர், யுவதிகளை வெளிநாட்டுக்கு அனுப்புவதாக பணம் வாங்குவார்கள். வெளிநாட்டுக்கு அனுப்பபடாதவர்கள், பணத்தை கேட்டால் விடுதலைப்புலிகள் என சி.ஐ.டியிடம் காட்டிக்கொடுத்து விடுவார்கள். இதனால் பாதிக்கப்பட்டவர்கள் எமது அலுவலகத்திற்கு வந்து  முறையிடுவார்கள். வடமாகாணசபையின் உறுப்பினராக இருந்த ஒருவரும் அப்பொழுது ஏஜென்ஸி வேலை செய்து, அவர் பற்றிய முறைப்பாடுகளும் எமக்கு வந்திருந்தன.

அப்பொழுது ரெலோவின் தலைவராக துன்னாலையை சேர்ந்த குகன் சாப் (வினோதலிங்கம்) இருந்தார். 1994 நாடாளுமன்ற தேர்தலில் செல்வம் அடைக்கலநாதன் தோல்வியடைந்த பின்னர், கட்சி மாநாட்டின் ஊடாக குகன் சாப் தலைவராக தேர்வுசெய்யப்பட்டார். ஏஜென்ஸிகாரர்களால் ஏமாற்றப்பட்டவர்களின் முறைப்பாட்டை தீர்த்து வைக்குமாறு தலைவர் உத்தரவிட்டிருந்தார். இதன்படி எமக்கு வரும் முறைப்பாடுகளை தீர்த்து வைப்போம்.

இப்படியான முறைப்பாடொன்று ஒருமுறை வந்தது. ஏஜென்ஸிகாரருடன் பேசி பிரச்சனை என்னவென பார்க்கும்படி, தலைவர் குகன் சாப் உத்தரவிட்டார். வாகனமொன்றில் கட்சி முக்கியஸ்தர்கள் பலர் போனோம்.  சிறீரெலோ கட்சியின் இப்போதைய தலைவர் உதயராசா, களுவா சங்கர், கரீம், லிங்கம் உள்ளிட்ட ஏழு பேர் அந்த ஏஜென்ஸிகாரரால் ஏமாற்றப்பட்டவர்களின் விபரங்களை எடுத்துக்கொண்டு சென்றோம்.

நாம் அங்கு சென்றபோது, அந்த ஏஜென்ஸிகாரர் சி.ஐ.டிக்கு தகவல் கொடுத்து விட்டார்கள். பொலிசார் செய்யும் வேலையை நீங்கள் எப்படி செய்யலாம் என சி.ஐ.டி எம்மை சுற்றிவளைத்து கைது செய்து விட்டனர். பின்னர் சட்டத்தை கையில் எடுத்தோம் என வழக்கு தொடுக்கப்பட்டு சிஆர்பி சிறையில் இரண்டு வருடம் தடுப்பில் இருந்தேன். சுட்டுக்கொல்லப்பட்ட சரத் அம்பேபிட்டியதான் அந்த வழக்கில் நீதிபதி. பின்னர் மேல்நீதிமன்றத்தில் முறையிட்டு  விடுதலையானேன். அந்த வழக்கில் நான் விடுதலையாகி விட்டேன். வழக்கில் சம்பந்தப்பட்ட மற்றைய அனைவருக்கும் 23 வருடங்களாக இப்போதும் பிடிவிறாந்து உள்ளது.

1998இல் இருந்து ஐந்து வருடம் வலிகாமம் தெற்கு பிரதேசசபை -சுன்னாகத்தில் உறுப்பினராக இருந்தேன். 2000ஆம் ஆண்டு சிறிகாந்தா, சிவாஜிலிங்கம் ஆகியோருடன் இணைந்து ரெலோ சார்பாக சுயேட்சைக்குழுவாக நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட்டேன். தேர்தல் பிரசாரத்திற்காக நெடுந்தீவிற்கு ஒருமுறை போனேன். என்னுடன் முப்பது பேரளவில் வந்திருந்தனர். அப்போது தீவகம் முழுமையாக ஈ.பி.டி.பியின் கட்டுப்பாட்டில் இருந்தது. எங்கள் வீட்டில் இருந்தபோது திடீரென ஈ.பி.டி.பியினர் சுற்றிவளைத்து சுவரொட்டிகளை கிழித்தெறிந்து அட்டகாசம் செய்தனர். என்னை மட்டும் வீட்டைவிட்டு வெளியில் வருமாறு கூறினார்கள். அவர்கள் சுட முயற்சிக்கிறார்கள் என கூறி, என்னை தனியே வெளியே செல்ல யாரும் விடவில்லை. முப்பது பேரும் வந்தார்கள். எங்கள் மீது தாக்குதல் நடத்திவிட்டு சென்றார்கள்.

