நானும் கேணல் தர அதிகாரிதான்!- விந்தன் கனகரட்ணம் எழுதும் அனுபவங்கள்!

நெடுந்தீவில் சாதாரண விவசாய குடும்பமொன்றில் பத்து பிள்ளைகளில் ஒருவராக பிறந்தேன். அப்பா தமிழர் விடுதலைக்கூட்டணியின் தீவிர பற்றாளர், உறுப்பினராக இருந்தார். பின்னர் வீ.நவரத்தினத்தின் தமிழர் சுயாட்சி கழகத்தில் இணைந்து செயற்பட்டார். அதனால் வீட்டில் அரசியல் பேச்சுக்கள் அதிகமாக நடக்கும்.

க.பொ.த சாதாரண தரத்தை முடித்த சமயத்தில் 1983இல் வெலிக்கடை படுகொலை நடந்தது. குட்டிமணி, தங்கத்துரை, ஜெகன் போன்றவர்களின் மரணம் எல்லா இடங்களை போலவும் வீட்டிலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. இப்பொழுதும் அந்த சம்பவம் நன்றாக நினைவில் இருக்கிறது. அப்பா இடிந்து போனார். சுவரில் சாய்ந்திருந்து இரவிரவாக அழுது கொண்டிருந்தார். அவருக்கு பக்கத்திலேயே நான் குந்தியிருந்தேன்.

1984 ஜனவரி மாதத்தில் நான் ரெலோ அமைப்பில் இணைந்து கொண்டேன். பின்னர் எனது சகோதரிகள் இருவர் விடுதலைப்புலிகள் அமைப்பில் இணைந்து கொண்டனர். (கப்டன் சாவித்திரி, மேஜர் பவளமொழி/சாரா) பின்னர் வீரச்சாவடைந்து விட்டனர்)

காரைநகரை சேர்ந்த மிசோ ராம் என்பவர்தான் என்னை ரெலோ அமைப்பில் இணைத்தார். பயிற்சிக்காக புங்குடுதீவிலிருந்த புதிய போராளிகள் பத்துபேர் படகில் இந்தியாவிற்கு புறப்பட்டோம். காங்கேசன்துறையில் இருந்து வந்த கடற்படை கப்பல்கள் எம்மை கச்சதீவுக்கு அண்மைக்கு சுற்றிவளைத்து, எம்மீது போக்கஸ் வெளிச்சத்தை பாய்ச்சி துப்பாக்கிச்சூடு நடத்தினர். ஒரு ரவை எனது தலைமயிரை எரித்துக்கொண்டு சென்றது. மயிரிழையில் தப்பித்தேன். மயிலிட்டியை சேர்ந்த கோபி, தொண்டைமானாறை சேர்ந்த சசி , வல்வெட்டித்துறையை சேர்ந்த ராஜன் என மூன்று ஓட்டிகள். அவர்கள் திறமையானவர்கள். எப்படியோ கடற்படையிடமிருந்து சுழித்து கொண்டு தப்பிவிட்டார்கள். படகோட்டி ஒருவர், எம்முடன் வந்த ஒருவருக்கு காயம். ஒரு இயந்திரத்திலும் வெடி பட்டிருந்தது. ஆனால் அரை மணித்தியாலத்தில் இராமேஸ்வரத்தில் தரையிறக்கிவிட்டார்கள்.


முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் விந்தன் கனகரட்ணம் இந்தவாரம் அனுபவங்களை எழுதுகிறார். ரெலோ அமைப்பின் நீண்டகால போராளியான இவர், யாழ்ப்பாணம், மன்னார், கிளிநொச்சி பகுதிகளில் செயற்பட்ட அனுபவங்களை எழுதுகிறார்.


இந்தியாவின் இராமேஸ்வரத்தில் வில்லூன்றி என்ற இடத்தில் தங்கியிருந்தோம். இந்தியாவிலிருந்து இலங்கைக்கு வருவதற்கு எங்கள் தளபதிகளில் ஒருவரான தாஸ் அங்கு நின்றார். அவர் எங்கள் அனைவருக்கும் பெயர் வைத்தார். எனக்கு விந்தன் என்ற பெயரை வைத்தது அவர்தான்.  அந்த பகுதியில் விடுதலைப்புலிகளின் முகாமும் இருந்தது.

