சுன்னாகம் கிணறுகளிற்குள் எண்ணெய் ஊற்றப்பட்டிருக்கலாம்… வேண்டுமென்றே குடிநீரில் நஞ்சு கலந்தார்கள்: ஐங்கரநேசன் நேர்காணல் 3

©தமிழ்பக்கம்

கேள்வி : வடமாகாணசபையின் நிபுணர் குழுவின் ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருக்கும் எண்ணெய் மாசின் அளவைவிட நீர்வழங்கல் வடிகால்சபையின் ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருக்கும் எண்ணெய் மாசின் அளவு அதிகமாக உள்ளதே. இரண்டு அறிக்கைகளும் எப்படி வேறுவேறான பெறுபேறுகளைக் காண்பிக்கின்றன?

பொ.ஐங்கரநேசன் : எமது நிபுணர்குழு இலங்கை அரசால் அங்கீகரிக்கப்பட்ட கைத்தொழில் தொழில்நுட்ப நிறுவனத்திலேயே நீர் மாதிரிகளைச் சோதித்தது. சர்வதேசத்தரம் வாய்ந்த இந்த நிறுவனத்தில் ஆகப்பிந்திய தொழில்நுட்பம் பயன்படுத்தப்படுவதால் பெறப்பட்ட அளவீடுகள் துல்லியமானவை. நீர்வழங்கல் வடிகால் சபையின் அறிக்கையில் மாசின் அளவைக் கணீப்பீடு செய்வதற்குப் பயன்படுத்திய கணிப்பு முறையிலும் வழு இருப்பதாக எமது நிபுணர்குழு தெரிவித்திருக்கிறது. இரண்டு தரப்புப் பெறுபேறுகளிலும் உள்ள வித்தியாசங்களுக்கு இவை காரணங்களாக இருக்கக் கூடும்.

இரண்டு தரப்புகளும் தண்ணீரில் கலந்திருப்பதாகச் சொன்ன எண்ணெயினதும் கொழுப்பினதும் அளவுங்கூட முழுவதும் பெற்றோலிய எண்ணெய்மாசுகளின் அளவாக இருக்க வேண்டிய அவசியம் இல்லை. இந்த அளவை முறையில் தண்ணீரில் கலந்திருக்கக்கூடிய தாவர-விலங்கு எண்ணெய்கள், பாசிகளிலும் இலைகளிலும் இருக்ககூடிய கொழுப்புகள், சவர்க்காரம், ஷம்பூ போன்ற சவர்க்காரமில்லாத வேறு துப்பரவாக்கிகள், கந்தகச் சேர்வைகள் எல்லாம் சேர்த்தே ஒட்டுமொத்தமாக அளவிடப்படுகின்றன. இந்த முறையில் உள்ள குறைபாடுகளைக் கருத்திற் கொண்டு எமது நிபுணர்குழு இன்னுமொரு ஆய்வையும் செய்தது. பெற்றோலிய எண்ணெய் மாசாக இருக்கக் கூடிய பென்சீன், தொலுயீன், எதைல்பென்சீன், சைலீன் போன்ற ஆபத்ததான நஞ்சுகளின் அளவுகளையும் அளவிட்டது. இது மட்டுமல்லாமல் மரபணுச்சோதனை போன்ற வலுவானதொரு சோதனையாக வாயு நிறப்படவியல் (gas chromatography) என்ற முறையிலும் மண்ணையும் நீரையும் பரிசோதித்திருந்தார்கள். ஆனால்இ நிபுணர்குழு இதயசுத்தியோடு இவ்வளவைச் செய்தும் கடைசியில் நாங்கள் அபாண்டமாகப் பழிகளையே சுமந்தோம்.

கேள்வி : நிபுணர்குழுவின் தகுதிநிலை குறித்த குற்றச்சாட்டும் உள்ளதே?

