எம்.பி பதவியை வேண்டாம் என நிராகரித்தவன் நான்: ஆனந்தசங்கரி தனது அனுபவங்களை எழுதுகிறார்!

©தமிழ்பக்கம்

எனது அப்பா ஆசிரியராக இருந்தவர். பின்னர், புத்தூர் சோமஸ்கந்தா பாடசாலை அதிபராக இருந்தார். இந்தகாலத்தில் பாடசாலையை முன்னேற்ற வேண்டுமென தனது பொறுப்பை இன்னொருவரிடம் கையளித்தவர். அவர் அச்சுவேலி. அம்மா பருத்தித்துறை. நான் பிறந்தது பருத்தித்துறையில். சைவப்பிரகாச வித்தியாலயத்தில் ஆரம்ப கல்வியை கற்றேன்.

ஒரு சாதாரண குடும்பம். அப்பாவின் உறவுகளிற்கு அதிகமாக உதவி செய்ய வேண்டியிருந்ததால், எங்கள் குடும்பம் சிக்கனமாக இருந்தது. சாப்பாட்டிற்கு குறையில்லாமல் வாழ்ந்தோம். இரண்டாம் உலகப்போர் காலத்தில்தான் கடுமையான நெருக்கடி ஏற்பட்டது. அப்பொழுது கடுமையான உணவுத்தட்டுப்பாடு ஏற்பட்டது. கப்பலில் பொருட்கள் இலங்கைக்கு வராததால் இந்த பஞ்சம் ஏற்பட்டது. கூப்பனில் கொஞ்ச அரிசி கொடுப்பார்கள். அது போதாது.  எட்டு, பத்து வயதுகளில் அப்போது நடந்தவை இன்றும் நன்றாக நினைவிலுள்ளது. கொஞ்சம் சோறும், மிச்சம் மரவள்ளி கிழங்கு, வத்தாளம் கிழங்கும்தான் சாப்பிட்டு வாழ்ந்தோம்.

எந்த நேரமும் குண்டு விழலாம் என்ற நிலைமை. யுத்தத்திற்கு தயாராக ஆபிரிக்க இராணுவம் பலாலியில் முகாம் அமைத்து தங்கியிருந்தனர். மொத்தமாக பத்தாயிரத்திற்கும் அதிகமானவர்கள் இலங்கையில் தங்கியிருந்தனர்.

பஞ்சத்தையடுத்து ஆங்கிலேயர்கள் ஒரு பிரசாரம் செய்தனர். எங்கெல்லாம் எழுத இடம் கிடைக்கிறதோ அங்கெல்லாம்- அதிக உணவு பயிரிடுக என ஆங்கிலத்தில் எழுதினார்கள். இதை பார்த்து வீடுகளில் கிடைக்கும் இடங்களில் எல்லாம் மரவள்ளி, வத்தாளை, தக்காளி என பலதையும் பயிரிட்டார்கள்.

முக்கியமான இடங்களில் அகழி வெட்டினார்கள். V,W வடிவத்தில் அகழி இருக்கும். அச்சுவேலி நகரம், யாழ்ப்பாண சந்தை, கிளிநொச்சி சந்தைகளில் இது அமைக்கப்பட்டிருந்தது நினைவில் இருக்கிறது. குண்டு தாக்குதலில் இருந்து தப்பிக்க இந்த ஏற்பாடு.

விமானம் குண்டு போடுவதற்கு முன்னர் எச்சரிக்கை ஒலியெழுப்ப ஒரு ஏற்பாடு இருந்தது. அப்பொழுது நான் அச்சுவேலி அமெரிக்கன் மிசன் கல்லூரியில் (கிறிஸ்தவ கல்லூரி) படித்துக்கொண்டிருந்தேன். அப்பாவும் அங்குதான் படிப்பித்தார்.

வான் தாக்குதலில் இருந்து தப்பும் எச்சரிக்கை கொடுக்க ஒரு படையணி உருவாக்கப்பட்டது. ஒவ்வொரு பாடசாலையிலும் ஒரு அதிகாரி இருந்தார். உயர்தர மாணவர்கள்தான் தொண்டர்கள். ஒவ்வொரு பாடசாலைகளிலும் வாளி, சவள் வழங்கப்பட்டிருந்தது. வான் தாக்குதல் ஒத்திகைகள் பாடசாலைகளில் நடந்தது.

