புலிகளின் இரகசிய ஆவணங்களை இராணுவத்திடம் கொடுத்தாரா?: சிவராம் கொலை- மினி தொடர் 6

பீஷ்மர்

கருணா பிரிவில் தராகி சிவராமின் பங்கு என்னவென்பதை மேலோட்டமாக கடந்த வாரங்களில் குறிப்பிட்டிருந்தோம். இந்த விவகாரத்தில் நாம் வெளிப்படுத்தியது நூறில் ஒரு பகுதிதான். அவரது பங்கு இதில் இன்னும் பெரியது. பகிரங்கமாக பேசக்கூடியவற்றை பேசியுள்ளோம். அவ்வளவுதான்.

கருணாவுடன் சிவராம் இணைந்து செயற்படுகிறார் என்பதை உறுதிசெய்ததன் பின்னர்தான், புலிகள் தமது பாணியில் சிவராமிற்கு எச்சரிக்கை கொடுத்து, அவரை வெளியேற்றினார்கள். புலிகளின் எச்சரிக்கை கிடைத்ததும், மட்டக்களப்பிலிருந்து புறப்பட்டு கொழும்பிற்கு சென்றுவிட்டார்.

இதில் கவனிக்கத்தக்க விசயம் என்னவென்றால்- இந்த சம்பவம் நடந்ததற்கு பின்னர், புலிகளின் உயர்மட்ட தலைவர்கள் யாரும் சிவராமை சந்திக்கவில்லை!

ஒரு முறை கிளிநொச்சிக்கு வந்த தங்கியிருந்து, முயற்சி செய்து பார்த்தார். பலனில்லை.

விடுதலைப்புலிகளுடன் சிவராம் நெருக்கமாக இருந்த காலப்பகுதியில், அவரை வைத்து சிலபல காரியங்களை புலிகள் செய்தனர். கொழும்பிற்கு சில ஆவணங்கள், ஆயுதங்கள் கொண்டு செல்ல சிவராம் உதவியிருந்தார்.

சிவராம்- புலிகள் தொடர்புபட்ட சில இரகசிய சம்பவங்களையும் குறிப்பிட வேண்டும்.

இரண்டாயிரங்களின் தொடக்கத்தில் ஒரு சம்பவம் நடந்தது. ஒருநாள் கொழும்பிலுள்ள சிவராமின் வீடு இராணுவத்தால் சுற்றிவளைக்கப்பட்டது. வீட்டில் குடும்பத்தினர் இருந்தார்கள். சிவராம் இல்லை. வெளிநாட்டில் இருந்தார். சுற்றிவளைக்கப்பட்ட தகவல் கிடைத்ததும்,தமிழ் அரசியல் கட்சியொன்றின் பிரமுகர் ஒருவருக்கு சிவராம் தொலைபேசி அழைப்பேற்படுத்தினார்.

“இந்த விவகாரத்தை கவனித்து, குடும்பத்திற்கு நெருக்கடி ஏற்படாமல் பார்த்துக்கொள்ளுங்கள். இரண்டொரு தினங்கள்தான். நான் அதற்குள் நாடு திரும்பி விடுவேன். நான் வந்ததும், நானே அனைத்து பிரச்சனையையும் சரி செய்து கொள்வேன். இப்போதைக்கு இரண்டு நாளுக்கு மட்டும் சமாளிக்க உதவிசெய்யுங்கள்“ என கேட்டிருந்தார்.

அவர் அப்படி கேட்டதற்கு ஒரேயொரு காரணம்தான் இருந்தது. அவரது வீட்டிலிருந்து சில ஆயுதங்கள் (அனேகமாக ஒரு பிஸ்டலும் இருந்திருக்கலாம்) இராணுவத்தால் கைப்பற்றப்பட்டன. வீட்டிலிருந்து பிஸ்டல் கைப்பற்றுவதென்பதெல்லாம் எவ்வளவு பாரதூரமான விசயங்கள்? அதுவும் யுத்த காலத்தில் என்றால் நிலைமையை யோசித்துப் பாருங்கள்.

