சிறிதரனின் கையைப் பிடித்து கையெழுத்து வைக்க கேட்ட ரணில்!

நாடாளுமன்றத்தில் மஹிந்த ராஜபக்ச அரசு அமைக்கப்பட்ட விதத்திற்கு எதிராக இரண்டு நம்பிக்கையில்லா பிரேரணைகள் நிறைவேற்றப்பட்டு விட்டன. இருந்தாலும், மஹிந்த ராஜபக்ச பதவி விலகவில்லை.

புதிய அரசாங்கம் அமைக்கப்பட்ட விதத்திற்கு எதிராகவும், பிரதமர் மஹிந்த ராஜபக்சவிற்கு எதிராகவும் நிறைவேற்றப்பட்ட நம்பிக்கையில்லா பிரேரணைகளில் 122 எம்.பிக்கள் ஆதரவாக வாக்களித்திருந்தனர். இந்த எண்ணிக்கையில் ஒன்றும் குறையக்கூடாது என்பதில் ஐ.தே.க கவனமாக இருக்கிறது.

இன்றைய தினம், நாடாளுமன்ற தெரிவுக்குழுவிற்காக நடத்தப்பட்ட வாக்கெடுப்பில் 121 வாக்குகள்தானே பதிவாகின, ஒன்று எங்கே போனது என யாராவது யோசிக்கலாம்.

அந்த ஒன்று சத்து சேனநாயக்கா. அவர் நாடாளுமன்றத்திற்கு வர தாமதமாகி விட்டது. அதனால் ஒரு வாக்கு குறைந்தது. ஆனால், மஹிந்தவிற்கு எதிரான 122 எம்.பிக்களும் அப்படியே இருக்கிறார்கள்.

மஹிந்த மீதான நம்பிக்கையில்லா பிரேரணைக்கு ஆதரவாக வாக்களித்த அந்த 122 வாக்குகளும், ஐ.தே.கவிற்கு ஆதரவான வாக்குகளாக மாறாது என்பதே இப்போது  ஐ.தே.க, த.தே.கூட்டமைப்பிற்கு உள்ள சிக்கல். அது சி.சிறிதரன் எம்.பி வடிவில் வந்துள்ளது. சிறிதரன் மட்டுமே சிக்கலாக இருக்கிறார் என கூட்டமைப்பின் தலைமை ஏற்கனவே ஐ.தே.கவிடம் தெரிவித்து விட்டார்கள்.

மஹிந்த அரசிற்கு எதிராக உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்ய நடக்கும் முயற்சி குறித்து ஏற்கனவே தமிழ்பக்கத்தில் குறிப்பிட்டுள்ளோம். இதற்காக இன்று நாடாளுமன்றத்திற்குள், மஹிந்தவிற்கு எதிராக வாக்களித்தவர்களிடம் சத்தியக்கடதாசி வாங்கும் பணி நடந்தது.

இன்று தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற குழு கூட்டத்தில் சத்தியக்கடதாசிகளில் கையொப்பமிடப்பட்டது. இதன்போது சிறிதரன் எதிர்ப்பு தெரிவித்ததை தமிழ்பக்கம் எற்கனவே வெளியிட்டிருக்கிறது.

இந்த கூட்டத்தில் சிறிதரன் ஒரு தகவலை வெளியிட்டுள்ளார்.

“இந்த கூட்டத்திற்கு வருவதற்கு முன்பாக ரணில் விக்கிரமசிங்க நாடாளுமன்றத்திற்குள் என்னை கண்டார். எனது கையை பிடித்து, சத்தியக்கடதாசியில் கையொப்பமிட்டு விட்டு செல்லுங்கள் என கேட்டார். தலைவருடன் கதைத்துவிட்டு, அதை செய்கிறேன் என நாசூக்காக கூறிவிட்டு வந்தேன்“ என்ற தகவலை வெளியிட்டார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here