பல்கலைக்குள் நுழைய பொலிசாருக்கு அனுமதியுண்டு; அவர்களை பாதுகாக்க இராணுவத்தினரும் வருவர்: துணைவேந்தர் விளக்கம்!

யாழ்ப்பாண பல்கலைகழக மாணவர்களின் கோரிக்கைகள் அனைத்தையும் ஏற்பதாக துணைவேந்தர் தெரிவித்தார். விரைவில் மாணவர்களை சந்திப்பார் எனவும் கூறினார் என மாணவர் பிரதிநிதிகள் தெரிவித்தனர்.

இன்று இரவு துணைவேந்தரை சந்தித்த பின்னர் மாணவர்கள் பிரதிநிதிகள் ஊடகங்களிடம் கருத்து தெரிவித்த போது இவ்வாறு தெரிவித்தனர்.

அவர்கள் மேலும் தெரிவிக்கையில்,

மாணவரகளின் கோரிக்கைகள் அடங்கிய கடிதமொன்றை துணைவேந்தரிடம் இன்று கையளித்திருந்தோம். அனைத்து கோரிக்கைகளையும் ஏற்றுக்கொள்வதாக துணைவேந்தர் உறுதியாக கூறினார்.

தூபிக்கான அனைத்து பணிகளையும் தானே ஆரம்பித்து வைப்பதாகவும், பேரவை ஊடாக அமைச்சரவைக்கு இந்த விடயத்தை கொண்டு சென்று பணிகளை ஆரம்பிக்கவுள்ளதாகவும் தெரிவித்தார்.

போராட்டத்தில் ஈடுபடும் மாணவர்களை நேரில் வெகுவிரைவில் சந்திப்பதாகவும், தனது உறுதிமொழியை வழங்குவதாகவும் கூறினார்.

பல்கலைகழக வளாகத்தில் நிலைகொண்டுள்ள படைத்தரப்பினர் படிப்படியாக விலக்கிக் கொள்ளப்படுவார்கள் என்றார். பொலிசாரால் மாணவர்கள் தாக்கப்படுவது, நேற்று முன்தினம் இரண்டு மாணவர்கள் பொலிசாராலும், புலனாய்வாளர்களாலும் தாக்கப்படுவதை குறிப்பிட்டோம். அந்த சம்பவத்திற்கும் தனக்கும் எந்தவித தொடர்பும் இல்லையென்றார்.

பல்கலைகழகத்திற்குள் ஏதாவது அசம்பாவிதம் நடந்தால் பொலிசார் வருவதற்கு அனுமதியுண்டு என்றும், பொலிசாரை பாதுகாக்க இராணுவத்தினர் வரலாமென்றும் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here