மலேசியாவில் அவசர நிலை பிரகடனம்!

மலேசியாவில் அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.

மாமன்னர் அல்- சுல்தான் அப்துல்லா, மத்திய அரசியலமைப்பின் அடிப்படையில் அரசாங்கத்தின் கோரிக்கைக்கு ஒப்புதல் அளித்துள்ளார்.

இது குறித்து இன்று நாட்டு மக்களிற்கு அந்த நாட்டு பிரதமர் பிரதமர் மொகிதின் யாசின் நாட்டு மக்களிற்கு உரையாற்றினார்.

அவரது உரையில் குறிப்பிட்ட முக்கிய அம்சங்கள் பின்வருமாறு:

இந்தப் புதிய உத்தரவுகள் எதிர்வரும் ஜனவரி 13 நள்ளிரவு தொடங்கி ஜனவரி 26 வரை அமுலில் இருக்கும்.

8 மாநிலங்களிலும் கூட்டரசுப் பிரதேசங்களும் முழு நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை பிறப்பிக்கப்பட்டிருக்கிறது.

பினாங்கு, சிலாங்கூர், மலாக்கா, ஜோகூர், சபா, கோலாலம்பூர், புத்ரா ஜெயா, லாபுவான் ஆகிய மாநிலங்களில் முழு நடமாட்டக் கட்டுப்பாட்டு உத்தரவு பிறப்பக்கப்பட்டிருக்கின்றது.

6 மாநிலங்களில் நிபந்தனைகளுடன் கூடிய நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணைக்கு உட்படுத்தப்பட்டிருக்கின்றன. எனினும் நிபந்தனைகள் மேலும் கடுமையாக்கப்பட்டிருக்கின்றன. பகாங், பேராக், நெகிரி செம்பிலான், கெடா, திரெங்கானு, கிளந்தான் ஆகியவையே அந்த 6 மாநிலங்களாகும்.

பெர்லிஸ், சரவாக் ஆகிய இரண்டு மாநிலங்கள் மட்டுமே மீட்சி நிலை நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணையின் கீழ் வரும். இந்த இரண்டு மாநிலங்கள் மட்டுமே மிகவும் தளர்வான நிபந்தனைகளைக் கொண்டிருக்கும்.

முழு நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணையின் கீழ் வரும் மாநிலங்களில் உணவகங்கள் செயல்பட முடியாது. பொட்டலங்கள் கட்டி மட்டுமே உணவுகள் விற்பனை செய்யப்படும். யாரும் உணவகங்களில் அமர்ந்து உணவருந்த முடியாது.

சரவாக் மாநில அரசாங்கம் கூச்சிங், சிபு, மிரி ஆகிய வட்டாரங்களை இன்று நிபந்தனைகளுடன் கூடிய கட்டுப்பாட்டு ஆணையின் கீழ் கொண்டு வந்திருக்கிறது.
முழு நடமாட்டக் கட்டுப்பாட்டு, நிபந்தனைகளுடன் கூடிய நடமாட்டக் கட்டுப்பாடு நிலவும் மாநிலங்களில் கூட்டங்களுக்கும், மக்கள் கூடும் நிகழ்ச்சிகளுக்கும், தைப்பூசம் போன்ற திருவிழாக்களுக்கும் தடை விதிக்கப்பட்டிருக்கிறது. கடந்த ஆண்டு மார்ச் மாதத்திலும் இதே போன்ற கட்டுப்பாடுகள் கொண்டு வரப்பட்டன.

மீட்சி நிலை மாநிலங்களில் சமூக விழாக்கள் நடைபெறலாம். ஆனால் நிபந்தனைகள் கடுமையாகக் கடைப்பிடிக்கப்பட வேண்டும்.

மாநிலங்களுக்கிடையிலான பயணங்களுக்குத் தடை விதிக்கப்படுகிறது.
முழு நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ள மாநிலங்களிலும் வட்டாரங்களுக்கிடையிலான பயணங்களுக்குத் தடை விதிக்கப்படுகிறது.

பயண நடமாட்டக் கட்டுப்பாடுகளால் ஜனவரி 13 நள்ளிரவு முதல் சாலைத் தடுப்பு சோதனைகள் மேற்கொள்ளப்படும்.

10 கிலோமீட்டருக்கு இடையிலான பயணங்களுக்கு மட்டுமே பொதுமக்களுக்கு அனுமதி வழங்கப்படும்.

அத்தியாவசியப் பொருட்களை வாங்க கடைகளுக்கும், பேரங்காடிகளுக்கும் ஒரு குடும்பத்தில் இருவருக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படுகிறது.

வாகனங்களிலும் ஒரு வாகனத்திற்கு இருவர் மட்டுமே செல்ல அனுமதி வழங்கப்படும்.
பொருளாதாரத்தைக் கவனத்தில் கொண்டு அத்தியாவசியத் தொழில்கள் இயங்க அனுமதி வழங்கப்படுகிறது.

தொழிற்சாலைகள், தயாரிப்புத் தொழில்கள், கட்டுமானம், சேவைகள், வணிகம், விநியோகத் துறை தோட்டத் தொழில்கள் ஆகியவை முழுமையாக இயங்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

அலுவலகங்களில் 30 விழுக்காட்டு நிருவாக பணியாளர்களுக்கு மட்டுமே வேலை செய்ய அனுமதி வழங்கப்படுகிறது. எஞ்சியவர்கள் இல்லங்களில் இருந்து பணி செய்யலாம்.

எஸ்பிஎம் தேர்வுகளை அடுத்த மாதத்தில் எழுதவிருப்பவர்கள் பள்ளிகளுக்கு செல்ல அனுமதி உண்டு.

ஆலய வழிபாடுகள் நடத்தப்படலாம். ஆனால் ஒருமுறைக்கு 5 பேர்களுக்கு மட்டுமே அனுமதி உண்டு.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here