கொழும்பு தமிழருக்கு பொருளாதாரம் குறி.. மலையக தமிழர்களிற்கு வேறு தேவை.. முஸ்லிம்களிற்கு வர்த்தக தேவை… வடக்கு தமிழர்களிற்கே அரசியல் தேவைகள்!

அபிவிருத்தி திட்டங்களில் அக்கறையின்றி வெறும் பேச்சு அரசியலையே செய்து வருகிறார் என வடக்கின் முன்னாள் முதலமைச்சர் க.வி.விக்னேஸ்வரன் மீது அவரது அரசியல் எதிராளிகள் குற்றம்சுமத்தி வரும் நிலையில், அவர்களிற்கு பதிலளித்துள்ளார் விக்னேஸ்வரன்.

தனது வாராந்த கேள்வி பதிலில் இது குறித்து விரிவாக பதிலளித்துள்ளார்.

அவரது ஊடகப்பிரிவு அனுப்பி வைத்த கேள்வி பதில் கீழே இணைக்கப்பட்டுள்ளது.

கேள்வி – பொருளாதார அபிவிருத்தியில் உங்களுக்கு நாட்டமில்லை. வெறுமனே அரசியல் ரீதியாகவே பேசிக் கொண்டிருக்கின்றீர்கள். வெறும் பேச்சு மட்டுமே. காரியம் எதுவும் சாதிக்கவில்லை என்று உங்கள் பற்றி விமர்சனங்கள் எழுந்துள்ளன. இது பற்றி உங்களின் கருத்து?

பதில் – இந்தக் கேள்வியைக் கேட்டமைக்காக எனது நன்றிகளை முதற்கண் தெரிவித்துக் கொள்கின்றேன். பல இடங்களில் இதற்கான எனது கருத்தை ஏற்கனவே தெரியப்படுத்தியிருந்தாலும் இவ்வாறான ஒரு கட்டுரை ரூபத்தில் முழுமையாக வெளிக்கொண்டுவரவில்லை என்றே நினைக்கின்றேன். அந்தக் குறையை உங்கள் கேள்வி நிவர்த்தி செய்துள்ளது.

கொழும்பிலும், வடகிழக்கு தவிர்ந்த ஏனைய இடங்களிலும் இந்த நாட்டில் “வடகிழக்குத் தமிழ் மக்கள் யார்” என்று கேள்வி கேட்டால் அவர்கள் இந்த நாட்டின் முக்கியமான சிறுபான்மையினர் என்று அடையாளப்படுத்தப்படுவார்கள். ஆனால் உண்மை அதுவன்று. வடகிழக்குத் தமிழர்கள் இந் நாட்டின் மூத்த குடியினர்; வடகிழக்கு மாகாணங்களில் பெரும்பான்மையினர். ஆனால் இலங்கையில் முக்கியமான சிறுபான்மையினர். இதுவே உண்மை. வெறும் சிறுபான்மையினருக்கும் எமது வடகிழக்கு மக்களுக்கும் இடையில் நிறைய வித்தியாசங்கள் உண்டு.

மலையகத் தமிழ்ச் சகோதர சகோதரிகள் வெள்ளைக்காரர் காலத்தில் தென்னிந்தியாவில் இருந்து இந்த நாட்டுக்கு கொண்டுவரப்பட்டவர்கள். தொண்டைமான் போன்ற குடும்பத்தினருக்கு இன்றும் அங்கு காணி, பூமி, வீடுகள் இருக்கின்றன. அவர்களின் அரசியல் உரித்துக்கள் 1949ம் ஆண்டில் பறிக்கப்பட்டன. பலவித போராட்டங்களின் ஊடாகப் பறிக்கப்பட்ட உரித்துக்கள் படிப்படியாகத் திரும்பக் கையளிக்கப்பட்டு வந்துள்ளன. அவர்களுக்குத் தற்போது பிரதானமாக வேண்டியது கல்வியில் மேம்பாடும் பொருளாதார அபிவிருத்தியுமே.

