©தமிழ்பக்கம்
தமிழ் தேசிய பசுமை இயக்கத்தின் தலைவர் பொ.ஐங்கரநேசன், முன்னர் வடக்கு விவசாய அமைச்சராகவிருந்தவர். அப்பொழுது அவரைச் சுற்றி நிறைய சர்ச்சைகள் சுற்றிக்கொண்டிருந்தன. எனினும், அது எது பற்றியும் ஊடகங்களுடன் பேசாமல் இருந்தவர். அந்த சர்ச்சைகள் உள்ளிட்ட பல்வேறு விடயங்களை நம்முடன் மனம் திறந்து பேசியிருக்கிறார்.
கேள்வி: தமிழ்த் தேசியப் பசுமை இயக்கம் என்ற அமைப்பை ஆரம்பித்துள்ளீர்கள். இதன் நோக்கம் என்ன?
பொ.ஐங்கரநேசன்: சூழலியல் என்பது முன்னர் வகுப்பறைகளில் ஒரு பாடம் என்ற நிலையில் மட்டுமே இருந்தது. ஆனால், இன்று சுற்றுச்சூழல் சார்ந்த விடயங்கள் ஐக்கியநாடுகள் சபை கையாளுகின்ற அளவுக்கு நாடுகளின் அரசியலில் பிரிக்க முடியாத ஒரு அங்கம் ஆகியிருக்கிறது. உலகில் நடைபெறுகின்ற போராட்டங்களுக்கான காரணங்களாக இனம், மதம், மொழி போன்றவற்றைச் சொன்னாலும், ஆழ்ந்து நோக்கினால் அவை ஒருபுறம் வளங்களைக் கைப்பற்றுவதற்கும் இன்னொருபுறம் அந்த வளங்களைக் காப்பாற்றுவதற்குமான போராட்டங்களாகவே இருக்கும். ஈழவிடுதலைப் போராட்டம் வெளித்தோற்றத்துக்கு நிலமீட்புப் போராட்டமாகத் தெரிந்தாலும் அது எமது வளங்களை ஆக்கிரமிப்பாளர்களிடம் இருந்து காப்பாற்றுவதற்கான போராட்டம்தான்.
யுத்தம் முடிந்த பிறகு வளங்களின் ஆக்கிரமிப்பு முன்பைவிட வேகம் பெற்றிருக்கிறது. வடமாகாணசபை அமைச்சராக இவற்றைத் தட்டிக்கேட்கும்போது, தடுத்து நிறுத்த முயலும்போது மத்திய அரசின் விடயங்களில் தலையிடுவதற்கு எங்களுக்கு எந்த அதிகாரமும் இல்லை என்று சொல்கிறார்கள். அவ்வாறு தலையிடுவதைக் குற்றம் என்கிறார்கள். என்னைப்பொறுத்தவரையில் தேசியமும் சூழலியமும் ஒரு நாணயத்தின் இரண்டு பக்கங்களையும் போன்றவை.
அரசியலில் இருந்து சூழலியலைத் தனியாகப் பிரிக்க முடியாது. சூழலியலை ஒரு பாடமாகவே படித்து வந்த எமது மக்களிடையே இவற்றையெல்லாம் எடுத்துச் சொல்லிச் சூழல் பாதுகாப்புப் பற்றியும் சூழல் அரசியல் பற்றியும் விழிப்புணர்வை ஏற்படுத்தி, அவர்களைச் செயற்படத் தூண்டுவதே தமிழ்த் தேசியப் பசுமை இயக்கத்தின் நோக்கம் ஆகும்.
கேள்வி: இந்த அமைப்பு எதிர்காலத்தில் தேர்தல் அரசியலில் ஈடுபடும் நோக்கங்களைக் கொண்டிருக்கின்றதா?
பொ.ஐங்கரநேசன்: தமிழ்த் தேசியப் பசுமை இயக்கத்துக்குத் தற்போது அப்படியொரு தேவை இருப்பதாக நான் கருதவில்லை. தொடர்ந்தும் அரசியல், சமூக, சுற்றுச்சூழல் செயற்பாட்டு இயக்கமாகவே அது தொழிற்படும். எமது அமைப்பில் ஆயிரக்கணக்கானவர்கள் உறுப்பினர்களாக இணைந்துள்ளனர். தேசியமும் சூழலியமும் ஒன்றில் இருந்து ஒன்று பிரிக்க முடியாது என்று நான் முதலில் குறிப்பிட்டதன் அடிப்படையில், எமது பசுமை இயக்கத்தின் உறுப்பினர்களை அரசியலில் வழிப்படுத்த வேண்டிய பொறுப்பு எங்களுக்கு உண்டு. இவர்களை ஒருமுகப்படுத்தி வலுவான தமிழ்த் தேசியத்தையும் சுற்றுச்சூழலையும் பாதுகாக்கும் அணிக்கு எமது ஆதரவைத் தெரிவிப்போம்.
