யாழ்ப்பாணத்தில் பல்வேறு பகுதிகளிலும் இருந்தும் களவாடப்பட்ட 17 பசு மாடுகள் வட்டுக்கோட்டை பொலிஸாரினால் மீட்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் வழங்கிய தகவலின் அடிப்படையில் பொலிசார் இந்த அதிரடி நடவடிக்கையை மேற்கொண்டனர்.
நவாலி கொத்துக்கட்டி வீதி மாரியம்மன் கோவிலடி வெளியில் அவை மறைவாக அடைக்கப்பட்டிருந்த நிலையிலேயே பொலிஸார் பசு மாடுகளை மீட்டுள்ளனர்.
அந்தப் பகுதியில் வசித்துவரும் ஒருவர் நவாலியில் மாட்டிறைச்சி கடை ஒன்றை நடத்தி வருகின்றார். அவருடைய வீட்டிற்கு பின்னால் உள்ள வெளியில் இரவோடு இரவாக பல மாடுகள் கொண்டுவந்து அடைத்து வைக்கப்படுவதை அப்பகுதி மக்கள் அவதானித்துள்ளனர்.
இந்த தகவல் மாடுகளை பறிகொடுத்த சிலருக்கும் கிடைக்கவே, நேற்று வியாழக்கிழமை காணாமல் போன தமது பசு மாடுகளை தேடி அப்பகுதிக்கு சிலர் வந்துள்ளனர்.
இதன்போது மாரியம்மன் கோவிலடியில் உள்ள வெளியில் தமது மாடுகள் கட்டப்பட்டிருப்பதை கண்டுள்ளனர். இது குறித்த வட்டுக்கோட்டை பொலிஸாருக்கு தகவல் கொடுத்துள்ளனர்.
சம்பவ இடத்திற்கு வந்த பொலிஸார் குறித்த மாடுகளை அங்கு கட்டி வைத்திருந்த நால்வரை பொலிஸ் நிலையத்திற்கு அழைத்துச் சென்றுள்ளனர்.
கட்டி வைக்கப்பட்டிருந்த எட்டு மாடுகளை ஏற்றிக் கொண்டு பொலிஸ் நிலையத்திற்கு சென்றுள்ளனர். ஏனைய மாடுகளை புகைப்படம் எடுத்த பொலிஸார் அந்த பசுமாடுகளின் உரிமையாளர்கள் உள்ளார்கள் என்றும், அதனால் அவை பொலிஸ் நிலையத்திற்கு கொண்டுசெல்ல தேவை இல்லை என்று கூறி மறைவாக மாடுகள் கட்டப்பட்டிருந்த இடத்திலேயே விட்டுச் சென்றுள்ளனர்.இது பொதுமக்கள் மத்தியில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
அந்த மாடுகளை பொலிஸ் நிலையத்திற்கு ஏற்றி செல்வதற்கான அழைக்கப்பட்ட வாகனத்தினையும் தேவை இல்லை என்று கூறி பொலிஸார் அங்கிருந்து அனுப்பி விட்டனர்.