“நான் வரைபடம் தயாரித்தேன்… மிளகாய் தூள் தூவிவிட்டு இராணுவத்திடமிருந்து பிரபாகரன் தப்பித்தார்“- சிவாஜிலிங்கம் சொல்லும் ‘பரபரப்பு’ நிமிடங்கள்

இந்தவாரம் அனுபவங்களை பேசுகிறார் வடமாகாணசபை உறுப்பினர் சிவாஜிலிங்கம். தமிழீழ விடுதலை இயக்கத்தின் (TELO) ரெலோவின் முன்னணி போராளி, நீண்ட அரசியல் வாழ்வுள்ளவர். 1970களின் தொடக்கத்திலிருந்து இடையறாத போராட்ட வாழ்வை கொண்டவர். இவரளவிற்கு போராட்டமே வாழ்க்கையான அரசியல் தலைவர்கள் யாரும் தற்போது தமிழர்களிடம் கிடையாது. இரண்டுமுறை நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தவர். ஜனாதிபதி தேர்தலில் குருணாகலில் மகிந்தவிற்கு போட்டியாக பாராளுமன்ற தேர்தலில் களமிறங்கியது, செங்கோலில் எப்பொழுதும் ஒரு கண்ணை வைத்திருப்பவர் என ஊடகங்களிற்கு அடிக்கடி தீனியாகுபவர். காணாமல் போனவர்கள், காணி விடுவிப்பு உள்ளிட்ட எந்த பிரச்சனையானாலும் 1970களில் போராடிய உற்சாகத்துடன் இன்றும் போராட கிளம்பி விடுபவர். அவரது அனுபவங்களை தமிழ்பக்க வாசகர்களுடன் பகிர்ந்து கொள்கிறார்.

மகாலத்தில் எல்லா போராட்டங்களிலும் முதல் ஆளாக என்னை நீங்கள் பார்க்கிறீர்கள். இது இன்று நேற்று ஏற்பட்ட பழக்கமல்ல. அரைக்காற்சட்டை பையனாக இருந்த காலத்தில் தொடங்கியது. இன்றுவரை சலிப்போ, ஓய்வோ இல்லாமல் அதை தொடர்கிறேன். போராடிக் கொண்டிருப்பதே என் கடன். ஒடுக்கப்பட்ட தமிழர்களின் உரிமைக்குரல் எழுப்பப்படும் சமயங்களிலெல்லாம் சிவாஜிலிங்கமும் முதல் ஆளாக அங்கு நிற்பேன்.

1971 இல் என் அரைக்காற்சட்டை பருவம். எங்கள் ஊர் வல்லெட்டித்துறையில் நான்கு தமிழ் அரசியல்கட்சிகள் இணைந்து ஒற்றுமை மாநாட்டை நடத்தின. தமிழர்களிற்குள் இருந்த பிரிவு முடிந்து விட்டதென அப்போது வெடி கொளுத்தியவர்களில் நானும் ஒருவன். அந்த பருவத்திலேயே போராட்டங்களிற்கு செல்ல தொடங்கி விட்டேன். தமிழ் மக்களின் துயரங்களை சிறுவயதிலிருந்தே பார்த்து வந்ததால் இந்த இயல்பு ஏற்பட்டிருக்கலாம்.

சிறிமாவோவின் ஆட்சிக்காலத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட தரப்படுத்தலிற்கு எதிராக யாழ்.பரமேஸ்வரா கல்லூரியை மூடியது, நூலக திறப்பிற்கு எதிரான போராட்டம் போன்றவற்றில் பாடசாலைக்காலத்திலேயே ஈடுபட்டேன்.

1972 இல் குடியரசு அரசியல் யாப்பு உருவாக்கப்பட்டது. இது தமிழர்களின் உரிமைகளை பறித்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, எமது பாடசாலையில் ஏற்றப்பட்டிருந்த தேசியக்கொடியை அறுத்தெறிந்து போராடினோம். நாங்கள்தான் கொடியை அறுத்தோம் என்பது அதிபரிற்கு தெரிந்து விட்டது. அந்த நடவடிக்கையில் ஈடுபட்ட என்னையும், நண்பர்களையும் அழைத்த அதிபர், எம்மை பாடசாலையை விட்டே நீக்க முயற்சித்தார். ஆனாலும், வகுப்பாசிரியரின் தலையீட்டால் அதிபர் முடிவை மாற்றிக் கொண்டார். சிறு தண்டனையுடன் தப்பித்தோம்.

