நாடாளுமன்றம் கலைக்கப்பட்டது தொடர்பாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வெளியிட்ட வர்த்தமானி அறிவித்தலை மீளப்பெறுவது தொடர்பில் அரச உயர்மட்டத்தில் தீவிர கலந்துரையாடல்கள் நடந்து வருகிறது. இந்த விவகாரத்தில் உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பு வெளியாகுவதற்கு முன்னதாக, வர்த்தமானி அறிவித்தலை வாபஸ் பெறுவது என்ற முடிவை நோக்கி ஜனாதிபதி சென்று கொண்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஒவ்வொரு வெள்ளிக்கிழமை இரவும் அதிரடி அறிவிப்புக்கள் என அரசியல் பிரளயம் கிளப்பி வந்த ஜனாதிபதி கடந்த 9ம் திகதி இரவு நாடாளுமன்றம் கலைக்கப்பட்டதாக வர்த்தமானி அறிவித்தல் வெளியிட்டார். 2019 ஜனவரி 5ம் திகதி பொதுத் தேர்தல் நடத்தப்படும் என்றும் அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.
எனினும், 19வது அரசியல் திருத்தத்தை மீறி ஜனாதிபதி இந்த வர்த்தமானி அறிவித்தலை வெளியிட்டதாக பல்வேறு தரப்பும் குற்றம்சுமத்தினர். நாடாளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் பெரும்பாலான அரசியல் கட்சிகள் ஜனாதிபதியின் அறிவித்தலிற்கு எதிரான உயரநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தன. இந்த வழக்கில், ஜனாதிபதியின் முடிவிற்கு உயர்நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது.
இந்த வழக்கில் இறுதி தீர்ப்பு வழங்கப்படுவதற்கு முன்னதாக இடையீட்டு மனுவை தாக்கல் செய்து, தன்னால் வெளியிடப்பட்ட வர்த்தமானியை ஜனாதிபதியினால் வாபஸ் பெற்றுக்கொள்ள முடியுமென சட்டத்துறை சார்ந்தவர்கள் ஜனாதிபதிககு ஆலோசனை வழங்கியுள்ளனர்.
எஸ்.பி.திசாநாயக்க எம்.பியும் இது தொடர்பில் நேற்று சூசகமாக கருத்து வெளியிட்டிருந்தார்.
தற்போதைய அரசியல் குழப்பநிலைமையை மேற்படி வர்த்தமானி அறிவித்தலே தீவிரப்படுத்தியதென உள்நாடு, வெளிநாட்டில் கடுமையான அதிருப்தி அரசின் மேல் தோன்றியது, நீதிமன்ற தீர்ப்பு சாதகமாக கிடைக்குமா என்ற சந்தேகம், வெளிநாட்டு அழுத்தங்களினால் இந்த வர்த்தமானியை மீளப்பெறலாமா என ஜனாதிபதி தரப்பில் தீவிரமாக ஆராயப்பட்டு வருகிறது.
இது தொடர்பில் இன்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும், மஹிந்த ராஜபக்ச எம்.பியும் சந்தித்து பேசவுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.