அந்த ஆயுதங்கள் மட்டக்களப்பில் இருந்து சிவராமிடம் கொடுத்து விடப்பட்டவை. கொழும்பில் இன்னொருவர் பெற்றுக்கொள்வார் என்றுதான் சொல்லி கொடுக்கப்பட்டிருந்தது. அந்த “இன்னொருவர்“ வந்து ஆயுதங்களை வாங்குவதற்கு முன்னர், இராணுவத்தினர் அந்த ஆயுதங்களை எடுத்து விட்டனர்.

இரண்டொரு நாளில் நாடு திரும்பிய சிவராம், உயரதிகாரிகளுடன் பேசி, நிலைமையை சமாளித்து விட்டார்.

சிவராமே நேரடியாக உளவுத்துறை அதிகாரியொருவரிடம் சொல்லி, இந்த ஆயுத மீட்பை செய்திருக்கலாமென்ற சந்தேகம் பின்னாளில்தான் புலிகளிற்கு வந்தது. அந்த சந்தேகம் எப்பொழுது ஏற்பட்டதென்றால், இராணுவ புலனாய்வுத்துறையின் உயரதிகாரியான முஸ்லிம் நபரொருவர் புலிகளின் சோஸ் ஆக மாறிய பின்னர் கிடைத்த தகவல்களின் மூலமே. (அந்த சோஸ் ஆளையும் பின்னர் புலிகள் கொழும்பில் வைத்து சுட்டுக் கொன்றார்கள். அந்த விசாரணையிலேயே, அவர் புலிகளின் சோஸ் ஆக இருந்ததை இராணுவ உளவுத்துறை கண்டறிந்தது. புலிகள் மூலம் பெருமளவு பணத்தை அவர் பெற்றதை கண்டறிந்து, அவற்றை அரசுடைமையாக்க நீதிமன்றத்தை நாடிய சம்பவமும் இடம்பெற்றது)

வெளிநாடொன்றிற்கு அனுப்புவதற்காக ஏற்கனவே சிவராமிடம் புலிகள் கொடுத்து விட்ட வேறு சில ஆவணங்கள் இராணுவ உளவுத்துறையின் பார்வைக்கு சென்ற பின்னரே, வெளிநாட்டுக்கு அனுப்பப்பட்டுள்ளது.

சிவராம் வீட்டிலிருந்த பிஸ்டலும், இப்படி இராணுவ உளவுத்துறைக்கு வழங்கப்பட்ட தகவலின் அடிப்படையில் கைப்பற்றப்பட்டதாக இருக்கலாமென புலிகள் பின்னாளில் கருதினார்கள். ஆனால், அதை உறுதிசெய்யத்தக்கவர்கள் அப்போது இருக்கவில்லை.

இதற்காக சிவராம் இராணுவ உளவுத்துறையின் ஆள் என்று அர்த்தமல்ல. தனது செய்திகள், பாதுகாப்பிற்காக அவர்களையும் உபயோகித்தார். புலிகளின் அரசியல் உயர்மட்ட அந்தஸ்தை எட்டுவதற்கு முன்னர் வரை கொழும்பில்தான் வாழ வேண்டும், அதற்கு உளவுத்துறையின் அனுசரணை அவசியமென கருதினார்.

அதுபோல, பாதுகாப்புத்துறை சார்ந்தவர்களும் இதேவிதமாகத்தான் கருதினார்கள். வன்னிக்கும், கிழக்கிற்கும் சென்றுவரும் சிவராமிடமிருந்து தகவல்களை கறக்க பாதுகாப்புத்துறையினர் அவரை பார்ட்டிகளிற்கு அழைத்தனர்.பாதுகாப்புத்துறை உயரதிகாரிகளுடன் சிவராம் அடிக்கடி மதுபான விருந்துகளில் கலந்துகொள்வார்.

சரி, சிவராமை பார்ட்டிகளிற்கு அழைத்த அதிகாரிகள் எந்தளவு பெரிய ஆட்கள்?

