கரை ஒதுங்கிய திமிங்கலத்தின் வயிற்றில் 6 கிலோ பிளாஸ்டிக் கழிவுகள்

இந்தோனேசியாவில் இறந்து கரை ஒதுங்கிய திமிங்கலத்தின் வயிற்றுக்குள் 6 கிலோ பிளாஸ்டிக் கழிவுகள் இருந்தது சுற்றுச்சூழல் ஆர்வலர்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது. கடலில் குப்பைகள் சேருவதைத் தடுக்க உடனடியாக கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அரசை கேட்டுக் கொண்டுள்ளனர்.

இந்தோனேசியாவின் சுலா வெசி மாகாணத்தில் உள்ளது வகாடோபி தேசியப் பூங்கா. இங்குள்ள கடற்கரையில் கடந்த திங்கட்கிழமை எண்ணெய்த் திமிங்கலம் (ஸ்பெர்ம் வேல்) ஒன்று இறந்து கரை ஒதுங்கியது. அது 31 அடி நீளம் இருந்தது. அந்த திமிங்கலத்தைச் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் ஆய்வு செய்தனர்.

அப்போது, திமிங்கலத்தின் வயிற்றுக்குள் 115 பிளாஸ்டிக் கப், 25 பிளாஸ்டிக் பை, பிளாஸ்டிக் போத்தல்கள், கிழிந்த தார்பாய் துண்டுகள், செருப்பு போன்ற குப்பைகள் கிடந்தன. மொத்தம் 6 கிலோவுக்கு பிளாஸ்டிக் கழிவுகள் இருந்ததைப் பார்த்து சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

இதுகுறித்து கடல்வாழ் உயிரினங்கள் பாதுகாப்பு அமைப்பான ‘டபிள்யூடபிள்யூஎப் இந்தோனேசியா’வைச் சேர்ந்த ஒருங்கிணைப்பாளர் திவி சுப்ரப்தி கூறும்போது, ‘‘திமிங்கலத்தின் இறப்புக்குக் காரணம் தெரியவில்லை. எனினும், பிளாஸ்டிக் கழிவுகளும் காரணமாக இருக்கலாம்’’ என்றார்.

கடலில் பிளாஸ்டிக் கழிவுகள், குப்பைகள் அதிகரிப்பதைத் தடுக்க இந்தோனேசிய அரசு உடனடியாக கடும் நடவடிக்கையில் இறங்க வேண்டும் என்று சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் வலியுறுத்தி உள்ளனர்.

சீனாவுக்கு அடுத்தபடியாக இந்தோனேசியாதான் கடலில் அதிக குப்பைகளை சேர்க்கும் நாடாக இருக்கிறது. இதனால் ‘குப்பை அவசர நிலை’யை கடந்த ஆண்டு இந்தோனேசிய அரசு அறிவித்தது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here