தமிழ் மக்கள் பேரவையிலிருந்து கஜேந்திரகுமாரை வெளியேற்ற பிரேரணை: புளொட் அதிரடி!

தமிழ் மக்கள் பேரவையிலிருந்து தமிழ் தேசிய மக்கள் முன்னணியை வெளியேற்றும் பிரேரணையொன்றை சமர்ப்பிக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டால் அதை செய்யவும் தயங்கப் போவதில்லையென புளொட் அமைப்பின் தலைவர் த.சித்தார்த்தன் தெரிவித்துள்ளார்.

தமிழ் மக்கள் பேரவையின் கொள்கைகளிற்கு முரணாக தமிழ் தேசிய மக்கள் முன்னணி தொடர்ந்து நடந்து வருவதால், அப்படியொரு பிரேரணையை சமர்ப்பிக்க வாய்ப்பிருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

தமிழ் மக்கள் பேரவையில் இருந்து புளொட், ஈ.பி.ஆர்.எல்.எவ் ஆகியவற்றை நீக்கினால் மாத்திரமே அந்த கூட்டில் நீடிப்பது குறித்து சிந்திக்க முடியுமென தமிழ் தேசிய மக்கள் முன்னணி அறிவித்துள்ளது. முன்னணி இந்த நிலைப்பாட்டில் விடாப்பிடியாக இருப்பதால் பெரும் குழப்பங்கள் ஏற்பட்டுள்ளன. வேண்டுமென்றே குழப்பத்தை ஏற்படுத்த வேண்டுமென்பதற்காகவே முன்னணி இப்படி நடந்து கொள்கிறதோ என்ற சந்தேகங்கள் பரவலாக எழுப்பப்பட்டு வரும் நிலையில், முன்னணியின் நிலைப்பாட்டால் அதன் தீவிர ஆதரவாளர்கள் பலரும் அதிருப்தியடைந்துள்ளதாக தெரிகிறது.

இந்த நிலையில், புளொட் தலைவர் சித்தார்த்தன் இந்த பரபரப்பு கருத்துக்களை வெளியிட்டுள்ளார்.

“தமிழ் மக்கள் பேரவை ஒரு மக்கள் அமைப்பாகும். அது அரசியல் கட்சியல்ல என இணைவத்தலைவர்களில் ஒருவரான விக்னேஸ்வரன் பலமுறை சொல்லிவிட்டார். அதனடிப்படையில்தான் நாமும் தமிழ் மக்கள் பேரவையில் செயற்பட்டு வந்திருக்கிறோம். தமிழ் தேசிய கூட்டமைப்பை விட்டு வெளியேற மாட்டோம் என்பதை தெளிவாக கூறிவிட்டே நாமும் அதில் பங்களித்தோம். சிலவேளைகளில் கஜேந்திரகுமார் பொன்னம்பலத்திற்கு இது விளங்கவில்லையோ தெரியவில்லை. கஜேந்திரகுமாருக்காக நாம் பேரவையை விட்டு போக வேண்டிய தேவையில்லை.

எழுக தமிழ் சமயத்தில் நான், சுரேஷ் பிரேமச்சந்திரன், கஜேந்திரகுமார் மூவரும் கடைகடையாக சென்று பிரச்சாரம் செய்தோம். அப்பொழுதெல்லாம் தெரியாத பல விசயங்கள் அவருக்கு இப்பொழுதுதான் தெரிகிறது“ என்றார்.

தமிழ் மக்கள் பேரவை ஒரு தீர்வுத்திட்டத்தை தயாரித்தபோது, புதிய அரசியலமைப்பு உருவாக்கத்திற்கான உபகுழுவொன்றின் தலைமையை நீங்கள் ஏற்றுக்கொண்டிருந்ததை கஜேந்திரகுமார் குற்றம்சாட்டுவது குறித்து தமிழ்பக்கம் வினவியது.

“அந்த குழுவின் அறிக்கையை கஜேந்திரகுமார் சரியாக வாசிக்கவில்லையென நினைக்கிறேன். அதன் ஆரம்ப பக்கங்களிலேயே ஒற்றையாட்சியை ஏற்கவில்லையென கூறியிருக்கிறோம். அவர் அதை சரியாக படித்திருந்தால், அது புரிந்திருக்கும்.

இறுதி வரைபு வந்து, அதை நாம் நாடாளுமன்றத்தில் ஏற்றுக்கொண்டால் அவர் குற்றம்சாட்டலாம். இப்போது உருவாக்க பணிகள் நடக்கிறது. இப்போது பலரும் பலவிதமாக அது குறித்து பேசுவார்கள். சிங்கள தலைவர்கள் ஒற்றையாட்சியை வலியுறுத்தி பேசுவார்கள். அதையெல்லாம் கேட்டுவிட்டு, நாம் ஒற்றையாட்சியை ஏற்றுக்கொண்டதாக கூறுவது சிறுபிள்ளைத்தனமானது.“ என்றார்.

தமிழ் மக்கள் பேரவையிலிருந்து புளொட்டை விலக்க வேண்டுமென தமிழ் தேசிய மக்கள் முன்னணி கடிதம் அனுப்பியது குறித்து தமிழ்பக்கம் வினவியது.

“எம்மை விலக்க வேண்டுமென தமிழ் தேசிய முன்னணி கடிதம் அனுப்பினால், அவர்களை விலக்குமாறு நாமும் கடிதம் அனுப்பலாம். ஏனெனில், ஆரம்பத்திலிருந்தே பேரவையின் கொள்கைகளிற்கு மாறாகவே அவர்கள் நடந்து வருகிறார்கள். சமஷ்டி அடிப்படையிலான தீர்வையே பேரவையின் தீர்வாக முன்மொழிந்துள்ளபோது, ஒருநாடு இரு தேசமென்று கொண்டு திரிகிறார்“ என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here