‘ஐந்து வருடத்தில் கிளிநொச்சியை உருவாக்கினோம்!’: மு.சந்திரகுமார் எழுதும் அனுபவங்கள்!

இந்தவாரம் தனது அனுபவங்களை எழுதுகிறார் சமத்துவம் சமூகநீதிக்கான மக்க் அமைப்பின் தலைவர் மு.சந்திரகுமார். தமிழீழ விடுதலைக்காக ஆயுதப் போராட்ட வழிமுறையை தெரிவுசெய்து, ஈ.பி.ஆர்.எல்.எவ் அமைப்பில் இணைந்து செயற்பட்ட சந்திரகுமார், இப்பொழுது கிளிநொச்சியின் தவிர்க்கப்பட முடியாத அரசியல் சக்தியாக உருவெடுத்துள்ளார். அவர் தனது அனுபவங்களை தமிழ்பக்க வாசகர்களிற்காக பகிர்ந்து கொள்கிறார்.


1980 ஆம் ஆண்டுக் காலப்பகுதி. அப்போது வடபகுதியில், வவுனியாப் பிரதேசத்தில் காந்தியம் அமைப்பு தீவிரமாக செயற்பட்டு கொண்டிருந்தது. மலையகப் பகுதிகளிலிருந்து இடம்பெயர்ந்து வந்த மக்களை குடியிருத்தி, வடக்கின் எல்லையோரக் கிராமங்களைப் பாதுகாப்பதில் தீவிரமாக ஈடுபட்டிருந்தது காந்தியம். நானும் சக மாணவர்களும் காந்தியம் அமைப்புடன் இணைந்து செயற்பட்டோம். அப்போது எனக்கு 16 வயது.

பின்னர் உயர்தர கல்வி பயிலும் காலகட்டத்தில் ஈ.பி.ஆர்.எல்.எவ்இன் ஈழமாணவர் பொதுமன்றத்துடன் இணைந்து செயற்படத் தொடங்கினேன். 1982 இல் ஈழமாணவர் பொதுமன்றத்தில் ஈழுமையாக ஈடுபட்டு, பாடசாலை பகிஷ்கரிப்பு, ஹர்த்தால், மாணவர் போராட்டங்களில் ஈடுபட தொடங்கினேன்.

பின்னர் 1983 இல் ஈ.பி.ஆர்.எல்.எவ் இன் இராணுவப்பிரிவின் பயிற்சிக்காக இந்தியாவிற்கு அனுப்பப்பட்டேன். நாங்கள் 140 பேர் இந்தியாவின் இமாலய பிரதேசத்தில் பயிற்சி பெற்றோம். பயிற்சியின் பின்னர் 1984 ஏப்ரல் அளவில் இலங்கைக்கு திரும்பி வந்தோம்.

இங்கே வந்தபின், வவுனியா இராணுவப் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டேன். அப்போது நாங்கள் பெரிய ஆயுதபலமுள்ள இயக்கமாக இருக்கவில்லை. இருக்கும் ஆயுதங்களை வைத்து இராணுவத்திற்கு எதிராக பதுங்கித்தாக்குதல்களை நடத்தினோம். அப்படியான மோதல் ஒன்றில் நானும் காயமடைந்தேன். காலிலும், தோளிலும் ஏற்பட்ட காயத்தால் கிட்டத்தட்ட நான்கு மாதங்கள் யாழ்ப்பாண போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றேன்.

இதன்பின் 1986 இல் ஈ.பி.ஆர்.எல்.எவ் தலைமைக்குள் முரண்பாடு எழுந்தது. நாட்டில் நின்று போராடிய போராளிகள், இந்தியாவைத் தளமாக கொண்டியங்கியங்கிய தலைமைக்கிடையில் ஏற்பட்ட முரண்பாடுதான் உடைவிற்கு காரணம். பத்மநாபா, டக்ளஸ் தேவானந்தா தலைமையில் என ஈ.பி.ஆர்.எல்.எவ் இரண்டாகப் பிளவடைந்தது. இந்தக்காலப்பகுதியில் சக இயங்கங்களிற்கிடையில் மோதலும் ஏற்பட்டது. உயிரச்சுறுத்தலான நிலைமையால் நாங்கள் இந்தியா சென்றுவிட்டோம்.
இலங்கை – இந்திய ஒப்பந்தம் கைச்சாத்தான பின், பத்மநாபா அணியைத்தான் இந்தியா முன்னிலைப்படுத்தியது. இதனால் 1988 மாகாணசபை தேர்தலில் அவர்கள் அதிகாரத்தைப் பெற்றனர்.