மறுநாள் காலையில் வள்ளத்திற்காக காத்திருந்த போது, எங்களை சுற்றிவளைத்து வீடியோ எடுத்தனர். இனி இங்கு வந்தால் சுட்டுவிடுவதாக எச்சரித்தனர்.

2001ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் தீவகத்திற்கு பிரசாரத்திற்கு சென்றோம். சிவாஜிலிங்கம், ரவிராஜ் ஆகியோரும் எம்முடன் வந்தனர். யாழ் நகரில் சிங்கள மகாவித்தியாலயத்திற்கு பக்கத்தில் எமது அலுவலகம் இருந்தது. பக்கத்து வீட்டை சேர்ந்த கமல் ஸ்ரோன் என்ற மாணவன் விளையாட வந்து எல்லோருடனும் நன்றாக பழகிவிட்டார். நாங்கள் புறப்படுவதை கண்டுவிட்டு, எங்கு போகிறோம் என கேட்டார். விடயத்தை சொல்ல, தானும் வரப்போகிறேன் என வாகனத்தில் ஏறிவிட்டார். சகோதரகளிற்கு அப்பம் வாங்க சென்றவர் எங்களுடன் வந்துவிட்டார்.

ஊர்காவற்றுறை நாரந்தனை பொன்னாச்சி கடை சந்தியை நெருங்கியபோது வெள்ளை நிற கன்ரரில் வந்த அறுபதிற்கும் மேற்பட்ட ஈ.பி.டி.பியினர் எம்மை சுற்றிவளைத்து தாக்கினர். எனக்கு ஒரு பக்கத்தில் இருந்த கமல் ஸ்ரோன் காயமடைந்து வைத்தியசாலையில் மரணமானார். ஏரம்பு பேரம்பலமம் காயமடைந்து மரணமானார். நான், மாவை சேனாதிராஜா, சிவாஜிலிங்கம் உள்ளிட்ட 21 பேர் காயமடைந்தோம்.

2005 இல் பளையில் ஒரு கூட்டத்திற்கு விடுதலைப்புலிகள் அழைப்பு விடுத்திருந்தார்கள். தமிழ் காங்கிரசில் இருந்து அப்பாத்துறை விநாயகமூர்த்தி, தமிழர் விடுதலைக்கூட்டணியில் ரவிராஜ், ரெலோ சார்பில் நான் சென்றேன். புலிகளின் அரசியல்துறையை சேர்ந்த தங்கன், இளம்பரிதி, பரா போன்றவர்கள் வந்திருந்தனர். ஜனாதிபதி தேர்தலில் எப்படி செயற்படுவதென்பது பற்றி ஆலோசிக்கவே அந்த கூட்டம்.

நீங்கள் என்ன முடிவெடுக்கிறீர்களோ, அதை செய்கிறோம் என ரவிராஜ், விநாயகமூர்த்தி, ஈ.பி.ஆர்.எல்.எவ் பிரதிநிதி சொன்னார்கள். நான் சொன்னேன்- “மகிந்த ராஜபக்ச இனவாத கட்சிகளுடன் சேர்ந்து நிற்கிறார். மகிந்தவும், ரணிலும் இரண்டு பிசாசுகள்தான். இதில் யாரோ ஒருவர்தான் வெற்றிபெற போகிறார். இருவரையும் எங்களால் தோற்கடிக்க  முடியாது. அதனால் எதை ஆதரிப்பது? எதை தோற்கடிப்பது என்பதில் சரியாக முடிவெடுக்க வேண்டும். சந்திரிகா ஜனாதிபதியாக இருந்தபோது ரணில் விக்கிரமசிங்க பிரதமராக இருந்து உங்களின் தடையை நீக்கி, சமாதான உடன்படிகை செய்தவர், ஏ9 வீதியை திறந்தவர், இராணுவ கட்டுபாட்டு பகுதிக்குள் உங்களை அரசியல் செய்ய அனுமதித்துள்ளார். ரணிலை ஆதரிப்பது சரியென எனக்கு தோன்றுகிறது. மகிந்த வந்தால் ஒப்பந்தத்தை முறித்து போரை தொடங்குவார். அல்லது தமிழ் மக்கள் விரும்பியவர்களிற்கு வாக்களிக்கலாமென விடலாம்“ என்றேன்.

