மன்னார் புதைகுழி வழக்கின் கட்டளை ஜனவரியில்!

மன்னார், திருக்கேதீஸ்வரம், மாந்தை மனித புதைகுழி தொடர்பான வழக்கு விசாரணை கட்டளை எதிர்வரும் ஜனவரி மாதம் 14 ஆம் திகதி வழங்கப்படவுள்ளதாக சட்டத்தரணி வி.எஸ். நிரஞ்சன் தெரிவித்தார். மன்னார் நீதிமன்றத்தில் இன்று (23) நடைபெற்ற விசாரணைகளின் பின்னர் இதனை தெரிவித்தார்.

மாந்தை மனித புதைகுழி தொடர்பான வழக்கு விசாரணையின் போது காணாமல்போன உறவினர்கள் சார்பாக மன்றில் சட்டத்தரணி வி.எஸ்.நிரஞ்சன் முன்னிலையாகியிருந்தார்.

இன்றைய வழக்கு விசாரணை தொடர்பில் அவர் தெரிவிக்கையில், மனித புதைகுழி தொடர்பான வழக்கு விசாரணை (வழக்கு இலக்கம்-  B/778-2013) இன்று விசாரணைக்காக எடுத்துக் கொள்ளப்பட்டு, தீர்ப்பும் இன்று வழங்கப்படவிருந்தது.

இதன் போது மாந்தை மனித புதைகுழியில் இருந்து ஏற்கனவே எடுக்கப்பட்ட மனித எச்சங்கள் இலங்கையில் எந்த பல்கலைக்கழகங்களிலும், நிறுவனங்களிலும் ஆய்வு செய்ய முடியாது என்பதால் அவை வெளிநாட்டில் காபன் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட வேண்டும் என்பதன் அடிப்படையில் எந்த நாடுகளுக்கு அனுப்பப்பட வேண்டும் என்பது தொடர்பில் வழக்கு தொடனர் தரப்பிலும் காணாமல் போனவர்களின் உறவினர்கள் தரப்பிலும் விவாதங்களை ஏற்றுக் கொண்டு, நீதிபதி தீர்ப்பை வழங்க இருந்தார்.

மன்னார் நீதவான் ரி. சரவணராஜா இன்று விடுமுறையில் இருந்ததால் தீர்ப்பு வழங்கப்படவில்லை.

இன்று பதில் நீதவானினால் குறித்த வழக்கிற்கான தீர்ப்பு ஜனவரி மாதம் 14 ஆம் திகதி வழங்கப்படும் என தவணை இடப்பட்டது.

குறித்த வழக்கு விசாரனைக்காக மன்றில் சிரேஷ்ட அரச சட்டத்தரணி நவாவி பிரசன்னமாகி இருந்ததோடு, குற்றப்புலனாய்வு பிரிவு அதிகாரிகளும் மன்றில் பிரசன்னமாகி இருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here