பொ.ஐங்கரநேசன் : நிபுணர்குழுவில் இருந்தவர்கள் இந்தத் துறைசார்ந்த நிபுணர்களாக இல்லை என்று சிலர் விமர்சித்தார்கள். இந்த விமர்சனத்தைப் பொறியியல்துறைப் பேராசிரியர் ஒருவரும், வைத்திய கலாநிதி ஒருவருமே ஆரம்பித்து வைத்தார்கள். பொறியியல்துறைப் பேராசிரியர் விவசாய அமைச்சின் செயலாளராக வருவதற்கு விரும்பி என்னை வந்து சந்தித்திருந்தார். வைத்திய கலாநிதியும் சுகாதார அமைச்சின் செயலாளராகத் தன்னை நியமிக்குமாறு கேட்டதாக அப்போது சுகாதார அமைச்சராக இருந்த சத்தியலிங்கம் என்னிடம் தெரிவித்திருக்கிறார். ஆனால், இலங்கை நிர்வாக சேவையில் இருப்பவர்களே அமைச்சுகளின் செயலாளர்களாக வரமுடியும் என்பதால் இவர்களது விருப்பங்களை நிறைவேற்ற முடியவில்லை. இரண்டு பேருமே தாங்கள்தான் உயர்ந்தவர்கள் என்ற வித்துவச் செருக்குக் கொண்டவர்கள். இந்தச் செருக்கின் காரணமாகவே தங்களை முதன்மைப்படுத்தவில்லை என்பதற்காக நிபுணர்களை வசைபாடினார்கள்.

எண்ணெய்மாசுப் பிரச்சினை பூதாகாரமாக எழுந்தபோது உண்மை நிலையை அறிந்து கொள்வதற்காக முதலமைச்சரின் பணிப்பின்பேரில் நிபுணர்குழவை அமைத்தோம். ஒரு குழந்தை கிணற்றுக்குள் தவறிவிழும்போது நீச்சல் தெரிந்தவர்கள் வந்து காப்பாற்றும் வரை காத்திருக்க முடியாதல்லவா? அதுபோலத்தான் எண்ணெய்மாசுப் பிரச்சினை ஏற்பட்டபோது எமது பல்கலைக்கழகங்களில் இருந்து நிபுணர்களை இணைத்து உடனடியாக ஒரு குழுவை உருவாக்கினோம். இவர்கள் பிரச்சினையைக் கையாளத்தக்க நிபுணத்துவம் பெற்றவர்கள்தான். ஆனால், நிலத்தடிநீரில் எண்ணெய்மாசு எமது பிரதேசத்துக்குப் புதியது. இதனால் எண்ணெய் மாசு விவகாரங்களில் பரிச்சயமுடைய வெளிநாடுகளில் உள்ள நிபுணர்களின் ஆலோசனைகளைப் பெற்றும், நிபுணர்கள் சிலரை யாழ்ப்பாணத்துக்கு வரவழைத்தும் எமது நிபுணர்குழு ஆய்வுகளை மேற்கொண்டது.

இப்படி பொதுப்பிரச்சினைகளில் ஈடுபாட்டோடு இயங்கக்கூடிய ஆய்வாளர்கள் இங்கு வெகு சிலர்தான் இருக்கிறார்கள். இவர்களையும் சகட்டு மேனிக்கு விமர்சித்தால் ஆபத்துக்கு உதவ இனி யார்தான் முன்வருவார்கள்.?

கேள்வி : இந்தப் பிரச்சினையில் அரசியல் மாசு அதிகம் கலந்ததாகச் சொல்லியுள்ளீர்கள். அது என்ன?

பொ.ஐங்கரநேசன் : குடிநீரில் எண்ணெய் மாசு என்பது மக்களின் உயிருடன் சம்பந்தப்பட்ட பிரச்சினை. ஆனால் இதை மறந்து சிலர் தங்கள் உள்நோக்கங்களுக்கு ஏற்ப இந்தப் பிரச்சினையை பூதாகாரப்படுத்தவும், கலந்துள்ள எண்ணெய் மாசின் அளவு கூடுலாக இருக்கவேண்டும் என்றும், இந்தப் பிரச்சினை நீடிக்கவேண்டும் என்றும் விரும்பினார்கள். இதைத்தான் நான் அரசியல் மாசு என்று சொன்னேன்.