இளம்பரிதியும் தங்கனும் இதை ஏற்கவில்லை. ரணில் எமது இயக்கத்தை பிரித்தவர், சூழ்ச்சிகரமானவர், அவரை வெற்றிபெற அனுமதிக்க முடியாதென்றார்கள். “இது பொல்லைக் கொடுத்து அடிவாங்குவதாக இருக்ககூடாது“ என நான் சொல்ல, ரவிராஜ் எனது கையை பிடித்து “பேசாமல் இரு“ என சொல்லிக் கொண்டிருந்தார். தேர்தலை புறக்கணிப்பதென ஏற்கனவே புலிகள் முடிவெடுத்திருந்ததால், அந்த கூட்டத்தில் வேறு முடிவு எடுக்கவில்லை.

இறுதியில் ரணில் விக்கிரமசிங்க சிறிய வாக்கு வித்தியாசத்தில் தோல்வியடைந்தார்.

2007 ஆம் ஆண்டு காலப்பகுதியில் சிறீரெலோ யாழ்ப்பாணம் ஆரியகுளத்தில் அலுவலகம் அமைத்து இயங்கியது. தம்முடன் இணையுமாறு பலமுறை என்னை வற்புறுத்தினார்கள். தாய் இயக்கத்தை விட்டு விலகமாட்டேன் என மறுத்துவிட்டேன்.

சிறீரெலோவினர் யாழ்ப்பாணத்தில் பணஅறவீட்டில் ஈடுபட்டிருந்தனர். பாதிக்கப்பட்டவர்கள் ரெலோதான் இந்த அறிவீட்டை செய்கிறதென நினைத்து என்னிடம் வந்து முறையிட்டனர். இது எனக்கு சங்கடமான நிலையை ஏற்படுத்தியது. நான் அவர்களை தொடர்பு கொண்டு சில சமயங்களில் பேசியிருக்கிறேன். இப்படியான செயற்பாடுகளினாலோ என்னவோ யாரோ என்னை பற்றி இல்லாதது பொல்லாதது எல்லாவற்றையும் இராணுவ புலனாய்வாளர்களிடம் அள்ளி வைத்து விட்டனர். அதில் ஒன்று- நான் விடுதலைப்புலிகளின் புலனாய்வு பிரிவுடன் சேர்ந்து இயங்குகிறேனாம்.

இந்த நிலையில் 512 வது படை பிரிவினர் என்னை விசாரணைக்கு அழைத்தனர். நான் அவர்களின் முகாமிற்கு போக, கண்ணை கறுப்பு துணியால் மூடிக்கட்டி, கைகளை பின்னால் விலங்கிட்டு ஒரு கதிரையில் உட்கார வைத்தனர். அப்பொழுது அங்கு வந்த தமிழ் துணைக்குழு ஒன்றின் உறுப்பினர்கள் சிலர் என்னை சுடுமாறு சொன்னார்கள். குரலை வைத்து அவர்களை அடையாளம் கண்டேன்.

செல்வம் அடைக்கலநாதன் தந்த விடுதலைப்புலிகளின் உறுப்பினர்கள் இருபது பேரை ரெலோ அடையாள அட்டை கொடுத்து வைத்திருக்கிறேனா என்றுதான் விசாரணை நடந்தது. நான் அதை மறுத்தேன். அப்பொழுது ஒரு இராணுவ அதிகாரி வந்தார். என்னை விசாரித்தவர்கள் சத்தமில்லாமல் நின்றனர்.

