மட்டக்களப்பில் சிங்கள விவசாயிகளால் கடத்தப்பட்ட தமிழர்கள் மாகோ ஓயா பொலிஸ் நிலையத்தில்: படுகாயமடைந்தவர் வைத்தியசாலையில்!

மட்டக்களப்பு மயிலத்தமடு மற்றும் மாதவணை எல்லை பகுதியில் தமிழ் மக்கள் பாரம்பரியயமாக பயன்படுத்திய மேய்ச்சல் தரையில் அத்துமீறி குடியமர்த்தப்பட்டுள்ள சிங்களவர்களால் கடத்தப்பட்ட தமிழ் பண்ணையாளர்கில் ஒருவர் மோசமாக தாக்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ஏனைய ஐந்து பேரும் அம்பாறை பிராந்தியத்திற்கு உட்பட்ட மாகோ ஓயா பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

நேற்று (9) பண்ணையாளர்கள் 6 பேர் சிங்கள சட்டவிரோத குடியேற்றவாசிகளால் கடத்தப்பட்டிருந்தனர்.

மட்டக்களப்பு எல்லையிலுள்ள மயிலத்தமடு மற்றும் மாதவணை மேய்ச்சல் தரையில் பொலன்னறுவை, அம்பாறையிலுள்ள சிங்களவர்களை குடியமர்த்தியுள்ளது கோட்டாபய அரசு. இது குறித்து பாரம்பரிய கால்நடை வளர்ப்பாளர்கள் நடத்திய போராட்டங்கள் எதையும் கோட்டா அரசு கணக்கிலெடுக்கவில்லை.

சுமார் 3 இலட்சம் கால்நடைகளின் மேய்ச்சல் தரையில் சிங்களவர்களை குடியமர்த்துவது தொடர்பான கவலைகளை கிழக்கு ஆளுனரிடம் எழுப்பிய போதும், அவர் அதை கண்டுகொள்ளவில்லை.

இந்த நிலையில், சட்டவிரோத குடியேற்றவாசிகளான சிங்களவர்கள் தமது விவசாய நிலத்தை கால்நடைகள் அழிப்பதாக கூறி, அந்த மேய்ச்சல் தரையை பாரம்பரியமாக பாவிக்கும் தமிழ் மக்கள் மீது தாக்குதல் நடத்தும் புதிய- விபரீத நிலைமை உருவாகியுள்ளது.

நேற்று (9) 6 கால்நடை பண்ணையாளர்கள் சிங்கள விவசாயிகளால் கடத்தப்பட்டுள்ளனர்.

நேற்று கால்நடை பண்ணையாளர்கள் மூவர் தமது மாடுகளை தேடி சென்றனர். அவர்களை சிங்களவர்கள் விரட்டிய போது, இருவர் தப்பியோடி வந்து விட்டனர். ஒருவரை பிடித்த சிங்களவர்கள், அரை கட்டி வைத்து கடுமையாக தாக்கியுள்ளனர்.

தப்பியோடி வந்த இரண்டு பண்ணையாளர்களும் வழங்கிய தகவலின் அடிப்படையில் மேலும் 5 பேர் அவர்களை தேடிச் சென்றனர்.

அவர்களையும் சிங்களவர்கள் பிடித்து வேறிடம் ஒன்றிற்கு கொண்டு சென்று, கட்டி வைத்து தாக்கியுள்ளனர்.

அவர்களிளை தொலைபேசியில் தொடர்பு கொண்டு உறவினர்கள் பேசிய போது, தமக்கு நேர்ந்த கொடுமையை வெளிப்படுத்தியுள்ளனர். அவர்கள் தொலைபேசியில் பேசியதை அவதானித்த சிங்களவர்கள், தொலைபேசிகளையும் பறித்து வைத்துள்ளனர்.

இதனால் பதட்டமான சூழ்நிலை மயிலத்தமடு மற்றும் மாதவணைப் பகுதியில் ஏற்பட்டுள்ளது.

கடத்தப்பட்ட 6 பண்ணையாளர்களையும் தேடிச் சென்ற சக பண்ணையாளர்களையும் அத்துமீறி பயிர் செய்கையில் ஈடுபடும் சிங்களவர்கள் அச்சுறுத்தி துரத்தியதாகவும் அதனால் பண்ணையளர்கள் அச்சத்தில் திரும்பி வந்துள்ளதாக பண்ணையாளர்களின் தலைவர் தெரிவித்தார்.

சின்னத்தம்பி பாஸ்கரன், முத்துப்பிள்ளை சேந்தன், சுப்பிரமணியம் கோணேசன், பரசுராமன் மேகுலன், கிருபைராசா ருச்சுதன், சண்முகம் டயன்சன் ஆகிய ஆறுபேரே இவ்வாறு கடத்திச் செல்லப்பட்டுள்ளனர்.

இந்த விவகாரம் பெரிதாகியதையடுத்து, கடத்தப்பட்ட 6 பேரையும் மாகோ பொலிஸ் நிலையத்தில் ஒப்படைத்த சிங்கள விவசாயிகள், தமது பயிர்ச்செய்கையை அவர்களது மாடுகள் அழித்துள்ளதாகவும், அதற்கான நட்டஈட்டை பெற்றுத்தர வேண்டுமென்றும் முறைப்பாடு செய்துள்ளனர்.

அவர்கள் கட்டிவைத்து தாக்கியதில் படுகாயமடைந்த முத்துப்பிள்ளை சேந்தன், மாகோ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மயிலத்தமடு மற்றும் மாதவணை எல்லை பகுதி, கரடியனாறு பொலிஸ் பிரிவிற்குட்பட்டது. கடத்தியவர்களை சிங்கள விவசாயிகள் அங்குதான் ஒப்படைத்திருக்க வேண்டும். எனினும், தமது இஷ்டப்படி அம்பாறை பொலிஸ் உட்பட்ட மாகோ ஓயா பொலிஸ் நிலையத்தில் அவர்கள் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

இந்த கடத்தல் விவகாரத்திற்கு எதிராக, கடத்தப்பட்டவர்களின் உறவினர்கள் நேற்று கரடியனாறு பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்ய சென்றனர். எனினும், அவர்களின் முறைப்பாட்டை பொலிசார் ஏற்கவில்லை. இதையடுத்து, தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் மட்டக்களப்பு அமைப்பாளர் சுரேஷ், பொலிசாருடன் தர்க்கப்பட்டார்.

நீண்ட தர்க்கத்தின் பின்னரே, முறைப்பாடு ஏற்கப்பட்டது.

முறைப்பாட்டை பதிவு செய்த பின்னர், உறவினர்கள் பொலிஸ் நிலையத்திற்கு வெளியில் கொட்டும் மழையிலும் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை நடத்தினர். பொலிசார் உடனடியாக நடவடிக்கையெடுத்து கடத்தலில் ஈடுபட்ட குற்றவாளிகளை கைது செய்ய வலியுறுத்தியும், அரச தரப்பு தமிழ் அரசியல்வாதிகள் வாக்களித்த மக்களின் பிரச்சனைக்கு பொறுப்புகூற வலியுறுத்தியும் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here