அகிம்சை போராட்டத்தால் தீர்வை பெற முடியாதென்ற பொது அபிப்பிராயம் படிப்படியாக ஏற்பட தொடங்கிய காலகட்டம். எமது ஊரான வல்வெட்டித்துறையில் உள்ள மைதானத்தில் தமிழீழ விடுதலை இயக்கத்தினர் (TELO) பயிற்சி பெறுவதை பார்த்தேன். பயிற்சி சமயத்தில் தவறாமல் போக தொடங்கினேன். அவர்கள் நடத்திய அரசியல் வகுப்புக்களிலும் கலந்து கொண்டேன். அந்த வகுப்புகளிற்கு சென்ற பின், தமிழீழ விடுதலை இயக்கத்தில் இணைய வேண்டுமென்ற ஆவல் ஏற்பட்டது. நானும் இயக்கத்தின் அங்கத்தவராக முயன்றேன். அப்போது நான் சிறுவன். அதை காரணம் காட்டி, என்னை திருப்பி அனுப்பி விட்டனர். பின்னர் வழக்கம் போல நண்பர்களாக எதிர்ப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்தோம். இதன்போது பொலிசிடம் சிக்கி முதுகுத் தோல் உரிந்த சம்பவங்கள் எல்லாம் நடந்தன.

ஜேவிபியின் கலவரம் உருவான சமயத்தில், இலங்கையின் பல பகுதிகளிலுமிருந்த இராணுவம் தெற்கிற்கு அனுப்பப்பட்டது. இந்த சந்தர்ப்பத்தில் வடக்கு கிழக்கை கைப்பற்ற தமிழீழ விடுதலை இயக்கம் திட்டமிட்டது. குண்டுகளை தயாரிக்க தொடங்கினார்கள். இந்த செய்தி எல்லா இடமும் பரவியது. எனக்கும் இந்த செய்தி அதிக ஈர்ப்பை ஏற்படுத்தியது. 1973 இல் தமிழீழ விடுதலை இயக்கம்- ரெலோ வில் இணைந்தேன்.


மக்கள் பிரதிநிதிகள், பொதுவாழ்வில் உள்ளவர்களின் அறியப்படாத பக்கங்களை புரட்டும் பகுதி இது. வாழ்வில் நடந்த, அடிக்கடி நினைக்கும், மெய்சிலிர்க்கும் நிகழ்வுகளை இந்த பகுதியில் ஒவ்வொரு வாரமும் உங்களுடன் பகிர்ந்து கொள்ளவுள்ளார்கள் அவர்கள். மனதின் மூலைக்குள் மறைத்து வைத்திருந்த சம்பவங்களை முதன்முறையாக அவர்கள் தமிழ்பக்க வாசகர்களுடன் பேசவுள்ளனர். நீங்கள் இதுவரை கேட்காத கதைகள் இவை.


பிரபாகரனும் வல்வெட்டித்துறை. ரெலோ தலைமையான தங்கத்துரை, குட்டிமணியுடன் நெருக்கமாக பழகியவர். ரெலோவிலும் சிறிதுகாலம் செயற்பட்டவர். அப்போதுதான் பிரபாகரனின் நட்பு கிடைத்தது. இயக்கங்களிற்குள் நிறைய முரண்பாடுகள் ஏற்பட்டபோதும், எமக்கிடையில் எந்த முரண்பாடும் ஏற்பட்டதில்லை.
ரெலோ செயற்பாட்டாளராக இருந்த காலத்தில் எனக்கு அரச பொறியியல் கூட்டுதாபனத்தின் மேற்பார்வையாளராக வேலை கிடைத்தது. மிகிந்தலையில் பணி. 1977 இனகலவரத்தின் போது, அங்குதான் இருந்தேன். அரச பொறியியல் கூட்டுத்தாபனத்தில் தமிழர்கள் பணிபுரிவதை அறிந்த சிங்களவர்கள், அலுவலகத்தை சுற்றிவளைத்தனர். அவர்களிடமிருந்து தப்பித்து மிகிந்தலை காட்டிற்குள் ஓடிஒளிந்தோம். சிலநாளின் பின் ஊருக்கு திரும்பி வந்தேன். பின்னர் கொழும்பில் வேலை கிடைத்தது.

தமிழர் விடுதலை கூட்டணியின் பொத்துவில் எம்.பி கனகரத்தினம் அரச தரப்பிற்கு அப்போது மாறியிருந்தார். பிரபாகரனும், உமாமகேஸ்வரனும் இணைந்து கனகரத்தினத்தை, அவரது கொழும்பு வீட்டில் வைத்தே கொலை செய்ய திட்டம் போட்டனர். இதற்கான தகவல்களை திரட்டும் பணி எனக்கு தரப்பட்டது. படவரைஞராக எனக்கு பரிச்சயமும் இருந்தது. அதிக பாதுகாப்புள்ள அந்த பகுதியின் விபரங்களை அறிந்து, வரைபடம் தயாரித்து அவர்களிடம் கொடுத்தேன். அந்த வரைபடத்தின் உதவியுடன் பிரபாகரனும், உமாமகேஸ்வரனும் இணைந்து கனகரத்தினத்தை சுட்டுவிட்டு, மோப்பநாயிடம் இருந்து தப்பிக்க மிளகாய்த்தூளை தூவிவிட்டு ஓடிவிட்டனர். மிளகாய்த்தூளை சுற்றியிருந்த பேப்பர் துண்டை பொலிசார் கைப்பற்றினர். அதில் இலங்கை ஒலிபரப்பு கூட்டுத்தாபனத்தில் பணியாற்றிய ஒருவருடைய முகவரி இருந்தது. அவரை கைது செய்தனர். பின்னர் அவர் தப்பித்தார்.

