வவுனியா முடக்கமா? இல்லையா?: விரும்பியபடி எடுத்துக் கொள்ளலாம்; பெரும் விசித்திரம்!

வவுனியா நகரத்திற்குள் இன்று முன்னெடுக்கப்பட்டுள்ள முடக்க நிலை தொடர்பாக அரச அதிபர் முரணான தகவலை வழங்கிய நிலையில் இது தொடர்பாக விளக்கம் கோரச்சென்ற தமிழ் ஊடகவியலாளர்களிடம் “எது விருப்பமோ அதனை போடுங்கள்” என்று பொறுப்பில்லாமல் பதிலளித்தார்.

வவுனியா மாவட்டத்தில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதனையடுத்து இன்றையதினம் மாவட்ட செயலகத்தில் அவசர கலந்துரையாடல் ஒன்று முன்னெடுக்கப்பட்டிருந்தது.

குறித்த கலந்துரையாடலில் நகரின் முக்கிய பகுதிகளை முடக்குவதற்கு நடவடிக்கையினை முன்னெடுக்க வேண்டும் என்று சுகாதார தரப்பினர் பரிந்துரை செய்திருந்தனர்.

குறித்த கூட்டம் நிறைவடைந்த நிலையில் ஊடகங்களிற்கு கருத்து தெரிவித்த அரச அதிபர் சமன் பந்துலசேன, பி.சி.ஆர் பரிசோதனைக்காக அனுப்பப்பட்ட 2000 பேரின் முடிவுகள் கிடைக்கப்பெற்ற பின்னரே வவுனியா நகரை முடக்குவது தொடர்பில் ஆராய முடியும் என தெரிவித்திருந்தார்.

எனினும் இது தொடர்பில் பிராந்திய சுகாதாரசேவைகள் பிரதி பணிப்பாளரிடம் கேட்டபோது வவுனியாவில் கொரோனா தொற்றாளர்கள் அதிகரித்து வரும் நிலையில் வவுனியா நகரினை உடன் அமுலாகும் வரையில் முடக்குவதற்கு தாம் பரிந்துரை செய்துள்ளதாகவும் இது தொடர்பாக உத்தியோகபூர்வமாக மாவட்ட செயலகத்திற்கு தெரியப்படுத்தியுள்ளதாகவும் தெரிவித்தார்.

இது தொடர்பில் அரச அதிபரிடம் விளக்கம் கோரியபோது சிங்களத்தில் பதிலளித்த அவர் எது விருப்பமோ அதனை போடுங்கள் என்று பொறுப்பில்லாத வகையில் பதில் அளித்தி்ருந்தார்.

எனினும் சுகாதாரபணிப்பாளர் தெரிவித்த படி உடனடியாக நகருக்கு வருகைதரும் எல்லைகளான நெளுக்குளம் சந்தி, இரட்டைபெரியகுளம், மாமடுசந்தி, தாண்டிக்குளம் ஆகிய பகுதிகளில் பொலிசாரால் வீதித்தடை அமைக்கப்பட்டு, உள்ளே வருபவர்கள் தடுத்து நிறுத்தப்பட்டதுடன், நகருக்குள் அமைந்துள்ள வியாபார நிலையங்களையும் உடனடியாக மூடுமாறு பொலிசார் அறிவித்தனர். இதனால் அசௌகரியமடைந்த பொதுமக்கள் அவசர அவசரமாக நகரைவிட்டு வெளியேறியிருந்தனர்.

முடக்க நிலை முன்னெடுக்கப்பட்டு குறித்த கட்டுப்பாடுகள் நடைமுறைப்படுத்தப்பட்ட பின்னர் இது தொடர்பாக கருத்து கூறுமாறு அரச அதிபரிடம் தமிழ் ஊடகவியலாளர்கள் கோரிக்கை விடுத்தனர். இதன்போது மீண்டும் தனது நிலைப்பாட்டில் பின்வாங்காத அவர் முடக்கம் அமுல்படுத்தப்படவில்லை. 2000 பேரின் பிசீஆர் முடிவுகள் கிடைக்கபெற்ற பின்னரே நகரம் முடக்கப்படும் என முரணான தகவலை தெரிவித்திருந்தார்.

மாவட்டத்தில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துச்செல்லும் நிலையில் முக்கிய பொறுப்பில் உள்ள அரச அதிபர் பொறுப்பற்ற விதத்தில் பதில் அளித்தமையானது கோரோனா கட்டுப்பாட்டு நடவடிக்கைகளில் அரச திணைக்களங்களிற்கிடையில் ஒற்றுமையின்மையை வெளிப்படுத்தியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here