கௌதமாலா நாட்டில் கடந்த 1982-ம் ஆண்டு ஒரு கிராமத்தில் 171 பேர் கொன்று குவிக்கப்பட்ட வழக்கில் முன்னாள் இராணுவ வீரர் ஒருவருக்கு 5 ஆயிரத்து 160 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து கௌதமாலா நகர நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்துள்ளது.
மத்திய அமெரிக்காவில் மெக்சிகோ நாட்டுக்குத் தென் பகுதியில் அமைந்துள்ள சிறிய நாடு கௌதமாலா. இங்கு உள்நாட்டுப் போர் நடந்து வந்தது. கடந்த 1982-ம் ஆண்டில் அந்நாட்டின் சர்வாதிகாரி எப்ரெயின் ரியாஸ் மான்ட் ஆட்சியில் இருந்தபோது உள்நாட்டுப் போர் உச்சத்தை அடைந்தது. எக்ஸில் மாயா இனத்தவர்களை கொன்று குவிக்க சர்வாதிகாரி எப்ரெயின் ரியாஸ் மான்ட் உத்தரவிட்டார்.
1982-ம் ஆண்டு டிசம்பர் மாதம் டாஸ் எரிஸ் எனும் நகரில் கொரில்லாக்கள் பதுங்கியிருப்பதாக இராணுவத்துக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து அங்கு சென்றவர்களுக்கு கெரில்லாக்கள் பற்றிய விபரத்தை அறிய முடியவில்லை.
அதற்கு சில நாட்களுக்கு முன் இராணுவத்தினர் 19 பேரைக் கொன்று அவர்களின் ஆயுதங்களைக் கொரில்லா படையினர் எடுத்துச் சென்றிருந்தனர். இதனால், இராணுவத்தினர் கடும் ஆத்திரத்தில் இருந்தனர்.
கொரில்லாக்கள் விவரத்தை டாஸ் எரிஸ் நகர மக்கள் வெளியிடாத காரணத்தால் வீடுகளில் இருந்த ஆண்கள், பெண்கள், குழந்தைகள், முதியோர்கள் என அனைவரையும் வெளியே இழுத்து வந்து இராணுவத்தினர் சுட்டுக் கொலை செய்தனர். மேலும் கொலை செய்வதற்கு முன் பெண்களையும், சிறுமிகளையும் பலாத்காரம் செய்து சிதைத்தனர். இந்தச் சம்பவத்தில் 201 பேர் கொல்லப்பட்டனர்.
கவுதமேலா நாட்டின் சர்வாதிகாரியாக இருந்த எப்ரெயின் ரியாஸ் மான்ட் மீது இனப்படுகொலை குற்றம் சாட்டப்பட்டு விசாரணை நடந்த நிலையில் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் மரணமடைந்தார். 36 ஆண்டுகள் நடந்த உள்நாட்டுப் போரில் கௌதமாலாவில் 2 லட்சம் மக்கள் கொல்லப்பட்டனர். கடந்த 1996-ம் ஆண்டு உள்நாட்டுப் போர் முடிவுக்கு வந்தது.
இந்தப் படுகொலையில் ஈடுபட்ட இராணுவத்தினரில் முக்கியமானவர் முன்னாள் இராணுவ வீரர் சான்டோ லோபஸ். இவர் மீது 171 பேரைக் கொலை செய்த வழக்கு நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டது.
முன்னாள் இராணுவ வீரர் சான்டோ லோபஸ், அமெரிக்க இராணுவத்தில் பயிற்சி பெற்றவர். உள்நாட்டுப் போரைக் கட்டுப்படுத்த உருவாக்கப்பட்ட படைப்பிரிவைச் சேர்ந்தார். உள்நாட்டுப் போர் முடிந்த பின் அமெரிக்காவில் பதுங்கி இருந்த சான்டோ லோபஸ் கைது செய்யப்பட்டு கௌதமாலாவுக்கு நாடு கடத்தப்பட்டு அவர் மீது வழக்கு நடந்து வந்தது.
இந்த வழக்கில் கவுதமேலா நகர நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. அதில், 171 பேரைக் கொலை செய்த சான்டோ லோபஸுக்கு ஒவ்வொருவரையும் கொலை செய்தமைக்காக தலா 30 ஆண்டுகள் வீதம் 5 ஆயிரத்து 130 ஆண்டுகள் சிறை தண்டனையும், குழந்தைகளை இரக்கமின்றிக் கொன்றதற்காக கூடுதலாக 30 ஆண்டுகளும் என மொத்தம் 5 ஆயிரத்து 160 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.
கௌதமாலா நாட்டு சட்டப்படி அதிகபட்சமாக ஒருவருக்கு 50 ஆண்டுகள் மட்டுமே சிறைத்தண்டனை விதிக்க முடியும் என்ற நிலையில், முதல் முறையாக மிகப்பெரிய அளவில் தண்டனை வழங்கப்பட்டுள்ளது.