முதலாவது தகவல் திரட்டை சரியாக செய்ததால், இன்னொரு பெரிய பணி தரப்பட்டது. மக்கள் வங்கியின் பணம் கையகப்படுத்தப்பட திட்டமிடப்பட்டது. மக்கள் வங்கி வாகனத்தை வழிமறித்து பணத்தை கைப்பற்ற வேண்டும். வாகன, பாதுகாப்பு விபரங்களை திரட்டிக் கொடுத்தேன். திட்டத்தின்படி வாகனம் வழிமறிக்கப்பட்டு, 81 இலட்சம் ரூபா கைப்பற்றப்பட்டது. இது நடந்து 11ம் நாள் மணற்காட்டில் வைத்து குட்டிமணி, தங்கத்துரை, தேவன் ஆகியோர் கைதானார்கள். எந்த சமயத்திலும் நானும் கைதாகலாம். அப்போதுதான் பிரபாகரனிடமிருந்து ஒரு செய்தி வந்தது. அவரையும் இராணுவம் வலைவீசி தேடிக் கொண்டிருந்தது. தன்னை எப்படியாவது காப்பாற்றி இந்தியாவிற்கு அனுப்பி வைக்குமாறு கேட்டிருந்தார். இந்த செய்தி வந்தபோது நான் கொழும்பில்.

உடனடியாக புகையிரதத்தில் ஏறினேன். அப்போது யாழ்ப்பாண பொதுநூலகம் எரிக்கப்பட்டதால் பதற்ற நிலை உருவாகியிருந்தது. இதனால் புகைவண்டி மூலம் பொல்காவலை வரை வந்தேன். பொல்காவலை நிலையத்திலிருந்து யாழ்ப்பாணம் செல்லும் புகைவண்டி வெறிச்சோடியிருந்தது. தலைமன்னார் செல்லலாமென நினைத்தேன். ஆனால் அது அதிக தூரத்தில் இருப்பதால் யாழ்ப்பாண புகையிரதத்திலேயே ஏறினேன். மன்னார் புகையிரதம் புறப்பட்டது. சிறிதுநேரத்தில் நாற்பது, ஐம்பது சிங்கள காடையர்கள் கத்திக்கொண்டு வந்தனர். யாழ்ப்பாண புகையிரதத்திற்குள் ஏறி பிரயாணிகள் மீது தாக்குதல் நடத்தினார்கள். பணம், நகை, உடைமைகளை கொள்ளையடித்தனர். என்னையும் தாக்கினார்கள். இன்றுடன் கதை முடிந்ததென்றுதான் நினைத்தேன். எனது உடைமைகளை கொள்ளையடித்தனர்.

நல்லவேளையாக பொலிசார் வந்து எங்களை காப்பாற்றி அனுப்பினார்கள்.
யாழ்ப்பாணம் வந்ததும் பிரபாகரனை சந்தித்தேன். தன்னையும் சகாக்களையும் இந்தியாவிற்கு அனுப்பி வைக்குமாறு கேட்டுக்கொண்டார். உடனடியாக ஏற்பாடுகளை செய்தேன். ஒரு இரவு வீட்டிலிருந்து புறப்பட்டோம். அப்போது திடீரென இராணுவ வாகனம் ஒன்று வந்துவிட்டது. எல்லோரையும் நிலத்தில் படுக்குமாறு பிரபாகரன் கூறினார். எல்லோரும் படுத்து விட்டனர். நான் மட்டும் வெளி கேற்றை பூட்டிவிட்டு, திரும்பி வீட்டுக்குள் நடந்தேன். வாகனத்திற்குள் இருந்தபடி சிப்பாய் ஒருவன் எனது முகத்திற்கு டோர்ச் அடித்தான். அவர்கள் வாகனம் அப்படியே போய்விட்டது. அன்று இராணுவத்தினர் வாகனத்தை விட்டு இறங்கி வந்திருந்தால், நான் மட்டுமல்ல, பிரபாகரனும் அன்று இறந்திருக்கலாம்.

பின்னர் படகில் புறப்பட்டு பிரபாகரன் இந்தியாவிற்கு சென்றார். இதன்பின் நடந்தவையெல்லாம் பெரும்பாலானவர்கள் அறிந்ததுதான். இதனால் அதைப்பற்றி பேசவில்லை.

எந்த நோக்கத்திற்காக இந்த வாழ்க்கையை தெரிவுசெய்தேனோ, அந்த நோக்கத்தை அடையும்வரை இப்படியேதான் இருப்பேன் என்பதை மட்டும் மக்களிற்கு சொல்லி வைக்கிறேன்.

1 COMMENT

  1. இந்த பதிவில் பல தவறான விடயங்கள். உள்ளன. நீர்வேலி வங்கி தங்கத்துரையினால் திட்டமிடப்பட்ட நிகழ்வு. பிரபாகரனுக்கும் அதன் செயற்திட்டதிற்றகும் சம்பந்தமில்லை. சிவாஜிலிங்கத்திற்கு அது தெரிந்த தெரியாமலோ வரலாறை திரிக்க முற்படுவது தவறு.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here