கொழும்புத் தமிழர்கள் தம்மை சிறுபான்மையினராகவே அடையாளப்படுத்தி பெரும்பான்மையினருடன் இணைந்து பொருளாதார அபிவிருத்தியிலேயே கண்ணுங் கருத்துமாக உள்ளனர். அவர்களுக்கு முக்கியம் வேண்டியது பொருளாதார மேம்பாடு. அவர்களுள் பெரும்பான்மையோர் வசதி படைத்தவர்கள்.

எமது முஸ்லீம் சகோதரர்களை எடுத்துப் பார்த்தோமானால் அவர்கள் பாரம்பரியமாக வியாபாரங்களில் ஈடுபட்டு வந்த ஒரு சமூகத்தினர். பதியுடீன் முஹ்மூட் அவர்களின் தீர்க்க தரிசனத்தால் இன்று ஒரு புத்தி ஜீவிகள் சமூகமாகவும் பரிணமித்துள்ளார்கள். ஆனால் அடிப்படையில் அவர்கள் பொருளாதார அபிவிருத்திக்கே முதலிடம் கொடுத்து வருகின்றனர். தமது தாய் மொழியாம் தமிழ் மொழியுடன் சிங்களம், ஆங்கிலம் ஆகிய மொழிகளைக் கற்று சிங்கள சகோதர சகோதரிகளுடன் கூடி, கூட்டிணைந்து பொருளாதார அபிவிருத்தியிலேயே நாட்டம் காட்டி வருகின்றனர்.
வடகிழக்கு மாகாண மக்கள் அப்படியல்ல. அவர்கள் தமது உரிமைகளைப் பறிகொடுத்து நிற்பவர்கள்.

வடகிழக்கு மக்களுக்கு என்ன நடந்தது? அவர்கள் நாடு பூராகவும் ஆங்கிலேயர் காலத்தில் பரவி விரவியிருந்தார்கள். 1958 ம் ஆண்டில் இருந்து 1983ம் ஆண்டு வரை அரசாங்கங்களின் அனுசரணையுடன் இயற்றப்பட்ட கலவரங்களினால் தெற்கில் இருந்த வடகிழக்குத் தமிழர்கள் தென்பகுதிகளில் இருந்து விரட்டியடிக்கப்பட்டார்கள்.

1983ம் ஆண்டின் கலவரத்தில் கொழும்பிலும் அதன் சுற்றுப் புறங்களிலும் இருந்த வடகிழக்குத் தமிழர்கள் சிலர் கொலை செய்யப்பட்டு, பலர் துன்புறுத்தப்பட்டு, உடைமைகளைப் பறிகொடுத்து நின்ற நிலையில், அவர்களும் அடித்து விரட்டப்பட்டார்கள். அதாவது நாடு பூராகவும் சிங்கள மக்களுடன் சுமூகமாக வாழ்ந்து வந்த வட கிழக்குத் தமிழர்கள் தமது உரிமைகளை வலியுறுத்தியதால் தொடர்ந்து தெற்கில் இருந்து விரட்டப்பட்டார்கள். பலர் வெளிநாடுகளில் தஞ்சம் புகுந்தனர். சிலர் வடகிழக்கு மாகாணங்களுக்குத் திரும்ப வந்தனர். ஆனால் அங்கும் அவர்கள் நிம்மதியாக வாழவிடப்படவில்லை. கல்வியில் சமநிலைப்படுத்தல், சிங்களக் குடியேற்றங்கள், அரசாங்க அலகுகளின் அடாவடித்தனம் என்று குறிப்பாகத் தமிழ் இளைஞர் யுவதிகள் துன்புறுத்தப்பட்டார்கள்.