1988 இல், நான் திரும்பி கொழும்புக்கு வந்தேன். அக்காலப்பகுதியில் ஈ.பி.டி.பியை ஒரு அரசியல்கட்சியாக பதிவுசெய்யும் முயற்சி நடந்தது. அதை நான்தான் பொறுப்பாக நின்று செய்தேன். 1990 இல் பதிவு நடவடிக்கைகள் முழுமையடைந்தன.
1994 இல் நான் பாராளுமன்ற உறுப்பினரானேன். தமிழர் பகுதிகளில் நடக்கும் திட்டமிட்ட சிங்கள குடியேற்றத்தைத் தடுக்க கூடுதல் முக்கியத்துவம் கொடுக்க வேண்டுமென்ற எண்ணம் அதிகமாக எனக்குள் இருந்ததால்,

திருகோணமலையிலிருந்து செயற்பட முடிவெடுத்தேன். அந்தச்சமயத்தில் எல்லைக் கிராமங்களான திரியாய், புல்மோட்டை, கந்தளாய், தம்பலகாமம், சேருவில பகுதிகளில் இருந்த தமிழ்மக்கள் விரட்டப்பட்டு பாதுகாப்பிற்காக நகரத்தை நோக்கி வரத் தொடங்கினர். பின்னர் நகரத்தையும் ஆக்கிரமித்து சிங்கள குடியேற்றங்கள் நடக்க தொடங்கின. திருகோணமலை நகரம் தமிழர்களின் முக்கிய நகரம். இதை இழப்பது தாயகக்கோட்பாட்டை சிதைப்பதாகிவிடும். நகரை காப்பாற்ற வேண்டுமெனச் செயற்படத் தொடங்கினேன்.

திருகோணமலை நகரத்தில் இருந்த கோயில் காணிகள்தான் சிங்கள குடியேற்றங்களிற்கு வாய்ப்பாக அமைந்தது. கோயில் காணிகளை குறிவைத்து சிங்களவர்கள் குடியேற்றங்களைச் செய்தனர். இதைத் தடுக்க, கோயில் காணிகளில் தமிழ் மக்களை குடியிருத்த ஆரம்பித்தேன். அதுபோல லிங்கநகரில் இராணுவத்தின் பிடியிலிருந்த அரசகாணியில் ஒரு தமிழ்க் குடியேற்றத்தை உருவாக்கினோம்.
உப்புவெளிப் பிரதேசத்தில் ஆனந்தபுரி, நித்தியபுரி, தேவநகர் பகுதிகளிலும் குடியேற்றங்களைச் செய்தோம். அப்போது திருகோணமலையில் தலைமையகத்தைக் கொண்டு இயங்கிய வடக்குகிழக்கு மாகாணசபை அதிகாரிகளின் எமது குடியேற்ற வேலைகளை மேற்கொண்டோம். இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கிட்டத்தட்ட இரண்டாயிரம் குடும்பங்களிற்கு அதிகமாக திருகோணமலையில் குடியேற்றியுள்ளோம்.

இன்று திருகோணமலையின் கணிசமான உள்ளூராட்சிமன்றங்களின் அதிகாரம் தமிழர்களிடம் இல்லை. திருகோணமலை நகரசபை, திருகோணமலை நகரமும் பட்டனமும் பிரதேசசபை ஆகியவற்றின் அதிகாரம் தமிழர்களிடம் எஞ்சியுள்ளதற்கு காரணம், அன்று நாம் செய்த குடியேற்றங்கள்தான். அந்த வாக்காளர்கள்தான் தமிழ்ப் பிரதிநிதித்துவத்தை இப்போது காப்பாற்றி வருகிறார்கள்.

