ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மிகவும் ஆபத்தானவராக இருக்கிறார் என பிரபல நடிகை சமனலி பொன்சேகா தெரிவித்துள்ளார்.
தற்போதைய அரசியல் நிலைமை தொடர்பில் சிங்கள ஊடமொன்றுக்கு கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
“நாங்கள் கலைஞர்களாக ஒன்றையும் எதிர்பார்க்காமல் 2015ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலுக்காக வேலை செய்தோம். இந்த அனைத்தையும் ஜனாதிபதி காட்டிக் கொடுத்திருப்பது வருத்தமாக உள்ளது. அவரது நடவடிக்கைகள் நாட்டிற்கு பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது“ என்றும் குற்றம்சாட்டியுள்ளார்.
“சுத்தமான அரசியல் ஒன்றை மேற்கொள்வார் என்ற எண்ணத்தில் நாங்கள் மைத்திரியை அதிகாரத்திற்கு கொண்டு வரவில்லை. எனினும் சில மாற்றங்களை பொது மக்களின் அழுத்தங்களுக்கமைய செய்வார் என எதிர்பார்த்தோம்.
மஹிந்த ராஜபக்சவின் கலாச்சாரத்தை இல்லாமல் செய்ய முடியும் என்ற உணர்வு எங்களுக்கு இருந்தது. எனினும் இந்த நேரத்தில் மைத்திரிபால சிறிசேன என்பவர் மஹிந்த ராஜபக்சவை விட ஆபத்தானவராகியுள்ளார்.
அண்மையில் பாதுகாப்பு பிரிவு பிரதானி ஒருவருக்கு தற்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கடிதம் ஒன்றை அனுப்பியிருந்தார். அந்த சம்பவம் மிகவும் ஆபத்தான ஒன்றாகும்.
அனைத்திலும் உள்ள ஆபத்து மக்களுக்கு புரிகின்றதா என தெரியவில்லை. இந்த அரசியலில் ஆபத்து வேறு தளத்தில் உள்ளது.
எப்படியிருப்பினும் ஐக்கிய தேசிய கட்சியினரும் கடந்த காலங்களில் தங்களுக்கு கிடைத்த மக்கள் பலத்தை வீணடித்து விட்டார்கள் என்பதனை கூற வேண்டும்.
ஜனாதிபதியை தனிமைப்படுத்தவும் அவர்கள் செயற்பட்டிருக்கிறார்கள். ஜனாதிபதியின் காட்டிக்கொடுப்பை நியாயப்படுத்த நான் இதனை கூறவில்லை. அடுத்த தரப்பும் சுத்தம் இல்லை என்பதனை நினைவுப்படுத்துகின்றேன்“ என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.