நான் சிங்களத்தில் அவரிடம் விடயத்தை சொன்னேன். இங்கு இயக்கமொன்று கப்பம் அறிவிடுகிறது. அதை நான் பலமுறை கண்டித்தேன். தம்முடன் என்னை இணையுமாறு கேட்டனர். அதையும் மறுத்துவிட்டேன். இந்த ஆத்திரத்தில்தான் என்னைப்பற்றி பொய் கூறியிருக்கிறார்கள். என்னை சுடுவதென்றால் சுடுங்கள். ஆனால் அநீதியான வேலையை செய்யப் போகிறீர்கள் என்றேன். அவர் சில விடயங்களை கேட்டவிட்டு, என்னை அவிழ்த்து விட சொன்னார். கண் கட்டை அவிழ்த்த பின்னர் பார்த்தேன், என்னை அவிழ்த்து விட சொன்னவர் கப்டன் தர அதிகாரி. கைலாகு தந்துவிட்டு, நீங்கள் போகலாம் என்றார்.

2009 இல் யாழ் மாநகரசபை தேர்தலில் என்னையும் ஒரு வேட்பாளராக போட்டியிடுமாறு ரெலோ கேட்டது. நான் விரும்பவில்லை. அப்போது கட்சி எம்.பியாக இருந்த சிறிகாந்தா உள்ளிட்ட கட்சி முக்கியஸ்தர்கள் என்னை போட்டியிடுமாறு வலியுறுத்தினார். தேர்தலில் மூன்றாவது அதிகூடிய வாக்கு எனக்குத்தான். தேர்தல் தினத்தன்று தமிழ் தேசிய கூட்டமைப்பின் வாக்குகள் அதிகளவில் உள்ள பிரதேசங்களில் ஒன்பது இடங்களில் குண்டுகள் வெடித்தன. அல்பிரட் துரையப்பாவின் பின் தமக்கு வேண்டப்பட்ட ஒருவர் மேயராக வேண்டுமென மகிந்த விரும்பியிருந்தார். உயிரச்சுறுத்தலான காலம் இது. அச்சுறுத்தலிற்கு மத்தியில் போட்டியிட்டுத்தான் வெற்றிபெற்றோம்.

மாநகரசபை நிர்வாகத்தில் நிறைய முறைகேடுகள் நடந்தன. இதை நான் தொடர்ச்சியாக விமர்சித்து வந்தேன். 2010 இல் முள்ளிவாய்க்கால் அழிவின் முதலாவது நினைவுதினத்தை மாநகரசபையில் அனுட்டித்தோம். தீபம் ஏற்றும்போது இராணுவ புலனாய்வாளர்கள் உள்ளே வந்து எங்களை படம் எடுத்தார்கள். நல்லூர் பிரதேசத்தையே இராணுவம் சூழ்ந்து நின்றது. இப்படியான காரணங்களால் என்னை கொல்ல வேண்டுமென்பதற்காக நகரிலிருந்து இராணுவப் புலனாய்வாளர்கள் திட்டமிட்டனர். என்னுடைய வீட்டை இரண்டொருமுறை தாக்கினார்கள். ஒருமுறை நானும் மனைவியும் நெல்லியடிக்கு செல்லும்போது புலனாய்வாளர்கள் என்னை சூழ்ந்து கொண்டார்கள். ஒருவிழியாக அவர்களிடமிருந்து தப்பித்தேன்.

பின்னர் கொழும்புத்துறைக்குள் வைத்து துரத்தினார்கள். அவர்கள் சூட்டு எல்லைக்குள் வரவிடாமல் வேகமாக மோட்டார்சைக்கிளில் ஓடினேன். கைத்துப்பாக்கியால் சுட்டார்கள். அவர்களிடமிருந்து தப்பித்து இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு அலுவலகத்திற்குள் சென்று தப்பித்தேன். இது தொடர்பாக மனித உரிமை ஆணைக்குழு கடிதங்கள் எழுதியுள்ளது. நாடாளுமன்றத்தில் வினோநோகராதலிங்கம் பேசியுள்ளார்.

2013 வடமாகாணசபை தேர்தல் சமயத்தில் தீவகத்தில் போட்டியிட்டேன். ஏற்கனவே தீவகத்தில் ஈ.பி.டி.பியினரால் பலமுறை தாக்கப்பட்டிருந்தும், இம்முறையும் துணிந்து சென்றேன். தீவகத்தில் எனது பிரச்சாரங்களிற்கு சிறிதரன் எம்.பி பெரிதும் துணையாக இருந்தார். கிழக்கிலிருந்து இந்திரகுமார் பிரசன்னா, ஹென்ரி மகேந்திரன் போன்றவர்களும் இங்கு வந்து பிரசாரத்தில் ஈடுபட்டனர். பதின்மூன்று இடங்களில் எம்மீது தாக்குதல் நடந்தது.