தெற்கில் இருந்து விரட்டப்பட்ட தமிழ் மக்களின் வாரிசுகளும் அவர்களுக்கு நடந்த இன்னல்களைக் கண்ணுற்ற ஏனையவர்களின் வாரிசுகளும் சேர்ந்தே ஆயுதங்கள் தூக்கினர். தாங்கள் பெரும்பான்மையாக வாழ்ந்து வந்த வடகிழக்கு இடங்களை போரின் போது ஓரளவு பாதுகாத்து அங்கு குடியேற்றங்கள், பெரும்பான்மை சமூகத்தின் உள்ளீடல்கள் நடைபெறாமல் பார்த்துக் கொண்டனர். ஆனால் ஆயுதங்கள் மௌனிக்கப்பட்ட போது வடகிழக்கு ஆக்கிரமிப்பு பெரிய விதத்தில் நடைபெறத் தொடங்கியது. இராணுவக் குடியிருப்பு, வடகிழக்குக் காணிகள் கையேற்பு, சிங்களக் குடியேற்றங்கள், தெற்கத்தைய முதலீடுகள், பல்கலைக்கழக உள்ளீடுகள், கனிய வளச் சூறையாடல்கள், காடழித்தல் போன்ற பல நடவடிக்கைகள் அரசாங்கத்தால் அல்லது அரச அனுசரணையுடன் நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில்த்தான் உங்கள் கேள்வி கேட்கப்படுகின்றது.

வடகிழக்குத் தமிழ் மக்கள் மற்றைய சிறுபான்மையோர் போலல்லாது தமது முன்னுரிமைகளை (Priorities) முன்னிலைப்படுத்த வேண்டிய ஒரு கடப்பாடு அவர்களுக்கு உண்டு. கொழும்புத் தமிழர்களுக்கு, முஸ்லீம் சகோதரர்களுக்கு, மலையகத் தமிழ்ச் சொந்தங்களுக்கு முக்கியமாகத் தேவைப்படுவது பொருளாதார அபிவிருத்தியே.

வடகிழக்கு மக்களுக்கு உடனே தேவையானது என்ன? என் கருத்துப்படி அரசியல் தீர்வே முக்கியம். பொருளாதார அபிவிருத்தி எமது மக்களின் வாழ்க்கை நிலையைப் பொருளாதார ரீதியாக மேம்படுத்தும். ஆனால் அரசியல் ரீதியாக எம்மைத் தொடர்ந்து இரண்டாந்தரக் குடிமக்களாகவே வாழ இடம் அளிக்கும். எமது உரிமைகள், உரித்துக்கள் படிப்படியாக எம்மிடம் இருந்து பறிக்கப்பட்டு வருகின்றன. அதற்கு முற்றுப்புள்ளி போடாமல் பொருளாதார அபிவிருத்தியே முக்கியம் என்று அதனுள் முழுமையாக நுழைந்து விட்டோமானால் தெற்கின் ஊடுறுவலைக் கட்டுப்படுத்த முடியாமல் போய்விடும். இப்பொழுதே அது நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது. பொருளாதார அபிவிருத்தியின் போது அது பன் மடங்கு அதிகமாகும்.

உதாரணம் ஒன்றைத் தருகின்றேன். ஒரு இலட்சத்துக்கும் அதிகப்படியான அரச படையினர் வடமாகாணத்தில் நிலைநிறுத்தப்பட்டுள்ளார்கள். எமது மக்களைத் துன்புறுத்தி, கொன்று குவித்து, உடமைகளை இல்லாதாக்கி, சிலரை முடவர்கள் ஆக்கி, கண் இழந்தவர்கள் ஆக்கி, நடைப்பிணங்கள் ஆக்கிய இராணுவத்தினர் தமக்குக் குடியிருக்கக் காணிகள் கேட்கின்றார்கள். அவற்றைத் தமது பூரண உடமைகளாக்கக் கேட்கின்றார்கள். மக்களுக்கு வீடுகள் கட்டிக் கொடுக்கப் போகின்றோம், வாழ்வாதாரங்கள் கொடுக்கப் போகின்றோம் என்கின்றார்கள்.

