நாக்கைப் போல இருங்கள்: எடப்பாடி அறிவுரை!

பற்களுக்கு இடையில் நாக்கு சமயோசிதமாக இயங்குவது போல போலீசாரும் செயல்பட்டு பணியினை வெற்றிகரமாக முடிக்கவேண்டும் என்று முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவுரை வழங்கியுள்ளார்.

பணியின்போது இறந்த வீரத்தியாகிகள் என்ற புத்தகம் வெளியீட்டு விழாவும், 6,119 சீருடை பணியாளர்களுக்கான பணிநியமன ஆணை வழங்கும் விழாவும் நேற்று காலை சென்னை கலைவாணர் அரங்கில் நடந்தது. விழாவில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கலந்துகொண்டு வீரத்தியாகிகள் புத்தகத்தை வெளியிட்டார். பணியின்போது இறந்த வீரத்தியாகிகளின் குடும்பத்தை சேர்ந்த 10 பேர், முதல்-அமைச்சரிடமிருந்து புத்தகங்களை பெற்றுக்கொண்டனர்.

சீருடை பணியாளர்கள் பணிநியமன ஆணைகளை போலீஸ் வேலையில் சேர்ந்துள்ள திருநங்கை சுபஸ்ரீ உள்ளிட்ட 17 பேர் முதல்-அமைச்சரிடமிருந்து பெற்றனர். மீதி உள்ளவர்களுக்கு தலைமை செயலாளர் கிரிஜா வைத்தியநாதன், கூடுதல் தலைமை செயலாளர் நிரஞ்சன் மார்டி, போலீஸ் டி.ஜி.பி.க்கள் டி.கே.ராஜேந்திரன், கே.பி.மகேந்திரன், ஜாங்கிட், காந்திராஜன், திரிபாதி, சென்னை நகர போலீஸ் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன், கூடுதல் டி.ஜி.பி.க்கள் அசுதோஷ் சுக்லா, ஷகில் அக்தர் ஆகியோர் பணிநியமன ஆணைகளை வழங்கினார்கள்.

விழாவில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசுகையில் கூறியதாவது:-

தோல்வி வரும்பொழுது விடா முயற்சியுடன் இருத்தல், துன்பம் வரும்பொழுது தைரியமாக இருத்தல், பதவி வரும்பொழுது பணிவுடன் இருத்தல், ஏழ்மை வரும்காலத்தில் நேர்மையாக இருத்தல், கோபம் வரும்பொழுது நிதானமாக இருத்தல், செல்வம் வரும்பொழுது எளிமை யாக வாழ்தல் என்ற ஆன்றோரின் அறிவுரைகள், உங்கள் பணியினை திறம்பட ஆற்றுவதற்கு மிகவும் உதவிகரமாக இருக்கும்.

“மனித உடலில் எத்தனையோ உறுப்புகள் உள்ளன. ஆனால் இந்த உறுப்புகளிலேயே மிகவும் தலைசிறந்தது நாக்கு. அதாவது சாமர்த்தியமாக, சாதுரியமாக, திறமையாக செயல்படுவதில் நாக் கிற்கு இணை வேறு எதுவும் இல்லை.

நாக்கின் நிலைமையை நீங்கள் எண்ணிப் பாருங்கள். வாயின் நடுவிலே உள்ள நாக்கைச்சுற்றி 32 பற்கள் உள்ளன. இந்த 32 பற்களும் அந்த நாக்கை கடித்து, குதறி தள்ளக்கூடிய வலிமை வாய்ந்தவை. ஆனால் இந்த சாதுர்யமான நாக்கு, ஆயுட்காலம் முழுவதும் அந்த 32 பற்களுக்கு இடையிலேயே இருந்து திறமையாக செயல்பட்டு, வெற்றிகரமாக காலத்தை ஓட்டுகிறது. தினம், தினம் தப்பித்தோம், பிழைத்தோம், என்ற நிலையில் வாழ்கின்ற நாக்கு எத்தனை பணிகளை செய்கிறது? கண்டிப்பாக பேசவேண்டிய நேரங்களில் கண்டிப்புடன் பேசுகிறது, கட்டளை இடவேண்டிய நேரங்களில் கட்டளையிடுகிறது. கனிவாக பேசவேண்டிய நேரங்களில் தேன்மழை போன்ற சொற்களை பொழிகிறது. சிலரை மிரட்ட வேண்டிய நேரத்தில் அதையும் செய்கிறது. சுவையான, சத்தான உணவுகளை இந்த உடலுக்கு வழங்குகிறது. பலவிதமான கடமைகளை, காரியங்களை இந்த நாக்கு திறமையாக செயலாற்றுகிறது. அதுவும் பற்களாகிய எதிரிகளுக்கு நடுவில் இருந்துகொண்டே செயலாற்றுகிறது.

இந்த நாக்கினைப் போன்று நீங்களும் சமயோசிதமாக செயல்பட்டு, அளிக்கப்பட்ட பணியினை வெற்றிகரமாக முடிக்க வேண்டும்” என்ற மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் அமுத வாக்கினை பின்பற்றி நீங்கள் பணியாற்ற வேண்டும்.