கடற்கரையில் நாங்கள் ஓட்டப்பயிற்சி செய்யும்போது புலிகளும் ஓட்டப்பயிற்சியில் ஈடுபடுவார்கள். பொட்டம்மான், சூசை, சந்தோசம் மாஸ்ரர் போன்றவர்கள் அங்கு பயிற்சியில் ஈடுபடுவார்கள். பயிற்சியின் பின் எல்லோரும் ஒன்றாக இருந்து கதைப்போம்.

எங்கள் அணியை பயிற்சிக்காக உத்தரபிரதேசத்திற்கு அனுப்ப முடிவு செய்தார்கள். அப்போது எனக்கு பதினேழு வயது. நான்தான் வயதில் சிறியவன். கடல்மட்டத்தில் இருந்து பதினைந்தாயிரம் அடி உயரத்தில் உள்ள இமயமலையில் பயிற்சி நடக்கவிருந்தது. அந்த குளிரை நான் தாங்கமாட்டேன் என கூறி, சிறீசபாரத்தினம் என்னை அந்த அணியுடன் போக அனுமதிக்கவில்லை. சிறிதுகாலம் இராமேஸ்வர முகாமிலேயே இருந்தேன்.

பின்னர் சேலம் கொல்லிமலையில் நடந்த பயிற்சி முகாமில் ஒரு வருடம் இராணுவப்பயிற்சி பெற்றேன். பயிற்சிகாலத்தில் பயங்கர உணவுத்தட்டுப்பாடு நிலவியது. ஒரு கரண்டி பருப்பை அவித்த தண்ணீர்தான் கறி. சில சமயங்களில் உணவே இல்லாமல் கொல்லிமலை காட்டுக்குள் சென்று பலாப்பழம்தான் பறித்து சாப்பிட்டோம். அது கரடிக்காடு. அந்த அபாயத்திற்குள்தான் சென்று சாப்பாடு தேடினோம். இலை, குழைகளையும் பறித்து சாப்பிட்டோம். அப்போது ரெலோ கடுமையான பொருளாதார நெருக்கடியை சந்திருந்தது. சங்கானை வங்கி கொள்ளையின் பின்னர்தான் ஓரளவு பணநெருக்கடி தீர்ந்தது.

இந்தக்காலப்பகுதியில்தான் இந்திராகாந்தி கொல்லப்பட்டார். இதையடுத்து, எந்தவொரு இயக்கத்திற்கும் இந்திய மண்ணில் பயிற்சி கொடுப்பதில்லையென இந்திய மத்திய அரசு முடிவெடுத்ததையடுத்து, உத்தர பிரதேச பயிற்சி நிறுத்தப்பட்டது.

ஆனால் 1985 இறுதியில் உத்தரபிரதேசத்தில் ரெலோவிற்கு கொமாண்டோ பயிற்சியை இந்தியா வழங்கியது. மூன்று மாதம் நடந்தது. பயிற்சியின் பின்னர் இந்தியாவிலேயே இருந்தேன். இந்த சமயத்தில்தான் ரெலோவின் மீது விடுதலைப்புலிகள் தாக்குதல் நடத்தினார்கள்.

