போதைப்பொருள் கடத்தல்காரர் சிறையிலிருந்து கடத்தல்!

பிரபல போதைப் பொருள் கடத்தல்காரர்களின் மிக நெருங்கிய சகா என கருதப்படும் ஒருவர், அடையாளம் தெரியாதோரால் சிறைச்சாலையில் இருந்து கடத்திச் செல்லப்பட்டுள்ளது குறித்து பொலிசார் விசாரணைகளை துரிதப்படுத்தியுள்ளனர்.

களுத்துறை சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த சுனில் சாந்த எனும் காலியை சேர்ந்த போதைப் பொருள் வர்த்தகரே வேறு ஒரு வழக்கு நடவடிக்கை தொடர்பில் கேகாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டு பின்னர் கொழும்பில் விளக்கமறியலில் தடுத்து வைக்கப்பட்டிருந்த போது இவ்வாறு கடத்திச் செல்லப்பட்டுள்ளதாக சிறைச்சாலையின் உயர் அதிகாரி ஒருவர் கூறினார்.

சிறைச்சாலை பஸ் வண்டியை ஒத்த பஸ் வண்டியொன்றில் வந்து, களுத்துறை சிறை அதிகாரிகளைப் போன்று போலி ஆவணங்களை சமர்ப்பித்து குறித்த போதைப் பொருள் வர்த்தகரைக் கடத்திச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

எவ்வாறாயினும் இது தொடர்பில் சிறைச்சாலைகள் திணைக்களத்தின் உதவி அத்தியட்சர் ஒருவரின் கீழ் சிறப்பு விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும், அந்த விசாரணைகளின் ஆரம்பகட்டம் பூர்த்தியானதும் கடத்தப்பட்ட முறைமை தொடர்பில் தனக்கு உத்தியோகபூர்வமாக கூறக் கூடியதாக இருக்கும் எனவும் சிறைச்சாலைகள் ஊடகப் பேச்சாளர் சிறை ஆணையாளர் துஷார உப்புல்தெனிய தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் கேகாலை சிறை அதிகாரிகளிடம் நேற்று முன் தினமும் நேற்று களுத்துறை சிறை அதிகாரிகளிடமும் விசாரணை நடத்தப்பட்டு வாக்கு மூலம் பெறப்பட்டதாகவும் இன்று கொழும்பு விளக்கமறியல் சிறை அதிகாரிகளிடம் விசாரணை நடத்த எதிர்ப்பார்ப்பதாகவும் அதன் பின்னர் குறித்த கைதி கடத்தப்பட்ட முறைமை தொடர்பில் உறுதியாக தெரிவிக்க முடியுமாக இருக்கும் என அவர் மேலும் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here