கேள்வி: நீங்கள் முதலமைச்சருக்கு நெருக்கமானவர் என்ற கருத்து உள்ளது. அடுத்த மாகாணசபைத் தேர்தலில் எப்படியான அரசியல் அணிகள் களமிறங்குமென எதிர்பார்க்கிறீர்கள்?
பொ.ஐங்கரநேசன் : சில மாதங்களுக்குப் பிறகு வரவிருக்கின்ற மாகாண சபைத் தேர்தல் தொடர்பாக இப்போதே எதிர்வு கூறுவது கடினம். அரசியலில் கடைசி நேரத்திற்கூட எதிர்பாராத விதமாக எதுவும் நடக்கலாம். ஆனால் போருக்குப் பிந்திய தமிழ் அரசியலில் ஒரு வினைமாற்றம் நிகழ ஆரம்பித்திருக்கிறது என்பதை மட்டும் இப்போது உறுதியாகக் கூறலாம்.
கடந்த உள்ளுராட்சித் தேர்தலில் ஏகபிரதிநிதிகளாகக் கருதப்பட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பெரும் வாக்குச் சரிவைச் சந்தித்திருக்கிறது. அதேசமயம் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி ஏறுமுகமாக வியக்கத்தக்க அளவில் ஆசனங்களைக் கைப்பற்றியுள்ளது. உதிரிகளாக ஆங்காங்கே சுயேச்சைகள் கூட வெற்றிபெற்றிருக்கின்றன. இவற்றையெல்லாம் தற்செயல் விடயங்களாகக் கருதமுடியாது.
போரால் மிக மோசமாகப் பாதிக்கப்பட்ட தமிழ் மக்கள் அதற்கான தீர்வைப் பெற்றுத் தருவதற்கு தாங்கள் நம்பியிருந்த தமிழ்த் தலைமைகள் தவறிவிட்டதாகக் கருதுகிறார்கள். அவர்கள் போருக்குப் பிந்திய நிலைமாறுகால அரசியலில் போராட்டத்தின் தொடர்ச்சியைப் பேணவல்ல புதிய தலைமையொன்றைத் தேட ஆரம்பித்துள்ளார்கள் என்பதைத்தான் உள்ளுராட்சித் தேர்தல் முடிவுகள் காட்டுகின்றன. அத்தகைய தலைமையாக முதலமைச்சர் விக்னேஸ்வரனையே மாற்றத்தை விரும்புகின்ற தமிழ்மக்கள் ஏற்றுக் கொண்டிருக்கிறார்கள். அடுத்த முதலமைச்சராகவும் அவரே நீடிக்க வேண்டும் என்றும் விரும்புகிறார்கள்.
மக்கள் விருப்பத்தைத் தான் புறக்கணிக்க முடியாது என்று முதலமைச்சரும் தெரிவித்திருக்கிறார். இந்நிலையில் தேர்தலில் களம் இறங்குவதற்கு முதலமைச்சர் புதிய பொறிமுறையொன்றைக் உருவாக்கத்தானே வேண்டும். அது என்னவென்பதை அவர் கூறுவதுதான் பொருத்தமானது.
கேள்வி: விக்னேஸ்வரன் ஆளுமையுள்ள முதலமைச்சராக இதுவரையில் தன்னை நிரூபிக்கவில்லை என்று குற்றஞ்சாட்டு உள்ளதே?
பொ.ஐங்கரநேசன்: இந்தக் குற்றச்சாட்டுகள் அரசியல் ரீதியானவை. போருக்குப் பிந்திய ஜனநாயக வெளியில் எல்லோரும் தங்களைத் தலைவர்களாக முன்னிறுத்திக்கொள்ள முட்டிமோதிக் கொண்டிருக்கிறார்கள். இவர்களில் முதலமைச்சர் கனவில் மிதப்பவர்கள் இருக்கின்ற முதலமைச்சரை ஏதோ ஒரு வகையில் குறைசொல்லித்தானே ஆகவேண்டும்.
