தனது தாய், பாட்டியின் கனவை நனவாக்கிய சென்னை விமானி, அவர்களின் காலில் விழுந்து ஆசி பெறும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
சென்னையைச் சேர்ந்த பிரதீப் கிருஷ்ணன் என்பவர் இண்டிகோ விமானத்தில் விமானியாகப் பணியாற்றி வருகிறார். இவர் மாணவ விமானியாக தனது வான் பயணத்தை 2007-ல் தொடங்கினார். கடந்த 11 வருடங்களாகப் பணியாற்றியவருக்கு சமீபத்தில் இண்டிகோ விமானத்தில் வேலை கிடைத்தது.
இதை அடுத்து இண்டிகோ விமானத்தில் தனது தாய், பாட்டி மற்றும் சகோதரியைப் பயணிக்க வைத்தார் பிரதீப். சென்னையில் இருந்து சிங்கப்பூர் சென்ற விமானத்தில் மூவரும் முதன்முதலாகப் பயணம் செய்தனர்.
தனது மகன் ஓட்டும் விமானத்தில்தான் முதன்முதலில் செல்ல வேண்டும் என்று காத்திருந்த தாய் மற்றும் பாட்டியின் கனவை நிஜமாக்கினார் பிரதீப் கிருஷ்ணன்.
இதுதொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில் விமானத்தை ஓட்ட ஆரம்பிக்கும் முன் பிரதீப் கிருஷ்ணன், தாய் மற்றும் பாட்டியின் காலில் விழுந்து ஆசி வாங்குகிறார். இதைக் கண்ட தாய் நெகிழ்கிறார்.
https://www.facebook.com/nagarjun.dwarakanath/videos/10157306739364252/
இந்த வீடியோவை பிரதீப் கிருஷ்ணனின் நண்பர் நாகார்ஜூன் துவாரகநாத் பகிர்ந்துள்ளார்.