எனது இந்த நடவடிக்கைகள் அங்குள்ள சிங்களவர்களில் ஒரு பகுதியினரிடம் எதிர்ப்பை ஏற்படுத்தியது. திருகோணமலையின் சுதந்திரக்கட்சி அமைப்பாளர் மற்றும் கந்தளாயிலிருந்த எம்.டி.எஸ்.குணவர்த்தன (காணியமைச்சராக இருந்து காலமானார்), பிக்குகள் எனக்கெதிராக செயற்பட்டு வந்தனர். எனது அப்பா வடக்கு கிழக்கு மாகாண உதவிக்காணி ஆணையாளராக இருந்தார். அவருடைய ஆலோசனைகளும் உதவிகளும் அரசகாணிகளில் தமிழ் மக்களை குடியிருத்துவதற்கு உதவியாக இருந்தன. அவர் எனக்குப் பெரும் உதவியாக இருந்தார்.


மக்கள் பிரதிநிதிகள், பொதுவாழ்வில் உள்ளவர்களின் அறியப்படாத பக்கங்களை புரட்டும் பகுதி இது. வாழ்வில் நடந்த, அடிக்கடி நினைக்கும், மெய்சிலிர்க்கும் நிகழ்வுகளை இந்த பகுதியில் ஒவ்வொரு வாரமும் உங்களுடன் பகிர்ந்து கொள்ளவுள்ளார்கள் அவர்கள். மனதின் மூலைக்குள் மறைத்து வைத்திருந்த சம்பவங்களை முதன்முறையாக அவர்கள் தமிழ்பக்க வாசகர்களுடன் பேசவுள்ளனர். நீங்கள் இதுவரை கேட்காத கதைகள் இவை.


1998 இல் ஒரு சம்பவம் நடந்தது. அப்போது திருகோணமலை மாவட்ட செயலகத்தில் காணி உத்தியோகத்தராக பீரிஸ் என்பவர் இருந்தார். திருகோணமலையிலுள்ள அரசகாணிகள், கோயில்காணிகளை அடையாளம் கண்டு, சிங்கள குடியேற்றங்கள் செய்வதற்கு பின்னணியில் இருந்தவர் அவர்தான். பீரிஸின் செயற்பாடுகள் பற்றி ஒருமுறை நாடாளுமன்றத்தில் நான் பேசினேன். இது நடந்து ஒருவாரத்திற்குள் புலிகள் பீரிஸைச் சுட்டுவிட்டனர். இந்த கொலையை நான்தான் நடத்தியதாக சிங்களப் பத்திரிகைகள் குறிப்பிட்டன.

இதையடுத்து, அனுராதபுர சந்தியிலிருந்து எனது அலுவலகத்தை நோக்கி பெரிய ஊர்வலமொன்றை பிக்குகள், சுதந்திரக்கட்சி அமைப்பாளர் சேர்ந்து நடத்தினார்கள்.
இதற்கு அடுத்தடுத்த வாரம் -1998 ஒக்ரோபர் 10. குடியமர்த்திய மக்களிற்கான அடிப்படை வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்கும் பணிகளிற்காக ஒவ்வொரு நாளும் எனது அலுவலகத்தில் இருந்து ஐந்தாறு இளைஞர்கள் போவார்கள். என்.சி றோட்டில் ஒரு இராணுவ காவலரண் இருந்தது. இவர்கள் போய்வருவதை ஒவ்வொரு நாளும் பார்த்து கொண்டுதான் இருப்பார்கள். அன்று இளைஞர்களை மறித்து, அடையாள அட்டையை வாங்கி கசக்கி எறிந்துவிட்டு, சுடத் தயாரானார்கள். நிலைமையைப் புரிந்து கொண்ட இளைஞர்கள் சைக்கிளைப் போட்டுவிட்டு அலுவலகத்திற்கு ஓடிவந்துவிட்டனர். இராணுவம் சுட்டபடி அவர்களைத் துரத்தி வந்தது.

“புலிகளைப் பிடித்தோம். அவர்கள் தப்பிப்போய் சந்திரகுமாரின் அலுவலகத்திற்குள் புகுந்து விட்டனர்“ என்று இராணுவம் மற்ற இடங்களிற்கு தகவல் கொடுக்க, எனது அலுவலகத்தை முப்படையினருடன, பொலிசாருமாகச் சேர்ந்து சுற்றிவளைத்து விட்டனர். எமது பாதுகாப்பிற்காக உயரமான மதில் கட்டியிருந்தோம்.

