முஸ்லிம் கட்சிகளுடன் வெளிநாட்டு தூதர்கள் சந்திப்பு: சவுதி மிஸ் பண்ணியது ஏன்?

சித்தரிப்பு படம்

இலங்கையின் அரசியல் நெருக்கடி உச்சமடைந்துள்ள நிலையில் நேற்று முஸ்லிம் நாடுகளின் தூதர்களிற்கும், அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் மற்றும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸிற்குமிடையிலான விசேட சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.

நாடாளுமன்ற உறுப்பினர் எம்.எச்.எம்.பௌஸியின் கொழும்பு இல்லத்தில் நேற்று இந்த சந்திப்பு நடந்தது.

சில தினங்களின் முன்னர் கொழும்பிலுள்ள விடுதியொன்றில் ஓமான் நாட்டு தேசிய தின நிகழ்வுகள் நடைபெற்றன. அதில் பல்வேறு நாடுகளின் தூதர்களும், இலங்கையின் முக்கிய அரசியல் பிரமுகர்களும் கலந்து கொண்டிருந்தனர். அப்போது, முஸ்லிம் நாடுகளின் தூதர்கள் தரப்பிலிருந்து, தற்போதைய அரசியல் நெருக்கடிகள் தொடர்பில் ஆராய சந்திப்பொன்றை நடத்தும் விருப்பம் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதனடிப்படையில் நேற்றைய சந்திப்பு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

கொழும்பிலுள்ள முஸ்லிம் நாடுகளின் தூதர்கள் அனைவரும்- சவுதி அரேபியா தவிர்ந்த- இந்த சந்திப்பில் கலந்து கொண்டனர். சவுதி அரேபியா இந்த சந்திப்பை ஏன் தவிர்த்துக் கொண்டது என்பதற்கான பதில் இதுவரை கிடைக்கவில்லை. தற்போதைய மஹிந்த ராஜபக்ச அரசாங்கத்தை சவுதி அரேபியா உள்ளார்ந்து ஆதரிப்பதாகவும், அதனாலேயே இந்த சந்திப்பை தவிர்த்ததாகவும் கூறப்படுகிறது. எனினும், இதுவரை அதை உத்தியோகபூர்வமாக உறுதிசெய்ய முடியவில்லை.

தற்போதைய அரசியல் நெருக்கடி நிலைமை, ஜனநாயகத்தை பாதுகாப்பதற்காக தாம் எடுத்துள்ள நிலை குறித்து இரண்டு முஸ்லிம் கட்சிகளும் தூதர்களிற்கு விளக்கமளித்தன.

இதன்போது தூதர்கள் தரப்பிலிருந்து- “உங்களது எதிர்ப்பு- பெரும்பான்மை சிங்கள மக்களிற்கு எதிராக சிறுபான்மை இனங்கள் செயற்படுவதாக அர்த்தப்படுத்தப்படுகிறதே. தமிழர்களும் இந்த அரசாங்கத்தை எதிர்க்கிறார்கள். இது சிறுபான்மையினங்களிற்கு ஆபத்தை ஏற்படுத்துமல்லவா?“ என கேட்கப்பட்டுள்ளது.

இதற்கு பதிலளித்த மு.காவின் தலைவர்- “இது மஹிந்த ராஜபக்ச, மைத்திரி என்ற தனி மனிதர்களிற்கு எதிரான போராட்டமல்ல. சிங்கள மக்களிற்கு எதிரான போராட்டமல்ல. நாம் ஆதரிக்கும் ஐதேகவும் சிங்கள கட்சிதான். கடந்த நாடாளுமன்ற தேர்தலில் அந்த கட்சிதான் அதிக ஆசனத்தை கைப்பற்றியது. ஜனாதிபதியும், மஹிந்த ராஜபக்சவும் இணைந்ததாலேயே அது பெரும்பான்மை சிங்கள மக்களின் குரலென்று அர்த்தமாகாது.

நாம் அரசியலமைப்பு படுகொலைக்கு எதிராகவும், நாட்டில் ஜனநாயகத்தை பாதுகாக்கவுமே குரல் கொடுக்கிறோம்“ என பதிலளித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here