காதலித்து ஏமாற்றிய இளைஞனை கொன்று பிரியாணி சமைத்த காதலி கைது!

ஏழு ஆண்டுகளாகக் காதலித்த காதலனைக் கொன்ற காதலி அவரின் உடலைத் துண்டு துண்டாக வெட்டி பிரியாணி சமைத்து பாகிஸ்தான் நாட்டைச் சேர்ந்த தொழிலாளர்களுக்குப் பரிமாறியுள்ளார். தீவிர புலன் விசாரணையில் 6 மாதங்களுக்குப் பின் பொலிஸில் சிக்கியுள்ளார்.

இந்தச் சம்பவம் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடந்துள்ளது என்று அந்நாட்டில் வெளிவரும் ’தி நஷனல்’ எனும் நாளேடு செய்தி வெளியிட்டுள்ளது.

இதுகுறித்து அபுதாபி பொலிஸார் தரப்பில் கூறப்படுவதாவது:

கொலைக் குற்றத்தில் கைது செய்யப்பட்டுள்ள பெண் மொராக்கோ நாட்டைச் சேர்ந்தவர். இவரின் காதலனும் மொராக்கோ நாட்டைச் சேர்ந்தவர். இருவரும் கடந்த ஏழு ஆண்டுகளாகக் காதலித்துள்ளனர். அபுதாபியில் பணியாற்றி வந்தனர்.

இந்நிலையில், கடந்த ஆறு மாதங்களுக்கு முன், அந்தப் பெண்ணிடம், தான் மொராக்கோ நாட்டில் வேறு ஒரு பெண்ணைத் திருமணம் செய்து கொள்ளத் திட்டமிட்டுள்ளதாகக் காதலன் தெரிவித்துள்ளார்.

இதை அறிந்த அந்தப் பெண், தன்னை விட்டு, மற்றொரு பெண்ணைத் திருமணம் செய்யப் போகிறார் என்பதால் காதலன் மீது ஆத்திரத்தில் இருந்தார். ஆனால், அதற்கான ஆயத்தப் பணியில் காதலன் ஈடுபடவே தனது காதலனை அந்தப் பெண் கொலை செய்துள்ளார். அதுமட்டுமல்லாமல், தனது காதலனின் உடலைத் துண்டு துண்டாக வெட்டி, அதை பாகிஸ்தான் நாட்டைச் சேர்ந்த கட்டுமானத் தொழிலாளர்களுக்கு பாரம்பரிய உணவான ’மச்பூஸ்’ (ஒருவகை பிரியாணி) எனும் பிரியாணி சமைத்துப் பரிமாறியுள்ளார்.

இந்நிலையில், கொல்லப்பட்ட அந்த இளைஞரின் சகோதரர் பொலிஸில் புகார் செய்தார். கடந்த ஆறு மாதங்களாகத் தனது சகோதரரை பொலிஸாரின் உதவியுடன் தேடி வந்துள்ளார். இதில் தனது சகோதரரின் காதலியின் பழைய வீட்டுக்குச் சென்று பொலிஸாரின் உதவியுடன் சோதனையிட்டதில், மனித பற்கள் வீட்டில் கண்டுபிடிக்கப்பட்டன.

இதையடுத்து, அந்தப் பற்களை பொலிஸார் டிஎன்ஏ ஆய்வுக்கு உட்படுத்தினார்கள். அந்த ஆய்வின் முடிவில் கொல்லப்பட்டது தேடப்பட்டு வந்த அந்தப் பெண்ணின் காதலர் என்பதை பொலிஸார் உறுதி செய்தனர். இதையடுத்து, அந்த பெண்ணைக் கண்டுபிடித்த பொலிஸார் 20-ம் திகதி கைது செய்தனர்.

அவரிடம் விசாரணை நடத்தியதில், தன்னைக் காதலித்து ஏமாற்றியதால், தனது காதலனை 6 மாதங்களுக்கு முன் கொலை செய்தேன் என்று தெரிவித்தார். மேலும் உடலை வெட்டி பிரியாணி சமைத்துப் பரிமாறினேன் என்றும், மீதமிருந்த உடல் பாகங்களை நாய்க்கு உணவாக அளித்தேன் என்றும், தனக்கு உதவியாக ஒருவர் இருந்தார் என்றும் வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளார். அந்தப் பெண்ணின் வாக்குமூலத்தைக் கேட்ட பொலிஸார் அதிர்ந்துவிட்டனர்.

இதையடுத்து வழக்குப் பதிவு செய்து அந்தப் பெண்ணை பொலிஸார் கைது செய்தனர். அவரை மருத்துவப் பரிசோதனைக்கு உட்படுத்தியதில் அந்தப் பெண் மனநிலை பாதிக்கப்பட்டவர் போல் இருக்கிறார் என்று பொலிஸார் கூறுகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here