சுன்னாகத்தில் பல கிணறுகளில் நிலத்தடி நீரோட்டத்தோடு சேர்ந்து வந்த எண்ணெய் மாசு இருந்தது உண்மை. ஆனால், நீரோட்டத்தோடு எண்ணெய் பரவ முடியாத இடங்களிற்கூட சில கிணறுகளில் கற்பனைக்கு எட்டாத அளவுகளில் எண்ணெய் இருந்தது. சில நாட்களில் இது மறைந்தும் போனது. இந்த எண்ணெய் மேலிருந்து ஊற்றப்பட்ட எண்ணெயாக ஆய்வாளர்களால் நம்பப்படுகிறது.

பாதிக்கப்பட்டதாகக் கருதப்பட்ட பகுதிகளுக்கு மாகாணசபையால் நீர் விநியோகிக்கப்பட்டது. இதற்கான நீரை திருநெல்வேலி விவசாயப் பண்ணையிலிருக்கும் கிணறுகளிலிருந்தே பெற்றோம். இந்த நீரும் குடிக்க உதவாத நீர் என்று காட்டி எங்களுக்கு எதிராக மக்களை கிளர்ந்தெழச் செய்யும் நோக்கோடு, சிலர் ஏழாலை ஸ்ரீ முருகன் வித்தியாலயத்தில் வைக்கப்பட்டிருந்த நீர்த்தாங்கிக்குள் பூச்சிகொல்லி நஞ்சை ஊற்றியிருந்தார்கள். இதை அருந்திய மாணவர்கள் தண்ணீரில் மணம் வீசுவதாகத் தெரிவித்ததை அடுத்தே இது தெரியவந்தது. திட்டமிட்டவர்கள் தவறுதலாக நீர்த்தாங்கிக்குள் மருந்துப் போத்திலையும் விழுத்திச்சென்றதால் சதி அம்பலமானது.

இது தொடர்பாக நாங்கள் காவல்துறையில் முறைப்பாடு செய்திருந்தோம். உள்ளூர் அரசியல் பிரமுகர் ஒருவரை கைது செய்து விசாரித்த காவல்துறை எங்களுக்கு எவ்வித தகவலையும் தெரிவிக்காமல் அவரை விடுதலை செய்தது.

ஆரம்பத்தில் நல்ல நோக்கத்துடன் தலையிட்ட வைத்தியர் ஒருவர் அவருக்குள் அரசியல்ஆசை குடிகொண்டதும் தலையிடி கொடுப்பவராக மாறினார். பாதிக்கப்பட்டவருக்கான சங்கம் ஒன்றை அவர் உருவாக்கி கிராமங்களில் ஒரு வலையமைப்பினை ஏற்படுத்தினார். எங்களைச் செயற்படத் தூண்டும் ஒரு அழுத்தக்குழுவாக இவர் செயற்படுகிறார் என்றே நாம் எண்ணியிருந்தோம். ஆனால், நாடாளுமன்றத் தேர்தலில் இவர் போட்டியிட்டபோதுதான் அவரது உள்நோக்கம் வெளிச்சத்துக்கு வந்தது.

மாகாணசபை உறுப்பினர்கள் கூட இதில் ஒரே குரலில் பேசவில்லை. முதலமைச்சர் எதிர்ப்பு அணியினர், நிபுணர்குழு தனிப்பட்ட முறையில் ஐங்கரநேசனுடையதே தவிர மாகாணசபையினுடையது அல்ல என்று வாதிட்டார்கள். நிபுணர்கள் குழு பற்றிய விபரங்கள் யாவும் அவைத் தலைவர் அவர்கள் ஊடாகச் சபைக்கு அறிவிக்கப்பட்டிருந்தது. ஆய்வுக்கான நிதிக்கொடுப்பனவுகள் அமைச்சர் வாரியத்தில் ஒப்புதல் பெற்றே மேற்கொள்ளப்பட்டது. சுன்னாகம் மின் நிலையத்துக்குள் நிபுணர்கள் குழு சென்று ஆய்வு நடத்துவதற்கு அனுமதி வேண்டி நீதிமன்றத்துக்கு அவைத் தலைவரே கடிதம் கொடுத்திருக்கிறார். ஆனால் சுன்னாகம் நீர்ப்பிரச்சினையை மாகாணசபையின் அனுமதியின்றி தன்னிச்சையாகவே நான் கையாண்டதாக குற்றம்சாட்டி என்னைக் கூண்டில் ஏற்றிவிட வேண்டும் என்று விரும்பினார்கள்.