ஜே.ஆர் இந்தியாவிற்கு வரவிருந்த சமயத்தில் பெங்களூர் விமானநிலையத்தில் குண்டுவெடித்தது. இந்த தாக்குதலை நடத்தியது தம்பாபிள்ளை மகேஸ்வரன் தலைமையிலான தமிழீழ இராணுவத்தினர். இதன் எதிரொலியாக இந்தியாவில் இருந்த தமிழ் இயக்கங்களின் ஆயுதங்களை இந்தியா களைந்தது. இதற்கு எதிராக உண்ணாவிரத போராட்டம் நடத்தினோம். சென்னையில் இருந்த ஈழ தேசிய விடுதலை முன்னணி (நான்கு இயக்கங்களின் கூட்டணி) அலுவலகத்தில்  நீர் கூட அருந்தாமல் போராட்டம் நடந்தது. நான், செல்வம் அடைக்கலநாதன் உள்ளிட்டவர்கள் அந்த போராட்டத்தில் ஈடுபட்டோம். ஏழு நாட்கள் நடந்த போராட்டத்தில் நான் ஐந்து நாட்கள் நீராகாரமும் அருந்தாமல் இருந்தேன். பின்னர் அதிமுகவின் பண்ருட்டி ராமச்சந்திரன், தி.மு.கவின் அன்பழகன், திராவிடர் கழகத்தின் கி.வீரமணி போன்றவர்கள் தலையிட்டு உண்ணாவிரதத்தை முடித்து வைத்தனர். இந்த காலப்பகுதியில் தொலைத்தொடர்பு சாதனங்கள் பறிக்கப்பட்டதற்கு எதிராக பிரபாகரனும் உண்ணாவிரத போராட்டத்தை நடத்தியிருந்தார்.

இலங்கையில் எமது இயக்கம் புலிகளால் தடை செய்யப்பட்டதை தொடர்ந்து இந்தியாவிலேயே தங்கியிருந்தோம். இலங்கை இந்திய ஒப்பந்தத்தின் பின், நாங்கள் இலங்கைக்கு திரும்ப முடிவெடுத்தோம். இதற்கு இந்தியாவும் சம்மதித்தது. றோ உளவுப்பிரிவு ஆயுத உதவி செய்தது. நாங்கள் போராட்டத்தை ஆரம்பித்தபோது, புலிகளால் தாக்கப்பட்டபோது இந்தியா எமக்கு பெரியளவில் ஆயுத உதவிசெய்யவில்லை. ஆனால் மீண்டும் இலங்கைக்கு திரும்ப போகிறோம் என்றதும் பெரியளவில் ஆயுத உதவி செய்தனர். 50 கலிபர், 30 கலிபர், கால்குஸ்தா, எல்.எம்.ஜிகள் என ஆயுதங்களை பார்த்து நாங்களே ஆச்சரியப்பட்டு விட்டோம். இந்த ஆயுதங்களை ஆரம்பத்தில் தந்திருந்தால் நாங்கள் எத்தனையோ வெற்றிகளை பெற்றிருப்போம்.

நாற்பது உறுப்பினர்கள் கடல்வழியாக மன்னாருக்கு வந்தோம். மூன்றாம்பிட்டி என்ற இடத்தில் தரையிறங்க முயற்சித்தபோது புலிகள் தாக்குதல் நடத்த தொடங்கினார்கள். எதிர்தாக்குதல் நடத்தியபடியே தரையிறங்கினோம். அங்கு முகாமமைத்தோம். அதிலிருந்து படிப்படியாக முகாம்களை விஸ்தரித்து தேத்தாதீவு, விடத்தல்தீவு பகுதிகளிற்கும் சென்றோம். இந்த காலப்பகுதியில் எமது ஆட்பலமும் பெருகியது. புளொட்டும் சங்கிலியன், ரெலா காந்தன், மாணிக்கதாசன், சேவல்கொடி, மாறன் போன்ற முக்கிய உறுப்பினர்களுடன் மன்னாரில் முகாம்  அமைத்தது.

இந்திய ராணுவத்திடம் ஆயுத ஒப்படைப்பு நிகழ்ந்தபோது எல்லா ஆயுதங்களும் ஆயுதங்களை ஒப்படைத்தன. மன்னாரில் கிட்டத்தட்ட 75 ஆயுதங்களை ஒப்படைத்தோம். நாங்கள் முழுமையாக ஆயுதங்களை ஒப்படைக்கவில்லை. புலிகளும் முழுமையாக ஒப்படைக்கவில்லை.

