நாமலின் ருவிற்றர் யுத்தம் இரகசிய சந்திப்பை அம்பலமாக்கியது!

ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் நான்கு முக்கிய எம்.பிக்களுடன், பலம் வாய்ந்த நான்கு மேற்குநாடுகளின் இலங்கைக்கான தூதர்கள் சந்தித்த விவகாரம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

கனடிய தூதருடன் இரண்டு நாட்களின் முன்னர் நாமல் ராஜபக்ச ருவிற்றரில் மோதி, இந்த விவகாரத்தை போட்டுடைத்துள்ளார்.

சர்வதேச சமூகம் பக்கச்சார்பாக செயற்படுகிறது என நாமல் ராஜபக்ச, கனடிய தூதரின் ருவிற்றர் பதிவொன்றில் கடுமையாக குற்றம் சுமத்தியிருந்தார். இதற்கு பதிலளித்த கனடிய தூதர், “ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் எம்.பிக்களிடம் கேளுங்கள். அவர்களும் எங்களுடன் பேசினார்கள்“ என்ற சாரப்பட பதிலளித்திருந்தார்.

இது ஐ.ம.சு.கூட்டமைப்பிற்குள் சர்ச்சையாகியது. பின்னர், தமது தரப்பிலிருந்து சிலரை உடைத்தெடுக்க முயல்வதாக சமூகவலைத்தளங்களில் அந்த கூட்டமைப்பின் ஆதரவாளர்கள் குறிப்பிட்டனர். அத்துடன், ஐ.ம.சு.கூட்டமைப்பின் பிரமுகர்களும் இலங்கையிலுள்ள வெளிநாட்டு இராஜதந்திரிகளை கடுமையாக விமர்சித்து வருகிறார்கள்.

இந்த நிலையில், இராஜதந்திரிகள் மீதான விமர்சனம் குறித்து தனது ருவிற்றர் பக்கத்தில் கடும் அதிருப்தியை வெளியிட்டுள்ளார் கொழும்புக்கான ஜேர்மனியத் தூதுவர் ஜோன் ரொட்.

“இலங்கைக்கான கனேடிய தூதுவர் மற்றும் கொழும்பில் உள்ள இராஜதந்திர சமூகத்தின் மீது ஏன் விமர்சனங்கள் முன்வைக்கப்படுகின்றன என்பது எனக்கு புரியவில்லை. ஐ.ம.சு.கூட்டமைப்பின் முக்கியஸ்தர்களான 4 எம்.பிக்களை அவர்கள் விடுத்த வேண்டுகோளின் அடிப்படையில் கடந்த செவ்வாய்க்கிழமை நான், கனேடியத் தூதுவர் உட்பட இராஜதந்திரிகள் சந்தித்தோம். இந்த சந்திப்பின் இரகசியம் பேணப்பட வேண்டுமென்ற அவர்களின் கோரிக்கையை நாங்கள் மதித்தோம். அதன் பின்னர் நாங்கள் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் அழைப்பில் அவர்களையும் சந்தித்தோம். ஜனாதிபதி மற்றும் சபாநாயகர் மற்றும் பல தரப்புக்களை நாங்கள் சந்தித்துள்ளோம். அனைத்து தரப்பினரதும் கருத்துக்களை கேட்பது எமது கடமை” என்று குறிப்பிட்டுள்ளார் தூதுவர்.

ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் எம்.பிக்களை மேற்கு நாட்டு தூதர்கள் சந்தித்த விவகாரம் பெரும் சர்ச்சையை தோற்றுவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here