இது உங்களிற்கு அதிர்ச்சியளிக்கும் விசயம். பாதுகாப்புதுறையில் மிகமிக உயர்மட்டத்தில் இருந்த அதிகாரிகள், சிவராமை அழைத்து, தமது பணத்தில் அடிக்கடி பார்ட்டி வைப்பார்கள் என்றளவில் மட்டும் இப்பொழுது விசயத்தை முடித்துக் கொள்கிறோம். அந்தந்த துறையில் அவர்களை விட்டால், உயர்ந்தவர்கள் கிடையாது என்றளவில், உயர்மட்ட ஆட்கள் பார்ட்டிகளிற்கு சிவராமை அழைத்தனர்.

வெள்ளவத்தையில் கடற்கரையோரமாக இருந்த கிளப் ஒன்றில்தான் இந்த பார்ட்டிகள் நடக்கும். அப்போது அதற்கு பக்கத்தில் இருந்த வீதிகள் தடைசெய்யப்பட்டிருந்தன. அதனால், இலேசில்-அடையாளத்தை மறைத்து- அந்த பகுதிக்குள் யாரும் நுழைய முடியாதென்பதால், அந்த கிளப்பை, பாதுகாப்புத்துறை பிரமுகர்கள் தெரிவு செய்வார்கள்.

இலங்கை பாதுகாப்புத்துறை அதிகாரிகளுடன் ஒன்றாக பார்ட்டியில் இருந்துவிட்டு, மறுநாள் கொக்கட்டிச்சோலைக்கு சென்று புலிகளின் முகாமிலும் தங்கிருப்பார். மீண்டும் அடுத்தடுத்த நாளில், புளொட் முகாமிலும் இருப்பார். இதில் சிவராமின் ஆத்மார்த்த நண்பர்கள் இருந்தது புளொட்டில். மற்றைய இரண்டு இடங்களையும் தேவையின் நிமித்தம் சிவராம் பாவித்தார். ஆனால் அவர் புளொட்டின் ஆளுமல்ல. அதையும் ஒரு தேவைக்காக பாவித்தார்!

உளவுத்துறைகளில் இரட்டை முகவரை பற்றி அறிந்திருப்பீர்கள். எப்பொழுதும் இரட்டை முகவர்கள் நீண்டகாலம் உயிர்வாழ்வதில்லை. ஏனெனில் இரண்டு தரப்பிற்கும் அவரைப்பற்றி தெரியும். ஒரு கட்டத்தில், ஏதாவதொரு தரப்பு அவரது கதையை முடித்து விடும். சிவராம் இரட்டை முகவரல்ல, அதையும் தாண்டி மூன்று தரப்பின் முகவராக இருந்தார்!

புலிகள், பாதுகாப்புதுறை இரண்டுடனும் சிவராம் நெருக்கத்தை ஏற்படுத்தியது, ஏதோ ஒரு நோக்கத்தை மனதில் வைத்துத்தான் என்பதை ஏற்கனவே குறிப்பிட்டுள்ளோம். ஆகவே, அதற்கேற்ற நூதனமாக இரண்டு தரப்பையும் கையாண்டார். சமச்சீரான அளவில், ஒரு தரப்பில் இருந்து எடுக்கும் தகவலை இன்னொரு தரப்பிற்கு கொடுப்பார். அதே சமயம், இந்த இரண்டு தரப்புக்களும் சிவராமை சரியாக எடைபோட்டுமிருந்தன என்பதுதான், முரண்நகையான விசயம்!

அதாவது, ஒரு சூது விளையாட்டைப்போலவே மூன்று தரப்பும் இதை கையாண்டன. கையில் துப்பாக்கியுடன் உள்ள இரண்டு தரப்பையும், அவர்களுடன் நெருக்கமாக பழகுவதன் மூலம் கையாளலாம் என சிவராமும், அவரை வைத்துக்கொண்டு தமக்கு தேவையான விதத்தில் எவ்வளவிற்கு பயன்படுத்திக் கொள்ளலாமென இரண்டு தரப்பும் சிந்திக்க- இது ஒரு சுவாரஸ்ய சூதாக காட்சிகள் விரிந்தன.