பின்னர் கிளிநொச்சி, முல்லைத்தீவு என எமது அலுவலகங்களை விஸ்தரித்தோம். நாம் ஆயுதங்களை முழுமையாக ஒப்படைக்கவில்லையென இந்திய இராணுவம் நெருக்கடி கொடுத்து கொண்டிருந்தது. நாம் ஆயுதங்களை ஒப்படைக்கவில்லையென்ற கோபத்தில், ஒருநாள் கிளிநொச்சியிலுள்ள முகாமை சுற்றிவளைத்து தாக்கினார்கள். பின்பக்கமாக மதிலேறி குதித்து தப்பியோடிவிட்டோம். அதில் தவம் என்பவரிற்கு காலில் காயம் ஏற்பட்டது.

இந்தியா – புலிகள் மோதல் ஏற்பட்டதன் பின்னர்  citizen volunteer force (cvf ) என்ற பெயரில் வடமாகாணத்திற்கான காவல்துறையை உருவாக்கினார்கள். இதற்கு இந்திய இராணுவமே சம்பளம் வழங்கியது. இதேபோன்று ரெலோ, ஈ.பி.ஆர்.எல்.எவ், ஈ.என்.டி.எல்.எவ் இணைந்து தமிழ் தேசிய இராணுவத்தையும் உருவாக்கினார்கள். இதில் ரெலோ உறுப்பினர்களும் இணைந்து பயிற்சி பெற்றார்கள். மூன்று இயக்கங்களையும் உள்ளடக்கிய கிளிநொச்சி பயிற்சி முகாமில் நானும் பயிற்சிபெற்றேன்.  இப்பொழுது எமது கட்சியில் உள்ள முக்கியஸ்தர்கள் பெரும்பாலானவர்கள் தமிழ் தேசிய இராணுவத்தில் இருந்தவர்கள்தான். திறமை, தகுதியினடிப்படையில் அங்கு தரநிலை வழங்கப்பட்டபோது, முதல்நிலைப்படுத்தப்பட்டு கேணல் தரம் வழங்கப்பட்டது. தமிழ் தேசிய இராணுவத்திற்கு பொறுப்பாக காளித் இருந்தார். புளொட் அமைப்பிற்காக பாலஸ்தீனத்தில் பயிற்சிபெற்றவர். பின்னர் பரந்தன் ராஜனுடன் இணைந்து ஈ.என்.டி.எல்.எவ் அமைப்பிற்கு வந்து, தமிழ் தேசிய இராணுவத்திற்கு பொறுப்பானார்.

அந்த சமயத்தில் விடுதலைப்புலிகள் எங்கள் மீது அடிக்கடி தாக்குதல் நடத்தினாலும், நாங்கள்- ரெலோ- அவர்கள் மீது தாக்குதல் நடத்தியது தவிர்க்க முடியாத சந்தர்ப்பங்களில் மட்டுமே. வடகிழக்கு மாகாணசபை தேர்தலில் மூன்று கட்சிகளையும் இணைந்து போட்டியிடுமாறு இந்தியா கேட்டது. ஆனால் நாம் அதை ஏற்கவில்லை. ஈ.பி.ஆர்.எல்.எவ், ஈ.என்.டி.எல்.எவ் இணைந்து தேர்தலில் போட்டியிட்டன. கிளிநொச்சி, யாழ்ப்பாண பகுதிகளில் நான் செயற்பட்டு கொண்டிருந்தேன்.

சகோதர மோதல்களில் ஈடுபட கூடாதென்பது அப்போதைய எமது நிலைப்பாடு. சுற்றிவளைப்புக்களில் ஈடுபடும்போது, எம்மையும் வருமாறு அடிக்கடி கேட்பார்கள். நாங்கள் அவர்களுடன் இணைந்து செயற்படுவதில்லை. இதனால் எம்மீது இந்தியர்களிற்கும் கோபமிருந்தது.