ஆனால் முதலமைச்சராக நான் இருந்த வரையில் அவ்வாறான கோரிக்கைகளை நிராகரித்துள்ளேன். இராணுவத்தினரை வெளியகற்றவே எமக்கு மக்களின் ஆணை கிடைத்தது. அவர்களை நிரந்தரமாக இங்கு குடியிருக்கச் செய்ய அல்ல. சிலர் கேட்கின்றார்கள் “ஏன் இராணுவத்தினரைப் பகைத்துக் கொள்கின்றீர்கள்? அவர்கள் கேட்டவற்றைக் கொடுத்தால் என்ன? தற்போது இராணுவம் வீடு கட்டிக் கொடுக்கின்றார்கள், எமது இடங்களைத் திரும்பிக் கையளிக்கின்றார்கள், பல உதவிகளைச் செய்து வருகின்றார்கள் அப்படியிருக்கும் போது அவர்கள் கேட்கும் காணிகளைக் கொடுத்தால் என்ன?” என்று கேட்கின்றார்கள்.

அதற்கு நான் கூறும் பதில் இராணுவத்தினருடன் எனக்குப் பகை ஏதும் இல்லை. ஆனால் அவர்களின் கோரிக்கைகளுக்கு இடம் அளித்தால் வனாந்தரத்தில் மனிதன் படுக்கும் கூடாரத்தினுள் ஒட்டகத்தை உள்நுழைய விட்ட கதையாகிவிடும். காலக்கிரமத்தில் ஒட்டகம் உள்நுழைய மனிதன் வெளியே அப்புறப்படுத்தப்பட்டு விடுவான்.

இராணுவத்தினர் தமது போர்க் கடமைகள் முடிவுற்றதும் அவர்களின் தலைமையகப் பாசறைகளுக்குத் திரும்பியிருக்க வேண்டும். அவ்வாறு திரும்பாது 10 வருடங்களாக இங்கு தரித்து நிற்பது எம்மைக் கண்காணித்து எம்மைத் தமது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கவே. இராணுவம் என்பது அரச ஆதிக்கத்தின் சின்னம். பெரும்பான்மையினர் அதிகாரத்தின் பிரதிபலிப்பு. அரச அகந்தையின் பிம்பம்.

தொடர்ந்து அவர்களை இங்கு தரித்து நிற்க விடுவதால் ஏற்பட்டுக் கொண்டிருக்கும் கெடுதிகள் சில பின்வருமாறு – எமது காணிகள் பலவற்றை அவர்கள் கையேற்று அவற்றின் வருமானங்களைத் தாம் பெற்றுக் கொள்கின்றார்கள். அந்தக் காணிச் சொந்தக் காரர்கள் இன்னமும் முகாம்களில் அல்லது வெறெங்கோ வாழ்கின்றார்கள். விடுபட்ட காணிகளுக்குக் கூடத் திரும்ப முடியாது தவிக்கின்றார்கள்.

இராணுவத்தினர் சுற்றுலாத் தளங்கள், மற்றும் உணவகங்களை நடாத்துகின்றார்கள். கடைகளை முகவர்கள் ஊடாக ஏ9 வீதி நெடுக நடாத்துகின்றார்கள். எமது கரையோர மீனவர்களின் அன்றாட வாழ்க்கையில் கைவைக்கின்றார்கள். வெளியில் இருந்து மீன் பிடிக்க வருவோருக்கு இராணுவ அனுசரணை வழங்கி அதற்கான இலாபங்களை அவர்களிடம் இருந்து பெற்றுக் கொள்கின்றார்கள். எமது பெண்களுடன் திருமணங்கள் நடைபெறுகின்றன. தெற்கில் ஒரு குடும்பம், வடக்கில் ஒரு குடும்பம் நடத்துபவர்கள் பற்றி அறிய வந்துள்ளன. எமது யுவதிகளை முன்வைத்து கூடிய சம்பளத்துக்கு முன்பள்ளிகளை நடாத்துகின்றார்கள். இராணுவ கையாட்களாக முன்பள்ளி ஆசிரியைகள் மாறி வருகின்றார்கள். சீருடைகள் அணிய வேண்டியுள்ளார்கள். பொருளாதார ரீதியாகப் பாதிக்கப்பட்ட எமது முன்னாள் போராளிகள் பலர் இராணுவத்தினருக்காகப் பணத்திற்காக ஒற்றர் வேலைகள் செய்து வருகின்றனர். அவர்கள் ஊடாக அரசியல் நடத்தவும் இராணுவத்தினர் முனைந்து வருகின்றார்கள். இந்த நிலை தொடர்ந்தால் என்னவாகும்?

