தமிழ் மக்களின் விடிவிற்காக உருவான தமிழ் மக்கள் பேரவை கடும் நிதி நெருக்கடியில் சிக்கி தவிக்கிறது. இந்த நிதி நெருக்கடி காரணமாக கந்தர்மடத்தில் உள்ள அதன் அலுவலக வாடகை, அந்த அலுவலக காவலாளிக்கு சம்பளம் என்பவற்றை வழங்க முடியாமல் பேரவை திண்டாடுகிறது. இந்த நிதி நெருக்கடி காரணமாக தமிழ் மக்களின் விடுதலை பயணத்தில் சிறிய பின்னடைவு ஏற்படவும் வாய்ப்பிருப்பதாக தெரிகிறது.
இருந்தாலும், அதை சமாளிக்கும் விதமாக மாற்று ஏற்பாடு ஒன்றை பேரவை செய்திருந்தது. பேரவையில் அங்கம் வகிக்கும் கட்சிகள், பொதுஅமைப்புக்கள் என்பன ஓசியில் பேரவைக்குள் இருக்காமல் மாதாந்தம் ஆயிரம் ரூபாவையாவது தருமாறு கோரியிருக்கிறது. இது குறித்த கடிதங்கள், பேரவையிலுள்ள கட்சிகள், பொதுஅமைப்புக்களிற்கு அண்மையில் அனுப்பி வைக்கப்பட்டிருந்தது.
தமிழ் மக்களின் அரசியல் தீர்வு, மற்றும் உடனடி பிரச்சனைகளை தீர்க்கும் அழுத்த குழுவாகவே தமிழ் மக்கள் பேரவை ஆரம்பிக்கப்பட்டதாக கூறப்பட்டிருந்தது. இதில் முக்கிய பொறுப்புக்கள் வகிக்கும் வைத்தியர்கள், சட்டத்தரணிகள் மாதாந்தம் பல இலட்சம் ரூபா வருமானம் பெறுவது குறிப்பிடத்தக்கது.