இரணைமடுத் தண்ணீரை யாழ்ப்பாணத்துக்கு கொண்டுவந்துவிட வேண்டும் என்று செயற்படுபவர்கள் கூட இதில் அரசியல் செய்தார்கள். இரணைமடுக்குளத்தின் வான் கதவுகளை ஒரு தடவை நான் திறந்தபோது எடுத்த புகைப்படத்தைப் போட்டு, ‘நாங்கள் கடலுக்குள் தண்ணீரைத் திறந்துவிடுவோம். ஆனால் யாழ்ப்பாணத்துக்கு தண்ணீர் தரமாட்டோம்’ என்ற வாசகங்களுடன் பெரிய சுவரொட்டிகளை அடித்து சுன்னாகம் எங்கும் ஒட்டினார்கள். இப்படி ஒவ்வொரு தரப்பும் ஒவ்வொரு உள்நோக்கத்தோடு அணுகியதால் பிரச்சினையின் முழுப்பரிமாணத்தையும் அறிந்து மக்களுக்கு வெளிப்படுத்தவோ, உரிய தீர்வை முன்வைக்கவோ இதுவரையில் எவராலுமே முடியாமல் உள்ளது.

கேள்வி : குற்றமிழைக்காத போதும் விசாரணைக்குழு திட்டமிட்டே உங்களை பதவி விலகச் சொல்லியிருப்பதாகக் கூறுகிறீர்கள். அப்படியானால், ஏன் நீதிமன்றத்தை நாடவில்லை?

பொ.ஐங்கரநேசன் : என்னுடைய நண்பர்கள் பலரும் நீதிமன்றத்தை நாடுமாறுதான் எனக்கு ஆலோசனை வழங்கியிருந்தார்கள். அவ்வாறு சென்றிருந்தால் விசாரணைக்குழுவினர் தவறிழைத்ததை வெளிச்சத்துக்குக் கொண்டு வந்திருக்க முடியும். ஆனால் விசாரணைக்குழுவை அமைத்தவர், முதலமைச்சர் என்ற வகையில் நான் நீதிமன்றத்திற்கு இந்தப் பிரச்சினையை எடுத்துச் செல்லும்போது அவரும் நீதிமன்றத்துக்கு வரவேண்டிய நிலை ஏற்படலாம். முதலமைச்சரை இவ்வாறான ஒரு இக்கட்டுக்குள் நான் தள்ளவிரும்பவில்லை. இந்த விவகாரம் முற்றிலும் அரசியல்ரீதியிலானது என்பதால் அரசியல் ரீதியாகவே நான் இதனை எதிர்கொள்வேன்.

அரசியல் கட்சிகள் கட்சிப் பத்திரிகைகளை நடத்துவது வழக்கம். ஆனால் இங்கு செய்திப் பத்திரிகைகளின் முதலாளிகளே அரசியல்வாதிகளாக உள்ளார்கள். இவர்கள் தங்களது அரசியலுக்கு ஏற்ப செய்திகளைத் திரித்தும் பொய்யாகவும் வெளியிடும்போது பத்திரிகையில் வந்தது என்பதற்காகவே அவற்றை நம்புகின்ற மக்களும் இருப்பார்கள். இதனால் மக்கள் மன்றத்திடம் நான் செல்வதே பொருத்தமானது. அதனைச் செய்துகொண்டே இருக்கிறேன்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here