இராணுவம் எம்முள் ஒரு சமூக அலகாக ஊடுறுவி விடும். ஏற்கனவே தெற்கின் கலாச்சாரம் இங்கு ஊடுருவி வருகின்றது. நல்லிணக்கம் என்ற பெயரில் எமது பாரம்பரியங்கள் சிதைக்கப்பட்டு வருகின்றன. உள்நாட்டு எமது நிறுவனங்களுக்குச் சிங்களப் பெயர்கள் சூட்டப்பட்டு வருகின்றன. எமது கலை, கலாச்சாரம், வாழும் முறை யாவும் வெளியார் ஊடுறுவலுக்கு ஆளாகி வருகின்றன. எம்முள் போரின் போது பொருளாதார ரீதியாகப் பாதிக்கப்பட்ட மக்கள் இவ்வாறான ஊடுறுவல்களுக்கு இலேசாக ஆளாகி விடுகின்றார்கள். இராணுவத்தினரை மகிழ்விக்க வேண்டும் என்றே சில காரியங்களில் ஈடுபட்டும் வருகின்றார்கள்.

எமது இந்து மக்களின் சாதி வேறுபாடுகள் மற்றும் எமது மக்களின் வறுமை நிலை எவ்வாறு மதமாற்றத்தை வட கிழக்கு மாகாணங்களில் நிலைபெறச் செய்தன என்பது எல்லோருக்கும் தெரிந்த விடயம். ஆனால் அவர்கள் மதமாற்றத்தின் பின்னரும் தமிழர்களாகவே வாழ்கின்றார்கள். ஆனால் இன்றைய பெரும்பான்மை மக்களின் புதிய ஊடுறுவல் இனவழிப்பாக அதை மாற இடம் அளித்து விடும் என்பதே உண்மை. ஏற்கனவே மகாவெலி அதிகாரசபை கொண்டுவந்த சிங்களக் குடியேற்றங்கள் வடகிழக்கு மாகாணங்களில் நிலைபெற்றுவிட்டன. அவை தற்போது பெருகத் தொடங்கியுள்ளன. உள்ளுராட்சி சபைப் பிரதிநிதித்துவத்தில் இந்தப் பெருக்கம் பிரதிபலித்து வருகின்றது.

இதற்கேற்றாற்போல் எமது மக்கள் எவ்வகையேனும் வெளிநாட்டுக்குச் செல்வதே உசிதம் என்ற நினைப்பில், இருப்பதை எல்லாம் விற்று வெளிநாடுகளுக்குச் செல்ல எத்தனித்து வருகின்றார்கள். சிலர் சென்று விடுகின்றார்கள். பலர் பணத்தை இழந்து நிர்க்கதியாய் நிற்கின்றார்கள். இராணுவத்தினரை வெளியேற்றினால்த்தான் திட்டமிட்ட அபிவிருத்தியை எமது பிரதேசங்களில் நாம் இயற்ற முடியும். ஊடுறுவல்களைக் கட்டுப்படுத்த முடியும்.