திடீரென ஒருநாள் ஒத்திகைக்கு அரசாங்கம் அறிவிக்கும்.  அந்த நாளில் எச்சரிக்கை அதிகாரிகள் குறிப்பிட்ட நேரத்தில் விசில் அடிப்பார்கள். வகுப்பில் இருப்பவர்கள் காதைப் பொத்திக்கொண்டு, முழங்காலில் உட்கார்ந்து மேசைக்கு கீழே போய் விட வேண்டும். வகுப்பறைக்கு வெளியில் நிற்பவர்கள் ஏதாவது குழிக்குள் இறங்கிவிட வேண்டும். அப்பொழுது மாணவர்கள் எல்லோரும் கழுத்தில் ஒரு நூல் கட்டி முன்பக்கமாக நெஞ்சளவில் தடியொன்றை குறுக்காக கட்டியிருப்போம். தடியின் இரு முனையிலும் சிறிய குஞ்சத்தில் பஞ்சு. விசில் அடித்ததும், தடியை வாயில் கௌவிக்கொண்டு, பஞ்சை காதில் அடைந்து விடுவோம்.

எச்சரிக்கை முடிந்து விசில் அடித்ததும், ஏற்கனவே அமைக்கப்பட்ட சிறிய கொட்டகை ஒன்றை எரிப்பார்கள். அது குண்டு விழுந்த இடமாம். உடனே உயர்தர வகுப்பு மாணவ தொண்டர்கள் ஓடிவந்து தண்ணீர் ஊற்றி, சவளால் மண் வீசி நெருப்பை அணைக்க வேண்டும்.

அந்த காலத்தில் வண்டில்களில் கொண்டு திரிந்துதான் மண்ணென்ணெய் விற்பார்கள். ஒவ்வொரு சந்தியில் நின்றும், ஒரு குழாயின் மூலம் அறிவிப்பார்கள்.  அது தூரத்திற்கும் கேட்கும்.

அரை வயிற்று சாப்பாட்டுடன்தான் உலகப்போர் காலத்தை கழித்தோம். கூட்டுறவு சங்க முறை அப்பொழுதுதான் வந்தது. அச்சுவேலி கூட்டுறவு சங்கத்தின் முதலாவது உறுப்பினர் அப்பாதான். கூட்டுறவு சங்க தலைவராகவும் இருந்தார். அப்பொழுது 55 புள்ளிகளையுடைய கூப்பன் வழங்கப்பட்டு, அதற்கு பொருள் வழங்கப்பட்டது.

உலகமகா யுத்த காலத்தில்தான் பாண் யாழ்ப்பாணத்திற்கு வந்தது. அதற்கு முன் பாண் என்றாலே யாருக்கும் தெரியாது.  அரசாங்கம் தரும் உணவு போதாமல் இருந்ததால், பேக்கரிகளில் வரிசையில் நின்று பாண் வாங்கி சாப்பிட்டு பழகினோம்.

அப்பொழுது கொமியூனிற்றி சென்ரர்கள்தான் இருந்தன. அங்கு அரசாங்கம் வானொலி பெட்டி கொடுத்திருந்தது. செய்தி கேட்க அங்குதான் போக வேண்டும். மகாத்மா காந்தி இறந்ததையும் இப்படியொரு சந்தர்ப்பத்தில்தான் கேட்டேன்.

பதினாறு, பதினேழு வயதுகளில் இருந்தே சமூகத் தொண்டனாக செயற்பட தொடங்கி விட்டேன். ஏதாவது அனர்த்தங்கள் நடந்தால் அந்த இடத்தில் நிற்பேன். பாடசாலை நாட்களிலேயே என்னை கொம்யூனிஸ்ற் என அழைப்பார்கள். சமூக வேறுபாடுகள் பார்க்காதவன், சமூக தொண்டன் என்ற அடிப்படையிலேயே அப்படி அழைத்தார்கள். கொம்யூனிஸம் பற்றிய அப்போதைய புரிதல் அப்படித்தான் இருந்தது. இப்போதிருந்த ஒரே இடதுசாரி கட்சி லங்கா சமசமாஜ கட்சி. மற்றைய இடதுசாரிகள் கட்சிகள் எல்லாம் சுதந்திரத்தின் பின்னர்தான் உருவாகின.

