தினகரனின் உத்தியை கையாள்கிறாரா அங்கஜன்?

யாழ்ப்பாணத்தில் விவசாயிகளிற்கு விதை உருளைக்கிழங்கு வழங்கும் நிகழ்வொன்று அண்மையில் இடம்பெற்றது. விவசாய பிரதியமைச்சர் அங்கஜன் இராமநாதன் தலைமையில் நடந்த இந்த நிகழ்வு தொடர்பாக சமூக வலைத்தளங்களில் கடுமையான விமர்சனங்களை சந்தித்து வருகிறது.

விவசாய அமைச்சின் மூலம்- அரச நிதியில்- வழங்கப்பட்ட இந்த உதவிகளில் விவசாய பிரதியமைச்சர் அங்கஜன் இராமநாதன் தனது படங்களை பொறித்து வழங்கியதே கடுமையாக விமர்சிக்கப்பட்டு வருகிறது. முன்னைய மஹிந்த ராஜபக்ச ஆட்சிக்காலத்தில் அரச நிதி தனிப்பட்ட பிரசாரங்களிற்காக துஷ்பிரயோகம் செய்யப்பட்ட குற்றச்சாட்டுக்கள் பரவலாக உள்ள நிலையில், மீண்டும் அதே சம்பவங்கள் மீள் ஆரம்பித்துள்ளதோ என்ற சந்தேகத்தையும் சமூக வலைத்தளங்களில் எழுப்பியுள்ளனர்.

கடந்த 21ம் திகதி உரும்பிராய் கமநலசேவை பிரிவிற்குட்பட்ட உருளைக்கிழங்கு உற்பத்தியாளர்களிற்கு விதை உருளைக்கிழங்குகள் வழங்கப்பட்டன.

இந்த நிகழ்வில் விவசாய அமைச்சினால் வழங்கப்பட்ட உருளைக்கிழங்கு பொதிகளில் பிரதி விவசாய அமைச்சரின் படங்கள் பொறிக்கப்பட்ட ஸ்டிக்கர்கள் ஒட்டப்பட்டிருந்தன.

மஹிந்த ராஜபக்சவின் கடந்த ஆட்சியில் அரச அபிவிருத்தி திட்டங்களில் தனிநபர் பிரச்சாரம் தூக்கலாக இருக்கும். அது மக்களை எரிச்சலடைய வைக்கும் அளவிற்கும் போனது. ஆனால் கடந்த ஆட்சியில் இந்த போக்கில் நிறைய மாற்றமிருந்தது. குறிப்பாக வடக்கு கிழக்கில் இப்படியான போக்கு பெரும்பாலும் இருக்கவில்லை.

எனினும், வடக்கில் சுதந்திரக்கட்சி தரப்பினர் இலவசங்கள் மூலம் வாக்குகளை பெற பின்தங்கிய கிராமங்களை குறிவைத்து செயற்பட்டனர். நாடாளுமன்ற, உள்ளூராட்சி தேர்தல் சமயங்களில் வாக்களிப்பிற்கு முதல்நாள் வரை- தேர்தல் விதிமுறையை மீறி- வேட்பாளர்களின் படங்கள் பொறிக்கப்பட்ட இலவச பொருட்களை வழங்கியதாக அப்போது குற்றச்சாட்டுக்களும் சுமத்தப்பட்டிருந்தன.

அரச உதவித்திட்டங்களில் தனது ஸ்ரிக்கர்கள் ஒட்டி பிரச்சாரம் செய்வதை அங்கஜன் இராமநாதன் நிறுத்தவில்லையென மீண்டும் விமர்சனங்கள் கிளம்பியுள்ளன.

தமிழகத்தின் டிடிவி.தினகரனும் இலவசங்களில் ஸ்ரிக்கர் ஒட்டி விமர்சனங்களை சந்திதது வருவது குறிப்பிடத்தக்கது.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here