கச்சா எண்ணெய் உற்பத்தியில் உலகின் முன்னணி நாடாக விளங்கும் சவுதி அரேபியா, கார்கள் மற்றும் கார்பன் வாயுக்கள் வெளியேற்றம் இல்லாத பசுமை நகரம் ஒன்றை உருவாக்க உள்ளது.
செங்கடலை ஒட்டிய பாலைவனப் பகுதியில் 50 ஆயிரம் கோடிஅமெரிக்க டொலர்கள் செலவில், ‘நியோம்’ என்ற பெயரில் நவீன நகரத்தை சவுதி அரேபியா உருவாக்குகிறது. சவுதி அரேபிய பொருளாதாரத்தை பன்முகப்படுத்தும் திட்டத்துடன் பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மான் கடந்த 2017இல் இதனை அறிவித்தார். நாட்டின் வடமேற்கு தொலைதூரப் பகுதியில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சதுர மைல் பரப்பளவில் இத்திட்டம் அமையவுள்ளது.
புதிய தொழில்நுட்பங்கள் மற்றும் வணிகங்களுக்கான மையமாக மாறப் போகும் இந்த நகரம் ஒருதுணிச்சலான கனவு என அதன் இணையதளத்தில் கூறப்பட்டுள்ளது. இத்திட்டம் தொடங்கப்பட்டது முதல் அவநம்பிக்கை மற்றும் அரசியல் சர்ச்சைகளும் தொடர்கிறது. இத்திட்டம் யதார்த்தமானதா, தேவையான முதலீட்டை அதனால் ஈர்க்க முடியுமா என விமர்சகர்கள் கேள்வி எழுப்புகின்றனர்.
இத்திட்டத்தின் ஒரு பகுதியாக கார்கள் மற்றும் தெருக்கள் இல்லாத, கார்பன் வாயுக்கள் வெளியேற்றம் இல்லாத பசுமை நகரத்தை சவுதி அரேபியா உருவாக்கவுள்ளது.
இதுகுறித்து பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மான் கூறும்போது, “மொத்தம் 170 கி.மீ. நீளத்துக்கு 10 இலட்சம் பேர் வசிக்கக் கூடியதாக இந்த நகரம் இருக்கும். இயற்கையை 95 சதவீதம் பாதுகாக்க கூடியதாக இருக்கும். இந்நகரில் கார்கள், தெருக்கள் இருக்காது. கார்பன் வாயுக்கள் வெளியேற்றமும் இருக்காது” என்றார்.
இதுதொடர்பாக நியோம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “பள்ளிகள், சுகாதார மையங்கள், பசுமை வெளிகள், அதிவேகப் போக்குவரத்து என அனைத்து வசதிகளும் கொண்டதாக இந்த நகரம் இருக்கும். எவ்வித தேவைக்கும் ஒருவர் 20 நிமிடங்களுக்கு மேல் நடக்க வேண்டிய அவசியம் இருக்காது. இந்நகரில் செயற்கை நுண்ணறிவு முக்கியப் பங்கு வகிக்கும். இங்கு வசிப்பவர்களுக்கு 100 சதவீதம் தூய்மையான எரிசக்தி, மாசுபாடு இல்லாத, சுகாதாரமான சுற்றுச்சூழல் ஏற்படுத்தப்படும். இதற்கான கட்டுமானப் பணிகள் பொது முதலீட்டு நிதியில் இருந்து இந்த ஆண்டின் முதல் காலாண்டில் தொடங்கும். 3,80,000 வேலைவாய்ப்புகளை இத்திட்டம் உருவாக்கும். 2030-ல் சவுதி அரேபியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்திக்கு 4,800 கோடி டொலர் பங்களிப்பு செய்யும்” என்று கூறப்பட்டுள்ளது.