தற்போது காவல்துறையில் சுமார் 5 விழுக்காட்டிற்கும் குறைந்த பணியிடங்கள் மட்டுமே காலியாக இருக்கின்றன. இந்த பணியிடங்களையும் கூட விரைவில் நிரப்ப நடவடிக்கைகள் எடுக்கப்பட உள்ளன.

உலகத்திலேயே திறமை வாய்ந்த ‘ஸ்காட்லாந்து யார்டு’ போலீசுக்கு இணையாக தமிழ்நாடு காவல்துறையின் பணி பாராட்டி பேசப்பட்டு வருகிறது. தமிழ்நாடு தொடர்ந்து அமைதி பூங்காவாக திகழ்ந்து கொண்டிருக்கிறது. அதேபோன்று குற்ற நிகழ்வுகளும் குறைந்துள்ளன. சமீபத்தில் வெளியிடப்பட்ட தேசிய குற்றவியல் ஆவண காப்பக அறிக்கையில் இதுபற்றி தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், மெட்ரோ நகரங்களில் சென்னையும், பெருநகரங்களில் கோயம்புத்தூரும் பெண்கள் வாழ பாதுகாப்பான நகரங்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கெல்லாம் அடிப்படை காரணம் காவல்துறையினரின் தன்னலமற்ற பணி என்பதை நினைத்து நீங்கள் பெருமைப்பட வேண்டும் என்று இந்த சந்தர்ப்பத்தில் தெரிவிக்கின்றேன். இவ்வாறு அவர் கூறினார்.

முன்னதாக விழாவில் கலந்துகொள்ள வந்த முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி போலீஸ் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார். விழாவின் தொடக்கத்தில் வரவேற்று பேசிய போலீஸ் டி.ஜி.பி. டி.கே.ராஜேந்திரன் கூறும்போது, புதிதாக தேர்வு செய்யப்பட்டுள்ள 6,119 சீருடை பணியாளர்களில் 4,485 பேர் 25 வயதுக்கு உட்பட்டவர்கள் ஆவார்கள். இவர்களில் 2,600 பேர் பட்டயபடிப்பு, பட்டப்படிப்பு மற்றும் பட்டமேற்படிப்பு படித்தவர்கள். இவர்களில் பெரும்பாலானவர்கள் கிராமப்புறங்களை சேர்ந்தவர்கள் என்று தெரிவித்தார்.

விழாவில் அமைச்சர்கள் ஜெயக்குமார், ஆர்.பி.உதயகுமார் மற்றும் சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள், போலீஸ் துறையை சேர்ந்தவர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். விழாவின் இறுதியில் சீருடை பணியாளர் தேர்வாணைய தலைவர் டி.ஜி.பி. திரிபாதி நன்றி கூறினார்.

‘ஆண்களின் பலமும், பெண்களின் குணமும் உள்ளதால் சிறப்பாக பணியாற்றுவேன்’

திருநங்கை போலீஸ் சுபஸ்ரீ பேட்டி

காவலர் பணிக்கென பணி நியமன ஆணை பெற்ற திருநங்கை சுபஸ்ரீ.
புதிதாக தேர்வு செய்யப்பட்டுள்ள இரண்டாம் நிலை காவலர்களில் ஒருவராக திருநங்கை சுபஸ்ரீ தேர்வு செய்யப்பட்டுள்ளார். ஏற்கனவே போலீசாக 4 திருநங்கைகளும், சப்-இன்ஸ்பெக்டராக ஒரு திருநங்கையும் தமிழக போலீஸ் துறையில் பணியாற்றுகிறார்கள்.

6-வதாக திருநங்கை சுபஸ்ரீ போலீசாக தமிழக காவல் துறையில் அடியெடுத்து வைத்துள்ளார். அவர் சென்னையில் ஆயுதப்படை பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளார். ஈரோட்டை சேர்ந்த அவர் பி.எஸ்சி. பட்டப்படிப்பு படித்துள்ளார். போலீஸ் துறையில் சேர்ந்தது குறித்து அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

எனது குடும்பம் விவசாய குடும்பம். எனது தந்தை இறந்துவிட்டார். தாயார் பத்மா. ஒரு சகோதரி இருக்கிறார். அவருக்கு திருமணம் ஆகிவிட்டது. எனக்கு 14 வயதாகும்போது பள்ளி மாணவ பருவத்தில்தான் திருநங்கையாக மாறினேன். எனது குடும்பத்தினர் என்னை ஒதுக்கவில்லை. மாறாக ஆக்கமும், ஊக்கமும் கொடுத்தார்கள்.

திருநங்கை சப்-இன்ஸ்பெக்டர் பிருத்திகா யாசினிதான் எனது ரோல்மாடல் ஆவார். அவரது அறிவுரைகள், ஆலோசனைகள் போலீஸ் துறையில் சேர்வதற்கு எனக்கு உதவியாக இருந்தது. விரைவில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டருக்கான தேர்வு எழுதி வெற்றி பெறுவேன். என்னைப்போல் நிறைய திருநங்கைகளை போலீஸ் வேலைக்கு சேர்த்துவிட பாடுபடுவேன். என்னிடம் ஆண்களுக்கான பலமும், பெண்களுக்கான சிறந்த குணமும் உள்ளது. இதனால் சிறப்பாக பணியாற்றுவேன். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here