சிறுவயதில் இருந்தே காந்தி ஜெயந்தி கொண்டாடும் வழக்கம் எனக்கு ஏற்பட்டிருந்தது. 1950களில் இருந்து நண்பர்கள் சிலருடன் இணைந்து ஊரில் பணம் திரட்டி காந்தி ஜெயந்தி கொண்டாடுவோம்.  அப்போது இந்திய தூதரகத்தில் படப்பிரிவு இருந்தது. முன்னரே தகவல் கொடுத்தால், அவர்கள் காந்தியின் வரலாறு பற்றிய படம் திரையிடுவார்கள். இப்போது இந்திய தூதராக இருந்தவர் பி.வி.கிரி. பின்னர் இந்திய ஜனாதிபதியாக இருந்தவர்.

ஒருநாள் நண்பர்களுடன் தியேட்டருக்கு படம் பார்க்க சென்றிருந்தேன். ஒரு சிறுவன் பிச்சையெடுத்து கொண்டிருந்தான். அவனை கூப்பிட்டு விசாரித்தேன். பெற்றோர் இல்லையென்றான். எனது வீட்டுக்கு கூட்டிப்போனேன். அம்மா என்னுடன் சண்டைபிடித்தார். அவனை  சலூனிற்கு கொண்டு சென்று முடிவெட்டி வீட்டில் தங்க வைத்தேன். மூன்றாம் அழுதான். விசாரித்தால்- வீட்டுக்கு போகப்போவதாக சொன்னான். அவன் என்னை ஏமாற்றி விட்டான். எனது வாழ்க்கையில் ஏமாற்றுக்கள் நிறையவுள்ளன. என்னை சுலபமாக ஏமாற்றலாம். எதையும் மறைக்கமாட்டேன், எல்லோரையும் நம்புவேன். எனது அலுவலகத்திலும் எதுவும் பூட்டி வைக்கப்படுவதில்லை.

பல்கலைகழகத்திற்கு போக வேண்டும், உயர்கல்வி கற்க வேண்டுமென்ற விருப்பமிருந்தது. அதற்கு போதிய வசதி கிடைக்கவில்லை. நாங்கள் பிள்ளைகள் ஏழு பேர். அதிபராக இருந்த அப்பாவின் சம்பளம் முன்னூறு ருபாவோ என்னவோதான். எஸ்.எஸ்.ஸியுடன் படிப்பை தொடர முடியாமல் போய்விட்டது.

பின்னர் ஜா எலவில் ஆசிரியராக நியமனமானேன். ஜோசெப் மைக்கல் பெரேரா உள்ளிட்ட என்னுடைய மூன்று மாணவர்கள் பின்னாளில் பாராளுமன்றம் சென்றனர். ஜா எலவில் இருந்தபோது லங்கா சமசமாஜ கட்சி கூட்டங்களிற்கு தொடர்ந்து செல்வேன். அங்குதான் அரசியல் பரிச்சயம் ஏற்பட்டது. பீற்றர் கெனமன், கொல்வின் ஆர் டி சில்வா, என்.எம்.பெரேரா போன்றவர்களுடன் அறிமுகம் ஏற்பட்டது.

1952இல் அரிசியின் விலை 25 சதம். இந்த விலையை அதிகரிக்க முயன்றபோது இலங்கை முழுவதும் வேலைநிறுத்தம் நடந்தது. சமசமாஜ கட்சி ஒழுங்கமைத்தது. இலங்கையில் நடந்த முதலாவது பெரிய வேலைநிறுத்தமாக இதுதான் இருந்திருக்கும். இதற்கான ஏற்பாடுகளில் நானும் ஈடுபட்டேன். வேலைநிறுத்தம் சில இடங்களில் வன்முறையாகி மூன்றோ, நான்கு பேர் மரணமாகினார்கள். அப்போது டட்லி சேனநாயக்கா பிரதமராக இருந்தார். இந்த சம்பவத்திற்கு பொறுப்பேற்று உடனடியாக பதவி விலகினார்.