பொருளாதார விருத்தியே முக்கியம் என்ற எதிர்பார்ப்பில் இன்று தென்னவர்களின் ஊடுறுவல் பொருளாதார ரீதியாக இங்கு பெருகப் பார்க்கின்றது. அவர்களுட் பலர் வியாபாரிகள். எமது வளங்களைச் சூறையாடி விற்று வளம் பெறவே அவர்கள் கண்ணும் கருத்துமாக இருக்கின்றார்கள். நேரடியாக எமது புலம்பெயர் தமிழ் மக்கள் மாகாண சபைகளுடன் சேர்ந்து முதலீடு செய்வதை அரசாங்கம் விரும்பவில்லை. அதனால்த்தான் முதலமைச்சர் நிதியத்தை ஐந்து வருடகாலமாக மத்திய அரசாங்கங்கள் முடக்கி வைத்துள்ளன. ஆகவே இந்தப் பொருளாதார அபிவிருத்தி என்பதன் தாற்பரியத்தை நாங்கள் நன்கு புரிந்து கொள்ள வேண்டும். தெற்கத்தைய முதலீட்டாளர்கள் பலர் முக்கியஸ்தர்களுக்கு முதலைத்தந்து தாங்கள் முதலாளிகளாக முன்னேறவே பார்க்கின்றார்கள். தகைமை அறிக்கைகள், சுற்றாடல்ப் பொருத்தம் பற்றிய அறிக்கைகள், மண், நீர், மின்சாரம் பற்றிய அறிக்கைகள் பெற்று எமது திட்டங்களுக்கு அமைவாக பொருளாதார மேம்பாட்டில் உள்நுழைய விரும்புகின்றார்கள் இல்லை. வந்ததும் வளங்களைப் பெற்று வருமானம் பெறவே எத்தனிக்கின்றார்கள்.

உதாரணத்திற்கு மன்னாரில் தொடங்கயிருந்த தோல் பதனிடும் தொழிற்சாலையைக் குறிப்பிடலாம். தோல் பதனிடும் போது நச்சுப் பதார்த்தங்கள் வெளிவருவதையும் அதிகப்படியான நீர் அந்த செயற்றிட்டத்திற்கு வேண்டியிருப்பதையும் மேலும் சில காரணங்களைக் கருதியும் நாங்கள் குறித்த பொருளாதார உள்நுழைவுக்கு அனுமதி கொடுக்காது விட்டோம். உடனே நாங்கள் பொருளாதார விருத்திக்கு எதிரானவர்கள், வெளியார் முதலீடுகளைப் புறக்கணிப்பவர்கள் என்றும், தம்மிடம் எதனையோ எதிர்பார்க்கின்றோம் என்றும், தராததால்த்தான் அனுமதி வழங்கப்படவில்லை என்றும் இணையத் தளங்களில் எம்மை வெகுவாக விமர்சிக்கத் தொடங்கினார்கள். இது இவ்வளவுக்கும் குறித்த செயற்றிட்டம் ஹம்பாந்தோட்டையில் அனுமதி வழங்காத நிலையிலேயே இங்கு கொண்டுவரப்பட்டது.

இனி உங்கள் கேள்விக்கு வருகின்றேன்.

வடகிழக்கின் பொருளாதார விருத்தியில் நான் மிகவும் பற்றுறுதியுடையவனாக இருக்கின்றேன். ஆனால் எவ்வாறான முதலீடுகள், எவற்றிற்கான முதலீடுகள், யாரால் கொண்டுவரப்படும் முதலீடுகள், அவற்றின் தூரகாலப் பாதிப்புக்கள் என்ன என்பன போன்ற பலவற்றிலும் கண்ணும் கருத்துமாய் உள்ளேன். மேலும் பெயர் வாங்குவதற்காகவும், மற்றைய தனிப்பட்ட நன்மைகள் கருதியும், பாரிய செயற்றிட்டங்களை வெகுவாக ஆய்ந்தறியாது அனுமதிக்க நான் விரும்பவில்லை.

