நாடாளுமன்றைக் கலைக்கும் ஜனாதிபதியின் உத்தரவுக்கு உயர் நீதிமன்றால் இடைக்காலத் தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில் நாடாளுமன்றை மீளக் கூட்டிய சபாநாயகருக்கு எதிராக முன்னாள் கடற்படைத் தளபதி ரியட் அட்மிரல் சரத் வீரசேகர தாக்கல் செய்த மனு வரும் டிசெம்பர் 4,5 மற்றும் 6ஆம் திகதிகளில் விசாரணைக்கு எடுக்கப்படும் என்று அறிவித்து உயர் நீதிமன்றம் மனுவை ஒத்திவைத்தது.
நாடாளுமன்றைக் கலைக்கும் ஜனாதிபதியின் உத்தரவுக்கு அமைவான வர்த்தமானி அறிவிப்புக்கு எதிராக ஐக்கிய தேசியக் கட்சி, தமிழ் தேசியக் கூட்டமைப்பு உள்ளிட்ட அரசியல் கட்சிகள், பொது அமைப்புகள் மற்றும் தனிநபர்கள் தாக்கல் செய்த 12 அடிப்படை உரிமை மனுக்களை ஆராய்ந்த உயர் நீதிமன்றம் அந்த வர்த்தமானி அறிவிப்பு வரும் டிசெம்பர் 7ஆம் திகதிவரை இடைக்காலத் தடைவிதித்தது.
அந்த மனுக்கள் மீதான விவாதம் வரும் டிசெம்பர் 4,5 மற்றும் 6ஆம் திகதிகளில் நடைபெறவுள்ள நிலையில் சபாநாயகருக்கு எதிரான மனுவும் அதே தினங்களில் விவாதத்தக்கு வருகிறது.
நாடாளுமன்றைக் கலைக்கும் ஜனாதிபதியின் உத்தரவுக்கு எதிராக உயர் நீதிமன்றால் இடைக்காலத் தடை விதிக்கப்பட்டுள்ளது. எனினும் சபாநாயகர் நாடாளுமன்றைக் கூட்டியமையால் மக்களின் அடிப்படை மீறப்பட்டுள்ளதாக மனுதாரரான சரத் வீரசேகர மனுவில் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்த அடிப்படை உரிமை மனுவில் சபாநாயகர், சட்டமா அதிபர், நாடாளுமன்றின் பொதுச்செயலாளர் ஆகியோர் பிரதிவாதிகளாக் குறிப்பிடப்பட்டுள்ளனர்.
இந்த நடவடிக்கை மூலம் சபாநாயகர் உள்ளிட்ட பிரதிவாதிகள் இலங்கையின் அரசியலமைப்பை மீறியுள்ளதாக அறிவிக்குமாறு கோரியே ரியட் அட்மிரல் சரத் வீரசேகரவால் இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
கலைக்கப்பட்ட நாடாளுமன்றத்தை மீண்டும் கூட்டுவதற்கு நாடாளுமன்ற செயலாளர் நாயகத்திற்கோ, சட்ட மாஅதிபருக்கோ அதிகாரம் இல்லை என மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த மனு பிரதம நீதியரசர் நளின் பெரேரா தலைமையிலான உயர் நீதிமன்ற நீதியரசர்கள் குழாம் முன்னிலையில் இன்று (23) வெள்ளிக்கிழமை விசாரணைக்கு எடுக்கப்பட்டது. மனுதாரர் சார்பில் முன்னிலையான சட்டத்தரணியின் சமர்ப்பணத்தை ஆராயந்த உயர் நீதிமன்ற நீதியரசர்கள் குழாம், மனுவை வரும் டிசெம்பர் 4,5 மற்றும் 6ஆம் திகதிகளில் விவாதத்துக்கு எடுப்பது எனத் தீர்மானித்து ஒத்திவைத்தது.