சட்டவிரோத அரசுக்கு எதிராக இரண்டு மனுக்கள்: சுமந்திரன், கனகஈஸ்வரன் தாக்கல்!

நாடாளுமன்ற பெம்பான்மையையும் நிரூபிக்க முடியாமல், பிரதமர் பதவியையும் துறக்காமல் அதிகாரத்தில் இருக்கும் மஹிந்த ராஜபக்ச அரசாங்கத்திற்கு எதிராக நேற்று மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் இரண்டு வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

தமிழரசுக்கட்சியின் உறுப்பினரும் சட்டத்தரணியுமான எம்.ஏ.சுமந்திரன், சட்டத்தரணி கனகஈஸ்வரன் ஆகியோர் இந்த வழக்குகளை தாக்கல் செய்தனர்.

அரசு இல்லையென்பதை பெரும்பான்மையுடன் நிரூபித்த நிலையிலும் பிரதமர், அமைச்சர்கள் இயங்குவது சட்டவிரோதமானது என அந்த மனுக்களில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மஹிந்த ராஜபக்ச பிரதமராக நியமிக்கப்பட்ட முறை, மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்சவிற்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணைக்கு ஆதரவாக வாக்களித்த 122 உறுப்பினர்களிடமும் நேற்று மதியம் நாடாளுமன்றத்தில் சத்தியக்கடதாசி பெறப்பட்ட விவகாரத்தை நேற்று தமிழ்பக்கத்தில் குறிப்பிட்டிருந்தோம். 122 எம்.பிக்களின் தனித்தனி சத்தியக்கடதாசிகளை இணைத்து இந்த வழக்கு தொடரப்பட்டுள்ளது.

பிரதமர் மற்றும் அமைச்சர்கள் எந்த அடிப்படையில் பதவி வகிக்கிறார்கள் என்றும், கோ வரண்டோர் முறையில் தெளிவுபடுத்தி சட்டவிரோத அமைச்சரவையை செல்லுபடியற்றதாக உத்தரவிட வேண்டுமென கோரியுமே இந்த வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

ஜனாதிபதி சட்டத்தரணி கனக ஈஸ்வரன் தாக்கல் செய்த வழக்கில், நாடாளுமன்ற உறுப்பினர்கள் 122 பேரும் தனித்தனியே உறுதிசெய்து வழங்கிய சத்தியக்கடதாசி ஆவணத்தின் அடிப்படையில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

மற்றைய வழக்கை ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் தாக்கல் செய்தார். பேராசிரியர் சரத் வீரசூரிய சார்பில் இது தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இந்த இரண்டு வழக்குகளிலும் பிரதமர் மஹிந்த ராஜபக்ச உட்பட அமைச்சர்கள், பிரதியமைச்சர்கள் என 49 பேர் பிரதிவாதிகளாக குறிப்பிடப்பட்டுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here