கிருஷ்ணகிரியில் மீண்டும் ஒரு சம்பவம்: காதல் திருமணம் செய்த தம்பதியை காரில் விரட்டிய உறவினர் கும்பல்

ஆணவகொலை நடந்த பத்து நாட்களில் மீண்டும் ஒரு சம்பவமாக, கிருஷ்ணகிரிக்கு அருகே காதல் திருமணம் செய்த இளம் தம்பதியை 3 கார்களில் உறவினர்கள் விரட்ட உயிரைப்பாதுகாக்க காவல் நிலையத்தில் தஞ்சமடைந்தனர்.

கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி அடுத்த வெங்கடேஷ்புரம் பகுதியை சேர்ந்தவர் நந்தீஷ்(22) ஸ்வாதி (19) தம்பதிகள் ஸ்வாதியின் பெற்றோர் மற்றும் உறவினரால் கொடூரமாக கொல்லப்பட்டனர். இதில் 6 பேர் கைதாகினர். ஆணவக்கொலை நடந்து அந்த சூடு அடங்குவதற்குள் மீண்டும் ஒரு சம்பவம் இன்று கிருஷ்ணகிரியில் நடந்துள்ளது. இதில் இளம் தம்பதியினர் காரில் விரட்டப்பட அவர்கள் தப்பித்து காவல் நிலையத்தில் தஞ்சமடைந்தனர்.

கிருஷ்ணகிரி மாவட்டம் கல்லாவியை அடுத்த கருவாணூர் கிராமத்தை சேர்ந்தவர் சிவக்குமார் (33). இவர் குறவர் சமுதாயத்தைச் சேர்ந்தவர். சொந்தமாக கார் வைத்து ஊத்தங்கரையில் ஒரு டிராவல்ஸில் ஓட்டி வருகிறார்.

கல்லாவியை அடுத்த வெங்கடதாம்பட்டியில் வசிப்பவர் செட்டிக்குமார், இவரது மகள் சுகன்யா (21) இவர் பிஎஸ்ஸி கணிதம் படித்துவிட்டு தனியார் கல்லூரி ஒன்றில் பணியாற்றி வருகிறார்.

சிவகுமாருக்கும், சுகன்யாவுக்கும் நட்பு ஏற்பட்டு காதலாகி கடந்த 4 ஆண்டுகளாக காதலித்து வந்தனர். இவர்கள் காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததை அடுத்து கடந்த 16-ம் தேதி இருவரும் போச்சம்பள்ளி அருகேயுள்ள பழனி ஆண்டவர் முருகன் கோவிலில் திருமணம் செய்துக்கொண்டனர்.

இந்நிலையில் அவர்களை, மணப்பெண் சுகன்யாவின் உறவினர்கள் தேடி வந்தனர். தங்கள் திருமணத்தை பதிவு செய்ய சிவகுமாரும், சுகன்யாவும் போச்சம்பள்ளி சப்.ரெஜிஸ்ட்ரார் அலுவலகத்தில் விண்ணப்பித்திருந்தனர். இன்று திருமணம் பதிவு செய்வதாக இருந்தது.

இன்று மதியம் மணமக்கள், தங்கள் நண்பர்கள் உறவினர்களுடன் பனங்காட்டூரிலிருந்து தங்கள் காரில் போச்சம்பள்ளி சப்ரெஜிஸ்ட்ரார் அலுவலகம் நோக்கி வந்துக் கொண்டிருந்தனர். போச்சம்பள்ளி பிரதான சாலையில் வரும்போது அவர்களை இரண்டு கார்களில் சுகன்யாவின் உறவினர்கள் துரத்த ஆரம்பித்தனர்.

சினிமா படம்போல் கார் சேசிங் நடந்த நிலையில் பிரதான சாலையில் இருந்த போச்சம்பள்ளி காவல் நிலையத்தில் காரை உள்ளே விட்டு மணமக்கள் இன்ஸ்பெக்டர் கமலேஷிடம் தஞ்சமடைந்தனர். காவல் நிலையத்தில் மணமக்கள் தஞ்சமடைந்ததை கண்ட துரத்திவந்த கும்பல் தங்கள் கார்களை திருப்பிக்கொண்டு பறந்தது.

மணமக்களை விசாரித்த ஆய்வாளர் கமலேஷ் அவர்கள் தரப்பில் எந்த பிரச்சினையும் இல்லை என்பதை புரிந்துக்கொண்டு இதுப்பற்றி விசாரணை நடத்த கிருஷ்ணகிரி மகளிர் காவல் நிலையத்துக்கு அனுப்பி வைத்தார். அவர்கள் உயிருக்கு ஆபத்து ஏற்படாமல் இருக்க போலீஸ் வாகனத்திலேயே அவர்களை அனுப்பி வைத்தார்.

தற்போது தம்பதி மற்றும் உறவினர் கிருஷ்ணகிரி மகளிர் காவல் நிலையத்தில் விசாரிக்கப்பட்டு வருகின்றனர். மணப்பெண் சுகன்யா வீட்டாரையும் வரவழைத்து விசாரணை நடத்த உள்ளனர். ஏற்கெனவே ஆணவக்கொலை ஒன்று நடந்த நிலையில் தற்போது இந்த விவகாரத்தை போலீஸார் மிகவும் கவனமாக விசாரிக்கின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here