டி.எஸ்.சேனநாயக்கா இறந்து விட்டார். அப்போது கவர்னர் ஜெனராக இருந்தவர் சோல்பரி. அவர் இலங்கைக்கு வந்து, அமைச்சர்களிடம் கையெழுத்து வாங்கி டட்லியை பிரதமராக்கினார். பதவியேற்ற சில நாளிலேயே அரசாங்கத்தை கலைத்தார். மக்களால் தேர்ந்தெடுக்கப்படாத அரசாங்கம் தேவையில்லையென்பதால் அப்படி செய்தார். இலங்கை அரசியலில் அப்படியான இன்னொருவரை காட்டலாமெனில், அது நான்தான்!

கையில் தந்த எம்.பி பதவியை வேண்டாம் என நிராகரித்தவன் நான்!

அரசியல் ஆர்வம் காரணமாக அனேகமான கட்சி கூட்டங்களிற்கு செல்வேன். சிறிலங்கா சுதந்திரக்கட்சியின் ஆரம்ப கூட்டத்திற்கும் சென்றிருந்தேன். கட்சியின் முதல் செயலாளராக ஒரு தமிழர் தேர்வான நினைவு.

நான் அப்போது நல்ல பேச்சாளர்.  அதனாலோ என்னவோ 1959 ஆம் ஆண்டு கொழும்பு நகரசபை தேர்தலில் என்னையும் லங்கா சமசமாஜ கட்சி களமிறக்கியது. ஏற்கனவே நான்கு, ஐந்து வருட அரசியல் அனுபவமிருந்தாலும் இதுதான் எனது முதல் தேர்தல். ஐக்கிய தேசியக்கட்சியின் சுகததாசவும் (பின்னர் விளையாட்டு அமைச்சராக இருந்தவர்) போட்டியிட்டார். கொச்சிக்கடைதான் எனக்கு ஒதுக்கப்பட்டது. அதை விட்டுத்தருமாறு பிரிற்றோ என்பவர் வந்து காலில் விழுந்து கெஞ்சினார். இந்த தொகுதியில் போட்டியிட்டால் மாத்திரமே தனக்கு எதிர்காலமுள்ளதாக அழுதார். நான் விட்டுக்கொடுத்தேன். பின்னர் கொட்டஹேனா தெற்கில் போட்டியிட்டேன். கொச்சிக்கடையில் போட்டியிட்டிருந்தால் நான் வென்றிருக்கலாம். கொட்டஹேனாவில் வெல்ல முடியவில்லை. பிரிற்றோ வென்றார்.

1960ஆம் ஆண்டு பாராளுமன்ற தேர்தல் வந்தது. சமசமாஜ கட்சியின் யாழ்ப்பாண கிளை என்னை அங்கு வருமாறு கட்சி தலைமை மூலம் அழைத்தது. தேர்தல் வேட்பாளர் பெயர் பட்டியல் வழங்கும் நேரம் முடியும் தருவாயில்தான் யாழ்ப்பாணம் வந்தேன். எனக்கு கிளிநொச்சி தொகுதி தரப்பட்டிருந்தது. எழுதுமட்டுவாளிற்கு அப்பால் கிளிநொச்சி தொகுதி. சிபாரிசு செய்ய இரண்டு கையெழுத்து தேவை. எழுதுமட்டுவாளில் ஒருவரை மறித்தேன். அவரிடம் விடயத்தை சொல்ல, கையெழுத்து வைத்தார். அவரது பெயர் ஆழ்வார் ஆறுமுகம். புதுக்காட்டு சந்தியில் இன்னொருவரை மறித்து கையெழுத்து வாங்கினேன். அடுத்தநாள், காரொன்றை வாடகைக்கு எடுத்து தேர்தல் பிரசாரங்களை தொடங்கினேன்.

எட்டில் ஒரு வீத வாக்கெடுத்தால்தான் கட்டுப்பணம் கிடைக்கும். எனக்கு ஒரு வாக்கினால் கட்டுப்பணம் கிடைக்கவில்லை. அதிக வேட்பாளர்கள் போட்டியிட்டதால் இரண்டாயிரத்து சொச்சம் வாக்கெடுத்தவர் எம்.பியானார். ஆயிரத்து சொச்சம் எடுத்த நான் கட்டுக்காசை இழந்தேன். மறுநாள் ரைம்ஸ் பத்திரிகையில், ஒரு வாக்கால் கட்டுக்காசை இழந்த ஆனந்தசங்கரி என்ற செய்தி வந்திருந்தது. பின்னர் மூன்று மாதத்தில் பாராளுமன்றம் கலைக்கப்பட்டு தேர்தல் வந்தது. அதிலும் தோல்விதான். ஆனால் வாக்கு அதிகரித்திருந்தது.