மாகாணசபை முறைமையை நிர்வகிக்கும் 13 ஆவது திருத்தச்சட்டம் மாகாணசபையை ஒரு சவலைப் பிள்ளையாகவே பிரசவித்து வைத்திருக்கிறது. அதிகாரங்கள் எல்லாம் மத்திய அரசிடம் குவிந்திருக்கும்போது மத்திய அரசின் கைதூக்கல் இல்லாமல் மாகாணசபையால் எழுந்து நிற்க முடியாது. ஆனால் மத்திய அரசு தமிழ் மக்கள் பலம் பெற்று விடக்கூடாது என்பதில் கருத்தாக இருக்கிறது. இவற்றையெல்லாம் தெரிந்து கொண்டும் இவர்கள் பதின்மூன்றாவது திருத்தச்சட்டத்தில் உள்ள குறைபாடுகளையெல்லாம் முதலமைச்சர் விக்னேஸ்வரனின் தனிப்பட்ட குறைபாடுகளாகக் காட்ட முயற்சிக்கிறார்கள்.
வடக்கின் முதலமைச்சர் நாற்காலியில் தங்களின் கைப்பாவையாக, தங்களால் இலகுவில் கையாளத்தக்க ஒருவர் இருக்க வேண்டும் என்றே இலங்கை அரசாங்கம் விரும்புகிறது. நடைபெற்ற இனஅழிப்பை யுத்தக் குற்றங்களையெல்லாம் மூடிமறைப்பதற்கும். மேலும் மேலும் தங்களது ஆக்கிரமிப்பைத் தொடருவதற்கும் பேரினவாதிகளுக்கு அது அவசியமாகின்றது. ஆனால் விக்னேஸ்வரன் எவராலுமே கையாளத்தக்க ஒருவராக இல்லாமல் தமிழ்த் தேசியத்தின் குரலாக ஓங்கிஒலிப்பவராக இருப்பதால் அவர் முதலமைச்சராக நீடிப்பதைத் தென்இலங்கைப் பேரினவாதிகளும் விரும்பவில்லை. இதனாலேயே வடக்கின் அபிவிருத்திக்கு முதலமைச்சர் தடையாக இருப்பதாக அவர்களும் குற்றம்சாட்டி வருகின்றனர்.
கேள்வி: உங்கள் மீதும் மாகாணசபைக்குள் நிறைய குற்றச்சாட்டுக்கள் வைக்கப்பட்டுள்ளனவே?
பொ.ஐங்கரநேசன்: குற்றச்சாட்டுகளை விசாரிக்க முதலமைச்சர் ஒரு விசாரணைக்குழுவை நியமித்து, விசாரணைக்குழுவின் தீர்ப்பை முன்வைத்து, நானும் பதவியிலிருந்து விலகிவிட்டேன். ஆனால் அந்தக் குற்றச்சாட்டுகள் அபாண்டமானவை, என்னைப் பதவியில் இருந்து நீக்கவேண்டும் என்ற திட்டத்துடன் புனையப்பட்டவை. நான் அமைச்சராக மேற்கொண்ட எல்லாத் திட்டங்களிலுமே எழுந்தமானமாகக் குற்றங்களைச் சுமத்தினார்கள். ஆனால் விசாரணைக்குழுவின் அறிக்கையில் எந்தக் குற்றச்சாட்டிலும் குற்றவாளியாக நான் குறிப்பிடப்பவில்லை. தனித்தனியாகக் குற்றச்சாட்டுகளை விசாரித்து, குற்றச்சாட்டுகளிலிருந்து விடுவிக்கிறோம், ஆதாரங்கள் அற்ற குற்றச்சாட்டுகள் என்றுதான் குறிப்பிட்டுள்ளார்கள். ஆனால் அறிக்கையின், தொகுப்புரையில் குற்றச்சாட்டுகள் நிஷரூபிக்கப்பட்டதால் நான் பதவிவிலக வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்கள்.
ஏதாவதொரு குற்றச்சாட்டில் என்னைக் குற்றவாளியாக இனம்கண்ட பின்னர், என்னைப் பதவி விலகக் கோரியிருந்தால் அது நியாயமானது. ஆனால் ஒவ்வொரு குற்றச்சாட்டுகளின் கீழும் குற்றமற்றவர், ஆதாரமில்லையென கூறிவிட்டு, இறுதியில் பதவி விலக வேண்டுமென கூறியது விசாரணைக்குழுவைச் சந்தேகப்பட வைக்கிறது. மாகாணசபைக்குள் குழப்பத்தை ஏற்படுத்த வேண்டுமென்று விரும்பியவர்கள், இந்த விசாரணைக்குழுவைக் கையாண்டிருக்க வாய்ப்புள்ளதாகவே நான் கருதுகிறேன்.