தனிப்பட்ட நிதி ரீதியான அல்லது வேறு நன்மைகள் எனக்குத் தேவையில்லை. எம் மக்களின் தூரகால நன்மைகளே எனது கரிசனை. வெளியார் உள்ளே நுழைந்து எமது கலை, கலாச்சார விழுமியங்களை, எமது அமைதி சூழலை, எமது பாரம்பரியங்களை அழிக்க என்னால் இடம் கொடுக்க முடியாது. தெற்கில் ஹிக்கடுவேக்கு நேர்ந்த கதி இங்கும் எழ அனுமதிக்க முடியாது.

அவ்வாறெனின் எமது வறுமை நிலையில் வாழும் மக்களுக்கு என்ன பதில் என்று கேட்பீர்கள். சிறிய, மத்திம முதலீடுகளின் ஊடாக நாம் கிராமிய மக்களின் வாழ்வாதாரங்களை மேம்படுத்தி வந்துள்ளோம். பல தொழில்களில் சுயநிறைவு பெற ஊக்குவித்து வந்துள்ளோம். சிறிது சிறிதாகப் பெருகச் செய்வதே எமது கொள்கை.

பாரிய செயற்றிட்டங்களை உள் நுழைய விடாததாலேயே என்மீது இந்தக் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது. சுமத்தியவர்கள் எவ்வாறெனினும் வடக்கில் தடம் பதித்து வட மாகாண வளங்களை அள்ளிச் செல்ல விழைந்துள்ளவர்களே. அவர்களே பல அரசியல்வாதிகளையும் எம்மீது ஏவி விடுகின்றார்கள். இவற்றிற்கெல்லாம் நாங்கள் பயந்தால் வட மாகாணம் தனது தகைமையை இழந்து விடும், தனித்துவத்தைப் பறிகொடுத்து விடும். வெளியார்களின் கைப்பொம்மையாகி விடும்.

சில அரசியல்க் கட்சிகள் இதனையே வேண்டி நிற்கின்றன. மற்றைய மாகாணங்கள் போல் ஏன் நீங்கள் பாரிய செயற்றிட்டங்களுக்கு இடம் கொடுக்கின்றீர்கள் இல்லை என்று கேட்கின்றார்கள். நாங்கள் செயற்றிட்டங்களுக்கு எதிரில்லை. அவை எமது பாரம்பரியத்தைச், சூழலை, விழுமியங்களை விழுங்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும். பாரிய இடப் பெயர்வுகள் கிராமங்களில் இருந்து நகரப்புறத் தொழிற்சாலைகள் நோக்கி இடம் பெறுவதை நாங்கள் விரும்பவில்லை. இருக்கும் இடத்தில் இருந்தே மக்கள் பொருளாதார விருத்தி பெற நாங்கள் திட்டங்களைத் தீட்டியுள்ளோம். அத் திட்டங்களை நடைமுறைப்படுத்தியும் வருகின்றோம். ஆகவே சாதிக்கவில்லை என்று கூறுபவர்கள் நாங்கள் ஐந்து வருடங்களில் சாதித்தவை பற்றிக் கூறியுள்ள கையாவணத்தைப் பரிசீலித்துப் பாருங்கள். நாங்கள் சிறுகச் சிறுகச் செய்து மக்கள் நலனைப் பெருகச் செய்யவே விரும்புகின்றோம். பெரியவைகளைத் தகாதவர்களிடம் இருந்து உள்ளேற்று எமது நிலைகளில் இருந்து நாம் காற்றடித்துச் செல்லப்பட ஆயத்தமாக இல்லை. என்னுடைய காரியங்கள் கொள்கை ரீதியானவையே ஒளிய பிரபல்யம் பெறச் செய்பவைகள் அல்ல.

நீதியரசர் க.வி.விக்னேஸ்வரன்
முன்னாள் முதலமைச்சர்
வடமாகாணம்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here