சிறிதுநேரத்தில் நாலாபக்கத்திலிருந்தும் அலுவலகத்தை நோக்கி தாக்குதலை ஆரம்பித்தனர் முப்படையினர். கைக்குண்டு எறிந்து துப்பாக்கியால் சுட்டனர். அலுவலக கண்ணாடிகள், ஓடுகள் உடைந்து விழுந்தன. நான் தரையில் படுத்திருந்தபடி, சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகரைத் தொலைபேசியில் தொடர்பு கொண்டு, “எனக்கு ஏதும் நடந்தால் நீங்கள்தான் பொறுப்பு“ என சொன்னேன். அவர் உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்து நிலைமையை கட்டுப்படுத்தினார்.

திருகோணமலை நகரத்திற்குள் நடந்த பெரிய தாக்குதல்களில் ஒன்று இது.
“செம்மணிப் புதை குழி விவகாரம் பற்றி சர்வதேச மன்னிப்புச் சபை, மனித உரிமை அமைப்புகளால் தெரிவிக்கப்பட்ட கருத்துகளை அரசு அலட்சியம் செய்கிறது” என்ற தலைப்பில் 01. டிசம்பர் 1998 அன்று பாராளுமன்றத்தில் உரையாற்றினேன். இதுவும் எனக்கு நெருக்கடியை ஏற்படுத்தியது.

இப்படியான பல நெருக்கடிகள் எனக்கு தொடர்ச்சியாக ஏற்பட்டதால் 2000 இல் நாட்டை விட்டு வெளியேறி பிரித்தானியாவில் வாழ்ந்தேன். அங்கிருந்தாலும் எனது அரசியல் செயற்பாடுகள் தொடர்ந்தபடிதான் இருந்தது. பின்னர் யுத்தம் முடிந்ததும் இலங்கைக்குத் திரும்பி வந்தேன். அப்பொழுது வன்னியிலிருந்து இடம்பெயர்ந்த மக்கள் செட்டிக்குளம் முகாம்களில் தங்கவைக்கப்பட்டிருந்தனர். கொழும்பிலுள்ள வர்த்தக சங்கங்களுடன் பேசி 35 வரையான லொறிகளில் அத்தியாவசியப் பொருட்களை கொண்டு சென்று வழங்கினோம். அந்த மக்கள் பட்ட துயரத்தை பார்த்த அந்த சமயத்தில் முடிவெடுத்தேன், யுத்தத்தால் பாதிக்கப்பட்ட பகுதியிலேயே பணியாற்றுவதென. கிளிநொச்சி எனது சொந்த மாவட்டமும் கூட. அதனால் கிளிநொச்சியிலிருந்து பணியாற்ற முடிவெடுத்தேன்.

2010 நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட்டு வென்றதும், நாடாளுமன்றகுழுக்களின் பிரதிதலைவர் என்ற பதவி கிடைத்தது. சாதாரண எம்.பியாக இருந்து மக்கள் பணி செய்வதைவிட, இது எனக்கு கூடுதல் அனுகூலத்தை தந்தது.

கிளிநொச்சியில் மீள்குடியேற்றத்தை ஆரம்பித்தபோது பூச்சிய நிலையிலேயே எல்லாம் இருந்தன. உட்கட்டுமானம், மக்களுக்கான அடிப்படைத் தேவைகள், வாழ்வாதாரம் என எல்லாவற்றையும் ஆரம்பத்திலிருந்தே செய்ய வேண்டியிருந்தது. நன்றாகத் திட்டமிட்டு ஐந்து வருடத்தில் இன்றைய கிளிநொச்சியை உருவாக்கினோம். பின்தங்கிய பகுதிகளை இலக்கு வைத்து அவற்றை முன்னிலைப்படுத்தி அபிவிருத்தி வேலைகளைச் செய்தோம். இது மிகப்பெரிய திருப்தி எனக்கு.