பின்னர் உள்ளூராட்சி தேர்தல் வந்தது. கிளிநொச்சியில் எமது கட்சி வெற்றியடைந்தது.  நான் கரைச்சி தவிசாளர் ஆகினேன். அங்கு எடுக்கப்பட்ட தீர்மானங்கள் அனைத்தையும் நிறைவேற்றினோம். கிளிநொச்சியை நகரசபையாக்க வேண்டுமென அப்பொழுது தமிழரசுக்கட்சி உறுப்பினர்கள் வலியுறுத்தினர். பாராளுமன்றத்திலும் அந்த தீர்மானம் அங்கீகரிக்கப்பட்டு விட்டது.  பரந்தனில் இருந்து முறிகண்டி வரையும் வீதியின் இரண்டு பக்கமும் நூறு மீற்றர் அகலத்தில் உள்ளவர்களை கணக்கெடுத்தால் தொளாயிரம் பேர் கூட வரமாட்டார்கள். எப்படி நகரசபையாக்குவதென்பது எனது நிலைப்பாடு. கரைச்சியில் வாக்கெடுப்பு நடந்தபோது நகரசபையாக்க ஆதரவாக 14 வாக்கும், எதிராக 5 வாக்கும் கிடைத்தது. பின்னர், ஆதரவாக வாக்களித்தவர்களிற்கு விளக்கம் சொன்னென். மறுவாரம் நடந்த வாக்களிப்பில் ஏகமனதாக திட்டம் எதிர்க்கப்பட்டது.

அப்போது அமைச்சராக இருந்த திருச்செல்வம் இதில் தலையிட்டு, இரண்டு பக்கத்தையும் தன்னிடம் வருமாறு அழைத்தார். கிளிநொச்சியின் மக்கள் தொகை குறைவு. ஆனால் பரந்த பிரதேசம். தியேட்டர், சந்தை உள்ளிட்ட பல சிறிய நிலமான புதிய நகரசபைக்குள் சென்றுவிட, ஏனைய பகுதிகளுக்கு வருமானம் கிட்டாத நிலையேற்படும். ஆனால் அவர்கள் இதை பொருட்படுத்தவில்லை. அப்போது நான் கூறினேன்- ஒரு வேலை செய்யலாம். நான் செய்யப்போவதில்லை. தண்டவாளத்தை கடந்தால் கரைச்சி பிரதேசசபை. சந்தை, தியேட்டர் என எல்லாவற்றையும் கரைச்சி எல்லைக்கு மாற்றுவேன். ஆனால் நான் அப்படி செய்யப்போவதில்லை என்றேன். சிரித்துவிட்டு, நான் சொல்வது சரியென திருச்செல்வம் சொன்னார். திருச்செல்வம் கிளிநொச்சி பக்கமே வரக்கூடாதென பண்டிதர் க.பொ.இரத்தினம் சொன்னார்.

பின்னர் கரைச்சிக்கும், கிளிநொச்சி நகரசபைக்கும் தலைவராக இருந்த காட்டுகிறேன் என சவால் விட்டு, தேர்தலில் இறங்கினேன். பிரதேசசபைக்குள் நகரசபை அமைந்திருந்தது. அந்த தேர்தலில் போட்டியிட்டு வெற்றிபெற்றேன். ஆனால் பின்னர் விடயம் நீதிமன்றம் போனது. அதில் எனக்கு பதகமான தீர்ப்பு வெளியானது. ஆனந்தசங்கரி எதிர் முருகேசு என்ற வழக்கை இப்போழும் படிக்கலாம்.

இந்தகாலப்பகுதியில் தந்தை செல்வாவும், ஜீ.ஜீ. பொன்னம்பலமும்  இணைந்து கூட்டணியொன்றை ஆரம்பித்தனர். பின்னர் 1970  பாராளுமன்ற தேர்தல் நடந்தது. எங்களிற்கான அப்படியொரு ஆதரவு இருக்குமென நினைக்கவில்லை. இதில் தமிழ் கட்சிகளிற்கிடையில் ஒரு இணக்கப்பாடு எட்டியது. நான் கொங்கிரஸ் சார்பில் களமிறங்கினேன்.

(தொடரும்)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here