11 மாணவர் கடத்தல் விவகாரத்தில் அஜித் பிரசன்னவிற்கு பிணை!

சாட்சியாளர்களை அச்சுறுத்தும் வகையில் கருத்துத் தெரிவித்த குற்றச்சாட்டில், பாதிக்கப்பட்டோர் மற்றும் சாட்சியாளர் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கடந்த ஒரு வருடத்துக்கும் அதிக காலம் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த ஓய்வுபெற்ற மேஜர் சட்டத்தரணி அஜித் பிரசன்னவை பிணையில் விடுவித்து மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று (13) உத்தரவிட்டது.

5 இலட்சம் ரூபா பெறுமதியான இரு சரீரப் பிணைகளில் அவரை விடுவித்த மேன் முறையீட்டு நீதிமன்றின் நீதிபதி பிரியந்த பெர்ணான்டோ மற்றும் தேவிகா அபேரத்ன ஆகியோரைக் கொண்ட நீதிபதிகள் குழாம், ஒவ்வொரு மாதமும் இறுதி ஞாயிற்றுக்கிழமைகளில் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தில் ஆஜராகி கையொப்பமிட வேண்டும் எனவும் நிபந்தனை விதித்தது.

கடந்த 2019 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் ஊடக சந்திப்பு ஒன்றை நடத்தி, 5 மாணவர்கள் உள்ளிட்ட 11 பேரைக் கடத்தி காணாமல் ஆக்க்கிய சம்பவம் தொடர்பில் மூவர் கொண்ட விசேட நீதிமன்றில் விசாரிக்கப்படும் வழக்கின் சாட்சியாளர்களை அச்சுறுத்தும் வகையில் கருத்துத் தெரிவித்த குற்றச்சாட்டில் கொழும்பு மேலதிக நீதிவானால் மேஜர் அஜித் பிரசன்ன விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தார்.

பாதிக்கப்பட்ட தரப்பினரால் செய்யப்பட்ட முறைப்பாட்டுக்கு அமைய நீதிவானின் விசேட உத்தரவில் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினர் அவரைக் கைது செய்து ஆஜர்படுத்திய நிலையிலேயே அவர் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here