புங்குடுதீவில் பிரசாரத்திற்கு சென்று கொண்டிருந்தபோது இறுபிட்டி பகுதியில் கிராம மக்கள் நூறு பேர் வரை திரண்டு ஆக்ரோசமாக வந்தார்கள். எம்மை சூழ்ந்து நின்று திட்டி, திரும்பி போக சொன்னார்கள். தமக்கு இதுவரை என்ன செய்திருக்கிறோம் என்றும் கேட்டனர். “சரி நாங்கள் போகிறோம். நீங்கள் விரும்பிய கட்சிக்கு வாக்களியுங்கள்“ என்றேன். “விரும்பிய கட்சியில்லை. நாங்கள் விந்தனிற்குதான் வாக்களிப்போம்“ என்றார்கள். விந்தன் கனரட்ணம் நான்தான் என்றேன். உடனே இரண்டு தரப்பும் ஐக்கியமாகி விட்டோம்.

தேர்தலில் தீவக மக்கள் எனக்கு அதிகமாக வாக்களித்திருந்தனர். 24 வருடத்திற்கு பின்னர் ஈ.பி.டி.பி கோட்டையாக இருந்த தீவகத்தில்  9,000 வாக்குகளை பெற்று வெற்றியடைந்த கூட்டமைப்பின் வேட்பாளர் நான்தான்.

யாழ்ப்பாணத்தின் மற்றைய எல்லா இடங்களிற்கும் மாகாணசபை உறுப்பினர்களின் உதவி சென்றது. தீவகத்திற்கு அது கிடைப்பதில்லை. அதனால்தான் அங்கு அதிகமாக எனது திட்டங்களை நடைமுறைப்படுத்தினேன்.

2015 ஜனாதிபதி தேர்தல் சமயத்தில் சிலர் தொடர்பு கொண்டு நகரத்திலுள்ள ஹொட்டல் ஒன்றிற்கு பேசுவதற்கு வரச்சொன்னார்கள். மகிந்த ராஜபக்சவிற்காக வேலை செய்வதாக அறிமுகப்படுத்திவிட்டு, கடந்த தேர்தலில் பொன்சேகாவிற்கு தமிழர்கள் வாக்களித்தார்கள். அப்படியொரு நிலைமை இம்முறை வரக்கூடாது. மகிந்தவிற்கு வாக்களிக்குமாறு அறிக்கைவிட வேண்டும் என கேட்டார்கள். தமிழ் தேசிய கூட்டமைப்பிலிருந்து மேலும் மூவர் அறிக்கைவிட தயாராக உள்ளதாக கூறி பெயரை சொன்னார்கள். நான் மறுத்தபோது, இரண்டு பெரிய கட்சிகளிற்கும் வாக்களிக்ககூடாது என்றாவது பத்திரிகையாளர் சந்திப்பில் கூறவேண்டும், ஒரு கோடி ரூபா தருவோம், முதலில் ஐம்பது இலட்சம் ரூபா தருவோம் என்றார்கள். நான் மறுத்துவிட்டு எழுந்து வந்துவிட்டேன். வெளியில் நின்று லிங்கநாதனிற்கு தொலைபேசியில் அழைத்து, நீங்களும் மகிந்தவிற்கு ஆதரவாக அறிக்கைவிட தயாராக இருப்பதாக சொல்கிறார்கள், உண்மையா? என கேட்டேன். தனக்கும் பெரிய நச்சரிப்பாக இருக்கிறது, நாங்கள் அப்படியானவர்கள் இல்லைத்தானே என்றார். அப்பொழுது பத்திரிகைகளிலும் இது பற்றி செய்திகள் வெளியாகியிருந்தன.

