விபத்தில் பறிபோன இளம்பெண்ணின் உயிர்: தானத்தால் மீண்ட நான்கு உயிர்கள்!

சூரத்தில் சாலை விபத்தில் உயிரிழந்த 21 வயது இளம் பெண்ணால் தற்போது 4 பேர் உயிர் பிழைத்திருக்கின்றனர்.

சனிக்கிழமை இரவு 21 வயது இளம் ஃபேஷன் டிசைனர் ஜான்வி படேல் தனது நண்பர்களுடன் காரில் ஒரு ஜாலி ரைட் சென்றிருக்கிறார். அப்போது சிலர் காருக்குள்ளே அமர ஜான்வியும் அவரது இன்னொரு நண்பரும் மட்டும் காரின் பூட்டில் அதாவது காரின் பின்புறம் அமர்ந்துள்ளனர். அப்போது திடீரென ஓடும் காரிலிருந்து அவர்கள் தவறி விழுந்துள்ளனர். ஜான்விக்கு தலையில் பலத்த காயம். அவரது நண்பருக்கு கையில் காயம்.

உடனே அருகிலிருந்த சஞ்சீவினி மருத்துவமனைக்கு ஜான்வி கொண்டு செல்லப்பட்டுள்ளார். அவருக்கு அங்கு முதல்நிலை உதவிகள் வழங்கப்பட்டிருக்கின்றன. பின்னர் அங்கிருந்து ஐஎன்எஸ் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டிருக்கிறார்.

மருத்துவர்களோ ஜான்விக்கு தலையில் பல இடங்களில் எலும்பு முறிவு ஏற்பட்டிருப்பதாகக் கூறினர். மூளையில் எடீமாவும் ஏற்பட்டிருப்பதாகத் தெரிவித்தனர். திங்கள் கிழமை ஜான்வி மூளைச் சாவு அடைந்தார். இது குறித்து ஜான்வியின் பெற்றோருக்கு அவர்கள் தகவல் அளித்தனர்.

அப்போது டொனேட் லைஃப் என்ற என்.ஜி.ஓ மூலம் ஜான்வியின் பெற்றோருக்கு உடல் உறுப்பு தானம் பற்றி எடுத்துரைக்கப்பட்டுள்ளது.

அவரது பெற்றோரும் ஜான்வியின் இதயம், கல்லீரல், சிறுநீரகம், கண்ணின் கார்னியா ஆகிய பகுதிகளை தானமாக வழங்க சம்மதித்தனர்.

அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு கல்லீரலும், சிறுநீரகமும் அகமதாபாத்துக்கு அனுப்பப்பட்டது. கார்னியா சூரத்துக்கும் இதயம் மும்பைக்கும் அனுப்பப்பட்டது. இதன் மூலம் 4 உயிர்கள் பிழைத்தன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here