சம்பிரதாயங்களை கடைப்பிடிக்கும்படி சபாநாயகருக்கு கூறியுள்ளேன்: பொதுநலவாய செயலாளரை சமாளித்த மைத்திரி!

நாடாளுமன்றத்தின் நிலையியற் கட்டளைகள் மற்றும் சம்பிரதாயங்களுக்கு ஏற்ப செயற்படுமாறு தான் சபாநாயகரிடம் தெளிவாக குறிப்பிட்டுள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பொதுநலவாய அமைப்பின் செயலாளரிடம் தெரிவித்துள்ளார்.

தன்மீது தவறுகள் இல்லை என்று எடுத்துக் கூறியுள்ள ஜனாதிபதி, நம்பிக்கையில்லா பிரேரணையை ஏற்றுக்கொள்ளாததற்கு அது முறைப்படி நிறைவேற்றப்படாமையே காரணம் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் பொதுநலவாய அமைப்பின் செயலாளர் நாயகம் பரோனஸ் பெற்றீஸியா ஸ்கொட்லான்ட்டுக்கும் இடையே இன்று (23) தொலைபேசி உரையாடல் இடம்பெற்றது.

இந்த தொலைபேசி உரையாடல் தொடர்பில் ஜனாதிபதி ஊடகப் பிரிவு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

“இலங்கையின் அரசியலமைப்பிற்கு ஏற்பவே தான் செயற்படுவதாகவும் ஜனநாயக நடைமுறைகளை தொடர்ந்தும் பேணிவருவதாகவும் ஜனாதிபதி இதன்போது தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தின் நிலையியற் கட்டளைகள் மற்றும் சம்பிரதாயங்களுக்கு ஏற்ப செயற்படுமாறு தான் சபாநாயகரிடம் தெளிவாக குறிப்பிட்டுள்ளதாக ஜனாதிபதி குறிப்பிட்டார்.

அரசின் இருப்பைத் தீர்மானிக்கின்ற மிக முக்கியமானதொரு விடயம் தொடர்பில் நம்பிக்கையில்லா தீர்மானம் ஒன்றை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றும் போது நாடாளுமன்ற உறுப்பினர்களின் குரல்களுக்கு ஏற்ப அல்லாது இலத்திரனியல் வாக்களிப்பு முறைமை அல்லது பெயர்களின் மூலம் உரிய நடைமுறைகளை பேணுமாறும் தான் சபாநாயகரிடம் கேட்டுக்கொண்டதாக ஜனாதிபதி தெரிவித்தார்.

பொதுநலவாய அமைப்பின் நீண்டகால உறுப்பினர் என்ற வகையிலும் ஆசியாவின் பழைமை வாய்ந்த ஜனநாயக நாடு என்ற வகையிலும் இலங்கை ஜனநாயகத்தை கடைப்பிடித்து வருவது தொடர்பில் தான் மகிழ்ச்சியடைவதாக செயலாளர் நாயகம் இதன்போது தெரிவித்தார்.

பொதுநலவாய அமைப்பு தொடர்ந்தும் இலங்கையுடன் நெருங்கிப் பணியாற்றும் என்று உறுதியளித்துள்ள அவர், தற்போதைய அரசியல் நெருக்கடியை இலங்கை இணக்கமான முறையில் தீர்த்துக்கொள்ளும் என்றும் அவர் நம்பிக்கை வெளியிட்டார்“ என குறிப்பிடப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here