கருணாவின் பிரிவில் சிவராமிற்கு இருந்த பங்கு புலிகளை உண்மையிலேயே கோபமடைய வைத்தது. வேறு சந்தர்ப்பம் எனில், புலிகளே சிவராமை தமது பாணியில் கவனித்திருப்பார்கள். ஆனால் கருணா விசயத்தில் புலிகள் வேறுவிதமாக நடந்து கொண்டதை கவனித்திருப்பீர்கள். இயன்றவரை கருணாவுடன் நின்றவர்களை பிரித்தெடுத்து, நம்முடன்தான் அதிகமானவர்கள் நிற்கிறார்கள், கருணாவின் கிளர்ச்சிக்கு ஆதரவில்லையென்பதை காண்பிப்பதுதான் புலிகள் செய்த வேலை. கருணாவுடன் இருந்த போராளிகளை தொலைத்தொடர்பு கருவியில் பேசி, மனம்மாறியவர்களை தமது பக்கம் இழுத்தெடுக்க தனி அணிகளே வேலை செய்தன. அப்பொழுது சிவராமையும் இதே விதமாகத்தான் அணுகினார்கள்.

ஆனால் புலிகளின் “சிக்கலானவர்“ லிஸ்டில் சிவராம் இடம்பெற்று விட்டார்!

இதற்குள் இன்னொரு விசயத்தையும் சொல்லிவிட வேண்டும். உமா மகேஸ்வரன் விவகாரத்தின் பின்னர், சிவராமிற்கு மரணதண்டனை வழங்க வேண்டுமென மாணிக்கதாசன் புளொட் அமைப்பிற்குள் தொடர்ந்து வலியுறுத்தி வந்தார், ஆனால் கட்சியில் இருந்த பிற முக்கியஸ்தர்கள் சிலர் அதை தடுத்து வந்தனர் என்பதை ஏற்கனவே குறிப்பிட்டிருந்தோம். மாணிக்கதாசன்தான் புளொட்டின் இராணுவத்தளபதி. அவரிடம் ஆட்களும், ஆயுதங்களும் இருந்தன. கட்சியின் மற்ற முக்கியஸ்தர்களிற்கு தெரியாமல் தனக்கு மாணிக்கதாசனால் ஏதாவது ஆபத்து நிகழுமோ என சிவராம் உண்மையிலேயே அச்சப்பட்டார்.

பாதுகாப்புதுறை பிரதானிகளுடன் நெருக்கமாக பழக ஆரம்பித்ததும், அவர்களிடம் சிவராம் இந்த விவகாரத்தை குறிப்பிட்டு, தனக்கு புளொட்டினால் ஆபத்துக்கள் ஏதும் நிகழுாத வண்ணம் பார்த்துக்கொள்ள வேண்டுமென கேட்டிருந்தார்.

மாணிக்கதாசன் மரணமடைந்ததும், புளொட்டில் இருந்து ஆபத்து ஏற்படும் வாய்ப்பிருக்கவில்லை. என்றாலும், முன்னேற்பாடாக சொல்லி வைத்திருந்தார். மாணிக்கதாசனை தவிர்த்தால், புளொட்டிலிருந்து சிவராமிற்கு ஆபத்தில்லையென்பதை பாதுகாப்பு தரப்பும் தெரிந்து வைத்திருந்ததால், இந்த விசயத்தில் ஒரு அளவிற்கு மேல் அவர்கள் அக்கறை காண்பிக்கவில்லை.

கருணாவின் பிளவு நடந்ததன் பின்னர், கருணா அணியாலும் தனக்கு ஆபத்து எற்படலாமென சிவராம் அச்சப்பட்டார். இது தொடர்பாகவும் தன்னுடன் டீலில் இருந்த பாதுகாப்புதுறை ஆட்களிடம் பேசினார். அவர் அச்சப்படுவதை போல எந்த ஆபத்தும் அவருக்கு நடக்காதென சிவராமிற்கு வாக்களிக்கப்பட்டிருந்தது!