ஒரு சமயம், யாழ்ப்பாணம் கல்வியங்காட்டில் தங்கியிருந்து நகரத்தில் ஆங்கிலம் படித்துகொண்டிருந்தேன். எமது இயக்கத்தில் இருந்த ஒருவர் இந்திய இராணுவத்துடன் இணைந்து கல்வியங்காட்டில் கொலை செய்வது, புலிகளை காட்டிக்கொடுப்பது, கப்பம் வாங்குவது போன்ற செயல்களில் ஈடுபட்டு வந்தார். எங்கள் பெயரை பாவித்து இந்திய இராணுவத்துடன் இணைந்து செயற்பட வேண்டாமென அவரை எமது இயக்கம் எச்சரித்திருந்தது. இதேகாலப்பகுதியில் விடுதலைப்புலிகள் அவரை சுட்டுக்கொன்று விட்டார்கள். புலிகள் அமைப்பின் ஜவான்தான் சுட்டார். ஆனால் அந்த பழி ரெலோவின் மீது விழுந்தது.

தம்முடன் சேர்ந்து இயங்கியவரை ரெலோதான் சுட்டதென இந்திய இராணுவம் நினைத்தது. என்னையும் ஆறுபேரையும் கைதுசெய்து, நாயன்மார்கட்டு முகாமிற்கு கொண்டு சென்றனர். நாங்கள்தானா கொலை செய்தோமென விசாரித்து சித்திரவதை செய்தார்கள். கைகளை பின்னால் கட்டி, தலைகீழாக தொங்கவிட்டு அடிப்பார்கள். (அந்த சித்திரவதையின் பக்கவிளைவுகள் இன்றும் உள்ளன) இன்னும் சொல்ல முடியாத சித்திரவதை. ஏழு நாளாக தலைகீழாக கட்டிதொங்கவிட்டு நடந்த சித்திரவதையில் உடலெல்லாம் காயம். உடம்பு காயங்களுடன் சேர்ட் ஒட்டிவிட்டது.

பின்னர் காங்கேசன்துறை சீமெந்து தொழிற்சாலை தடுப்பு முகாமிற்கு கொண்டு சென்றனர். சீமெந்து தொழிற்சாலை விடுதிகளை சிறைச்சாலையாக மாற்றியிருந்தனர். தடுப்பு முகாமிற்குள் கொண்டு போய் போட்டுவிட்டார்கள். இதற்குள் ஆயிரம் விடுதலைப்புலிகள் தடுத்து வைக்கப்பட்டிருந்தனர். நாங்கள் ஆறுபேர் மட்டுமே ரெலோ. எமது உடைகளை மாற்றி, காயத்திற்கு மருந்திட்டு புலிகள் அன்பாக கவனித்தனர். நெல்லியடி சுக்ளா, வல்வெட்டித்துறை மஞ்சு, மோகன், மானிப்பாய் பொறுப்பாளர் மயூரன் போன்றவர்கள் அங்கிருந்தனர்.

மேஜர் லலித் நாத், மேஜர் நாயர், மேஜர் சர்மா, கப்டன் ராஜன் போன்றவர்கள் முகாமிற்கு பொறுப்பாக இருந்தனர். முகாமை சுற்றி உயரமான கம்பிவேலிகள் அமைத்திருந்தனர்.

2002 சமாதான உடன்படிக்கை காலப்பகுதியில் ஜவானை சந்தித்தபோது, சிரித்தபடி இந்த சம்பவத்தை நினைவுகூர்ந்தார். “நாங்கள் செய்த கொலைக்கு நீங்கள் சிறையிலிருந்தீர்கள்“ என சொன்னார்.

ஒன்பது மாத சிறைவாசத்தின் பின், இந்திய இராணுவம் வெளியேறும்போது சிறையை திறந்து விட்டார்கள். நான் கிளிநொச்சிக்கு சென்று எமது அமைப்பினரை சந்தித்து, திருகோணமலைக்கு சென்றேன். பின்னர் இந்தியாவிற்கு சென்று மண்டபம் அகதிகள் முகாமில் தங்கியிருந்தேன். பத்மநாபா கொலையை தொடர்ந்து அங்கும் நெருக்கடிகள் வந்தன. பிரேமதாசாவின் ஆட்சி அமைந்ததும் ரெலோ இலங்கைக்கு திரும்பி வர முடிவெடுத்தது. நானும் கொழும்பிற்கு வந்தேன்.

(தொடரும்)

 

 

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here