இதைவிட குறிப்பிட வேண்டிய இன்னொரு விடயமுண்டு. விடுதலைப்புலிகள் ஒரு பல்கலைகழகம் அமைக்கும் நோக்கத்துடன் சில கட்டிடங்களை அறிவியல் நகர்ப்பகுதியில் அமைத்திருந்தனர். யுத்தம் முடிந்ததும் இராணுவம் அதை எடுத்துக்கொண்டு விட்டது. ஏறக்குறைய 600 ஏக்கர் நிலம். அந்தக் காணியை விடுவித்து, பொறியில்பீடத்தையும் விவசாயபீடத்தையும் அமைக்க வேண்டுமென அரசிடம் வலியுறுத்த தொடங்கியிருந்தோம். அப்போது எஸ்.பி.திசாநாயக்க உயர்கல்வி அமைச்சராக இருந்தார். அவர் யாழ்ப்பாணம் வந்தபோது, அவரைக் கிளிநொச்சிக்கு அழைத்து சென்று அந்தக் காணியைக் காண்பிக்க முயன்றேன்.

ஆனால் எங்கள் இருவரையும் இராணுவம் உள்ளே செல்ல அனுமதிக்கவில்லை.
ஒருமுறை அப்போதைய ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸவைச் சந்தித்தபோது, கூடவே கோத்தபாயவும் இருந்தார். இந்தக் காணியைப்பற்றிப் பேசினோம். “கோத்தபாய அந்த காணியை விடமாட்டார். அவருக்கு அது தேவையாம். அதில் இராணுவ அக்கடமி ஒன்றை ஆரம்பிக்கப் போகிறாராம்“ என மகிந்த சொன்னார். எஸ்.பியும் முயன்றும் முடியவில்லை. அந்தக் காணியை விடுவிக்க அரசிற்கு விருப்பமிருக்கவில்லை.
“எனக்குத் தெரியும் கிளிநொச்சியில் என்ன செய்கிறாய் என. உன்னைச் சுற்றியிருப்பவர்கள் எல்லோரும் எல்.ரீ.ரீயில் இருந்தவர்கள். இந்தக் காணி விசயமாகத் தயவுசெய்து இனி என்னுடன் கதைக்ககூடாது“ என கோத்தபாய கோபமாகச் சொன்னார்.

அந்த சமயத்தில் கொக்காவில் கோபுரத்தை திறக்க மகிந்த ராஜபக்ச வந்தார். அந்த கூட்டத்தை பெரியளவில் நான் ஏற்பாடு செய்திருந்தேன். அங்கு வந்த மகிந்த, நிறைய சனம் திரண்டிருந்ததைப் பார்த்ததும் பூரித்துப் போனார். கிளிநொச்சிக்கு என்ன வேண்டும் என என்னிடம் கேட்டார். “யாழ்ப்பாண பல்கலைகழகத்திற்கு பொறியியல்பீடம் தேவை. விவசாய பீடத்துக்கும் காணி தேவை. அறிவியல் நகர் காணியை ஆமியிடமிருந்து எடுத்து, அங்கு அமைக்கலாம்“ என்றேன். மேடையில் ஏறிய மகிந்த, பொறியியல்பீட அறிவிப்பையும், அறிவியல் நகர விடுவிப்பையும் அறிவித்தார். அடுத்தநாளே இராணுவம் இடத்தை விட்டு அகலத் தொடங்கியது.

இப்பொழுது அறிவியல் நகரில் பொறியியல்பீடம் உருவாக்கப்பட்டுள்ளது. விவசாய பீடமும் செயற்படுகிறது. இது ஒரு சாதனைதான். 1972 இல் இருந்து யாழ்ப்பாண பல்கலைகழகத்திற்கு பொறியியல்பீடம் தேவையென்ற கோரிக்கை இருந்து வந்தது. அதை நிறைவேற்றினேன். மகிந்தவை வெள்ளையடிப்பதற்காக இதைச் சொல்லவில்லை. எமக்கு தேவையானதை நெருக்கடியான நிலையிலும் எப்படிப் பெற்றோம் என்பதையே குறிப்பிடுகிறேன்.