கேள்வி: விசாரணைக்குழு பக்கச்சார்பாகச் செயற்பட்டதாகக் கூறுகிறீர்களா?
பொ.ஐங்கரநேசன்: விசாரணைக் குழுவில் இருந்த இரண்டொருவர் யாரோ சிலரின் கைப்பாவையாக, என்னை அகற்ற வேண்டுமென்பதில் குறியாக இருந்தார்கள் என்பதை உறுதியாகச் சொல்வேன்.
இந்த இடத்தில் விசாரணை அறிக்கை தொடர்பாக ஒன்றைச் சுட்டிக்காட்ட விரும்புகிறேன். சுகாதார அமைச்சராக இருந்த சத்தியலிங்கம் தொடர்பாகவும் ஒரு விசாரணை நடந்தது. குற்றச்சாட்டுகள் ஆதாரபூர்வமாக நிரூபிக்கப்படாமையினால் அவரை குற்றச்சாட்டுகளில் இருந்து விடுவிப்பதாக விசாரணை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அது மாத்திரம் அல்லாமல் அவரினால் நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் சகல திட்டங்களுக்கும் சகலரும் ஒத்துழைப்பை வழங்கவேண்டும் என விசாரணைக்குழு விரும்புகின்றது எனவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
சத்தியலிங்கத்தை குற்றவாளியென்று நான் இங்கே சொல்ல வரவில்லை. ஆனால் விசாரணைக்குழு பக்கச்சார்பாக நடந்து கொண்டுள்ளது என்பதை வெளிப்படுத்துவதற்காகவே இதைக் குறிப்பிடுகின்றேன். ஒரு சைக்கிளை திருடியதாக ஒரு வழக்கு வருகிறது. அவர் சைக்கிளை திருடவில்லையென நீதிபதி தீர்ப்பை சொல்லிவிட்டு, வேறு விசயங்களிலும் அவர் நல்லவரென ஒரு பரிந்துரையை கொடுக்க முடியாதல்லவா. ஆனால் விசாரணைக்குழு எங்கள் விசாரணையில் அப்படித்தான் நடந்து கொண்டது. விசாரணை அறிக்கையின் மூலம் தாங்கள் பக்கச்சார்பானவர்கள்தான் என்பதைத் தாங்களே காட்டிக்கொடுத்துள்ளார்கள்.
கேள்வி: ஆனால் அந்த விசாரணைக்குழுவை முதலமைச்சர் தானே நியமித்தார்?
பொ.ஐங்கரநேசன்: விசாரணைக்குழுவில் ஓய்வுபெற்ற இரண்டு நீதிபதிகளும் நிர்வாக சேவையில் உயர்அதிகாரியாக இருந்து ஓய்வுபெற்ற ஒருவரும் இருந்தார்கள். இவர்களை முதலமைச்சரே நியமித்திருந்தாலும், நான் அறிந்தவரையில் இவர்களை தெரிவுசெய்யும் பொறுப்பை வேறு ஒருவரிடமே விட்டிருந்தார். தான் தெரிவுசெய்தால் தனக்கு ஏற்ற மாதிரி ஒரு குழுவை நியமித்துள்ளார் என்ற விமர்சனத்துக்கு ஆளாக வேண்டிவரும் என்று அவர் நினைத்திருக்ககூடும். முதலமைச்சரே இவர்களை தெரிவுசெய்திருந்தாலும்கூட, இவர்களின் பின்னணி பற்றி அறியாமல் இருந்திருக்கலாம்.
விசாரணைகள் நடைபெற்றுக்கொண்டிருந்த காலப்பகுதியில்தான், இவர்களின் பின்னணி பற்றி எனக்கு தெரியவந்தது. விசாரணைகுழுவிலிருந்த ஓய்வுபெற்ற நீதிபதிகளில் ஒருவர் கூட்டுறவு சமாசத்தின் தலைவர் ஒருவரை நீக்கியமை தொடர்பான வழக்கொன்றில் நீதிமன்றத்தில் சமாச தலைவருக்கு சார்பாக, மாகாண கூட்டுறவு திணைக்களத்திற்கு எதிராக வழக்காடியவர். அதேசமயம், அதே பிணக்கு முன்வைக்கப்பட்டுள்ள விசாரணைகுழுவில் என்னை விசாரிக்கும் நீதிவானாகவும் இடம்பெற்றிருந்தார். இவர் பக்கச்சார்பற்ற தீர்ப்பை வழங்குவார் என எப்படி எதிர்பார்க்க முடியும்?