2015 ஜனாதிபதி தேர்தலில் மைத்திரிபால சிறிசேனாவிற்கு தமிழ் தேசிய கூட்டமைப்பு ஆதரவளித்தது.  பிரச்சாரத்திற்கு தீவகத்திற்கு நாங்கள் சென்றபோது ஈ.பிடி.பியினர் எம்மை வழிமறித்து எனது வாகனத்தை உடைத்து, துண்டு பிரசுரங்களையும் கிழித்தெறிந்தனர். அந்த சம்பவத்தில் ஈடுபட்ட ஈ.பி.டி.பியினரை கைது செய்த பொலிசார் ஊர்காவற்றுறை நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தனர். நீதிபதி லெனின்குமார் அவர்களால் வழக்கு விசாரிக்கப்பட்டு, ஈ.பி.டி.யினர் குற்றவாளிகள் என தீர்ப்பு வழங்கப்பட்டு, கடுமையான எச்சரிக்கப்பட்டனர். உடைக்கப்பட்ட வாகனத்திற்கு நட்டஈடும் வழங்கினர். ஈ.பி.டி.பியின் ராம் தோழர், நாகராசா பிரதீபன் உள்ளிட்ட நால்வர் இதில் சம்பந்தப்பட்டிருந்தனர்.

வட மாகாணசபையில் குழப்பங்கள் நடந்தபோது, அமைச்சரவை மாற்றம் நிகழ்ந்தது. இதன்போது என்னையும் ஒரு அமைச்சுக்கு கட்சி சிபாரிசு செய்தது. கட்சி உயர்பீடம் கூடி இதுபற்றி முடிவெடுத்துவிட்டு, முதலமைச்சரை சந்தித்து கட்சி முடிவை முதலமைச்சரிடம் கூறிவிட்டு பத்திரிகைக்கு சொல்லுங்கள் என எமது கட்சி முக்கியஸ்தர் ஒருவரிடம் பொறுப்பளித்தது. ஆனால் அவர் முதலமைச்சரிடம் என்னை பற்றி தவறாக சொன்னதாக தகவல் கிடைத்தது. யாருக்கு கிடைத்தாலும் எனக்கு கிடைக்ககூடாதென்றுதான் அவர் நடந்து கொண்டார். பின்னர் வேறு ஒருவர் அமைச்சராகினார்.

மாநாகரசபை, மாகாணசபை தேர்தலில் போட்டியிடுமாறு கட்சி கேட்டபோது முதலில் மறுத்திருந்தேன். வேறு யாருக்கும் அந்த வாய்ப்பை கொடுக்குமாறு சொல்லியிருந்தேன். பதவிகளிற்கு நான் ஆசைப்பட்டதில்லை. முப்பத்துமூன்று வருடங்களாக நான் கட்சியிலேயே இருக்கிறேன். இயக்கத்தை விட்டு பிரிந்து சென்றவர்களும், விடுதலைப்புலிகளுக்கு பயந்து ஓடியவர்களும், இயக்கத்திற்கு துரோகம் செய்து மகிந்தவுடன் சேர்ந்து தனி இயக்கம் ஆரம்பித்து எம்மையும் தமிழ் மக்களையும் துன்புறுத்தியவர்களும், இயக்கத்தில் இருந்து கொள்ளையடித்துக் கொண்டு ஓடியவர்களும் மீண்டும் ரெலோவிற்குள் நுழைந்து, இப்போது அவர்களே ரெலோவின் தலைவிதியை தீர்மானிப்பவர்களாகவும், எமது விதியை எழுதுபவர்களாகவும் மாறிவிட்டார்கள். இதுதான் இன்று கட்சியின் துயரநிலை.

இன்றைய காலத்தில் புதியதொரு அரசியல் போக்கு உருவாகியிருக்கிறது. மக்களின் விடுதலைக்காக போராட புறப்பட்ட எம்மை ஆயுதக்குழு என கூறுகிறார்கள். போராட்டத்திற்கு ஒரு கிளாஸ் தண்ணீர் தராதவர்கள், போராட்டத்திற்கு ஒரு ரூபா பங்களிக்காதவர்கள், எந்த போராட்டத்திலும் கலந்து கொள்ளாதவர்கள் பலர் 2009 இன் பின் அரசியலுக்கு வந்துள்ளார்கள். தாங்கள்தான் தமிழர்களின் காவலர்கள் என்பதை போல பேசுகிறார்கள். இதுதான் இன்றைய துயர அரசியல்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here