கிளிநொச்சி மிகமோசமாகப் பாதிக்கப்பட்டு, வறிய நிலையிலுள்ள மக்களையும் இடம்பெயர்ந்து வந்தவர்களையும் அதிகமாகக் கொண்ட மாவட்டம். அதனால் மக்களின் அன்றாடப் பிரச்சனைகளிற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட வேண்டும். வேலைவாய்ப்பு, அபிவிருத்தி இரண்டிற்கும் கூடுதல் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் எனச் செயற்பட்டேன். பின்தங்கிய நிலையில் இருந்த இடங்களில் புதிய பாடசாலைகளை உருவாக்கினேன். அம்பாள்குளம் விவேகானந்த வித்தியாலயம், மலையாளபுரம் திருவள்ளுவர் பாடசாலை, மற்றும் கிருஸ்ணபுரம், சிவபுரம் போன்ற இடங்களிலும் புதிய பாடசாலைகளை உருவாக்கினோம்.

அனைத்துப் பாடசாலைகளுக்கும் தேவையான பௌதீக வளங்களை நிறைவு செய்வதற்கும் பல பாடசாலைகளை தரம் உயர்த்துவதற்கும் உழைத்திருக்கிறேன்.
இதனால், அரசியல் தீர்வைப் பேசாமல், அபிவிருத்தி மாயையை உருவாக்கி அரசை நியாயப்படுத்துவதாக எதிர்தரப்பு என் மீது சேறடிக்க முயன்றது. அது பொய். அதற்கு ஒரு உதாரணம், 13ம் திருத்தத்தின் சில அதிகாரங்களை அகற்ற மகிந்தவின் ஆதரவுடன் பசில் உள்ளிட்ட சில மூத்த அமைச்சர்கள் முயன்றார்கள். இதற்கெதிராக எம்.பிக்களிடம் கையெழுத்து வாங்கினேன். இந்த முயற்சியில் டக்ளஸ் தேவானந்தாவிற்கும் பங்குண்டு. பெரும்பாலானவர்கள் கையெழுத்து வைத்தனர்.

சிறுபான்மையின பிரதிநிதிகளில் ரிசாட் பதியுதீன் வைக்கவில்லை. அவரது கட்சியைச் சேர்ந்த ஹூனைஸ் பாரூக் வைத்தார். பின்னர் என்னைத் தேடிவந்து, “ரிசாட் பேசுகிறார்“ எனக் கூறி, கையெழுத்தை அழித்துவிட்டு சென்றார். பெரும்பாலான எம்.பிக்களின் கையெழுத்தைக் கொடுத்ததால், அந்த முயற்சியிலிருந்து மகிந்த பின்வாங்கினார்.

இந்த விவகாரத்தைப் பேச ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் கட்சித் தலைவர்களை மகிந்த அழைத்திருந்தார். டக்ளஸ் தேவானந்தாவுடன் நானும் சென்றிருந்தேன். விமல் வீரவன்சவும், சம்பிக்க ரணவக்கவும் 13 வது திருத்தத்திற்கு எதிராக கடுமையாக பேசினார்கள். அதில் கைவைக்ககூடாதென நாங்கள் வாதிட்டோம். வாசுதேவ, டியூ குணசேகர உள்ளிட்ட இடதுசாரிகளும் எமக்கு ஆதரவாகப் பேசினார்கள். நிலைமை சிக்கலாகுவதை அவதானித்த மகிந்த, இந்த விடயத்தை தற்போது கைவிடுவோம் என்றார். இதைச் சொல்லிவிட்டு, என்னைப்பார்த்து ‘kilinochchi man. you now happy?’ எனக் கேட்டார்.

இதற்கு முதல்நாள் இரவு பசிலின் அலுவலகத்தில் ஒரு கலந்துரையாடல் நடந்தது. எல்லோருடனும் பேசி சமாளிக்கும்படி பசிலுக்கு மகிந்ததான் ஆலோசனை சொல்லியிருந்தார். நிமல் சிறிபாலடி சில்வா மற்றும் சிறுபான்மை இனங்களின் கட்சிகளைச் சேர்ந்த சிவலிங்கம், பஸீர் சேகுதாவுத் உள்ளிட்ட பெரும்பாலான முக்கியஸ்தர்கள் வந்திருந்தார்கள். 13வது திருத்தத்தின் அதிகாரங்களை குறைப்பதற்கு எதிராக நான் மிகக்கடுமையாகப் பேசினேன். அது மாகாணசபை தேர்தல் நடக்கவிருந்த சமயம்.

