யாழ் நகர்ப்பகுதியில் பொலிசார் மற்றும் இராணுவத்தினர் மீது தாக்குதல் மேற்கொண்ட பிக்கு ஒருவர் நேற்று யாழ்ப்பாணம் பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
சாட்டி படை முகாமில் உள்ள கடற்படையினர் இருவர் நேற்று அதிகாலை யாழ் நகர் பகுதியில் உள்ள கடைக்கு வந்துள்ளனர். அப்போது அந்த பகுதியில் நின்றிருந்த பிக்கு ஒருவர் சிறிய கத்தி ஒன்றினால் கடற்படை சிப்பாயின் முகத்தில் கீறி காயப்படுத்தியுள்ளார்.
குறித்த சம்பவம் தொடர்பாக காயமடைந்த கடற்படை சிப்பாய் யாழ் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு ஒன்றை பதிவு செய்துள்ளார்.
பின்னர் நேற்று இரவு யாழ் நகர்ப்பகுதியில் நடமாடிய குறித்த பிக்கு அப்பகுதியில் சென்ற இராணுவத்தினர் மற்றும் பொலிசாரிடைய வாகனங்களின் மீது கல்லால் எறிந்து தாக்குதல் நடத்தியுள்ளார்.
மேற்குறித்த சம்பவம் தொடர்பாக பொலிசாருக்கு தெரியப்படுத்தப்பட்டதை தொடர்ந்து அவ்விடத்துக்கு வந்த பொலிசார் குறித்த பிக்குவை கைது செய்துள்ளனர். தற்போது அவர் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார். இதுவரை நீதிமன்றத்தில் முற்படுத்தப்படவில்லை.
அவர் மனநிலை பாதிக்கப்பட்டவராக இருக்கலாமென பொலிசார் குறிப்பிட்டனர்.