இதை தனக்கு மிக நெருக்கமான வெகு சிலருக்கு சிவராம் சொல்லியுமிருக்கிறார். அவர்களில் சிலருக்கு பாதுகாப்புதுறையுடன் கொஞ்சம் நெருக்கமிருந்தது. அந்த லிங்குகள் மூலமும் இந்த தகவலை அவர்களும் உறுதிப்படுத்தியிருந்தனர். அவர்கள் இப்பொழுதும் இலங்கையில் இருக்கிறார்கள்.

கருணா தரப்பிலிருந்து தனக்கு உயிராபத்து வரலாமென சிவராம் அச்சப்பட்டதில் நியாயமான காரணம் இருக்கிறது. காரணம்- கருணா பிரிவின்போது, கருணாவுடன் நெருக்கமாக செயற்பட்டது, அறிக்கைகள் தயாரித்து கொடுத்தது எல்லாவற்றிலும் சிவராமின் பங்கு உள்ளது. இதனால் புலிகள் கோபப்பட்டு கடும்தொனியில் அவருக்கு ஒரு செய்தி அனுப்பியிருந்தனர். அதையடுத்து, கருணா அணியை அம்போவென கைவிட்டுவிட்டு, அவர்களிற்கு தெரியாமல் கொழும்பிற்கு தப்பிச்சென்று விட்டார்.

சிவராம் தம்மைவிட்டு சொல்லாமல் கொள்ளாமல் சென்றதில் கருணா அணி முக்கியஸ்தர்களும் கடும் கோபத்தில் இருந்தார்கள். சிவராம் சொல்லாமல் கொள்ளாமல் தப்பிச் சென்றுவிட்டார் என்ற விசயம் ஒரு அதிகாலையில்தான் கருணாவிற்கு சொல்லப்பட்டிருக்கிறது. முதல்நாள் இரவுவரை கருணாவுடன் தங்கியிருந்து, அவரது பிரிவை ஊக்கப்படுத்திக் கொண்டிருந்தவர்… அதற்கு தத்துவார்த்த அர்த்தம் கற்பித்து, அறிக்கைகள் தயார்செய்து கொடுத்துக் கொண்டிருந்தவர், ஒரு இரவில் எஸ்கேப் ஆகியிருந்தனர். அது கருணாவிற்கு பயங்கர கோபம். தகவலை கேள்விப்பட்டதும், கெட்ட வார்த்தைகளால் திட்டியிருக்கிறார்.

அப்பொழுது “ஆஊ“ என்றாலே கொலைவிழுந்து கொண்டிருந்த நேரம். இராணுவம், புலிகள், கருணா குழு மூன்றின் மீதும் மாறிமாறி குற்றம்சுமத்தப்பட்டு கொண்டிருந்தது.

கிழக்கில் விடுதலைப்புலிகளின் ஆதரவாளர்கள் என அடையாளம் காணப்பட்டவர்கள் குருவி சுடப்படுவதை போல சுட்டுத்தள்ளப்பட்டு கொண்டிருந்தனர். இந்த கொலைகள் தலைநகர் கொழும்புவரை நீண்டது. இப்படியான நிலைமையில் சிவராம் அச்சப்பட்டதில் நியாயமிருக்கிறதுதான்.

இதற்கு முன்னர் சிவராமின் கொலை எப்படி நடந்ததென்பதை பார்ப்போம்.

கொள்ளுப்பிட்டி பொலிஸ் நிலையத்திற்கு அருகில் உள்ள மதுபானச்சாலையில் சிவராமும் சில நண்பர்களும் 28 ஏப்ரல் 2005 அன்று மது அருந்திக் கொண்டிருந்தார்கள். இரண்டரை மணி நேரத்திற்கும் அதிகமாக அவர்கள் விடுதியில் இருந்துள்ளனர்.

(தொடரும்)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here