“இதை நீங்கள் செய்தால் நாங்கள் தோற்போம். எங்களை தோற்கடிக்க முயல்கிறீர்கள். நாங்கள் அதிகாரம் தேவையென கேட்கும் நேரத்தில், 13 பிளஸ் பற்றி ஜனாதிபதி பேசிவிட்டு, 13 மைனஸ்க்கு அலுவல் பார்க்கிறீர்கள்“ என்றேன். பசிலுக்கு முன்னால் மற்றவர்கள் பேசத் தயங்கிக்கொண்டிருக்க, நான் கடுமையாகப் பேசினேன். பசிலுக்குக் கடும் கோபம். “நீ ரேன்அவுட் செய்துவிட்டாய். இனி நான் செய்ய ஒன்றுமில்லை. பிரசிடன்ற்றிடமே விட்டுவிடுகிறேன்“ என்றுவிட்டு போய்விட்டார். இதை மகிந்தவிடம் பசில் சொல்லியிருக்க வேண்டும். அதனால்தான் கூட்டத்தில் மகிந்த அப்படிச் சொன்னார். அவர் அப்படிச் சொல்ல நான் சிரித்தேன். மகிந்த பதிலுக்கு ‘I know who are the peoples arround with you. I have lot of report’ என்றார். ‘sir.. KP also with you’ என்றேன். பக்கத்திலிருந்த வாசுதேவ என் தொடையில் கிள்ளி, “பிரசிடன்ற்றுடன் இப்படியா கதைப்பது“ எனக் குசுகுசுத்தார்.

“நாமல் ராஜபக்ச வன்னிக்கு வரும்போது யாருடன் வேலை செய்கிறார்? முன்னாள் புலிகளுடன்தான் வேலை செய்கிறார். இந்தச் சமூகத்தில் இருந்துதான் புலிகள் உருவானார்கள். அவர்களை அரசு விடுதலை செய்துவிட்டது. இனி அவர்களும் சமூகத்தின் அங்கம். அவர்களைத் தவிர்க்கக் கூடாது“ எனப் புரியவைத்தேன்.

சில காலம் தேசிய கீதம் தொடர்பான மொழிப்பிரச்சினை இருந்தது. நான் கலந்து கொள்ளும் நிகழ்வுகளில் தமிழில் தேசியகீதம் ஒலிக்க வசதியாக, அதை ஒலிநாடாவாக வைத்திருந்தேன். நிகழ்விற்கு கொண்டு செல்வோம். ஒருமுறை ஜெயபுரத்தில் ஒரு நிகழ்வு நடந்தது. நான் கொடுத்த ஒலிநாடாவை வைத்துவிட்டு, இராணுவத்தினர் சிங்களத்தில் தேசியகீதம் ஒலிக்கவிட்டனர். உடனே அதை நிறுத்த செய்து, தமிழில் ஒலிக்கவிட்டேன். இப்படியான நிகழ்வுகளால் கோத்தபாயவிற்கு என்னில் கோபமிருந்தது.

பரந்தன் சிவபுரம், தருமபுரம் உழவனூர், நாதன் திட்டம் போன்ற இடங்களில் உள்ள மத்தியவகுப்புத்திட்டக் காணிகளை அங்கே குடியிருந்த மக்களுக்கு வழங்கும் பணிகளை மேற்கொண்டு கொண்டிருந்தோம். 40 வருடத்துக்கு முன்பு மத்தியவகுப்புத்திட்டத்தில் இந்தக்காணியை அரசாங்கத்திடம் இருந்து பெற்றவர்கள், யுத்தத்தின் காரணமாக இடம்பெயர்ந்து வெளிநாடு சென்றுவிட்டனர். பலர் இன்று உயிருடனேயே இல்லை. ஒன்றிரண்டு பேர் மட்டும் இங்கே இருந்தனர். ஆகவே 30 ஆண்டுக்கு மேலாக பராமரிப்பில்லாமல் இருந்த காணிகளில் குடியேறி வசித்து வந்த காணியற்ற மக்களுக்கு அந்தக் காணிகளை வழங்க வேண்டியிருந்தது. அப்போது நீதியமைச்சராக இருந்த றவுப் ஹக்கீம் ஆட்சியுரிமைச் சட்டத்தை நிறைவேற்றுவற்கான பிரேரணையை 2014 ஓகஸ்ட் மாதத்தில் நாடாளுமன்றத்தில் கொண்டு வந்தார். கிழக்கு மாகாணத்தில் முஸ்லிம் மக்களின் காணிகளை மீளப் பெற்றுக்கொள்வதற்கு வசதியாக இந்தச் சட்டமூலத்தை உருவாக்குவதற்கு ஹக்கீம் முயன்றார். இதனைப் புரிந்து கொள்ளாத தமிழ்த்தேசியக் கூட்டமைப்பினர் இதனை ஹக்கீமுடன் சேர்ந்து ஆதரித்தனர். நான் எதிர்த்தேன். இதனால் எனக்கும் சுமந்திரனுக்கும் இடையில் கடுமையான வாதப்பிரதிவாதங்கள் நடந்தன. அன்றைய ஆட்சி கலைக்கப்படும்வரை அந்தச் சட்டத்தை நிறைவேற்றுவதற்கு நான் விடவில்லை.

