மான் வேட்டை: சல்மான் கான் குற்றவாளி என தீர்ப்பு

மானை வேட்டையாடிய வழக்கில், இந்தி திரைப்பட நடிகர் சல்மான் கான் குற்றவாளி என்று தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. கடந்த 20 ஆண்டுகளாக நடைபெற்று வந்த இந்த வழக்கில் ஜோத்பூர் நீதமன்றம் இந்த தீர்ப்பை வழங்கியுள்ளது.

தீர்ப்பினையடுத்து சல்மான் கான், ஒன்றிலிருந்து ஆறு ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனை எதிர்த்து அவர் மேல் முறையீடும் செய்யலாம்.

ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரில் அரிய வகை மானான ‘கலைமானை’ வேட்டையாடியதாக சல்மான் கானுடன் மேலும் 4 நடிகர் நடிகைகள் மீது 1998ஆம் ஆண்டு வழக்கு பதிவு செய்யப்பட்டது. கலைமான் என்பது பாதுகாக்கப்பட்ட ஒரு மான் இனமாகும்.

சல்மான் கானுடன் நடிகர் சயிஃப் அலி கான் மற்றும் நடிகைகள் சோனாலி பிந்த்ரே, தபு மற்றும் நீலம் ஆகியோருடைய பெயர்களும் இருந்தன.

சல்மான் கானை குற்றவாளி என்று தீர்ப்பளித்துள்ள நீதிமன்றம், மற்ற நால்வரையும் விடுவித்துள்ளது.

‘ஹம் சாத் ஹெய்ன் ஹெய்ன்’ என்ற திரைப்படத்தின் படப்பிடிப்பிற்காக ஜோத்பூர் சென்றபோது இந்த சம்பவம் நடைபெற்றதாக என்று கூறப்படுகிறது.

தீர்ப்பு வரும் முன்பு பேசிய சல்மான் கானின் வழக்கறிஞர் ஹஸ்திமல், இது பொய் வழக்கு என்று தெரிவித்தார்.

2016ஆம் ஆண்டு ஜூலை மாதம், இதே போன்ற மற்றொரு வழக்கில் இருந்து அவர் விடுதலை ஆனார்.

முன்னதாக, 2015-ஆம் ஆண்டில் சல்மான்கான், நடைபாதைவாசி ஒருவர் மீது காரை ஓட்டி அவரைக் கொன்றுவிட்டு தப்பியோடியதாக குற்றம் சாட்டப்பட்ட வழக்கில் தண்டனை பெற்ற சல்மான், பின்னர் மேல் முறையீட்டில் விடுதலை ஆனார் என்பது குறிப்பிடத்தக்கது.

2016ல், தான் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்ட பெண் போல் உணருவதாக பேசி பெரும் சர்ச்சையில் சிக்கினார் சல்மான். அதே நேர்காணலில் சல்மான கான் தனக்கு உள்ள சிகரெட், மது, காபி ஆகிய கெட்ட பழக்கங்களை தன்னால் விட முடியும் ஆனால் பெண் துணையை மட்டும் விடுவது கடினம் எனத் தெரிவித்தது சமூக வலைதளங்களில் பரபரப்பை ஏற்படுத்தியது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here