ஓய்வுபெற்ற நிர்வாக சேவை அதிகாரி விவசாய அமைச்சின் செயலாளராகவும் பணியாற்றியவர். செயலாளராக வேறொருவர் நியமிக்கப்பட்ட பிறகு, அதே விவசாய அமைச்சில் உதவி திட்டமிடல் பணிப்பாளராகவும் வேலை பார்த்தவர். அமைச்சின் உயர்பதவிகளில் பணியாற்றிய ஒருவர், அதே அமைச்சுடன் தொடர்புபட்ட விசாரணைகளில் பங்குபற்றுவது நிர்வாக நடைமுறைகளிற்கும், இயற்கை நீதிக்கும் முரணானது. உண்மையில், இவர்கள் இருவரும் அறம் சார்ந்து ஒழுகுபவர்களாக இருந்தால், விசாரணைக்குழுவில் இடம்பெற மறுத்திருப்பார்கள்.
கேள்வி: அப்படியென்றால், தான் நியமித்த விசாரணைக்குழு நியாயமாக நடக்கவில்லையென்ற அபிப்பிராயம் முதலமைச்சரிடம் உள்ளதா? அதை அமைச்சர்களிடம் கூறியிருக்கிறாரா?
பொ.ஐங்கரநேசன்: விசாரணைக்குழு சரியான தீர்ப்பைத்தான் எழுதியிருக்கிறதென அவர் நினைத்திருந்தால், பதவிவிலகுங்கள் என்று ஒற்றைச் சொல்லிலேயே அமைச்சர்களை அவர் பதவியிலிருந்து அகற்றியிருப்பார். அழுத்தம் திருத்தமாக “பதவிகளை தியாகம் செய்யுங்கள்“ என்றுதான் எங்களைக் கோரியிருந்தாரே தவிர, இந்த தீர்ப்பின் அடிப்படையில் எங்களை அவர் பதவி நீக்கம் செய்யவில்லை.
கேள்வி: உங்கள் மீதான குற்றச்சாட்டுக்கள் உள்நோக்கமுடையவை என்கிறீர்கள். மாகாணாசபைக்குள் நீங்கள் குறிவைக்கப்படக் காரணம் என்ன?
பொ.ஐங்கரநேசன்: முதலமைச்சர் தமிழ் மக்கள் பேரவையைத் தொடங்கியதும், அவர் தனியான அரசியல் அணியை உருவாக்கப் போகிறார் எனச் சிலர் பயந்தார்கள். நான் முதலமைச்சருக்கு ஆதரவானவன் என்ற பொதுக் கருத்தின் அடிப்படையில் அவரது அரசியல் பயணத்தில் அவருக்கு நான் பலமாக இருந்துவிடுவேன் என்றும் நினைத்த அவர்கள் என்னை அகற்றினால் அவர் மீண்டும் கொழும்புக்குத் திரும்பிப் போய்விடுவார் என்று நம்பினார்கள். இதனாலேயே நான் முதலில் குறிவைக்கப்பட்டேன். இதற்குக் மாகாணசபை உறுப்பினர் விந்தன் கனகரட்ணம் சாட்சியாகவுள்ளார்.
எனக்கு எதிரான பிரேரணையை மாகாணசபையில் கொண்டு வருவதற்கு மாகாணசபை உறுப்பினர்கள் சிலர் முதலில் விந்தன் கனகரட்ணத்தையே அணுகியிருந்தார்கள். அவர் உடன்பட மறுத்ததன் பின்னரே வேறு ஒரு உறுப்பினரின் மூலம் பிரேரணை கொண்டு வரப்பட்டது.
விந்தன் கனகரட்ணத்தை யாழ்ப்பாணத்தில் உள்ள விடுதியொன்றிற்கு அழைத்துச் சென்று எனக்கெதிரான பிரேரணையைக் கொண்டுவரக் கோரியபோது நடந்த ஒரு சம்பவத்தைச் சொல்கிறேன். கதிரையில் இருந்து கதைத்த ஒரு உறுப்பினர் கதிரையில் ஊன்றியிருந்த தனது வலதுகையைத் தட்டிக்காட்டி, இந்தக் கைதான்-ஐங்கரநேசன்- இதனை முதலில் உடைத்தால் கதிரையைவிட்டு முதலமைச்சர் குப்புற விழுந்து விடுவார் என்று அபிநயம் செய்து காட்டியுள்ளார். இதனை விந்தன் கனகரட்ணமே பல சந்தர்ப்பங்களில் வெளிப்படையாகவே பேசியுள்ளார்.
(தொடரும்)