இதற்கிடையில் ஆயிரத்துக்கு மேற்பட்ட குடும்பங்களின் காணிப் பிரச்சினைக்குத் தீர்வு கண்டு விட்டோம். 2016 ஏப்ரலில் புதிய ஆட்சி வந்த பிறகு இந்தச் சட்டம் நிறைவேற்றப்பட்டது. இதனால், வன்னியின் ஏனைய மாவட்டங்களில் உள்ள மூவாயிரத்துக்கும் அதிகமான மத்திய வகுப்புத் திட்டக் காணிகளில் குடியிருக்கும் மக்களின் பிரச்சினை தீர்க்கப்படாமலே இருக்கிறது.

2015 இல் நான் புதிய அரசியல் நிலைப்பாட்டுக்கு செல்ல வேண்டி ஏற்பட்டது. புதிதாக உருவாகியிருக்கும் அரசியற் சூழலும் மக்களுடைய அரசியல் தேவையும் அவர்களுடைய விருப்பமும் என்னை மாற்றியமைத்தன. முன்பு நான் ஈ.பி.டி.பி அமைப்பில் இருந்தாலும், எனது செயற்பாடு வித்தியாசமானதாக இருந்ததை அறிவீர்கள். எனது செயற்பாடுகளில் கட்சிக்குள்ளும் நிறைய எதிர்ப்பு இருந்தது. மக்கள் நலன்சார்ந்த அடிப்படையில் செயற்பட்டேன். இதனால் மக்கள் என்னை கட்சியின் அடையாளத்தோடு பார்க்கவில்லை. இருந்தாலும் தேர்தல் சமயத்தில் நான் அந்த அமைப்பின் சின்னத்துடன் மக்கள் மத்தியில் செல்ல, அதை மக்களால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. மக்களின் அபிப்பிராயத்திற்கு மதிப்பளித்து, ஈ.பி.டி.பியிலிருந்து வெளியேறினேன்.

இப்பொழுது புதியதொரு சூழலில் கிளிநொச்சியிலும் யாழ்ப்பாண மாவட்டத்தின் பின்தங்கிய பிரதேசங்களிலும் மக்கள் பணியாற்றி வருகிறேன். புதிதாக சமத்துவம், சமூகநீதிக்கான மக்கள் அமைப்பை உருவாக்கியுள்ளேன். கிளிநொச்சி முழுவதும் மக்களை சந்தித்து வருகிறேன். யாழ்ப்பாணத்திலும் சந்திப்புகளும் வேலைத்திட்டங்களும் நடக்கின்றன. இந்த மக்களிற்காகத்தான் இளம்வயதில் போராளியானோம். இப்போதும் அவர்களிற்காக பணி செய்து கொண்டிருக்கிறேன் என்பதே பெரிய திருப்திதான். என்னுடைய கனவு, தமிழ் பேசும் சமூக மக்கள் விடுதலை பெற்று, அனைத்து உரிமையோடும் மகிழ்ச்சியான வாழ்க்கையை வாழ வேண்டும் என்பதே. நாம் நேர்மையாக போராளிகளின் வாழ்வைப்போல ஒன்றிணைந்து செயற்பட்டால் இந்தக் கனவை நிஜமாக்கலாம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here